Published:Updated:

EIA 2020: எதிர்ப்பு ஏன்? - ஒரு விரிவான அலசல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தொழிற்சாலை மாசுபாடுகள்
தொழிற்சாலை மாசுபாடுகள் ( Pixabay )

EIA 2020 எனப்படும் ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020’ வரைவுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக மிகப்பெரிய பாதிப்புகளை இந்தியா சந்தித்துவருகிறது. புலம்பெயர்த் தொழிலாளர்கள் பிரச்னையின் தீவிரம் இன்னும் குறையவில்லை. இந்த நிலையில், இ.ஐ.ஏ 2020 (Environment Impact Assessment 2020) மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் எத்தகைய தொழிற்சாலையையும் ஆரம்பிக்கலாம், எவ்வளவு பெரிய திட்டத்தையும் தொடங்கலாம் என்று ‘முழு சுதந்திரம்’ வழங்குவதற்கு மத்திய பா.ஜ.க அரசு தயாராகிவிட்டது. அதற்காகத்தான், இ.ஐ.ஏ 2020 கொண்டுவரப்படுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இ.ஐ.ஏ 2020-ஐ மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்கிற ஹேஷ்டாக் சமூகவலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது. இந்த எதிர்ப்புக்கு என்ன காரணம் என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக, இ.ஐ.ஏ 2020 என்றால் என்னவென்று பார்ப்போம்.

போபால் கொடூரம்
போபால் கொடூரம்

1984-ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரித்து வந்த ‘யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட்’ என்ற தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். தொழிற்சாலைகளால் ஏற்பட்ட உலகின் மிகப்பெரும் பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படும் அந்த விபத்தால் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட, அப்பகுதி மக்கள் சிறுநீரகப் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு போன்ற உடல் ரீதியான பல கோளாறுகளுக்கு ஆளாகி வருகிறார்கள். உரிய பாதுகாப்பு விதிமுறைகளின்றி தொழிற்சாலையை செயல்பட அனுமதித்ததுதான் அத்தனைக்கும் காரணம். போபால் விபத்துக்குப் பிறகுதான், தொழிற்சாலைகளிடமிருந்து இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன், சட்ட ரீதியான சில நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் - 1986 உருவாக்கப்பட்டது. அதன் ஓர் அம்சமாக, `சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு’ என்கிற சட்ட நடைமுறை 1994-ம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்டது. சுரங்கம், தொழிற்சாலை, அணை போன்ற வளர்ச்சித் திட்டங்களால் ஒரு நாட்டின் சுற்றுச்சூழலும் வளங்களும் அழிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் அதன் நோக்கம். தற்போது, சூழலியல் தாக்க மதிப்பீடு - 2006 நடைமுறையில் உள்ளது. இதன் நோக்கமானது, சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து, அதைத் தடுப்பது, குறைப்பது, ஒழுங்குபடுத்துவது என்பதுதான். இது மக்கள் கருத்து, வல்லுநர்கள் அறிக்கை, ஆய்வுகள் எனப் பல வழிமுறைகளை உள்ளடக்கியது.

தொழிற்சாலை
தொழிற்சாலை
சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 - சூழலியாளர்களின் குரலுக்கு செவி கொடுக்குமா மத்திய அரசு?

இந்தியாவில் தொழிற்சாலைகள் தொடங்க வேண்டுமென்றால் சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டம் - 2006-ன் கீழ் அனுமதி பெற வேண்டும். திட்டம் குறித்த சுற்றுச்ழேல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயார் செய்ய வேண்டும். அதை அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்யும். சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்காத திட்டமாக இருக்கும் பட்சத்தில் அனுமதி வழங்கப்படும் அல்லது அனுமதி மறுக்கப்படும். இந்த விதிமுறைகளையும் நடைமுறைகளையும் காலி செய்யத்தான், இ.ஐ.ஏ 2020-ஐ மத்திய அரசு கொண்டுவருகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மத்திய அரசின் சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தால் கடந்த மார்ச் 12-ம் தேதி இ.ஐ.ஏ 2020 வெளியிடப்பட்டது. கொரோனாவால் தேசம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், சுற்றுச்சூழலை அழிக்கக்கூடிய வகையிலான இந்த சட்ட வரைவைக் கொண்டுவந்து அமல்படுத்த மத்திய பா.ஜ.க அரசு முனைப்புக் காட்டுவதாக எதிர்க்கட்சியினரும் சூழலியல் செயற்பாட்டாளர்களும் குற்றம்சாட்டுகிறார்கள்.

தொழிற்சாலை  விபத்து
தொழிற்சாலை விபத்து

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020-ல், பொதுமக்கள் கருத்துக் கேட்பு மற்றும் பொது ஆலோசனைகளிலிருந்து பல திட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களின் குற்றச்சாட்டு. குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்குதல், உள்நாட்டு நீர்த்தடங்கள், நீர்ப்பாசன நவீனமயமாக்கல், அனைத்துவிதமான கட்டுமானத் திட்டங்கள் போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ராணுவம் போன்ற நாட்டின் பாதுகாப்பு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் என்றால், அவை பற்றிய விவரங்களை எந்தப் பொதுத்தளத்திலும் வெளியிட வேண்டிய அவசியம் கிடையாது. இப்போது, ராணுவம் மற்றும் பாதுகாப்பு அல்லாத வேறு திட்டங்களையும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த (strategic) திட்டம் என்று குறிப்பிட்டுவிட்டால், அது பற்றிய விவரங்களை வெளியிட வேண்டியதில்லை. இ.ஐ.ஏ 2020-ல் இடம்பெற்றுள்ள மிகமோசமான அம்சங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

உதாரணமாக, Strategic என்ற வகைப்பட்டியலில் மருந்து உற்பத்தி நிறுவனங்களைக் கொண்டுவந்துவிட்டால், மருந்து நிறுவனங்கள் பற்றிய யாரும் கேள்வி எழுப்ப முடியாத நிலை ஏற்படும். எனவேதான், கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் இந்தியாவில் ஏராளமான மருந்து உற்பத்தித் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கொள்ளை லாபம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்ட அவர்களுக்கு, சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றி எந்த அக்கறையும் இருக்காது. எனவே, இது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல்

தற்போது, ஒவ்வொரு நிறுவனமும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தன் செயல்பாடுகள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அது, ஆண்டுக்கு ஒருமுறை சமர்ப்பித்தால் போதும் என இ.ஐ.ஏ 2020-ல் திருத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்களால் ஏற்படும் சூழலியல் சீர்கேடுகள் குறித்து இனிமேல் பொதுமக்களால் புகார் அளிக்க முடியாது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஆகியோரால் மட்டுமே இனிமேல் புகார் அளிக்க முடியும். மேலும், புதிதாக வரும் திட்டம் அல்லது தொழிற்சாலை தொடர்பாக பொது மக்களின் கருத்துகளைக் கேட்பதற்கு 60 நாள்கள் என இருந்த காலஅவகாசம், இப்போது 40 நாள்களாகவும், பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு இருந்த காலஅவகாசம் 30 நாள்களிலிருந்து 20 நாள்களாகவும் குறைக்கப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலை குறித்து, நியூட்ரினோ மாதிரியான திட்டம் குறித்து இந்தக் குறுகிய காலத்துக்குள் பொதுமக்களால் எப்படி கருத்து தெரிவிக்க முடியும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இ.ஐ.ஏ 2020-வின் பெரும்பாலான அம்சங்கள் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவும் சுற்றுச்சூழல் மற்றும் தேசத்தின் வளங்களை அழிக்கும் வகையிலும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் வகையிலும் இருப்பதாக எதிர்க்கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த நிலையில், தேசத்தின் சுற்றுச்சூழலையும் வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கும் வகையிலான சட்டத்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு இ.ஐ.ஏ 2020 பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.

சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல்

இ.ஐ.ஏ 2020 குறித்து ஆகஸ்ட் 11-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இது கொரோனா பெருந்தொற்று காலமாக இருப்பதாலும், இந்த வரைவானது மாநில மொழிகளில் வெளியிடப்படவில்லை என்பதாலும் இது பற்றிய தகவல் பெரும்பாலான மக்களைச் சென்றடையாது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. மேலும், இ.ஐ.ஏ 2020 வரைவு குறித்து விமர்சனபூர்வமாகக் கேள்வி எழுப்பிய மூன்று சுற்றுச்சூழல் அமைப்புகளின் (There is No Earth B, Let India Breathe, fridays for future) இணையதளங்கள் முடக்கப்பட்டன. சட்ட வரைவு குறித்து கருத்து தெரிவித்ததற்காக இணையதளங்களை முடக்குவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இன்னொருபுறம், இந்தியாவில் தொழில் வாய்ப்புகளைப் பெருக்கவும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், அதன் ஒரு பகுதியாகத்தான் இ.ஐ.ஏ 2020 கொண்டுவரப்படுகிறது என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இ.ஐ.ஏ 2006-ல் இடம்பெற்றுள்ள அம்சங்களிலிருந்து சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும், அவையும்கூட `பாசிட்டிவ்’ ஆன மாற்றங்கள்தான் என்றும் ஆளும் தரப்புக்கு ஆதரவானவர்கள் கூறிவருகிறார்கள்.

சுற்றுச்சூழல் அறிக்கையை விமர்சித்த 3 இணையதளங்கள் முடக்கம்... வாய்ப்பூட்டு போடுகிறதா மத்திய அரசு?

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு பொதுமக்களிடமிருந்து மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்ற உத்தரவால் அத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய மக்கள் எதிர்ப்புக்குப் பிறகு தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இ.ஐ.ஏ 2020 என்பது தற்போது இருக்கும் நிலையில் அப்படியே நிறைவேற்றப்பட்டால், எந்தவித தடங்களும் இல்லாமல் தமிழ்நாட்டில் பல எட்டுவழிச் சாலைகள் அமைக்கப்படும், ஸ்டெர்லைட் ஆலை போல பல தொழிற்சாலைகள் திறக்கப்படும் சூழல் உருவாகும் என்று எச்சரிக்கிறார்கள் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்.

எட்டுவழிச் சாலைக்கு எதிர்ப்பு
எட்டுவழிச் சாலைக்கு எதிர்ப்பு

மத்தியில் உள்ள பா.ஜ.க ஆட்சியாளர்கள், இந்தியாவின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு வளரும் என்று சொல்லிவந்தார்கள். அந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால், நிறைய தொழிற்சாலைகள் இந்தியாவில் திறக்கப்பட வேண்டும் என்றும், அதற்காகத்தான் இ.ஐ.ஏ 2020 கொண்டுவரப்படுவதாகவும் ஆளும் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்தியாவின் பொருளாதாரம் வளருவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் அழித்துவிட்டுத்தான் தொழில் வளர்ச்சியையும் பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டுமென்றால், அந்த வளர்ச்சியை அனுபவிப்பதற்கு மக்கள் இருக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு