Published:Updated:

ஊழிக்காலம் - 23: காலநிலை மாற்றத்தை எப்படித் தடுப்பது? ஒரு தனிநபரும், அரசும் செய்யவேண்டிவை என்னென்ன?

காலநிலை அவசரம்
News
காலநிலை அவசரம் ( Unsplash )

காலநிலை மாற்றம் பற்றிய சரியான சொற்கள் பயன்படுத்தப்படுவதும் அவசியம். இந்த ஊழிக்காலம் தொடர்கூட காலநிலை பற்றிய விழிப்புணர்வு முயற்சியில் ஓர் அங்கம்தான்.

காலநிலைத் தீர்வுகளில் பல படிநிலைகள் உண்டு. தனிநபர் தீர்வுகள், தனிநபர் உந்துதல்களால் அவர்களின் சுற்றமும் நண்பர்களும் தீர்வு செயல்பாடுகளில் இணைந்துகொள்ளுதல், சமூகமாக முன்னெடுக்கப்படும் தீர்வுகள், அரசு அளவிலான தீர்வுகள் என்று பல கோணங்களிலிருந்து தீர்வுகளை அணுகவேண்டும்.

தனிநபர் தீர்வுகள் என்பவை அவரவரின் சமூக பொருளாதார சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளத்தக்கவை. அனைவராலும் எல்லா தீர்வுகளையும் செயல்படுத்த முடியாது. ஆனால் அரசுகள் செயல்படுத்தவேண்டிய திட்டங்கள் கட்டாயம் நடைமுறைக்கு வந்தால் மட்டுமே காலநிலை மாற்றத்தை நம்மால் எதிர்கொள்ள முடியும்.

இதில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. காலநிலை மாற்றம் சார்ந்த விவாதங்களைத் தொடங்கி வைப்பது, காலநிலை மாற்றம் பற்றிய செய்திகளைப் பாரபட்சமின்றி மக்களிடம் எடுத்துச் செல்வது, முக்கியமான காலநிலை நிகழ்வுகளைத் தவறாமல் ஆவணப்படுத்துவது ஆகியவற்றை ஊடகங்கள் செய்யும்போது, அது காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வுக்கு மிகவும் உதவியானதாக இருக்கும். காலநிலை மாற்றம் பற்றிய சரியான சொற்கள் பயன்படுத்தப்படுவதும் அவசியம். இந்த ஊழிக்காலம் தொடர்கூட காலநிலை பற்றிய விழிப்புணர்வு முயற்சியில் ஓர் அங்கம்தான்.

காலநிலை அவசரம்
காலநிலை அவசரம்
Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உலக நாடுகளின் கூட்டமைப்பாக பல குழுக்கள் இயங்குகின்றன. அவை எல்லாம் இனவாதத்தை விடுத்து, ஒப்பந்தங்களின்போது உரத்துப் பேசும் பெரியண்ணன்களின் பாரபட்சத்துக்கு அடிபணியாமல் மனித இனத்தின் பொது நன்மையை மட்டுமே முன்வைத்துக் காலநிலை விவாதங்களை எடுத்துச்செல்லவேண்டும். சரியான கண்காணிப்பு உடைய, சிக்கல்களற்ற இன்னொரு சர்வதேச ஒப்பந்தம் சாத்தியப்படுமா என்பது தெரியவில்லை என்பதால், இப்போது அமலில் உள்ள பாரீஸ் ஒப்பந்தம் நீர்த்துப்போகாதபடி பார்த்துக்கொள்வதும் அவசியம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
காலநிலைத் தீர்வுகளுக்கான மிக அடிப்படையான செயல்பாடுகளின் பட்டியல் இது:

தனிநபர் செயல்பாடுகள்

அவரவரின் குடும்ப, சமூக, பொருளாதார சூழலுக்குப் பொருந்தினால் இவற்றைக் கடைபிடிக்கலாம். இவற்றைக் கடைபிடிக்காதவர்கள் சூழல் மீது அக்கறையில்லாதவர்கள் என்று குற்றம் சாட்டத்தேவையில்லை.

 • தற்சார்பு வாழ்க்கை முறையின் கூறுகளை நம் வாழ்க்கை முறைக்குள் கொண்டு வர முடியுமா என்று பார்க்கலாம்.

 • கரிம உமிழ்வுகள் குறைவாக உள்ள ஆற்றலைப் பயன்படுத்த முயற்சி செய்யலாம் - சூரிய விளக்கு, மின்சார வாகனம் முதலியவை சில உதாரணங்கள்.

 • மின்சாரம், சமையல் எரிவாயு, தண்ணீர் ஆகியவற்றை சேமிக்கும் வழிமுறைகள் பலவற்றை நாம் அறிந்திருப்போம். அதை நடைமுறைப்படுத்தும்போது, காலநிலைத் தீர்வாக மட்டுமல்லாமல், நம் செலவும் குறையும்.

 • அடிக்கடி விமானத்தில் செல்லக்கூடியவர்கள், அதில் சில பயணங்களையாவது ரயில் பயணங்களாக மாற்றிக்கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்.

 • குறைப்பது (Reduce), மீண்டும் பயன்படுத்துவது (Reuse), மறுசுழற்சி செய்வது (Recycle) - நம் வாழ்வில் எந்தெந்த அம்சங்களில் இவற்றை செயல்படுத்த முடியுமோ அவற்றை செய்யலாம்.

Solar panel
Solar panel
 • திடக்கழிவு மேலாண்மையில் குப்பைகளைப் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்புவது மிகவும் முக்கியமானது. அப்படிப்பட்ட திட்டங்கள் நீங்கள் வசிக்கும் இடங்களில் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு இதைக் கொண்டு செல்லலாம்.

 • உணவு மற்றும் தண்ணீர் வீணாவதைக் குறைக்கவேண்டும்.

 • நுகர்வுக் கலாசாரத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.

 • காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்யலாம்.

 • காலநிலை மாற்றத்துக்கு எதிரான நேரடி மற்றும் இணையவழி செயல்பாடுகளில் பங்கெடுக்கலாம். #fridaysforfuture என்ற ஹேஷ்டேக்கில் தேடினால் இதுபோன்ற நிகழ்வுகளைப் பற்றிய விவரங்கள் கிடைக்கும்.

 • அரசுகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளில் சரியாகச் செயல்படுகிறார்களா என்பதை கவனிக்கவேண்டும். இது நம் எதிர்காலத்துக்கான உரிமைக்குரல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசுகளின் செயல்பாடுகள்

 • காடு அழிப்பு, மரங்கள் வெட்டப்படுவதை உடனடியாக நிறுத்துவது.

 • எதாவது ஓர் ஆண்டை இலக்காக வைத்துக்கொண்டு, அதற்குப் பின்பு புதைபடிவ எரிபொருள் வாகனங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று தடைவிதிப்பது.

 • தொழிற்சாலைகளின் கரிம கால்தடத்தைக் கண்காணிப்பது.

 • கரிம வரியைப் (Carbon tax) பற்றிய தீவிரமான விவாதங்களை நடத்தி, வரி எந்த அளவுக்கு இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வருவது. இதை அமல்படுத்தியபின்பு தளர்வுகளின்றி அதைக் கண்டிப்பாக செயல்படுத்துவது.

 • கரிம உமிழ்வின் இலக்கை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது.

 • தொடர்ந்து கரிம உமிழ்வு இலக்கை மீறும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அது பின்பற்றப்படாத பட்சத்தில் நிறுவனங்களின் உரிமத்தைத் தயக்கமின்றி ரத்து செய்வது.

 • புதைபடிவ எரிபொருட்களை பூமியிலிருந்து எடுக்கும் எந்த புதிய திட்டங்களுக்கும் அனுமதி தராமல் இருப்பது.

 • வளங்குன்றா புதிய ஆற்றல்களுக்கான ஆராய்ச்சிக்கும் ஆற்றல் நிறுவனங்களுக்கும் நிதியுதவியும் மானியங்களும் வழங்குவது.

 • இயங்கிவரும் தொழிற்சாலைகள் வளங்குன்றா ஆற்றலுக்கு மாறினால் வரிகுறைப்பு செய்யலாம்.

 • மின்சார வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளை ஊக்குவிப்பது.

 • புதைபடிவ எரிபொருட்கள் மீதான சார்பிலிருந்து விடுபடுவது.

 • அழிந்துபோன வாழிடங்களையும் சூழலையும் மீட்டுருவாக்கம் செய்ய நிபுணர்களின் ஆலோசனையோடு ஏற்பாடுகள் செய்வது.

Fossil Fuels
Fossil Fuels
 • காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, காலநிலைப் பேரிடர்களுக்கான தயார்நிலை, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது, காலநிலை மாற்றத்துடன்கூட எதிர்காலத்துக்கேற்பத் தகவமைத்துக்கொள்வது ஆகிய எல்லா கோணங்களிலும் பிரச்சனையை அணுகுவது.

 • ஒவ்வொரு மாநிலத்திலும் காலநிலை வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும். காலநிலை வல்லுநர்கள், சமூகவியல் அறிஞர்கள், பேரிடர் ஆய்வாளர்கள், பொருளாதார நிபுணர்கள், திட்ட வரைவியலாளர்கள் ஆகியவர்கள் கொண்டதாக இந்தக் குழு அமையும். அந்தந்த மாநிலங்களில் உள்ள முக்கியமான காலநிலைப் பிரச்சனைகள், அதில் அதிகம் பாதிக்கப்படும் மக்கள், காலநிலைப் பேரிடர்கள் வரக்கூடிய இடங்கள், பேரிடர்களின் அளவு ஆகியவற்றைக் கள ஆய்வுகளின்மூலம் கண்டறிவது அவர்களின் முக்கியப் பணிகளாக இருக்கும். அந்தந்த மாநிலங்களுக்குப் பொருத்தமான காலநிலைத் தீர்வுகளை அவர்கள் முன்வைப்பார்கள். தீர்வுகளை செயல்படுத்துவதில் எல்லா அரசுத் துறைகளும் தயக்கமின்றி உதவவேண்டும்.

 • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் காலநிலை அகதிகளை எப்படி எதிர்கொள்வது என்பதுபற்றிய சரியான ஒரு நிலைப்பாட்டை அரசுகள் எடுக்கவேண்டும்.

 • கல்வித்திட்டங்களில் காலநிலை மாற்றம் பற்றிய பாடங்களை சேர்ப்பது.

 • காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வல்லுநர்கள் அவசியம். அப்படிப்பட்ட வல்லுநர்களை உருவாக்கும்விதமாக காலநிலை சார்ந்த பட்டய மற்றும் பட்டப்படிப்பை அரசுக்கல்லூரிகள். பல்கலைக்கழகங்களில் வழங்குவது.

 • காலநிலை மாற்றம்/காலநிலைப் பேரிடர் தொடர்பான செய்திகளை வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்குத் தெரிவிப்பது அரசுகளின் முக்கியக் கடமை.

 • காலநிலைத் தீர்வுகளை அமல்படுத்தும்போது, அது சமூக நீதியை பாதிக்காதவாறு இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்தவேண்டும்.

 • புதிய தாராளமயம் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளிலிருந்து விடுபட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் உறுதி செய்யக்கூடிய பொருளாதார செயல்திட்டங்களை அமல்படுத்துவது.

 • சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களைக் கைவிட்டு, மாற்று ஏற்பாடுகளை அமல்படுத்துவது.

Climate Change | காலநிலை மாற்றம்
Climate Change | காலநிலை மாற்றம்
 • ஏழு முக்கியத் துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவந்தாலே காலநிலை மாற்றத்துக்குப் பெரிய அளவில் தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது - மின்சாரம்/ஆற்றல், உணவு, பெண்கல்வி, கட்டிடங்களின் கட்டுமானம் மற்றும் நகர அமைப்புகள், நிலத்தைப் பயன்படுத்தும் முறைகள், போக்குவரத்து, பொருட்கள் (தொழிற்சாலை உற்பத்தி, மறுசுழற்சி போன்றவை). இந்த ஏழு துறைகளிலும் நிபுணர்கள் பரிந்துரைக்கும் மாற்றங்களை சமரசமின்றி செயல்படுத்தவேண்டும்.

 • காலநிலை மறுப்பு போன்ற அறிவியலுக்கு எதிரான உரையாடல்களுக்கு இடம் தராமல், அறிவியல்பூர்வமாக இந்தப் பிரச்னையை எதிர்கொள்வது அவசியம்.

காலநிலை மாற்றம் பற்றிய உரையாடல் என்பது எதிர்காலத்துக்கான கடமையாகவும் உரிமையாகவும் மாறிவிட்டது. அதில், காலநிலை மறுப்பாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கான பதில்களையும் நாம் தயார்நிலையில் வைத்திருக்கவேண்டும். தீர்வுகளை நோக்கிப் பயணிக்கும் பாதையில் உள்ள முக்கியமான தடைக்கல் அது.

காலநிலை மறுப்பாளர்கள் எப்படிப்பட்ட கேள்விகளை எழுப்புகிறார்கள்? அதற்கு நம் பதில்கள் என்னவாக இருக்கவேண்டும்?

அடுத்த கட்டுரையில் பேசலாம்.

- Warming Up...