Published:Updated:

டெல்லியைச் சூழ்ந்துள்ள நச்சுப்புகைக்கு காரணம் என்ன? - ஓர் அலசல்

டெல்லி
டெல்லி

`எப்போதும் இல்லாத அளவுக்குக் காற்று மாசடைந்துள்ளது, பொல்யூஷன் மாஸ்கின் விலை நூறு ரூபாய் சொல்கின்றனர். தினசரி வருமானம் சாப்பாட்டுக்கே சரியாய்ப் போகிறது, மாஸ்க் வாங்குவதற்கு நாங்கள் என்ன செய்வோம்!’

டெல்லிக்கும் காற்று மாசுக்குமான உறவு, ஒவ்வோர் ஆண்டும் நெருக்கமாகிக்கொண்டே போகின்றது. அதை உறுதி செய்யும் வகையில் மீண்டுமோர் அபாய நிலை டெல்லியில் சமீபத்தில் ஏற்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை நச்சுப்புகையில் மூழ்கியிருந்தன. சமீப காலங்களில் இதுவே மோசமான நிலை என்று அறியப்படுகிறது. இதனால் விமானப் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் பள்ளிகளும் மூடப்பட்டன.

ஞாயிறன்று காற்று மாசுபாட்டின் அளவு (Air quality index) 999-ஐத் தொட்டது. இது `அபாயகரமான' அளவைவிட அதிகமென்று சொல்லப்படுகிறது. 2.5 மைக்ரான்களுக்கும் குறைவான அளவுள்ள நுண்துகள்கள் காற்றில் அதிகமாகக் கலந்துள்ளன. இதுவே இந்த ஆண்டில் பதிவான மோசமான மாசுபாடு. இந்த நிலைக்கு சனிக்கிழமை மாலை பெய்த மழையே காரணமென்று, இந்திய அரசின் காற்றுத் தர வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (SAFAR) தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி, ரோகிணி, சோனியா விஹார், ஷாஹ்தாரா, ஓக்லா, மேஜர் தியான் சிங் ஸ்டேடியம், ஆனந்த் விஹார், பஞ்சாபி பாக், பூசா, மந்திர் மார்க், முண்ட்கா, ஜே.என்.யூ ஆகிய இடங்களில் காற்று மாசுபாடு அளவு 999 பி.எம் ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள மற்ற இடங்கள் 900 பி.எம் என்கிற அளவைத் தாண்டியுள்ளது.

ஞாயிறன்று முதல்வர் கெஜ்ரிவால் ``மாசு தாங்கமுடியாத அளவைத் தாண்டியுள்ளது" என்று ட்வீட் செய்துள்ளார். மக்களும் அதை ரீட்வீட் செய்து "விரைவில் இதைச் சரி செய்யுங்கள்" என்று சொல்லிய வண்ணம் உள்ளனர்.

காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நெல் மற்றும் வைக்கோல்களைத் தீ வைத்து எரித்ததால், அந்தப் புகை டெல்லியைப் பாதித்தது. மொத்தத்தில் 44% அளவுக்கு அந்தப் புகையே டெல்லியைச் சூழ்ந்திருந்தது. ஆனால், சனிக்கிழமையன்று 17% ஆகக் குறைந்துவிட்டது என்றபோதும், நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளதே தவிர குறைந்தபாடில்லை.

ஞாயிறு மாலை பிரதமரின் முதன்மைச் செயலாளர் தலைமையில் ஒரு கூட்டு ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப்பைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இணைந்து திட்டமிட்டனர்.

மருத்துவமனைகளில் சுவாசக் கோளாறு மற்றும் நுரையீரல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். மேலும், அதிக நபர்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

வெள்ளிக்கிழமையன்று உச்சநீதிமன்ற உத்தரவின்படி டெல்லி அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும், நவம்பர் 5 வரை கட்டுமானப் பணிகளை நடத்தவும் தடை விதித்துள்ளது. தடையை மீறிக் கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஐந்து ரியல் எஸ்டேட் குழுக்களைச் சேர்ந்த 38 பேரைக் கைது செய்துள்ளனர்.

காற்று மாசு குறித்து கல்லூரி மாணவர்களிடம் கேட்டபோது ``இந்தக் காற்று மாசுபாட்டால் எங்களின் தினசரி வேலையைக்கூடச் செய்ய இயலவில்லை. பொல்யூஷன் மாஸ்க் அணிந்துகொண்டுதான் போகிறோம். இருந்தாலும், சளி, இருமல், தலைவலி போன்றவை வந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகின்றது."

எப்போதும் இல்லாத அளவுக்குக் காற்று மாசடைந்துள்ளது, பொல்யூஷன் மாஸ்கின் விலை நூறு ரூபாய் சொல்கின்றனர். தினசரி வருமானம் சாப்பாட்டுக்கே சரியாய்ப் போகிறது, மாஸ்க் வாங்குவதற்கு நாங்கள் என்ன செய்வோம்! அரசு அனைவருக்கும் இலவச மாஸ்க் தர வேண்டும்.
ரிக்‌ஷா ஓட்டுபவர்

டெல்லி பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் ஆசிரியர் கெளரவிடம் பேசியபோது, "காஸியாபாத் மற்றும் ஃபரிதாபாத் போன்ற இடங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. இந்தப் புகை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. அதனால் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் வெளியே செல்வதைத் தவிர்க்கவேண்டும். வெளியே செல்கையில் N95 மாஸ்க்கை அணிந்துகொண்டுதான் செல்லவேண்டும், லெமன் ஜூஸ் மற்றும் தண்ணீர் நிறைய பருக வேண்டும். நமது வீடுகளில் காற்றைச் சுத்தப்படுத்தும் சுத்திகரிப்புச் ( Air Purifier) சாதனங்களைப் பயன்படுத்தினால் உடம்புக்கு எந்தத் தொந்தரவும் வராது" என்றார்.

டெல்லியில், சாலைகளில் வசிக்கும் தினக்கூலிகளுக்கு மாஸ்க் வாங்குவதற்கும் காற்றைச் சுத்தப்படுத்தும் கருவிகள் வாங்குவதற்கும் பணம் கிடையாது. அவர்களைக் காற்று மாசுபாடு மிகவும் பாதிக்கிறது. அந்தப் பாதிப்பிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் அவர்களுடைய நிலையைக் கருத்தில் கொண்டு அரசு நல்ல முடிவை விரைவில் எடுக்குமென டெல்லி மக்கள் நம்புகின்றனர்.

மாசுபாடு
மாசுபாடு

இந்தியத் தலைநகரில் வாழும் மக்கள், உலகின் அதிக மாசடைந்த காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் தற்காலிக நடவடிக்கைகளை அவசர அவசரமாக எடுத்துவிட்டு, பின் வழக்கம்போல் அப்படியே விட்டுவிடுவதை வாடிக்கையாகச் செய்யாமல், காற்று மாசுபாட்டுப் பிரச்னைக்கு அரசு, நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

பின் செல்ல