Published:Updated:

வெள்ளம் ஒரு பக்கம்... வறட்சி மறுபக்கம் - சென்னை என்ன செய்ய வேண்டும்? #VikatanInfographics

சென்னை வெள்ளம் மற்றும் வறட்சி
News
சென்னை வெள்ளம் மற்றும் வறட்சி

சென்னை மாநகரம், அடிப்படையிலேயே ஒரு நீர்ப்பிடிப்புள்ள பகுதி. மூன்று ஆறுகள் ஓடக்கூடிய நகரம். பல்வேறு நீர்நிலைகளைக் கொண்ட நகரம். இங்கு தண்ணீர் தட்டுப்பாடும் வெள்ளமும் ஏற்பட உண்மையில் என்ன காரணம் என்பதை முழுமையாக விளக்குவதே இந்தக் கட்டுரை.

தமிழகத்தைத் தாக்கும் எந்த ஒரு பிரச்னையும் சென்னையைத் தாக்கும்போது, பிரச்னை பூதாகரமாக வெடிக்கும். இது, எழுதிவைக்கப்படாத விதி. இதை இன்று வரை மாற்ற முடியவில்லை. இந்தப் பிரச்னைக்கு சென்னையில் தீர்வு காணப்பட்டால், தமிழகம் முழுவதுமே தீர்வு கண்டதுபோல பிரச்னையின் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும். ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னையின் தன்மை அப்படிப்பட்டதில்லை.

தண்ணீர் தட்டுப்பாடு
தண்ணீர் தட்டுப்பாடு

சென்னையின் தண்ணீர் தட்டுப்பாடு:

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னையும் தண்ணீர் தட்டுப்பாடும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் போல. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல மாதங்களாகத் தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை கடந்த இரண்டு மாதங்களாகத் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. சென்னை சந்திக்கும் முதல் தண்ணீர் தட்டுப்பாடு இது கிடையாது. கடந்த 1947, 1954, 1968, 1972 முதல் 1975 வரை, 1982, 1983, 2000 முதல் 2003 ஆகிய ஆண்டுகளில் சென்னை மாநகரம் சந்தித்ததுதான். ஆனால் தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு, முன்னெப்போதும் ஏற்படாத அளவு மிகக்கடுமையாக ஒன்று.

2000 முதல் 2003-ம் ஆண்டு வரை நிலவிய தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கவே அரசு அல்லாடியது. 2004-ம் ஆண்டு பெய்த மழை அவர்களுக்குப் பெரிதும் கைகொடுத்தது. அன்று தொட்டு இன்றுவரை இப்பிரச்னைக்கு பல திட்டங்களை அரசு வகுத்திருந்தாலும், எந்த ஒரு திட்டமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதே நிதர்ச்சனம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சென்னை மக்களின் நீர் பற்றாக்குறையைப் போக்க தமிழக அரசு, ஆந்திர அரசுடன் 1983-ம் ஆண்டு, கிருஷ்ணா நதி நீர்ப் பங்கீடு திட்டம் மூலம் குடிநீர்த் தேவையை நிறைவேற்ற ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். இந்த 12 டி.எம்.சி தண்ணீரை, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி எனவும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி என்ற அளவிலும் தண்ணீர் வழங்க வேண்டும்.

இந்தத் திட்டத்திற்காக, கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரி வரை சுமார் 177 கிலோ மீட்டர் தூரம் வரை கால்வாய் கட்டப்பட்டது. இந்தக் கால்வாய், 152 கிலோ மீட்டர் வரை ஆந்திராவில் அமைத்துள்ளது. தமிழகதில், ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் ஜீரோ பாயின்டியிலிருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரம் அமைத்துள்ளது.

1983-ம் ஆண்டு இத்திட்டம் ஒப்பந்தமாகி, 1996-ம் ஆண்டு பணிகள் நிறைவேறியது. இதில், 15 டி.எம்.சி தண்ணீரில் நீர் ஆவியாவது போக 12 டி.எம்.சி தண்ணீர் வந்து சேரவேண்டும். ஆனால், இதுவரை வந்து சேர்ந்த அதிகபட்ச தண்ணீரின் அளவே 8.2 டி.எம்.சி தான். திட்டம் செயல்படத் தொடங்கியதிலிருந்து 2018-ம் ஆண்டு வரை வந்த மொத்த நீரின் அளவே சுமார் 80 டி.எம்.சி தான். ஆந்திராவில் நிலவும் வறட்சி, அணைகளின் நீர் இருப்பு, நீர் வரும் கால்வாயில் அடிக்கடி ஏற்பட்ட உடைப்புகள் என்று பல்வேறு காரணங்கள் உண்டு. இதில், வறட்சியைச் சரிசெய்ய இயலாது. ஆனால், கால்வாய்களின் உடைப்புகளையாவது சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டிருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னையின் தினசரி குடிநீர்த் தேவை 85 கோடி லிட்டராகும். அனால், நாள் ஒன்றுக்கு 50 முதல் 55 கோடி லிட்டருக்கும் குறைவான நீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் முக்கியமாக, நீர்வள ஆதாரமாக விளங்கி வந்தது சென்னையைச் சுற்றியுள்ள நான்கு ஏரிகள்தான். தற்சமயம், இந்த நான்கு ஏரிகளிலும் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது.

சென்னையின் பிரதான ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னையின் பிரதான ஏரிகளின் நீர் நிலவரம்

தண்ணீர் பிரச்னைக்கு அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது :-

தென்மேற்குப் பருவ மழையால் வீராணம் ஏரியில் முழ அளவு நிரம்பியிருந்தது. சென்னைக்கு தினமும் 18 லட்சம் லிட்டர் நீர் கொண்டுவரப்படுகிறது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களின் மூலம், மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் அமைத்துள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமாக மட்டும், 20 கோடி லிட்டர் குடிநீர் தினமும் கிடைக்கிறது.

சிக்கராயபுரம் கல் குவாரியில் இருந்து நாளொன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்க ரூ. 11 கோடி திட்ட மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டு, பிப்ரவரி மாதத்திலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சிக்கராயபுரம் உள்பட 22 குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு, குடிநீராக வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்த 2001-ம் ஆண்டு, சென்னையில் நிலவிய கடும் தண்ணீர் தட்டுப்பாட்டின்போது, ஈரோடு மற்றும் நெய்வேலியில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டது. அதேபோன்று, தற்போதும் ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரலாமா என்று ஆலோசித்து, அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் காவிரி ஆற்றின் அருகில் உள்ள திறந்த ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து அன்றாடம் 12 லட்சம் முதல் 15 லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் சென்னைக்குக் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், தற்போது வேலூர் மாவட்டத்துக்கு தினமும் 120 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், அந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தின்படி வேலூர் வரை தினமும் 160 மில்லியன் லிட்டர் குடிநீரைக் கொண்டு வர முடியும். அதாவது, கூடுதலாக 40 மில்லியன் லிட்டர் குடிநீரை தினமும் பெற முடியும். அந்த 40 மில்லியன் லிட்டர் குடிநீரில், 25 மில்லியன் லிட்டர் குடிநீரை ஜோலார் பேட்டை ரயில் நிலையத்திலிருந்து, ரயில் டேங்கர்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், காவிரி ஆற்றின் அருகில் உள்ள திறந்த ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து அன்றாடம் 12 லட்சம் முதல் 15 லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் சென்னைக்குக் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 316 விவசாயக் கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. தற்போது ,140 விவசாயக் கிணறுகளிலிருந்து 55 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டுவருகிறது. தற்சமயம் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 316 விவசாயக் கிணறுகளிலிருந்து நீர் எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டைப் பொறுத்தவரை சுமார் 8 ஆயிரம் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, 9,100 லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட்டுவருகிறது என சென்னைக் குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது நாள் ஒன்றுக்கு 525 மில்லியன் லிட்டர் குடிநீர் வியோகிக்கப்பட்டு வருகிறது, இதை 500 மில்லியன் லிட்டராகக் குறைக்க முடிவு செய்துள்ளனர். ஜூன் 3-வது வாரத்திலிருந்து விநியோகத்தின் அளவு குறையும். நவம்பர் மாதம் வரை தினமும் 500 மில்லியன் லிட்டர் குடிநீரே சென்னைக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு இன்னும் தீவிரமடையலாம்.

தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு, சராசரி மழையளவு 960 மில்லி மீட்டராகும். ஆனால், மழை பெய்த அளவு 811.7 மில்லி மீட்டர். தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி முதல் மே வரையிலான மாதங்களில் பெய்யவேண்டிய சராசரி மழை அளவு 108 மில்லி மீட்டர். ஆனால், இதுவரை பெய்த மழையளவு 34 மில்லி மீட்டராகும். அதாவது, சராசரியைவிட 69 சதவிகிதம் குறைவாகப் பெய்துள்ளது.

நிதி ஆயோக் ஆய்வறிக்கை-2018
நிதி ஆயோக் ஆய்வறிக்கை-2018

நடப்பாண்டில் ஏரி, குளங்களை விவசாயிகள் பங்களிப்போடு தூர் வாரும் குடிமராமத்து பணிகளுக்கு 499கோடியே 68 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து பணிகளுக்காகக் கடந்த 2017-ம் ஆண்டு, 100 கோடி ரூபாயும் கடந்த ஆண்டு 331 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீர் மேலாண்மைக்கு என்ன செய்திருக்க வேண்டும்?

தமிழனின் நீர் மேலாண்மை அளப்பரியது. ஏரி, கண்மாய், கரணை, தாங்கல், ஏந்தல், ஊரணி, குளம், குட்டை என்று வகைப்படுத்தி நீர்மேலாண்மையைச் செய்துள்ளார்கள் பண்டைய தமிழர்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அடிக்கடி சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மூன்று ஆறுகள் ஓடும் நகரத்தில், இத்தனை நீர்நிலைகள் உள்ள நகரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து, அனைத்து நீர்நிலைகளையும் கால்வாய்கள்கொண்டு ஒன்றிணைத்தார்கள். நீர் மேலாண்மை மேம்பட்டிருந்தது ஆங்கிலேயர்கள் காலத்தில்.

தமிழகத்தின் நீர் நிலைகள்
தமிழகத்தின் நீர் நிலைகள்

சென்னை மாநகரம், அடிப்படையிலேயே ஒரு நீர்ப்பிடிப்புள்ள பகுதி. எந்தவொரு நகரம் விரிவாக்கம் செய்யப்படும்போதும் அங்குள்ள நீர் நிலைகளை எந்தப் பதிப்பிற்கும் உள்ளாக்காமல் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது அரசு விதி. ஆனால், இங்கு பெரும்பாலும் நகர விரிவாக்கம் நீர்நிலைகளின்மீதுதான் நடைபெற்றுள்ளது.

விரிவாக்கத்திற்கு முந்தைய மாநகரத்தில், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் இருந்தாலும், நீர்நிலைகளை இணைக்கும் கால்வாய்களும் இருந்தன. ஆனால், விரிவாக்கப்பட்ட மாநகரத்தில் முன்பிருந்தது போன்ற எந்தவொரு கட்டமைப்பையும் காண முடியவில்லை.

தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905 மற்றும் தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல், சட்டம் 2007 ஆகியவை இருந்தும் ஆக்கிரமிப்புகளைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே நிதர்சனம். இங்கு, பல ஆக்கிரமிப்புகள் ஹவுசிங் போர்டு என்ற பெயரில் அரசே செய்துள்ளது என்பதே உண்மை.

ஏரிகளின் மீதுதான் சென்னை மாநகரம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதற்கு சிறந்த சான்று, மாம்பலம் பகுதியையும் வள்ளுவர்கோட்டம் பகுதியையும் சொல்லலாம். இன்று, சென்னையைச் சுற்றியிருந்த பல ஏரிகள் கான்கிரீட் காடுகளாக மாறிப்போனது. செம்பரம்பாக்கம், வேளச்சேரி, ஆலந்தூர், போரூர், ஆதம்பாக்கம், வில்லிவாக்கம், அம்பத்தூர், கொரட்டூர் ஏரிகளும், பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதிகளுமே எஞ்சியுள்ளன.

கொரட்டூர் ஏரி:

பலவகை உயிரினங்களுக்கு இருப்பிடமாக விளங்கும் கொரட்டூர் ஏரியின் பரப்பளவு 900 ஏக்கருக்கும் அதிகம். தற்போது, அதில் கிட்டத்தட்ட 600 ஏக்கர் மட்டுமே எஞ்சியுள்ளது. தற்போது, குப்பை மேடாகவும் குடியிருப்புப் பகுதியாகவும் மாறிவருகிறது.

ராமாபுரம் ஏரி :

ஆக்கிரமிப்பால் ராமாபுரம் ஏரி தற்போது 80 விழுக்காடு மாயமாகிவிட்டது. அந்த ஏரி, தற்போதைய வருவாய்த்துறை ஆவணப்படி, 27 ஏக்கர் இருக்க வேண்டும். ஆனால், தற்போது நீர்ப்பிடிப்புப் பகுதியாக இருப்பது, ஒரு ஏக்கருக்கும் குறைவே. ராமாபுரம் ஏரி நிரம்பி, திருவள்ளூர் சாலை போக்கு கால்வாய் மூலம், எம்.ஜி.ஆர் இல்லத்தின் பின்புற வழியாக, அடையாற்றில் கலக்க வேண்டும். ஆனால், அந்தக் கால்வாய்கள் பெரும்பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளன.

போரூர் ஏரி :

போரூர் ஏரி, தற்போதைய வருவாய்த்துறை ஆவணப்படி, 330 ஏக்கரில் இருக்கிறது. போரூர், காரம்பாக்கம் , தெள்ளியர் அகரம் ஆகிய பகுதிகளில் பல ஆக்கிரமிப்புகள், போரூர் ஏரியில்தான் நிகழ்த்தப்பட்டுள்ளன.

வில்லிவாக்கம் ஏரி :

1972-ம் ஆண்டு கணக்கின்படி, வில்லிவாக்கம் ஏரியின் அளவு 214 ஏக்கர். தற்போது, இந்த ஏரியின் அளவு 30 ஏக்கராவது இருக்குமா என்றால் சந்தேகம்தான். காரணம், சிட்கோ தொழிற்பேட்டை, சிட்கோ நகரம் என்று மொத்தமும் இந்த ஏரியின்மீதுதான் உள்ளது. மெட்ரோ ரயிலுக்காகத் தோண்டப்பட்ட சுரங்கப்பாதையில் வெளியேற்றப்பட்ட பெருமளவு மணல், இந்த ஏரிகளில்தான் கொட்டப்பட்டுள்ளது.

சிட்லபாக்கம் ஏரி

80 ஏக்கர் பரப்பளவில் இருந்த சிட்லபாக்கம் ஏரி, இப்போது 40 ஏக்கர் எஞ்சியுள்ளது. தற்போது இந்த ஏரி, குப்பைக்கிடங்கு போல் காட்சியளிக்கிறது.

மதுரவாயல் ஏரி:

மதுரவாயல் ஏறி 120 ஏக்கர். தற்போது 25 ஏக்கர் மட்டுமே உள்ளது.

காணாமல்போகும் கால்வாய்கள்:

கீழ்கட்டளை - நாராயணபுரம் ஏரியை இணைக்கும் கால்வாய், 60 அடி அகலம்கொண்டது. தற்போதய நிலையில் இது, 40 அடிக்கும் குறைவாக உள்ளது. காரணம், ஆக்கிரமிப்புகள்தான். இக்கால்வாயின் வழியாகத்தான் உபரி நீர் பள்ளிக்கரணை சதுப்புநிலங்களுக்குச் செல்ல வேண்டும். ஆனால், இந்தக் கால்வாய் கவலைக்கிடமாக உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, கொழுமுனிவாக்கம், மாங்காடு, பட்டு கூட்ரோடு, கெருகம்பாக்கம், அய்யப்பன்தாங்கல் பகுதிகளின் வழியாக போரூர் ஏரியை, தந்திக் கால்வாய் அடைகிறது. போரூர் ஏரியின் நீர்மட்டம் குறையும்போது, தந்திக் கால்வாய் வழியாக, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் பெறப்படும். மொத்தம், 12 கி.மீ நீளமுள்ள இந்தக் கால்வாய், 4 மீட்டர், அகலம்கொண்டது. அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில், ஆக்கிரமிப்புகளால் 2 கி.மீட்டர் சுருங்கிவிட்டது. இதில், பல வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இக்கால்வாயில் இருந்து, இ.வி.பி, பிரபு அவென்யூவின் காந்தி தெருவில் மற்றொரு கால்வாய் பிரிகிறது. இது, காந்தி தெரு, பாரதியார் தெரு, முத்து நகர் வழியாக, போரூர் ஏரிக்குச் செல்கிறது. இதிலும், பல ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் உள்ளன.

தாம்பரம்- கிண்டி இடையேயான ஜி.எஸ்.டி சாலையில் இரண்டு மணிநேரம் மட்டும் மழை பெய்தாலே, குரோம்பேட்டையில் ஒரு கி.மீ துாரத்திற்கு சாலை மூழ்கிவிடும். காரணம், அங்குள்ள அனைத்து கால்வாய்களும் ஆக்கிரமிப்புகளுக்கு ஆளானதுதான்.

கிழக்கு மற்றும் மேற்கு குரோம்பேட்டை, பெரிய பல்லாவரம் ஏரியில் இணைப்பதற்கு கட்டபொம்மன் கால்வாய் மற்றும் துர்கை அம்மன் கால்வாய் என இரண்டு பெரிய கால்வாய்கள் இருந்தன. இதில், 33 அடி அகலம் கொண்ட கட்டபொம்மன் கால்வாய், தற்போது ஏழு அடியாக மாறிப்போனது. துர்கை அம்மன் கால்வாய் முழுவதும் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. குரோம்பேட்டையைச் சுற்றியுள்ள ஏரிகளின் பெரும்பகுதி, தற்போது குடியிருப்புப் பகுதியாக மாறியுள்ளது. மீதி குப்பை மேடாக மாறிக்கொண்டிருக்கிறது.

ரங்கநாதபுரம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், கால்வாய் வழியாக சிட்லபாக்கம் ஏரிக்குச் செல்ல வேண்டும். பச்சைமலையில் இருந்து வரும் மழைநீரும், திருநீர்மலை கால்வாய் வழியாக சிட்லபாக்கம் ஏரிக்குச் செல்ல வேண்டும். நீர் செல்லும் அனைத்து கால்வாய்களும் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.

திருப்பனந்தாள் ஏரி, அடையாற்றை இணைக்கும் கால்வாய்களின் நீரோட்டம் கிட்டத்தட்ட தடைபட்டுள்ளது. காரணம், குடியிருப்புகளின் ஆக்கிரமிப்புகள்தான்.

மழைநீர் வடிகால்கள் மேம்படுத்தும் திட்டங்கள் :

தமிழக அமைச்சர்கள் மற்றும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் சென்னையில் மழைநீர் தேங்குவதற்கான காரணம்குறித்து ஆய்வு செய்தனர். மழைநீர் கால்வாய் இல்லாததாலும் செயலிழந்து போன மழைநீர் கால்வாயாலும் சாலைகளில் நீர் தேங்கி நிற்கிறது என்பதைக் கண்டுபிடித்தனர்.

334 இடங்களில் புதிதாக மழைநீர் கால்வாய் அமைத்தால், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று அரசுக்கு அறிக்கை கொடுத்தனர். அதன்படி, அரசு மழைநீர் கால்வாய் அமைக்க ரூ.290 கோடி நிதி ஒதுக்கியது. அதைத் தொடர்ந்து, கடந்த 26.9.18 அன்று வேலைசெய்வதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது.

சென்னையில் உள்ள 334 இடங்களில், புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக 200 இடங்களில் பணிகள் தொடங்கி நடந்துவருகிறது. இந்தப் பணி, மழை நேரத்திலும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும். மீதமுள்ள 134 இடங்களில், ஜனவரி மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த வருடம் பருவ மழைக்கு இந்த மழை நீர் கால்வாய் பயன்படும் என மாநகராட்சி கண்காணிப்பு மேற்பார்வையாளர் (மழைநீர்) நந்தகுமார், நவம்பர் 23, 2018. அன்று தெரிவித்திருந்தார்.

புதிதாய் கட்டிக்கொண்டிருக்கும் மழைநீர் வடிநீர் கால்வாய்
புதிதாய் கட்டிக்கொண்டிருக்கும் மழைநீர் வடிநீர் கால்வாய்

இவர் கூறியபடி மழைநீர் கால்வாய் கட்டியிருந்தால், மழைநீர் கால்வாய்களின் வழியே நீர்நிலைகளைச் சென்றடையும். இந்த இரண்டுநாள் சென்னையில் பெய்த சிறு மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதை நாம் கண்கூடாகக் காண முடிந்தது. காரணம், இன்றுவரை வடிநீர் கால்வாய்கள் கட்டி முடிக்கப்படவில்லை. சென்னையின் சாலை ஓரங்களில் கால்வாய்கள் கட்டும் பணி தற்போது நடைபெற்றுவருவதை நாம் காணமுடிகிறது.

இருந்த நீர்நிலைகளை அனைத்தையும் அழித்து அதன்மிது நகர விரிவாக்கம் செய்துவிட்டோம். தற்போது இருக்கின்ற நீர்நிலைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றோம். மழைநீர் வடிகால்களையும், கால்வாய்களையும், கழிவுநீர் கால்வாய்களாக மாற்றிவிட்டோம். கழுவுநீர்களை கொண்டு கூவம் நதியை கொலைசெய்துவிட்டோம். பக்கிங்காம் கால்வாயை பாழாக்கிவிட்டோம். மலை பெய்யும் போது அந்த நீர் சாக்கடையுடன் சங்கமிக்கிறது. நீர்நிலைகள் தூர்வாராமல் துவண்டு கிடக்கிறது. தண்ணீர் வழித்தடங்களையும் நீர் நிலைகளையும் முற்றிலுமாக பாழாக்கிவிட்டால் தண்ணீர் பஞ்சம் வரத்தான் செய்யும். மழைக்காலங்களில் வெள்ளம் வரத்தான் செய்யும்.

இதற்கு ஒரே தீர்வு, இழந்தவை இழந்தவையாகவே இருக்கட்டும். இருக்கும் நீர் நிலைகளையாவது நன்முறையில் பராமரித்து, மழைநீர் வடிகால்களைச் சரிப்படுத்தி, ந்த நீர் நீர்நிலைகளை அடையச்செய்து, நிலத்தடி நீரை உயர்த்துவதே ஒரேவழி.

சென்னையைப் பொருத்தமட்டும் 25 லட்சம் மரங்கள் இருக்க வேண்டும். இருப்பதோ கிட்டத்தட்ட 2.75 லட்சம் மரங்கள்தான். வர்தாவில் விழுந்த மரத்தின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்தைத் தாண்டும். மீண்டும் மரங்களை நடுவதுகுறித்து அரசு பெரிதாய் பொறுப்பெடுத்துக்கொள்ளாதது வருத்தத்தைத் தருகிறது. இப்போதாவது நடவடிக்கையைத் துரிதப்படுத்தினால், உடனடி தீர்வு கிடைக்காவிட்டாலும், இன்னும் ஒருசில வருடங்களில் இந்த நிலை முற்றிலும் மாறி, மீண்டும் சென்னை இயல்புநிலை அடையும்.