Published:Updated:

ஜெ. அறிவித்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு... எட்டாண்டுகளாக எட்டியே பார்க்காத உள்ளாட்சித்துறை!

EPS, Rainwater Harvesting
EPS, Rainwater Harvesting

2011-ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது இத்திட்டம் உயிர்பெறும் என்று நம்பப்பட்டது. ஆனால், அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதன்பின் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பின் அனைத்துக்கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும் என்று தமிழகஅரசு அறிவித்துள்ளது.

மழைநீரைச் சேகரிக்கச் சொல்லி முதல்வரும் அமைச்சரும் இதயம் தொட்டு வேண்டுகோள் விடுக்கிற வீடியோக்கள் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன. காரணம், இத்தனை ஆண்டுகளாக அதைப் பற்றித் துளியும் கவலைப்படாத அமைச்சர்கள், கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு வந்த பின் இப்படி விளம்பரம் செய்து தங்களை சமூக அக்கறையாளர்களாகக் காட்டிக்கொள்வதுதான்.

S.P.Velumani
S.P.Velumani

இந்த ஆண்டு தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் மிக மோசமாகக் குறைந்துள்ளது. தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 945 மில்லி மீட்டர். இது ஒட்டுமொத்த தமிழகத்தின் குடிநீர்த் தேவைக்கும், பாசனத்தேவைக்கும் போதுமான அளவு. ஆனால், பெய்யும் மழையில் 40 சதவிகிதம் தண்ணீர் கடலில் கலக்கிறது; 35 சதவிகிதம் ஆவியாகிவிடுகிறது. மீதமுள்ள நீரில் 14 சதவிகிதம் பூமிக்குள் உறிஞ்சப்படுகிறது. 10 சதவிகிதம் மண்ணில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது.

தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போதுள்ள தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு மிக முக்கியக் காரணம், பருவமழை பொய்த்ததுதான். ஆண்டுதோறும் மக்கள் தொகை பெருகி வருகிறது. மழையின் அளவோ குறைந்து வருகிறது. விவசாயம், குடிநீர், அன்றாடப் பயன்பாடு, தொழிற்சாலைகளின் நீர்த்தேவை அனைத்துக்கும் நிலத்தடிநீர்தான் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது.

Sand Theft
Sand Theft

நிலத்தடி நீர் மட்டத்தைப் பெருக்க வேண்டுமெனில் ஆறு, குளம், குட்டை, ஏரி, கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் இருக்க வேண்டும். ஆனால், மணல் கொள்ளை, ஆக்கிரமிப்பு, வளர்ச்சிப்பணிகள் போன்ற காரணங்களால் நீர்நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. அதன் விளைவுதான் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போர்வெல்களில் வெறும் காற்று வரும் நிலையிருக்கிறது.

குறைந்துவரும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும்நோக்குடனே, 2001-ம் ஆண்டில் அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா ‘மழை நீர் சேகரிப்புத் திட்டம்’ என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார். இதன்படி கட்டுமான விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதாவது புதிதாகக் கட்டப்படும் வீடுகள், வணிக கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்புக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

Rainwater Harvesting Building
Rainwater Harvesting Building

தேவைப்படுவோருக்குத் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இந்த அமைப்பை உருவாக்கிக் கொடுக்கும். இதைச் செய்யத் தவறுவோர்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும். மேலும், மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டட வரைபடங்களுக்குத் திட்ட அனுமதியே வழங்கக் கூடாது என்றும் விதிமுறை உருவாக்கப்பட்டது.

இந்தத் திட்டம் மிகத்தீவிரமாகச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டபோது சென்னையைச் சுற்றிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. தொடக்கத்தில் மிகக்கடுமையாகப் பின்பற்றப்பட்டு வந்த இத்திட்டம் ஆட்சி மாற்றத்துக்குப் பின் கைவிடப்பட்டது. முந்தைய ஆட்சியின் நல்ல திட்டங்களை மாற்றுவதே புதிய ஆட்சியின் வெற்றி என்று நினைக்கும் இரண்டு திராவிடக் கட்சிகளின் அர்த்தமற்ற அரசியலில் அடி ஆழத்தில் புதைக்கப்பட்டது இத்திட்டம்.

Rainwater Harvesting
Rainwater Harvesting

மீண்டும் 2011-ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது இத்திட்டம் உயிர்பெறும் என்று நம்பப்பட்டது. ஆனால், அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டிய பொறுப்பு, தமிழக உள்ளாட்சித்துறைக்கும், நகர ஊரமைப்புத்துறைக்கும் உள்ளது. ஆனால், இந்தத் துறையின் அமைச்சர்களாக இருந்த வேலுமணியும் ஓ.பன்னீர்செல்வமும் அடிக்கடி ‘இது அம்மா ஆட்சி’ என்றார்களே தவிர, அவரின் கனவுத்திட்டத்தை நிறைவேற்றுவதைப் பற்றி கவலைப்படவே இல்லை.

கிட்டத்தட்ட எட்டாண்டுகளுக்குப் பின் கடந்த மூன்று நாள்களுக்கு முன்புதான், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு தொடர்பாகச் சென்னையில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார் அமைச்சர் வேலுமணி. தமிழகத்தில் மூன்று மாத காலத்துக்குள் வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள், அரசு கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும் என்றும், தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறார். ஆனால், நடைமுறைக்கு வருமா என்பதுதான் சந்தேகமே.

Minister S.P.Velumani
Minister S.P.Velumani

மழைநீர் சேமிப்பு ஏன் அவசியம்?

குறைந்துவரும் நிலத்தடி நீர்வளத்தை அதிகரிக்க மழைநீர் சேமிப்பு ஒரு மாபெரும் தீர்வு. அதுமட்டுமல்லாது, நிலத்தடி நீர்வளம் குறைவதைத் தடுக்கவும். நீர்வளத்தை அதிகரிக்கவும், கடல்நீர் உட்புகுவதைத் தடுக்கவும். மண் அரிப்பு ஏற்படுவது தடுக்கவும், மழை நீர் சேகரிப்பு மிகவும் அவசியம்.

மழைநீரை எப்படிச் சேமிக்கலாம்?

மழைநீரைச் சேகரிப்பதற்கு கோவையைச் சேர்ந்த `சிறுதுளி' அமைப்பு, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆழ்துளைக் கிணறு கட்டமைப்பை உருவாக்கி மழைநீரைப் பூமிக்குள் செலுத்தி தண்ணீர்ப் புதையலாக மாற்றி வருகிறது. அங்குள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள், தொழில்கூடங்களிலும் இதேபோன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் மழைநீர் சேகரிக்கப்படுகிறது.

Rainwater Harvesting
Rainwater Harvesting

மழை நீரை நேரடியாகச் சேமித்தல் மற்றும் நிலத்தடி சேமிப்பு ஆகிய இரண்டு வழிகளில் சேமிக்கலாம். இதில் நேரடி சேமித்தலில் தொட்டிகள் அமைத்தும், நிலத்தடி சேமிப்புக்கு மழை நீர் குழி அமைத்தும் சேகரிக்கலாம். நேரடி சேமித்தல் முறை பெரும்பாலும் அதிக மழைப்பொழிவு உள்ள இடங்களில் பின்பற்றப்படுகிறது.

நிலத்தடியில் சேகரித்தல் முறையைப் பொறுத்தவரை. பலநீர் நிரப்புக்குழிகள் அல்லது கிணறுகள் மூலம் நிலத்தடி நீரைப் பெருக்கலாம். நீர்நிரப்புக்குழிகள் அதிகப்படியான நீரை நிலத்தடியில் சேமிக்க அதிகம் உதவுகிறது.

Rainwater Harvesting Tank
Rainwater Harvesting Tank

ஏரி, குளம், குட்டை, கண்மாய், ஊரணி என்று அனைத்து நீர்நிலைகளிலும். ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டி, உறைகிணறுகள் அமைக்க வேண்டும். இதன்மூலம், சாதாரணமாக நிலத்தில் நீர் சேர்வதைப்போல, இப்படிச் செய்வதன் மூலம், நிலத்தடி நீர் பெருமளவு உயரும். இந்த முறையை அனைத்து கட்டடங்களிலும் பின்பற்றலாம். அதோடு மழைநீர் வழிந்தோடும் சாலையோரங்கள், பொதுவிடங்கள் என்று அனைத்து இடங்களிலும் இம்முறையைச் செயல்படுத்தலாம்.

எவ்வளவு செலவாகும்?

மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்க, தனி வீட்டுக்கு 3,000 முதல் 15,000 ரூபாய் வரையிலும், அடுக்குமாடி குறியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்கு 10,000 முதல் 30,000 ரூபாய் வரையும் செலவாகும். இந்தக் கட்டமைப்பு உருவாக்க நாம் செலவுசெய்யும் தொகையைவிடத் தண்ணீர்த்தட்டுப்பாடுள்ள காலங்களில் பன்மடங்கு தொகையைத் தண்ணீருக்காகச் செலவு செய்கிறோம் என்பதே நிஜம்.

Rainwater saving pipes
Rainwater saving pipes

உலகிலேயே நிலத்தடிநீரை அதிகம் பயன்படுத்துபவர்கள் இந்தியர்கள்தான். 90 சதவிகிதம் நகர்ப்புற மக்களின் குடிநீர்த்தேவை நிலத்தடி நீரைக் கொண்டே பூர்த்தி செய்யப்படுகிறது. ஆனால், சேமிக்கப்படும் நீரின் அளவு மிகவும் குறைவுதான். சென்னை போன்ற நகரங்களில் 90 விழுக்காடுகளுக்கும் அதிகமான மழைநீர் கழிவுநீருடனும் சேர்ந்து கடலில்தான் கலக்கிறது.

மழைநீரும் ஆற்றுநீரும் குறிப்பிட்ட அளவு கடலில் கலப்பது அவசியம்தான். ஆனால், அளவுக்கு அதிகமான மழைப்பொழிவின்போதும் தண்ணீரைச் சேமிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்காமல் கடலில் கலக்க வைப்பது அரசின் தவறுதான். சமீபத்தில், தமிழகம் சந்தித்த தண்ணீர்த் தட்டுப்பாடு போன்று இன்னொரு தட்டுப்பாடு தமிழகம் காணாதிருக்க மழைநீர் சேமிப்பை மிகத்தீவிரமாகச் செயல்படுத்த வேண்டியது அவசர அவசியம். வெறும் கண்துடைப்புக்காகச் செயல்படுத்தாமல், உண்மையில் இத்திட்டத்தைச் செயல்படுத்தினால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். நிலத்தடி நீரின் தன்மையும் மாறும். சென்னையில் இப்போதே பல இடங்களில் தண்ணீர் வாயில் வைக்கவே முடியாத அளவுக்கு உப்புத்தன்மையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Water Scarcity
Water Scarcity

மிகமிகக் காலதாமதமாக அரசு இத்திட்டத்தைத் தூசிதட்டி மீண்டும் உயிரோட்டம் அளித்திருந்தாலும், இந்தச் செயல்பாடு, இந்தச் சூழ்நிலைக்கு மிக அவசியமான ஒன்றாகும். அதோடு அரசு கட்டி வரும் மழைநீர் வடிகால் வாய்க்காலில் சேகரிக்கப்போகும் நீரைக் கழிவுநீருடன் கலந்துவிடாமல் தடுப்பதும் மிக அவசியம். மழைநீர் சேகரிப்பில் அரசும் அமைச்சர்களும் வெறும் விளம்பரம் செய்தால் போதாது. செயல்பட வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு