Published:Updated:

அழிந்துவரும் ஆசிய சிங்கம்... காப்பாற்றவேண்டிய குஜராத் செய்வது என்ன?

சிங்கங்களுக்கு இன்று வேட்டை பயம் அதிகமாக இல்லைதான். ஆனால், வேட்டை அளவுக்கு வேகமாக அவற்றை அழிக்கக்கூடிய வேறு இரண்டு ஆபத்தில் அவை சிக்கியிருக்கின்றன என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

சிங்கம்
சிங்கம் ( Pixabay )

உலகிலேயே ஆசிய சிங்கங்கள் எங்கெல்லாம் இருக்கின்றன தெரியுமா?

எங்கெல்லாம் என்று கேட்பதைவிட, எங்கு இருக்கின்றன என்று கேட்பது சரியாக இருக்கும். ஆம், ஆசிய சிங்கங்கள் உலகத்திலேயே ஒரேயொரு பகுதியில்தான் வாழ்கின்றன.

சிங்கங்களில், ஆப்பிரிக்க சிங்கம், ஆசிய சிங்கம் என இரண்டு துணை இனங்கள் உள்ளன. அதில் முதலாவது, ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல பகுதிகளில் பரவி வாழ்கின்றன. ஆனால், ஆசிய சிங்கம், உலகிலேயே இந்தியாவின் கிர் காடுகளில் மட்டும்தான் வாழ்கின்றன.

Asiatic lions
Asiatic lions
Manoj Dholakia

ஆப்பிரிக்கா, ஐரோப்பா தொடங்கி இந்தியத் துணைக்கண்டம் வரை சிங்கங்கள் பரவி வாழ்ந்தன. கிரேக்க வரலாறுகளில் சிங்கங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. டிக்ரிஸ் நதியோரங்களில், சிங்கங்களின் வாழ்க்கை சிறப்பாக இருந்ததற்கான தொல்லெச்ச (Fossil records) ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இப்படி செழிப்பாகப் பரவி வாழ்ந்துகொண்டிருந்த சிங்கங்கள் இன்று, ஆப்பிரிக்கக் கண்டத்திற்குள்ளும் அதற்கு வெளியே கிர் காட்டிற்குள்ளும் சுருங்கிவிட்டன.

வரலாற்றில் கிடைத்த ஆதாரங்களை ஆய்வு செய்ததன் மூலம், கண்டுபிடிக்கப்பட்ட தொல்லெச்சங்களின் மூலம் சேகரித்த தரவுகளை அடிப்படையாக வைத்து, சிங்கங்கள் வாழ்ந்த பகுதிகளை ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள். அதோடு, வரலாற்றில் கிடைத்த வேட்டைப் பதிவுகளின்மூலம் சில ஆய்வாளர்கள் சிங்கங்களுடைய வரலாற்று வாழ்விடங்களை வரைபடமாக்கினார்கள். ஈரான், ஈராக் உட்பட பல நாடுகளில் அவை வாழ்ந்துள்ளன. யூப்ரடிஸ் மற்றும் டைக்ரிஸ் நதிப்படுகைகளில் அவற்றின் வாழ்வு மிகவும் செழிப்பாக இருந்துள்ளது. காட்டின் ராஜா என்று அவை அழைக்கப்படும் பெயருக்குத் தகுந்தாற்போல், ஒருகாலத்தில் செழிப்பான வாழ்வைக் கொண்டிருந்த சிங்கங்கள், இன்று இப்படி ஒற்றைக் காட்டிற்குள் சுருங்கிவிடக் காரணம், வேட்டை. இந்தியாவிற்கு வெளியே வாழ்ந்த ஆசிய கடைசி சிங்கம், 1947-ம் ஆண்டு, ஈரானிலுள்ள டிஸ்ஃபுல் என்ற பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டது. இந்தியாவுக்குள், குஜராத்தின் கிர் காட்டிற்கு வெளியே வாழ்ந்த கடைசி சிங்கம், 1888-ம் ஆண்டு, மத்தியப் பிரதேசத்தின் குனோ என்ற பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டது.

இரண்டு வாரங்களுக்கு முன்புகூட, ஒன்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சிங்கம் உயிரிழந்துள்ளது. அதன் இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இங்கு கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவுக்கு வெளியே வாழ்ந்த கடைசி சிங்கம் அழிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னமே, இந்தியாவுக்குள் கிர் காட்டிற்கு வெளியே வாழ்ந்த கடைசி சிங்கம் அழிந்துவிட்டது. அவ்வளவு தீவிரமாக, அப்போது சிங்கவேட்டை நடந்துகொண்டிருந்தது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் இருக்கமுடியாது.

இவ்வளவு ஆபத்துகளைக் கடந்து, கிர் காட்டில் இப்போது பிழைத்திருக்கும் சிங்கங்களின் எண்ணிக்கை, 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 523. இடைப்பட்ட காலத்தில், இந்த எண்ணிக்கை 600-ஐத் தொட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இன்று வேட்டை பயம், அவற்றுக்கு அதிகமாக இல்லைதான். ஆனால், வேட்டை அளவுக்கு வேகமாக அவற்றை அழிக்கக்கூடிய வேறு இரண்டு ஆபத்தில் அவை சிக்கியிருக்கின்றன என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

ஒன்று, கெனைன் டிஸ்டெம்பர் (Canine Distemper), பேபியோசிஸ் (Babeosis) போன்ற வைரஸ் தொற்றுநோய்கள். இரண்டாவது, அதனால் ஏற்படப்போகும் அழிவிலிருந்து அவற்றைக் காப்பாற்ற மறுக்கும் குஜராத் மாநில அரசு.

முதலில், இந்த வைரஸ் தொற்றுகள் குறித்துப் பார்ப்போம்.
கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ் தாக்கிய சிங்கம்
கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ் தாக்கிய சிங்கம்

கடந்த ஆண்டு, கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ் தாக்குதலில் 30 சிங்கங்கள் உயிரிழந்தன. இந்த ஆண்டும், அந்த வைரஸ் தாக்குதல்கள் தொடங்கிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்புகூட ஒன்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சிங்கம் உயிரிழந்துள்ளது. அதன் இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இந்த வைரஸ் தொற்றுகளைக் குணப்படுத்தும் வாய்ப்பு மிகவும் குறைவு. அதைக் குணப்படுத்த வேண்டுமெனில், இவற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு தொடர்ச்சியாக தடுப்பூசி போட வேண்டும். காட்டில் வாழும் சிங்கங்களிடம் அது சாத்தியமில்லை. நாய்கள் மூலமாக இது அதிகம் பரவுவதால், காடுகளுக்குள் சுற்றித்திரியும் நாய்களுக்கு இந்தத் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டிருக்கிறது குஜராத் அரசு. கெனைன் டிஸ்டெம்பர் போன்ற வைரஸ் நோய் தாக்குதல், சிங்கங்களுக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருந்துவருகின்றது. எளிதில் பரவக்கூடிய இந்த நோய், ஆசிய சிங்கங்களின் அழிவில் பெரும் பங்கு வகிக்கின்றன.

2010 -ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கிர் காட்டில் 411 சிங்கங்கள் வாழ்ந்தன. 2015-ம் ஆண்டின் கணக்குப்படி, 523 ஆக அந்த எண்ணிக்கை அதிகரித்தது. ஐந்து ஆண்டுகளில்,112 ஆக அதிகரித்தது. ஆனால், கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் ஷைலேஷ் பர்மார் சிங்கங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வனத்துறை அமைச்சர் கண்பத் வசாவா, ஜூன் 2017 முதல் மே 2019 வரை, 222 சிங்கங்கள் மரணித்துள்ளதாகத் தெரிவித்தார்.

கிர் காடு, குஜராத்
கிர் காடு, குஜராத்
முனைவர். ரவி செல்லம்

அவற்றில் ரயிலில் அடிபட்டு, கிணற்றில் விழுந்து என்பன போன்ற காரணங்களால் இறந்தவை 23 சிங்கங்கள் மட்டுமே. ஆனால், நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகியும் இயற்கையாகவும் இறந்த சிங்கங்களின் எண்ணிக்கை 199. ஜூன் 2017-மே 2019 காலகட்டத்தில் 82 சிங்கங்களும் 30 குட்டிகளும் இறந்துள்ளன. ஜூன் 2018-மே 2019 காலகட்டத்தில், 140 சிங்கங்களும் 60 குட்டிகளும் இறந்துள்ளன. இந்த ஆண்டில் மட்டும் சிங்கங்களின் இறப்பு விகிதம் இருமடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு, கெனைன் டிஸ்டெம்பர் மற்றும் பேபியோசிஸ் வைரஸ்களின் தாக்குதலே காரணம்.

இந்த நோய்த் தாக்குதல்களால் இறக்கும் சிங்கங்களின் இறப்பு எண்ணிக்கை குறித்த தெளிவான விவரங்களை குஜராத் அரசு வெளியிடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகின்றது. சிங்கங்களுடைய எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு அவற்றுக்கு ஏற்படும் நோய்த் தாக்குதல்களால் உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. அதேநேரம், சிங்கங்களின் எண்ணிக்கைக்கு, உரிய அளவில் வாழ்விடம் இல்லை. கிர் தேசியப் பூங்காவின் பரப்பளவு 258 சதுர கிலோமீட்டர். கிர் காட்டில் வாழ்வனவற்றில் மூன்றில் ஒரு பங்கு சிங்கம், தேசியப் பூங்கா எல்லைக்கு வெளியேதான் வாழ்கின்றன.

பெண் சிங்கம் தன் குட்டிகளுடன்...
பெண் சிங்கம் தன் குட்டிகளுடன்...
Kalyan Varma

1884 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள கிர் காட்டில், மாதாரி என்ற பழங்குடியின மக்களின் கிராமங்களும் வேறு பல கிராமங்களும் இருக்கின்றன. தேசியப் பூங்காவாக இருக்கின்ற 258 சதுர கிலோமீட்டர் பரப்பளவு சிங்கங்களுக்குப் போதுமானதாக இல்லை. வாழ்விடமே பிரச்னையாக இருக்க, அதிலும் நிம்மதியாக வாழமுடியாமல் அவற்றைச் சோதித்துக்கொண்டிருக்கின்றன இந்த நோய்த் தொற்றுகள்.

சிங்கங்களைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், விரைவாகப் பரவக்கூடிய இந்த நோய்த்தாக்குதலால் ஆசிய சிங்க இனமே அழிந்தாலும் ஆச்சர்யமில்லை. இத்தகைய பேராபத்திலிருந்து அவற்றைக் காப்பாற்ற, கிர் காட்டிலிருந்து சில சிங்கங்களை வேறு காட்டிற்கு இடம் மாற்ற வேண்டுமென்று 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், குஜராத் அரசாங்கம் அந்த உத்தரவை இன்றுவரை நிறைவேற்றவில்லை.

இப்போது சிங்கங்களுக்கு இருக்கும் இரண்டாவது ஆபத்து...

ஆசிய சிங்கங்களை ஒரே காட்டிற்குள் வைத்திருப்பது ஆபத்து என்றுகூறி, காட்டுயிர் ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். கிர் காட்டிலிருந்து சில சிங்கங்களை வேறு காட்டிற்கு இடம் மாற்றினால்தான், அவை மொத்தமாக அழிவதிலிருந்து காப்பாற்றமுடியும்.

1995-ம் ஆண்டு, சிங்கங்களை இடம் மாற்றத் தகுந்த இடமாகக் குனோ தேர்ந்தெடுக்கப்பட்டது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும்கூட, 3,700 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அந்தப் பகுதி, சிங்கங்களின் சொர்க்கபுரியாக மாறி, அவற்றின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.

ஓர் உயிரினத்திற்கு வேறோர் இடத்தை அறிமுகம் செய்யவேண்டுமென்றால், முதலில் அவை வரலாற்றில் எங்கெல்லாம் வாழ்ந்தன என்று ஆய்வுசெய்ய வேண்டும். அப்படி வாழ்ந்த பகுதிகள், இன்று எவையெல்லாம் அவற்றுக்குத் தகுதியான சூழலோடு இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்குப் பிறகே இடம் மாற்றமுடியும். சிங்கங்களுக்காக, ராஜஸ்தானில் இரண்டு இடங்களையும் மத்தியப்பிரதேசத்தில் குனோ என்ற பகுதியையும் ஆய்வாளர்கள் 1993-94 வரை ஆய்வுசெய்தார்கள்.

குனோ வனப்பகுதி சிங்கங்கள் வாழத் தகுந்த வாழ்விடமாக இருப்பதாகத் தேர்ந்தெடுத்ததோடு, அந்த வனப்பகுதியில் சில மேம்படுத்தலும் செய்யப்பட்டன. மத்தியப்பிரதேச மாநில அரசாங்கமும் அதற்குரிய அனைத்து ஒத்துழைப்பும் வழங்கியது. அதிக வாழ்விடம், தேவையான அளவுக்கு இரை உயிரினங்கள், தண்ணீர் என்று அனைத்தும் கிடைக்கும் நிலை வந்தபிறகு, 1995-ம் ஆண்டு, சிங்கங்களை இடம் மாற்றத் தகுந்த இடமாக குனோ உறுதி செய்யப்பட்டது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும்கூட, 3,700 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான அந்தப் பகுதி, சிங்கங்களுக்கு சொர்க்கபுரியாக மாறி, அவற்றின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், இன்னமும் அவற்றை இடம் மாற்ற குஜராத் அரசு அனுமதிக்கவில்லை.

குஜராத் சிங்கங்கள்
குஜராத் சிங்கங்கள்
Pixabay

2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், குனோவிற்கு சில சிங்கங்களை இடம் மாற்ற உத்தரவிட்டது. ஆனால், சிங்கம் குஜராத் மாநிலத்தின் பெருமை என்று நினைத்துக்கொண்டிருக்கும் அந்த மாநில அரசு, அதைச் செய்ய மறுக்கிறது. அது, இந்த நாட்டின் பெருமை. அதைப் பாதுகாக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது. குஜராத் அரசு அதை உணர வேண்டும். இல்லையேல், கடந்த வாரம் மரணித்த சிங்கத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டிலும் இன்னும் பல சிங்கங்கள் மரணிக்கலாம்.

எதிர்காலத்தில், ஆசிய சிங்க இனமே இல்லாமலும் போகலாம். மொத்த சிங்கத்தையும் ஒரே வாளிக்குள் வைத்து பலப்பரீட்சை செய்துபார்க்க முடியாதல்லவா... திட்டத்தில் சிறிய ஓட்டை இருந்தாலும், ஓர் இனமே அழிந்துவிடும்!