Published:Updated:

ஊழிக்காலம் - 16 | காலநிலை மாற்றத்துக்கு எதிராக 2K கிட்ஸ் ஏன் போராடுகிறார்கள்?!

காலநிலை மறுப்பாளர்கள், "படிப்பை விட்டுவிட்டு ஏன் போராட்டக் கொடி பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்? கல்வியில் கவனம் செலுத்துங்கள்" என்று இவர்களைத் திட்டுகிறார்கள். ஆனால். அவர்களோ...

"நீங்கள் பதற்றப்படவேண்டும், பீதியடைய வேண்டும். ஒவ்வொரு நாளும் எனக்கு இருக்கும் அச்சம் உங்களுக்கும் வரவேண்டும், பிறகு நீங்கள் செயல்படவேண்டும்" - ஸ்வீடனைச் சேர்ந்த காலநிலை செயல்பாட்டாளர் க்ரெட்டா தன்பர்க்கின் புகழ்பெற்ற சொற்கள் இவை. 2018ம் ஆண்டில் தனது பதினைந்தாம் வயதில் இவர் துவக்கி வைத்த காலநிலைப் போராட்டம் இப்போது உலகெங்கும் பரவியிருக்கிறது. 'எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள்' (Fridays for future) என்ற பெயரில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கிட்டத்தட்ட 150 நாடுகளைச் சேர்ந்த 40 லட்சம் மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளைப் போர்க்கால அடிப்படையில் அரசுகள் முன்னெடுக்கவேண்டும் என்பதே இவர்களின் முக்கியக் கோரிக்கை.
கிரேட்டா தன்பர்க்
கிரேட்டா தன்பர்க்

தனது எட்டாவது வயது முதலே காலநிலை மாற்றத்தைப் பற்றிய தகவல்களைத் திரட்டிவந்த க்ரெட்டா, தொடர்ந்து அரசுகள் தீர்வுகளில் சுணக்கம் காட்டுவதைக் கண்டு மிகவும் ஆதங்கத்தில் இருந்தார். பெரியவர்கள் ஏன் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று யோசித்து மன உளைச்சலுக்கு ஆளானார். 2018ல் வட ஐரோப்பாவில் காணப்பட்ட அதீத வெப்பநிலை பல நாடுகளை மோசமாக பாதித்தது. இதனால் ஏற்பட்ட காட்டுத்தீயால் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் காலநிலை மாற்றம் தொடர்பான கோரிக்கையை தனது அரசாங்கத்திடம் கொண்டு சேர்க்க விரும்பினார் க்ரெட்டா. ஆகஸ்ட் 2018ல் ஸ்வீடன் நாடாளுமன்றக் கட்டடத்தின் முன்னால் போராட்டத்தைத் துவக்கினார். அவரது பெற்றோர் இதைக் கைவிடுமாறு க்ரெட்டாவை வற்புறுத்தினர். தொடக்கத்தில் அவரது பள்ளி நண்பர்கள்கூட அவருடன் போராட்டத்துக்கு வரவில்லை. தனி ஓர் ஆளாக ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் முன்னால் போராட்ட வாசகங்களை ஏந்திய அட்டையோடு அமர்ந்திருந்தார் க்ரெட்டா.

கொஞ்சம் கொஞ்சமாக அவர்மீது வெளிச்சம் பாய்ந்தது. அவர் போராட்டத்துக்கு ஆதரவு கிடைத்தது. அவருடன் பலர் இணைந்துகொண்டனர். செப்டம்பர் 8ம் தேதியன்று, "பாரீஸ் ஒப்பந்தத்தைப் பின்பற்றும் அளவுக்குச் சரியான முறையில் ஸ்வீடனின் திட்ட வரைவுகள் மாற்றப்படும்வரை வாராவாரம் போராட்டம் நடக்கும்" என்று க்ரெட்டா அறிவித்தார். #FridaysForFuture என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, உலகில் உள்ள இளையோர் அனைவரும் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

சமகால சூழலியல் வரலாற்றில் மிக முக்கியமான தருணம் இது எனலாம். ஒரு பள்ளி மாணவியின் தொடர்ந்த விடாமுயற்சியால் உலகமே விழித்துக்கொண்டு வாராவாரம் இணைந்து போராடுகிறது என்பது சாதாரண விஷயமல்ல. கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலும் இணைய வழியில் போராட்டத்தைத் தொடர்கிறார்கள் உலக இளைஞர்கள்.

க்ரெட்டா தன்பர்க் போராட்டம்
க்ரெட்டா தன்பர்க் போராட்டம்
காலநிலை மாற்றத்துக்கான செயல்பாட்டாளர்களில் முக்கியமானவர் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த லிசிப்ரியா கங்குஜம். இப்போது இவரது வயது 9. காலநிலை மாற்றத் தீர்வுகளை நோக்கி இவர் போராட்டத்தில் இறங்கியபோது இவரது வயது வெறும் எட்டுதான்! காலநிலை தீர்வுகளுக்கான தனி சட்டங்கள், காலநிலை மாற்றம் பற்றிய தகவல்களைப் பள்ளிப்பாடங்களில் சேர்ப்பது ஆகியவை இவரது முக்கியக் கோரிக்கைகள்.

காலநிலை மாற்றத்துக்கெதிரான இந்தப் போராட்டத்தின் இன்னொரு முக்கியமான அம்சம் இதில் பங்கேற்பவர்களின் வயது. பெரும்பாலானவர்கள் பள்ளி/கல்லூரி மாணவர்கள், இளையோர். அலெக்ஸாண்ட்ரியா வில்லசெனார், இஸ்ரா ஹிர்சி, சியே பாஸ்டிடா, விக் பாரெட், கேட்டி ஈடர், ப்ரேசிலைச் சேர்ந்த அடேமிஸா ஸாக்ரியாபா, கனடாவைச் சேர்ந்த ஆட்டம் பெல்டியா, உள்ளிட்ட பல பதின்பருவத்தினர் (Teenagers) காலநிலைப் போராட்டத்தில் முக்கிய செயல்பாட்டாளர்களாக இருக்கிறார்கள். இது தற்செயலானதல்ல. இளைஞர்களும் மாணவர்களும் காலநிலைப் போராட்டங்களில் முன்னிலை வகிப்பதற்கு ஆழமான காரணம் உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காலநிலை மறுப்பாளர்கள், "படிப்பை விட்டுவிட்டு ஏன் போராட்டக் கொடி பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்? கல்வியில் கவனம் செலுத்துங்கள்" என்று இவர்களைத் திட்டுகிறார்கள்.

மாணவர்களின் பதிலோ தெளிவாக வந்து விழுகிறது. "எதிர்காலம் என்ற ஒன்று இருந்தால்தானே கல்வி தேவைப்படும்? காலநிலை மாற்றம் போகிற போக்கைப் பார்த்தால் எங்களுக்கு எதிர்காலமே இருக்காதுபோலத் தெரிகிறதே! அதனால்தான் போராடிக்கொண்டிருக்கிறோம்."

2019ல் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் நடத்திய ஓர் ஆய்வில், உலகெங்கிலும் உள்ள 10,000 இளைஞர்களிடம் (18-25 வயது), சமகால உலகின் மோசமான பிரச்னை எது என்று கேள்வி எழுப்பப்பட்டது. கிட்டத்தட்ட 41% பேர் காலநிலை மாற்றமே இப்போதிருக்கும் தலையாய பிரச்னை என்று பதில் அளித்திருக்கிறார்கள்.

Activism
Activism

1990 முதல் 2010கள் வரை பிறந்தவர்களை Gen-Z என்பார்கள். மீம் க்ரியேட்டர்கள் மொழியில் சொல்லப்போனால் நைன்டீஸ் கிட்ஸ் மற்றும் 2K கிட்ஸ். தங்கள் பெற்றோரை விடவும் ஏழ்மையான சூழலில் வாழப்போகிற தலைமுறை இது என்கிறது ஓர் ஆய்வு. இன்னொரு அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கையோ, தத்தம் பெற்றோரின் வாழ்நாளை விட இவர்களின் வாழ்நாள் குறைவாக இருக்கும் என்கிறது. அதற்குக் காரணமாக சொல்லப்படுவது காலநிலை மாற்றம்!

ஜென் இஸட் தலைமுறையினர் மிகவும் பதற்றமான ஓர் உலகில் வாழ்கிறார்கள். முந்தைய தலைமுறையினர் செய்த தவறுகளால் உச்சத்தில் இருக்கிறது காலநிலை மாற்றம். அதைத் தீர்ப்பதற்கான அரசியல் அதிகாரமும் முந்தைய தலைமுறை ஆட்களிடம்தான் இருக்கிறது. ஆனால் அவர்களோ எதையும் கண்டுகொள்வதில்லை என்பது இவர்களின் குற்றச்சாட்டு. "முதலில் பிரச்னையின் தீவிரத்தையாவது எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லுங்கள். நீங்கள் அந்தப் பொறுப்பைக் கூட எங்களிடம் விட்டுவிடுகிறீர்களே, இது நியாயமா?" என்று இவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, காலநிலை மாற்றம் என்ற ஓர் அச்சுறுத்தல் இருக்கிறது என்பதைக் கூட முந்தைய தலைமுறையினரில் பலர் மறுக்கிறார்கள். காலநிலை மறுப்பாளர்களில் பெரும்பான்மையானோர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். மற்றொருபுறம் ஜென் இஸட் தலைமுறையைச் சேர்ந்தவர்களோ காலநிலைப் பதற்றத்தால் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். காலநிலை பற்றிய அணுகுமுறையில் இருக்கும் இந்த வயது வித்தியாசத்தை Climate age gap என்று குறிப்பிடுகிறது 2018 வந்த ஓர் ஆய்வறிக்கை.

Greta Thunberg
Greta Thunberg
AP

பதின்பருவத்தினரின் போராட்டத்துக்குப் பின்னால் இருக்கிற காரணம் இப்போது புரிந்திருக்கும். முந்தைய தலைமுறையினரின் தவறுகளுக்காக அவர்கள் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. முந்தைய தலைமுறையினரோ, காலநிலை மாற்றத்தையே மறுக்கிறார்கள், அல்லது பிரச்சனையின் தீவிரத்தை வெளிப்படையாகப் பேசுவதில்லை, பேசினாலும் கையிலிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்வுகளைத் தருவதில்லை. எப்போது வேண்டுமானாலும் உடையப்போகிற ஒரு உலகத்துக்குள் எதை நம்பி பதின்பருவத்தினர் நுழைவார்கள்?

உண்மையில் இது விசித்திரமான சூழ்நிலை. பெரியவர்கள் குழந்தைகளைக் குறை சொல்வதைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் காலநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை, குழந்தைகள் பெரியவர்களைக் குறை சொல்கிறார்கள், கேள்வி கேட்கிறார்கள். பெரியவர்களோ, கண்டும் காணாததுபோல் கடந்து போகிறார்கள், அல்லது குழந்தைகளை மிரட்டிப் "கல்வி கற்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்" என்கிறார்கள். இத்தனையையும் மீறி இளைய சமுதாயம் போராட்டத்தைத் தொடர்கிறது. அரசுகளை ஸ்தம்பிக்க வைக்கிறது. கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தலைவர்கள் திணறுகிறார்கள்.

ஊழிக்காலம் - 15 | கான்ஸ்பிரசி தியரிகளால் தாமதமாகும் காலநிலைத் தீர்வு... எப்படிச் சரி செய்வது?

"எல்லாருக்கும் வாழ்வதற்கான உரிமை உண்டு. காலநிலை மாற்றத்தையும் சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் சரிசெய்யாமல், வாழ்வதற்கான எங்கள் அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறீர்கள்" என்று சாடுகிறார் மெக்ஸிக்கோவைச் சேர்ந்த செயற்பாட்டாளர் மரியா ட்ரிக்ஸ். "என் குழந்தைப் பருவத்தைப் பறித்துவிட்டீர்கள், எங்கள் எதிர்காலத்தை சீரழிக்கிறீர்கள். என்ன தைரியம் இருந்தால் இப்படி செய்வீர்கள்?" என்று கேட்கிறார் க்ரெட்டா தன்பர்க். எதிர்காலமே தெரியாத இருண்ட பூமியில் கண்களையும் கட்டிக்கொண்டு தீர்வுகளுக்காக இறைஞ்சிக்கொண்டிருக்கிறது இளைய தலைமுறை. தீர்வுகளை நோக்கிய ஒரு நகர்வாக, வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் போராட்டத்தின்மூலம் உலக நாடுகளை இவர்கள் தட்டி எழுப்ப முயற்சி செய்கிறார்கள்.

Climate change
Climate change
Markus Spiske on Unsplash

பதின்பருவத்தினரின் மனநிலை இப்படி இருக்கிறது என்றால், ஓரளவு வயது வந்தவர்களோ, நிலையற்ற பூமியில் இன்னொரு உயிரைக் கொண்டு வருவதற்குத் தயங்கி, குழந்தை பெற்றுக்கொள்வதையே தவிர்க்கிறார்கள்! நமக்கு அதீதமாகத் தெரியலாம். ஆனால், காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் உளவியல் பிரச்னைகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் பெரிதாக வெடிக்கும் என்றே உளவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். எந்த மாதிரியான உளவியல் சிக்கல்கள் எதிர்காலத்தில் வரலாம்? அவற்றை நம்மால் எதிர்கொள்ள முடியுமா?

அடுத்த கட்டுரையில் பேசலாம்.

- Warming Up...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு