Published:Updated:

ஆழ்துளைக் கிணறு விபத்துகள்: அமெரிக்கா ஜெஸ்ஸிக்காவுக்குச் செய்ததை இந்தியா சுஜித்துக்குச் செய்யுமா?

56 மணிநேரத் தொடர்போராட்டத்துக்குப் பிறகு அந்தக் குழந்தை மீட்கப்பட்டதும் அந்தப் பகுதி மக்கள் செய்த முதல் காரியம்...

ஆழ்துளைக்கிணறு ஜெஸிக்கா(1987)
சுஜித்(2019)
ஆழ்துளைக்கிணறு ஜெஸிக்கா(1987) சுஜித்(2019)

கடந்த 2010 முதல் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்த பிள்ளைகளில் சிலர் பற்றிய விவரங்கள் கீழே உள்ள பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளன. 21 பிள்ளைகளில் மீட்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெறும் இரண்டு மட்டுமே. ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி இறந்து போன மணப்பாறை சுஜித்தின் பெயரும் இதில் அடக்கம்.

ஆழ்துளைக் கிணற்றில் பலியானவர்கள்.
ஆழ்துளைக் கிணற்றில் பலியானவர்கள்.
1987-ல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண அழ்துளைக் கிணறு ஒன்றில் 18 மாதங்களான ஜெஸிக்கா என்னும் குழந்தை, 22 அடி ஆழத்துக்குள் விழுந்தது. 56 மணி நேரத் தொடர்போராட்டத்துக்குப் பிறகு அந்தக் குழந்தை மீட்கப்பட்டதும் அந்தப் பகுதி மக்கள் செய்த முதல் காரியம் `For Jessica with love' எனப் பொறிக்கப்பட்ட வட்டவடிவிலான இரும்பு மூடி கொண்டு அந்தக் கிணற்றை மூடியதுதான்.

ஆழ்துளைக் கிணறு மரணங்கள் சர்வதேச அளவில் நிகழ்பவை என்றாலும் இந்தியாவில் மட்டுமே அவை தொடர் விபத்துகளாக நிகழ்ந்து வருகின்றன. 1987-ல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண அழ்துளைக் கிணறு ஒன்றில் 18 மாதங்களான ஜெஸிக்கா என்னும் குழந்தை 22 அடி ஆழத்துக்குள் விழுந்தது. 56 மணிநேரத் தொடர்போராட்டத்துக்குப் பிறகு அந்தக் குழந்தை மீட்கப்பட்டதும் அந்தப் பகுதி மக்கள் செய்த முதல் காரியம் `For Jessica with love' எனப் பொறிக்கப்பட்ட வட்டவடிவிலான இரும்பு மூடி கொண்டு அந்தக் கிணற்றை மூடியதுதான்.

ஜெஸிக்காவின் போராட்டம்தான் ஆழ்துளைக் கிணறு விபத்துகளில் கடைசியானதாக இருக்கவேண்டும் என்று அந்த மக்கள் முடிவெடுத்தார்கள். இந்தியாவில் நடக்கும் ஆழ்துளைக் கிணறு விபத்துகளைப் பொறுத்தவரை விபத்துச் சம்பவம் நடந்த இரண்டொரு நாள்களுக்கு மாநில மற்றும் தேசிய ஊடகங்கள் அதுகுறித்துத் தீவிரமாக விவாதிக்கும், மாநில அரசுகள் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டிருப்பதை உறுதிபடுத்தச் சொல்லி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கும்.

2014 சங்கரன் கோவில் விபத்திலும், 2018 நாகப்பட்டினம் விபத்திலும் அரசு அதைத்தான் செய்தது. அரசு சொன்னது தொடர்ச்சியாகக் கண்காணிப்பில் இருந்திருந்தால் இன்று குழந்தை சுஜித் மரணம் நிகழ்ந்திருக்காது. ஜெஸிக்காவுக்காக அமெரிக்க மக்கள் முடிவெடுத்ததுபோல ஏன் இந்திய மக்கள் முடிவெடுக்கவில்லை..?

‘For Jessica with love'
‘For Jessica with love'

ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து மீட்பதற்கான கருவிகள் என கூகுளில் தேடினால் கல்லூரி மாணவர்கள் தனிநபர்கள் எனப் பலர் கண்டுபிடித்திருக்கும் நூற்றுக்கணக்கான கருவிகள் குறித்த ஆய்வுகள் கிடைக்கப்பெறுகின்றன. கருவிகள் இருக்கின்றன அவை பிள்ளைகளைக் காப்பாற்றும் என்பதற்காகவே ஆழ்துளைக் கிணறுகளை அலட்சியப் போக்கில் விட்டுவைக்கலாமா என்று கேள்வி எழுப்புகிறார் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் மெக்கானிக்கல் துறைத்தலைவர் டாக்டர் மனோன்மணி. தனது மாணவர் ஒருவருடன் இணைந்து ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார் இவர்.

இதுவரை இந்தியாவில் நிகழ்ந்த ஆழ்துளைக் கிணறு விபத்துகளில் பேரிடர் மீட்புக் குழு விரைந்து சென்றும், ஒரு விபத்தில் கூட உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அவர்களால் உத்தரவாதம் கொடுக்க முடியவில்லை.

குழியில் மாட்டிக் கொண்டிருக்கும் உயிரை அதன் வடிவத்தைக் கணக்கில் கொண்டு இலகுவாக மேலே எடுத்துவரும் வகையில் இவர் தனது கருவியை வடிவமைத்திருக்கிறார்.

“இயந்திரங்கள் என்றுமே நம்பத் தகுந்தவை அல்ல. 80 அடி ஆழத்தில் உள்ள குழந்தையை இயந்திரம் காப்பாற்றும் என்கிற நம்பிக்கையில் ஆழ்துளைகளை மூடாமல் விடுவதோ அல்லது சரிவர மூடாமல் இருப்பதோ அக்கறையின்மை. தண்ணீர் இல்லை என்று தெரிந்ததுமே ஆழ்துளைகளை அதற்கான பிளாஸ்டிக் மூடி கொண்டும் அதன் மேல் சிமென்ட் கொண்டும் மூடவேண்டும். இயந்திரங்கள் கொண்டு மீட்பதன் சாத்தியம் ஒவ்வொரு நில அமைப்புக்கும் ஏற்றபடி மாறுபடும். சீனாவிலிருந்து எல்லாம் கருவிகளைக் கொண்டு வரலாம். வெளிநாட்டில் இப்படி விபத்துக்குள்ளாகும் பிள்ளைகளை மீட்பவர்களை அழைக்கலாம் என்றெல்லாம் கருத்து கூறுகிறார்கள். ஆனால், ஆழ்துளைக் கிணறு பிரச்னைகளில் வருமுன் காப்பது மட்டுமே சாத்தியப்படக் கூடிய தீர்வு” என்கிறார் மனோன்மணி.

வல்லரசு தேசத்தில் ஜெஸிக்காவைக் காப்பாற்றுவதற்குக் கூட சுஜித்துக்குத் தோண்டப்பட்டதைப் போன்று அவர் விழுந்த குழிக்கு அருகிலேயே ஆழ்துளை ஒன்றைப் போட்டுதான் மீட்டெடுத்தார்கள் என்பதை இங்கே நினைவில் கொள்ளவேண்டும். ஜெஸிக்கா மீட்கப்பட்ட பிறகும் அவரது வாழ்க்கை இயல்பாக இருந்துவிடவில்லை. குழிக்குள் விழுந்ததில் ஏற்பட்ட காயங்களால் அவருக்கு உடலில் 15 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. 1990–ல் அவரது பெற்றோர் விபத்து ஏற்படுத்திய உளைச்சல் காரணமாக விவாகரத்துப் பெற்றார்கள். உச்சக்கட்டமாக ஜெஸிக்காவை மீட்டு வெளியே எடுத்து வந்த பேட்ரோல் அதிகாரி, அதற்கடுத்த வருடங்களில் விபத்து ஏற்படுத்திய மன அழுத்தம் காரணமாக 1995ல் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. இத்தனைக்கும் நடுவில் ஜெஸிகா காப்பாற்றப்பட்டார் என்பது மட்டுமே ஆறுதல்.

தேசியப் பேரிடர் மீட்புக்குழு சொல்லும் காரணங்கள்
தேசியப் பேரிடர் மீட்புக்குழு சொல்லும் காரணங்கள்

தேசியப் பேரிடர் மீட்புக்குழு, ஆழ்துளைக் கிணறுகளில் வீழ்ந்தவர்களை மீட்பதற்காக கையாளும் வழிமுறைகளை மேலும் அறிந்துகொள்ள கீழேயுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

download

இதுவரை இந்தியாவில் நிகழ்ந்த ஆழ்துளைக் கிணறு விபத்துகளில் பேரிடர் மீட்புக் குழு விரைந்து சென்றும் ஒரு விபத்தில் கூட உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அவர்களால் உத்தரவாதம் கொடுக்க முடியவில்லை.

பேரிடர் மீட்புக் குழு தனது வலைதளப் பக்கத்தில் ஆழ்துளைக் கிணறு விபத்துகளிலிருந்து மீட்பதற்காகத் தாங்கள் பின்பற்றும் வழிமுறைகள் குறித்து விளக்கியுள்ளது. கயிறு, மேஜிக் பந்து, குடைக்கருவி, துணிப்பை, ஜூலா, L/J/U வடிவிலான இரும்புக் கம்பி, கம்பி வளைவு கொண்ட அலுமினியக் கம்பி எனப் பல வழிமுறைகளை பேரிடர் மீட்புக் குழு குறிப்பிட்டிருந்தாலும் இந்த வழிமுறைகள் எதுவுமே இதுநாள் வரை எந்தக் குழந்தையையும் காப்பாற்றக் கைகொடுக்கவில்லை. பெரும்பாலும் வெளியே விளையாடச் செல்லும் பிள்ளைகள்தான் தவறி ஆழ்துளைக்குள் விழுந்துவிடுகிறார்கள் என்கிறது பேரிடர் மீட்புக் குழுவின் டேட்டா.

இந்தியாவில், குறிப்பாக ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களில்தான் ஆழ்துளைக் கிணறு விபத்துகள் அதிகம் நடைபெறுகின்றன. இந்தப் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அரசு அனுமதிபெற்று ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படுவதில்லை என்பதால் இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த ஆழ்துளைக் கிணறுகள் குறித்த பட்டியலை எடுத்தாலுமே அந்த எண்ணிக்கை தவறானதாகவே இருக்கும் என்கிறார் பெயர் வெளியிடவிரும்பாத தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர்.

அப்படியிருக்க, `ஆழ்துளைக் கிணறுகள் மீதான நடவடிக்கை எடுக்க அரசே சட்டம் கொண்டுவந்தாலும், இப்படியான அனுமதியற்ற ஆழ்துளைகளால் அதை நடைமுறைப்படுத்துவதிலும் சிக்கல் நிலவும்’ என்கிறார் அவர்.

கருவிகள், பாதுகாப்புக் குழு, அரசு நடவடிக்கை என அத்தனையும் கடந்து இந்தப் பிரச்னை தனிநபர் முன்னெடுப்பு என்பதில்தான் வந்து நிற்கிறது. தன் வீட்டில் அல்லது தனது விளைநிலத்தில் தான் போடும் ஆழ்குழாய் உபயோகமாகவில்லை என்றால் அதைச்  சரிவர மூடவேண்டும் என்பது குறிப்பிட்ட தனிநபரின் கடமை. கடமையைச் செய்வோம்.

100 அடி ஆழத்தில் அச்சுறுத்தும் இருட்டுக்குள் கற்கள் பூச்சிகள், பல் கடுக்கவைக்கும் குளிர், மழை என அத்தனைக்கும் நடுவே மரண பயத்தை, தனது கைகளுக்குள் மூன்று நாள்களாக இறுகப் பற்றிக் கொண்டிருந்த அந்த சிசுவின் மனநிலையை வேறு எந்தக் குழந்தைக்கும் தரும் பாவத்தை இனியும் செய்யாதிருப்போம்.

ஆழ்துளை குழி மீட்பு  கருவி கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு! - ஐ.டி.செயலர் அறிவிப்பு