Published:Updated:

எட்டுவழிச் சாலைக்கு தடையா... இல்லையா?! - உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன?

சென்னை - சேலம் இடையேயான எட்டு வழிச்சாலை வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு சொல்வது என்ன?

2018-ம் ஆண்டு சென்னை - சேலம் இடையே எட்டு வழிச் சாலை திட்டத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாகச் சாலை அமைக்க மத்திய அரசு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதற்காக சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, முதல்கட்டப் பணிகளையும் தொடங்கியது. பல இடங்களில் விவசாயிகளின் நிலங்களில் எல்லைக்கற்கள் நடப்பட்டன. இதனால், அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கினர்.

நிலம் கையகப்படுத்தும் பணி
நிலம் கையகப்படுத்தும் பணி

தொடர்ந்து, இத்திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரியும், திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் ஐந்து மாவட்ட விவசாயிகள், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் உட்பட பலரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இயற்கை வளங்கள் பாதிப்பு, விவசாய நிலங்கள் பாதிப்பு உட்பட இதுதொடர்பாக மொத்தம் 45 வழக்குகள் வரிசையாக விசாரிக்கப்பட்டு வந்தன. இந்த வழக்குகளை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஆறு மாதங்களுக்கும் மேலாக விசாரித்துவந்தது. அனைத்துத் தரப்பு விவாதங்களும் முடிந்து கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அந்தத் தீர்ப்பில், ``தேசிய நெடுஞ்சாலைச் சட்டம் 1956-ன்படி தமிழக அரசு பிறப்பித்த நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான அரசாணை ரத்து செய்யப்படுகிறது. எட்டு வழிச் சாலைக்காகக் கையகப்படுத்திய நிலங்களை, எட்டு வாரங்களில் மீண்டும் உரிமையாளர்களின் பெயரிலேயே பதிவு செய்ய வேண்டும். வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை, எட்டு வாரங்களில் பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இந்தத் திட்டத்துக்காக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ``மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே, எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலம் கையகப்படுத்தும் பணி
நிலம் கையகப்படுத்தும் பணி
`மகிழ்ச்சியும், குழப்பமும்!' எட்டுவழிச் சாலை தீர்ப்பு குறித்து விவசாயிகள் சொல்வது என்ன?

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விவசாயிகள், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்து உச்ச நீதிமன்றம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், ``சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை தொடரும். எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. எட்டு வழிச்சாலை திட்டத்துக்குத் தடை இல்லை. மீண்டும் நிலம் கையகப்படுத்த மத்திய அரசு புதிய அரசாணையை வெளியிட வேண்டும். குறிப்பிட்ட அந்தந்தத் துறைகளில் அனுமதி பெற்று முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி எட்டு வழிச்சாலை திட்டத்தைப் புதிதாகத் தொடங்கிக் கொள்ளலாம். நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பாகச் சுற்றுச்சூழல் துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது, உச்ச நீதிமன்றம்.

விவசாயி சந்திரகுமார்
விவசாயி சந்திரகுமார்

இந்தத் தீர்ப்பு பற்றி சேலம் எட்டு வழிச்சாலை திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், சந்திரகுமார் பேசும்போது, ``உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். கையகப்படுத்திய எங்கள் விவசாயிகளின் நிலம் திரும்பக் கிடைக்கப்போகிறது. நாடு முழுவதும் எட்டு வழிச்சாலைகள் அமைக்கும் திட்டங்கள் இருப்பதால், அவற்றுக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு இப்போது தடை கிடைத்திருப்பதாகவே நம்புகிறோம். அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான எம்.எல்.ஏ வைகைச் செல்வன் தவறான கருத்துகளை முன்வைத்து வருகிறார். ஆளும் அரசியல்வாதிகள் குட்டையைக் குழப்பாமல் இருக்க வேண்டும்" என்றார்.

தீர்ப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க வழக்கறிஞர் பாலு, ``விவசாயிகளின் நிலத்தை அரசு நிலமாக மடைமாற்றம் செய்வது தவறு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிதாக ஆணை கொடுத்து சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே திட்டம் தொடர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாகத் திட்டம் பற்றிய ஆணை வரும்போது அதில் இருக்கும் முரண்களை வைத்து அடுத்து என்ன செய்யலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

வழக்கறிஞர், வெற்றிச்செல்வன்
வழக்கறிஞர், வெற்றிச்செல்வன்

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச் செல்வனிடம் பேசும்போது, ``சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் சுற்றுச்சூழல் அனுமதி வாங்கிவிட்டுத்தான் நிலம் கையகப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத்தான் இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் சொல்கிறது. திட்டத்துக்கு முழுமையான தடை விதிக்கப்படவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் அவசரகதியில் நடந்தவை அனைத்தையும் கைவிட்டு, முறையாகச் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று, மக்கள் கருத்துக்களைக் கேட்டு முறையாக நெடுஞ்சாலைத்துறை இந்தத் திட்டத்தைத் தொடர வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு