Published:Updated:

புலிகள் அதிகரித்துள்ளன... ஆனால் அவற்றுக்கான வாழிடம்..? - சர்வதேசப் புலிகள் தினப் பகிர்வு!

சர்வதேச புலிகள் தினம்
சர்வதேச புலிகள் தினம் ( Pixabay )

புலிகளுக்கு நாம் செய்த துரோகத்தின் அடையாளமாக, கறுப்புப் புள்ளியாக ஜூலை 26-ம் தேதி இந்தியச் சூழலியல் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

2019-ம் ஆண்டு இதே நாளில், 2018-ம் ஆண்டினுடைய இந்தியப் புலிகள் கணக்கெடுப்பு முடிவுகளைப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். 2006 முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்துவருகின்ற இந்தக் கணக்கெடுப்பில், நாடு முழுக்கவுள்ள புலிகளின் எண்ணிக்கை, அவற்றுக்குத் தேவைப்படுகின்ற இரை உயிரினங்களுடைய எண்ணிக்கை, அந்த இரை உயிரினங்களுக்குத் தேவைப்படுகின்ற தாவர உணவு போன்றவை கணக்கெடுக்கப்படுகின்றன. அதன்மூலம், எந்த வனப்பகுதியில் எவ்வளவு புலிகள் உள்ளன, அவற்றைப் பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற திட்டமிடுதலைச் செய்யமுடியும் என்று நம்பப்படுகின்றது.

புலிகளின் பாதுகாப்பு
புலிகளின் பாதுகாப்பு
Pixabay

நேற்று (28-07-2020) மதியம், டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு (29-07-2020) புலிகள் கணக்கெடுப்பு ஆய்வறிக்கையின் விரிவான அறிக்கையை வெளியிட்டார். அதை வெளியிட்டுப் பேசியவர், "இயற்கையின் வியக்கத்தக்க ஓர் அதிசயம்தான் புலி. இந்தியாவில் புலிகளுடைய எண்ணிக்கை அதிகரித்திருப்பது, இங்கு இயற்கையின் சமநிலை சரியாக இருப்பதை உணர்த்துகின்றது" என்று குறிப்பிட்டுள்ளார்.

புலி மற்றும் இதர காட்டுயிர் வளங்கள், சர்வதேச அளவில் இந்தியாவிற்கு இருக்கின்ற ஒரு தனித்துவமான சக்தி என்று குறிப்பிட்ட அவர், "மிகவும் நெருக்கடியான நிலப்பரப்பில் அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில், பூமியின் 8 சதவிகிதப் பல்லுயிரிய வளம் குடிகொண்டிருக்கின்றது. ஏனென்றால், நாம் நம்முடைய கலாச்சாரங்களை, இயற்கையை, மரங்களை, காட்டுயிர்களைப் பாதுகாக்கின்றோம்" என்று கூறினார். மேலும், பூமியின் மொத்தப் புலிகள் எண்ணிக்கையில் 70 சதவிகிதம் இங்குதான் உள்ளன என்பதைக் குறிப்பிட்டவர், புலிகள் வாழுகின்ற 13 நாடுகளைப் போலவே இந்தியாவும் அவற்றைப் பாதுகாப்பதில் தீவிரமாக முனைந்துள்ளது" என்றார்.

கடந்த ஆண்டு இதே நாளில், புலிகள் கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. அந்தக் கணக்கெடுப்பினுடைய முழுமையான தரவுகளுடன் கூடிய விரிவான அறிக்கையை வெளியிட்ட போதுதான், மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மேலே குறிப்பிட்டபடி பேசினார்.

2018-ம் நடந்த கணக்கெடுப்புப் படி, இந்தியாவில் மொத்தம் 2,967 புலிகள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பூமியிலுள்ள மொத்தப் புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவிகிதம் இங்கிருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது. உலகக் காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பு (World Wildlife Fund) மற்றும் சர்வதேச புலிகள் பாதுகாப்பு அமைப்பு (Global Tiger Forum) ஆகியவற்றின் தரவுகள்படி உலகளவில் மொத்தம் 3,890 புலிகள் வாழ்கின்றன. இந்தியாவில் 2014-ம் ஆண்டுக் கணக்கெடுப்பு முடிவுகளின்படி 2,226 புலிகள் இருப்பதாகக் கூறப்பட்டது. அதை வைத்துப் பார்க்கையில் இங்கு, நான்கு ஆண்டுகளில் சுமார் 741 புலிகள் அதிகரித்துள்ளன.

2018-ம் ஆண்டின் புலிகள் கணக்கெடுப்பு
2018-ம் ஆண்டின் புலிகள் கணக்கெடுப்பு

இது நல்ல முன்னேற்றம்தான். அதேநேரம், இந்தியாவில் புலிகள் குறித்த மரணச் செய்திகளும் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றது. 2019-ம் ஆண்டில் மட்டுமே இந்தியாவில் மொத்தம் 110 புலிகள், 491 சிறுத்தைகள் இறந்துள்ளன. அதில் மூன்றில் ஒரு பங்கு வேட்டையாடப்பட்டுள்ளன. வேட்டையாடப்பட்ட புலிகளுடைய எண்ணிக்கை 2018-ம் ஆண்டு 34-ஆக இருந்தது. அது, 2019-ல் 38 ஆக உயர்ந்துள்ளது என்று இந்திய காட்டுயிர் பாதுகாப்புச் சங்கம் தொகுத்துள்ள தரவுகள் கூறுகின்றன. 2018-ம் ஆண்டில் சுமார் 104 புலிகள் இந்தியாவில் இறந்தன. அந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டுக் கணக்கெடுப்புக்குப் பிறகு, இந்தியாவில் 2015, 2016, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் முறையே 81,122, 115, 104, 110 என்ற கணக்கில் ஒவ்வோர் ஆண்டும் புலிகள் மரணமடைந்துள்ளன. 2015 முதல் 2019 வரை மொத்தம் 532 புலிகள் இந்தியாவில் இறந்துள்ளன. 2018-ம் ஆண்டில் மட்டுமே 49 புலிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு வெளியிலோ அல்லது எல்லையிலோ இறந்துள்ளன.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் பி.டி.ஐ-க்குக் கொடுத்த தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் 750 புலிகள் இறந்துள்ளன என்பதும் சமீபத்தில் தெரியவந்தது. 8 ஆண்டுகளில் இறந்த மொத்தப் புலிகளில், 369 புலிகள் இயற்கை மரணங்களால் இறந்துள்ளன. அந்த மரணங்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால், 168 புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளன. 70 மரணங்கள் இன்னும் காரணம் தெரியாமல் விசாரணையிலேயே இருப்பதாக பி.டி.ஐ-க்குக் கடந்த ஜூன் மாதம் கிடைத்த தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், 42 மரணங்கள், விபத்து, மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் போன்ற இயற்கையில்லாத இதர பல்வேறு காரணங்களுக்குப் பலியாகியுள்ளன. 2018-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் அவ்னி என்ற பெண் புலியைத் தனிப்படை அமைத்துச் சுட்டுக் கொன்றதை யாராலும் மறந்துவிட முடியாது. அதைப் போன்ற பல்வேறு மரணங்கள் நாடு முழுக்கத் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில்கூட, ஆனைமலைப் புலிகள் காப்பகப் பகுதியில் இரண்டு புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டன.

எந்த ஒரு காடு சார்ந்த பாதுகாப்பு மற்றும் மேலாண்மை முயற்சியாக இருந்தாலும், அந்த மண் சார்ந்த மக்களை முன்னிறுத்தியே செய்யவேண்டும். அப்போதுதான் அவர்களின் முழுப் பங்களிப்பும் அதில் கிடைக்கும்.
குமரகுரு, புலிகள் ஆராய்ச்சியாளர்

கடந்த ஆண்டு சர்வதேசப் புலிகள் தினத்தன்று, அவற்றின் வாழ்க்கை இங்கே சிறப்பாக இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதற்கு மூன்று நாள்களுக்கு முன்னர்தான், உத்தரப்பிரதேசத்திலுள்ள பிலிபித் புலிகள் காப்பகத்தில், பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிக்கு உள்ளேயே வைத்து ஒரு பெண் புலியை முப்பதுக்கும் மேற்பட்டோர் அடித்தே கொன்றனர். அவரவர் கையில் கிடைத்த கட்டைகளை வைத்து அதன் கால்களை உடைத்து, தாடையை முறித்து, காப்பாற்ற வந்த வனத்துறையினரை அண்டவிடாமல் தடுத்து நிறுத்தி மிகக் கொடூரமாகக் கொலை செய்தனர்.

அந்தப் பெண் புலிக்கு, தோராயமாக ஆறு வயதிருக்கும். அடி தாங்க முடியாமல் தன்னுடைய முன்னங்கால்களால் முகத்தை மறைத்து, 'தயவு செய்து விட்டுவிடுங்கள்!' என்று என்று கெஞ்வது போலிருந்த அதன் நிலையை இப்போது நினைத்தாலும் இதயம் நொறுங்குகின்றது. நம் காடுகளின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் புலிக்கு நாம் செய்த துரோகத்தின் அடையாளமாக, கறுப்புப் புள்ளியாக ஜூலை 26-ம் தேதி இந்தியச் சூழலியல் வரலாற்றில் அந்தச் சம்பவம் என்றென்றும் நிலைத்திருக்கும்.

அதுகுறித்து ஜூனியர் விகடனுக்கு அப்போது பேட்டியளித்த புலிகள் ஆராய்ச்சியாளர் குமரகுரு, "புலிகள் மட்டுமல்ல... எந்த விலங்காக இருந்தாலும் சரி, அதன் பாதுகாப்பில் மிக முக்கியமானது விழிப்புணர்வு. அது எந்த அளவுக்குப் பொய்யாக இருக்கின்றது என்பதைத்தான் பெண் புலியை மக்கள் அடித்தே கொன்ற நிகழ்வு நமக்கு உணர்த்தியுள்ளது. இதைச் சரிசெய்ய வேண்டுமெனில், புலிகள் பாதுகாப்பில் மக்களையும் பங்கெடுக்க வைக்கவேண்டும். அதற்கு முதலில், சூழலியல் சமநிலையில் அந்த உயிரினத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்குப் புரிய வைக்கவேண்டும். அடுத்து, அவர்களுடைய நிலத்தைப் பாதுகாக்க, அந்தப் புலியைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் அது அவர்களுடைய கடமை என்பதையும் உணர்த்தவேண்டும்.

எந்த ஒரு காடு சார்ந்த பாதுகாப்பு மற்றும் மேலாண்மை முயற்சியாக இருந்தாலும், அந்த மண் சார்ந்த மக்களை முன்னிறுத்தியே அதைச் செய்யவேண்டும். அப்போதுதான் அவர்களின் முழுப் பங்களிப்பும் அதில் கிடைக்கும். அவர்கள்தான் அந்த மண்ணின் மைந்தர்கள். அவர்களுடைய வாழ்வாதாரம் அங்கிருக்கின்றது. ஆகவே, அவர்களிடத்தில் அந்தப் பொறுப்பைக் கொடுக்கவேண்டும். அப்படிச் செய்தால், மக்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்" என்று கூறியிருந்தார். அவர் கூறுவதைப் போல், மக்களுக்குப் புலிகளின் முக்கியத்துவத்தைப் புரிய வைக்கத் தவறியதே, அந்தச் செயலில் அவர்கள் ஈடுபட முக்கியக் காரணம். அந்தப் பெண் புலியின் ரத்தம், அதைச் செய்யதவறிய அரசின் கைகளில் இன்னும் படிந்துள்ளது.

மாதவ் காட்கில் தலைமையிலான ஆய்வுக்குழு சமர்ப்பித்த மேற்குத்தொடர்ச்சி மலை வல்லுநர் குழு ஆய்வறிக்கையில், "அந்தந்தக் காடுகளில் அதைச் சார்ந்து வாழ்கின்ற பூர்வீகக் குடிகளிடம் பொறுப்பைக் கொடுத்தால், அவர்களுடைய பங்களிப்போடு புலிகளைப் பாதுகாப்பில் நிச்சயம் இந்தியா முழுமையாக வெற்றியடைய முடியும்" என்ற கருத்தை வலியுறுத்தி, அதற்கான வழிமுறைகளையும் பரிந்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் அவர் குறிப்பிட்டுள்ள முதல் நடவடிக்கை, காட்டுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது. அதில், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகம் ஓரளவுக்கு முன்னிலையில் இருக்கிறது என்று கூறலாம்.

புலிகள் மனிதத் தலையீடுகளால் பலியாவது ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. அதோடு, அவற்றின் வாழிடங்கள், மனிதர்களால் துண்டாக்கப்படுவதும் ஆக்கிரமிக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடந்துவருகின்றன. விலங்குகளால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க முதலில் அவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அவ்னி புலி
அவ்னி புலி
Maharashtra Forest Department

ஒரு புலிக்குத் தேவைப்படுகின்ற குறைந்தபட்ச வாழ்விடம் ஐந்து முதல் பத்து சதுர கிலோமீட்டர். ஒரு புலியைப் பாதுகாத்தால், பத்து சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் வாழ்கின்ற தாவர உண்ணிகளையும் அவற்றுக்குத் தேவைப்படுகின்ற தாவர வளத்தையும் பாதுகாக்க முடியும். அதேநேரம், அந்தத் தாவர வளங்களைக் காப்பாற்ற களைச் செடிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் நடைபெறும். அதாவது, ஒரு புலியைப் பாதுகாத்தால் ஒரு காட்டையே பாதுகாக்க முடியும்.

18 மாநிலங்களில் 50 புலிகள் காப்பகங்களைக் கொண்டுள்ள இந்தியாவில்தான் உலகின் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான புலிகள் வாழ்கின்றன. இங்குப் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது. கடந்த முப்பது ஆண்டுகளாக, இந்தியக் காட்டுயிர் ஆய்வாளர்கள் மற்றும் வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகளுக்குக் கிடைத்த பலன் இது. இன்றைய சூழலில், மக்கள் மத்தியிலும் காட்டுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அந்த விழிப்புணர்வை நல்ல விதத்தில் பயன்படுத்தி, மக்களின் ஒத்துழைப்போடு புலிகளின் மரணத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்திய அரசு முனையவேண்டும்.

புலிகள் பாதுகாப்பாக இருப்பதாக ஒருபுறம் பெருமையடித்துக் கொண்டே மற்றொருபுறம், நாட்டின் இயற்கை வளங்களை அழிக்கக்கூடிய திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துக் கொண்டேயிருக்கின்றது. குறிப்பாக, புலிகளுடைய வாழிடங்கள் அதிகமாகவுள்ள மேற்குத்தொடர்ச்சி மலை, வடகிழக்கு இந்தியா போன்ற பகுதிகளில், இடாலின் நீர்மின் திட்டம், அதிரப்பள்ளி நீர்மின் திட்டம் போன்ற சூழலியல் சீரழிவுகளை உண்டாக்கக்கூடிய திட்டங்களுக்கு அதிகமாக அனுமதியளிக்கப் படுகின்றன. இதில் வேதனை என்னவென்றால், நம் நாட்டின் 40 சதவிகிதப் புலிகள் பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிக்கு வெளியேதான் வசிக்கின்றன.

புலிகளுடைய எண்ணிக்கை அதிகரிக்கும் அதேநேரம், நம் காடுகளுடைய பரப்பளவு சுருங்கிக் கொண்டிருக்கின்றது. மரப் போர்வை அதிகரித்த அளவுக்குக் காட்டின் தரம் உயரவில்லை. காடுகள் தொடர்ந்து துண்டாக்கப்படுகின்றன. பல்வேறு 'வளர்ச்சி'த் திட்டங்களுக்காக ஆக்கிரமிக்கப்படுகின்றன.

காடுகள் பாதுகாப்பு
காடுகள் பாதுகாப்பு
Pixabay

இந்நிலையில், இருக்கின்ற காடுகளையும் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தாரை வார்த்துவிட்டு, புலிகளுடைய எண்ணிக்கையை மட்டும் அதிகரிப்பது, மனித-காட்டுயிர் எதிர்கொள்ளலுக்குத்தான் வழிவகுக்கும். அது, மகாராஷ்டிராவில் அவ்னி கொல்லப்பட்டது, உத்தரப்பிரதேசத்தில் பெண் புலி அடித்துக் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்களுக்குத்தான் காரணமாக அமையும்.

இன்று, சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, எண்ணிக்கை கூடியுள்ளதை நினைத்துப் பெருமை கொள்வதையும் தாண்டி, இழப்புகளைச் சரிசெய்யத் தேவையான, புலிகளின் வாழிடங்களைப் பாதுகாக்கத் தேவையான திட்டமிடுதல்களையும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மேற்கொள்ளவேண்டும். அதுவே, எதிர்காலத்தில் நாட்டின் சூழலியல் சமநிலையைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

பூனைக் குடும்பத்தின் பேருயிரான புலி, பூமியின் தனித்துவம் வாய்ந்த உயிரினம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இன்று, சர்வதேச புலிகள் தினத்தன்று, பிரபலமான ஒரு வாசகத்தை நாம் நினைவுகூர வேண்டும்.

"எங்கு புலிகள் செழித்து வாழ்கின்றனவோ, அங்கு சுற்றுச்சூழலும் ஆரோக்கியமாக இருக்கும்."
அடுத்த கட்டுரைக்கு