Published:Updated:

ஊழிக்காலம் - 2 | கேயாஸ் தியரிக்கும் காலநிலை மாற்றத்துக்கும் என்ன சம்பந்தம்?

1880-ல் தொடங்கி இப்போது வரை புவியின் சராசரி வெப்பநிலை கிட்டத்தட்ட 1.18 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த விகிதம் வருடாவருடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது.

"புவி வெப்பமடைதல் என்பதை நாம் ஒரு குழப்பமான மனநிலையோடு அணுகுகிறோம். நம் பொதுவான புரிதலுக்கு அப்பாற்பட்டு, மிகவும் சிக்கலானதாகத் தெரிவதால் அது உண்மையில்லை என்றுகூட நினைக்கிறோம். ஆனால் அதுதான் இப்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிற நிஜம்!"
தத்துவவியலாளர் டிமதி மார்டன்

இதுபோன்ற பிரமாண்டமான விஷயங்களை 'Hyper objects' என்று அழைக்கிறார் அவர்.

ஏன் புவி வெப்பமடைதல் பற்றிய அறிவியல் விவரணைகள் மிகவும் சிக்கலானவையாக, புரிந்துகொள்வதற்குக் கடினமானவையாக இருக்கின்றன? ஏனென்றால் காலநிலை (Climate) என்பதே சிக்கலானதுதான். பூமியின் வளிமண்டலம் (Atmosphere), நீர், பனிக்கட்டிகள், உயிர் மண்டலம், நிலப்பரப்பு எல்லாவற்றோடும் தொடர்புடையது காலநிலை. சிலந்தியின் வலைபோல எல்லாமே இணைந்திருக்கிறது என்பதால் காலநிலையே இடியாப்பச் சிக்கல்தானோ என்று நமக்குத் தோன்றுகிறது. "வெட்டுக்கிளி படையெடுப்பதற்கும் காலநிலை மாற்றத்துக்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும்?" என்று நாம் குழம்புகிறோம்.

Global Warming
Global Warming
Pixabay

"ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு ஒரு பெரும்புயலையே உருவாக்கிவிடுகிறது" என்று சொல்கிற கேயாஸ் தியரி நினைவிருக்கிறதா? எங்கேயோ இருக்கும் வண்ணத்துப் பூச்சி, பூமியின் வேறொரு மூலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. காலநிலை அறிவியலும் அதைப் போன்றதுதான். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், பொறுமையாகத் தேடினால், வண்ணத்துப்பூச்சியையும் புயலையும் இணைக்கும் ஒரு சரடு நமக்கு அகப்படும்.

அந்த சரடுதான் பசுமைக்குடில் விளைவு (Greenhouse effect). பலரும் இதை பள்ளிப்பாடங்களில் படித்திருப்போம். ஒவ்வொரு விநாடியும் சூரியனிலிருந்து பூமிக்கு ஆற்றல் வருகிறது. சூரியனிலிருந்து கிளம்புகிற ஆற்றல் முழுவதும் பூமியின் நிலப்பகுதிக்கு வந்து சேர்வதில்லை. வளிமண்டலத்தின் சில வாயுக்களும் மேகங்களும் கொஞ்சம் ஆற்றலைப் பிரதிபலித்து திருப்பி அனுப்பிவிடுகின்றன. இன்னும் கொஞ்சம் ஆற்றலை அவை நேரடியாக உறிஞ்சிவிடுகின்றன. மீதி 70% ஆற்றல் மட்டுமே நிலத்துக்கு வந்து சேர்கிறது. முதலில் நிலம் அந்த ஆற்றலை உள்ளிழுத்துக் கொள்கிறது. பிறகு அதை கண்ணுக்குத் தெரியாத அகச்சிவப்புக் கதிர்களாக வெளியிடுகிறது. இந்தக் கதிர்கள் மீண்டும் விண்வெளிக்குப் பயணிக்கின்றன.

அப்படியானால் சூரியனிலிருந்து வந்த எல்லா ஆற்றலும் திரும்ப விண்வெளிக்கே சென்றுவிடும்போல் இருக்கிறதே என்ற சந்தேகம் வருகிறதா? இங்கேதான் பசுமைக்குடில் வாயுக்களின் செயல்திறன் வருகிறது. பூமியிலிருந்து மீண்டும் விண்வெளிக்கே அனுப்பப்படும் ஆற்றலின் பெரும்பகுதியை, பசுமைக்குடில் வாயுக்கள் நம்முடைய வளிமண்டலத்திலேயே இழுத்துப் பிடித்துவைத்துக்கொள்கின்றன. நமக்குத் தேவையான வெப்பம் வளிமண்டலத்துக்குள் தக்கவைக்கப்படுகிறது. பசுமைக்குடில் வாயுக்கள் மட்டும் இல்லாவிட்டால் நமது பூமியின் சராசரி வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும்! அந்த நிலையில் பூமியே உயிர்கள் வாழமுடியாத பனிப்பாலைவனமாகத்தான் இருக்கும்!
பசுமைக்குடில் விளைவு (Greenhouse effect)
பசுமைக்குடில் விளைவு (Greenhouse effect)

கண்ணாடியாலான அறைகளில் செடிகள் வளர்க்கப்படுவதைப் பார்த்திருப்போம். கண்ணாடி, சூரிய ஒளியை மட்டுமல்லாமல், சூரியனிலிருந்து வரும் வெப்பத்தையும் செடிகளுக்குக் கடத்துகிறது. அதே சமயம், அந்த வெப்பம் வெளியில்போகாமல் உள்ளேயே தக்கவைத்துக்கொள்கிறது. இந்த பசுமைக்குடில்களின் கண்ணாடி எப்படி செயல்படுகிறதோ, நம் வளிமண்டலத்தில் இருக்கிற சில வாயுக்களும் அப்படித்தான் செயல்படுகின்றன. அவற்றைத்தான் பசுமைக்குடில் வாயுக்கள் என்கிறோம். கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு), நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் ஆகியவை முக்கியமான பசுமைக்குடில் வாயுக்கள்.

சரி... இதுவரை சொன்னதைப் பார்த்தால் பசுமைக்குடில் விளைவு என்பது பூமிக்கு நன்மை செய்வதாகத்தான் இருக்கிறது. இதனால் எப்படி சீரழிவு ஏற்படும்?

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. பசுமைக்குடில் வாயுக்களின் அளவு அதிகரிக்கும்போது, அவை தக்கவைத்துக்கொள்ளும் வெப்பமும் அதிகரிக்கிறது. சராசரியை விட பூமியின் வெப்பநிலை கூடுகிறது. அதைத்தான் நாம் புவி வெப்பமடைதல் என்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாகனங்களின் எரிபொருள் பயன்பாடு, மின்சார தயாரிப்பு மற்றும் பயன்பாடு, தொழிற்சாலைகள், காடுகளை அழித்தல், செயற்கை உரங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள் ஆகியவை அதிகமான பசுமைக்குடில் வாயுக்களை வெளியேற்றுவதாகத் தெரிவிக்கிறார்கள் காலநிலை விஞ்ஞானிகள். நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் பயன்பாடு எங்கெங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறுகின்றன. இதுபோன்ற எரிபொருட்களைப் பயன்படுத்துவதால், பத்து நிமிடத்துக்கு ஒருமுறை 1 மில்லியன் டன் பசுமைக்குடில் வாயுக்கள் காற்றில் கலக்கின்றன!

பசுமைக்குடில் பட்டியலில் மீத்தேன், நீராவி, நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பல வாயுக்கள் இருந்தாலும், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுவது கரியமில வாயுதான். மற்ற வாயுக்களோடு ஒப்பிடும்போது இதன் செயல்திறன் குறைவு என்றாலும், காற்றில் இதன் அளவு அதிகம் என்பதால், பாதிப்புகளும் அதிகம்.

1880ல் தொடங்கி இப்போது வரை புவியின் சராசரி வெப்பநிலை கிட்டத்தட்ட 1.18 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த விகிதம் வருடாவருடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது.

Global Warming
Global Warming
"1.18 டிகிரிக்குத்தான் இத்தனை பீதியைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்களா? நேற்றைக்கும் இன்றைக்கும் வெப்பநிலையை ஒப்பிட்டால் கூட இந்த மாற்றம் இருக்கும். அதனால் எல்லாரும் இறந்துவிட்டோமா என்ன?"
என்ற கேள்வி எழலாம்.

இதில் மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டும். முதலாவதாக, புவியின் 'சராசரி' வெப்பநிலை என்பது இதில் முக்கியமான வார்த்தை. உலகின் எல்லா இடங்களிலும் உள்ள வெப்பநிலையை ஆவணப்படுத்தி, அதை சராசரியாகக் கணக்கெடுத்தால் வரும் வெப்பநிலை ஒட்டுமொத்தமாக 1.18 டிகிரிகள் அதிகரித்திருக்கிறது. அப்படியானால் எல்லா இடங்களிலும் 1.18 டிகிரி மட்டுமே அதிகரித்திருக்கிறது என்பது சொல்ல முடியாது. சில இடங்களில் வெப்பநிலை இன்னும் கூடுதலாகக் கூட அதிகரித்திருக்கலாம். தவிர, ஆர்டிக் பனிப்பிரதேசப் பகுதியில் ஏறுகிற வெப்பநிலையும் ஏற்கனவே வறண்ட ஒரு நிலப்பரப்பில் வெப்பம் அதிகரிப்பதும் ஒன்றல்ல. ஒவ்வொரு இடத்திலும் பாதிப்பு மாறுபடும்.

இரண்டாவதாக, புவியின் சராசரி வெப்பநிலை அரை டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் ஒரு பட்டியல் தருகிறார்கள். அரை டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தாலே கோதுமை உற்பத்தி 7% குறையும், சோள உற்பத்தி 3% குறையும், கடல்நீர் மட்டம் 10 சென்டிமீட்டர் அதிகரிக்கும், பவளப்பாறைகள் நிறமிழப்பது 8% அதிகரிக்கும், கனமழை பெய்யும் வாய்ப்பு 2% அதிகரிக்கும், கடும் கோடை காலகட்டம் 10 நாட்கள் கூடுதலாக இருக்கும். அரை டிகிரிக்கே இதுதான் நிலைமை என்றால் மொத்த பாதிப்பை நாமே கணக்குப் போட்டுக்கொள்ளலாம்.

மூன்றாவது, தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கும் வெப்பநிலையில், முதலாவது ஒரு டிகிரியும் அடுத்த ஒரு டிகிரியும் ஒன்றல்ல. இரண்டாவது டிகிரி அதிகரிப்புக்கு பாதிப்பு கூடுதல், மூன்றாவது டிகிரியின் பாதிப்பு இன்னும் கூடுதல். ஏற்கனவே தாங்க முடியாத எடையை நாம் தூக்கிக்கொண்டிருக்கும்போது, இன்னும் ஒரேயொரு நெல்லிக்காயை நம்மேல் வைத்தால்கூட அது கூடுதல் பாரம்தானே!

ஊழிக்காலம்
ஊழிக்காலம்

கொதிக்கின்ற நீரில் ஒரு உயிருள்ள தவளையைப் போட்டால் அது உடனே குதித்து ஓடிவிடும். ஆனால், ஒரு தவளையை நீர்நிரம்பிய பாத்திரத்தில்போட்டு, அதை அடுப்பில் வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றினால், நீர் சுடுகிறது என்று தவளை உணர்வதற்குள் பாதிப்பு அதிகமாக வந்துவிடும் இல்லையா, அதைப் போலத்தான் இதுவும்.

வெப்பநிலை அதிகரிப்பதுதான் பிரச்னை என்றால் இது புவி வெப்பமடைதல் மட்டும்தானே, இதை ஏன் காலநிலை மாற்றம் என்று சொல்கிறார்கள்?

வெப்பம் அதிகரிக்கிறது என்றால் வறட்சிதானே வரவேண்டும்? கடும்புயல், வெள்ளம் ஆகியவைகூட காலநிலை மாற்றத்தால்தான் ஏற்படுகிறது என்கிறார்களே, அது எப்படி சாத்தியம்?

காலநிலை மாற்றத்துக்குக் கார்பன் பட்ஜெட், கரிம உமிழ்வு பற்றிய ஒப்பந்தங்களைத் தீர்வாக சொல்கிறார்களே அதன் அடிப்படை என்ன?

அடுத்த கட்டுரையில் அலசுவோம்.

- Warming Up...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு