Published:Updated:

பழங்குடிகளின் தொன்மையான இடம்மாற்று விவசாயமுறை... காப்பாற்ற முனையும் மத்திய அரசு!

இடம்மாற்று விவசாய முறை மீது பல விமர்சனங்களை அரசு இயந்திரங்கள் முன்வைத்தாலும்கூட, இந்த விவசாய முறை பழங்குடியின மற்றும் எளிமையான விவசாயச் சமூகங்களுக்கு நிலைத்தன்மை வாய்ந்த வாழ்வாதாரத்தை, உணவுப் பாதுகாப்பை நல்குகின்றது.

இடம் மாற்று விவசாய முறை, இந்தியாவின் பல பகுதிகளில் இன்றளவும் பழங்குடியின மக்களுடைய முதன்மையான பழக்கமாக இருந்து வருகின்றது. மாநில அரசுகள் அந்த முறையை அங்கீகரிக்கத் தவறினாலும் சரி, பூர்வகுடிகளை இந்த வகை விவசாயத்திலிருந்து விலக்கி நவீன விவசாய முறைக்குள் கொண்டுவர எவ்வளவுதான் முயன்றாலும் அவர்கள் இதை விட்டு வந்தபாடில்லை.

2018-ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, வடகிழக்கு இந்தியாவில் சுமார் 8,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலப்பகுதி, இன்றளவும் இடம் மாற்று விவசாய முறைக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரியவந்தது.

இத்தனை தடைகளையும் கடந்து, எதிர்ப்புகளையும் கடந்து பூர்வகுடி மக்கள் இந்த முறை விவசாயத்தைக் காப்பாற்றி வருவது ஏன்?

இந்த முறை மிகவும் பழைமை வாய்ந்தது. பல நூற்றாண்டுகளுக்கும் முன்பிருந்தே இது கடைப்பிடிக்கப்படுகின்றது. ஒருமுறை குறிப்பிட்ட நிலத்தில் விவசாயம் செய்துவிட்ட பிறகு, அந்த நிலத்தைக் கைவிட்டுவிட்டு வேறு புதிய நிலத்துக்குத் தங்கள் விவசாயத்தை மாற்றிவிடுவார்கள். அங்கிருந்து கிளம்பும்போது அந்த நிலத்தை எரித்துவிட்டுக் கிளம்புவதால், அதில் வளர்ந்திருந்த தாவரங்களே அந்நிலத்துக்கு உரமாக மாறுகின்றது. பின்னர், அடுத்த சில ஆண்டுகளுக்கு அந்த நிலத்தில் யாரும் விவசாயம் செய்ய மாட்டார்கள். இதனால் அதன் மண் வளம் இயற்கையாக மீட்டுருவாக்கப்பட்டு, அதன் இயல்பு நிலைக்கே மீண்டும் திரும்பிவிடும். இதற்காக, மரங்களை வெட்ட வேண்டியிருக்கிறது என்று கூறி இதைக் காடழிப்பு, மண் அரிப்பு மற்றும் பல்லுயிரிய வள இழப்பு போன்றவற்றுக்காகக் குற்றம் சாட்டி அரசு அதிகாரிகள் இந்த முறையை எதிர்க்கின்றனர்.

இந்த முறைமீது பல விமர்சனங்களை அரசு இயந்திரங்கள் முன்வைத்தாலும்கூட, இது பழங்குடியின மற்றும் எளிமையான விவசாயச் சமூகங்களுக்கு நிலைத்தன்மை வாய்ந்த வாழ்வாதாரத்தை, உணவுப் பாதுகாப்பை நல்குகின்றது. ஆனால், அவர்கள் உற்பத்தி செய்கின்ற பொருள்களைச் சந்தைப்படுத்துவதில்தான் சிக்கல்களைச் சந்திக்கிறார்கள். பெரும்பாலும் இத்தகைய விவசாய முறை காடுகளை ஒட்டியும் காடுகளைச் சார்ந்தும் வாழ்கின்ற மக்களால்தான் மேற்கொள்ளப்படுகின்றது. அவர்கள் தங்கள் உற்பத்தியை ஊர்களுக்குள் கொண்டுவந்து சந்தைப்படுத்துவது இன்னும் சிக்கலாகவே இருந்துவருகின்றது.

விவசாயம்
விவசாயம்
Pixabay

2017-ம் ஆண்டு வெளியான, `இடம் மாற்றும் விவசாயக் கொள்கைகள் (Shifting cultivation policies: Balancing environmental and social sustainability)' என்ற நூலில், அரசு மற்றும் உள்ளூர் அரசு நிறுவனங்கள் இந்த இடம் மாற்று விவசாய முறையை ஒழுங்குபடுத்துவதற்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முறை விவசாயத்தை அழிக்கும் நோக்கத்துடன் பலரும் செயல்படுவது இன்று நேற்று கதையல்ல. இது ஆங்கிலேய ஆட்சிக்கும் முந்தைய காலகட்டத்திலிருந்து நடந்துகொண்டிருக்கிறது. அப்போதைய மேல் பர்மாவிலிருந்து அஸ்ஸாம் மாநிலத்தை ஆண்டுகொண்டிருந்த ஆஹோம் என்ற இனத்தினர் இந்த முறையைக் கைவிட வைக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த ஆட்சியாளர்கள், இடம் மாற்று முறையைத் தடுத்து, ஓரிடத்திலேயே விவசாயம் செய்ய வைக்க முயன்றனர். கூடுதலாக, ஆங்கிலேயர்களும் இந்த முறையை ஒழிக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். 1827 மற்றும் 1947-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில், இடம் மாற்று விவசாய முறைக்குத் தடை விதித்து, விவசாயிகள் இந்த முறையில் உற்பத்தி செய்வதைக் கடுமையாகத் தடுத்தனர். இந்த முறையை முற்றிலுமாக மழுங்கடிக்க அவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பர்மிய ஆட்சியாளர்களுடைய காலகட்டத்தில் தொடங்கிய இந்த எதிர்ப்பு இன்றளவும் நீடிக்கின்றது. அதற்குரிய சிறந்த உதாரணம்தான், 2011-ம் ஆண்டு வெளியான புதிய நிலப் பயன்பாட்டுக் கொள்கை. வடகிழக்கு மாநில மக்களிடமிருந்து இந்த முறையை முற்றிலுமாக ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட சில அம்சங்களை மிசோரம் மாநில அரசு அமல்படுத்தத் தொடங்கியது. இப்படியாக, மிகவும் தொன்மை வாய்ந்த, நிலைத்தன்மை வாய்ந்த விவசாய முறையை ஒழிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இருந்தும்கூட, அவற்றைக் கைவிடாமல் வடகிழக்குப் பழங்குடியின மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகவே அரசாங்கக் கொள்கைகள், திட்டங்கள் என்று பல வழிகளில் அவர்களுக்கு இடையூறுகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த முயற்சிகளைக் கடந்தும் நிற்கின்ற விவசாய முறையைக் காணும்போது ஒரு கேள்வி எழுகின்றது.

இத்தனை தடைகளையும் எதிர்ப்புகளையும் கடந்து பூர்வகுடி மக்கள் இந்த விவசாயமுறையைக் காப்பாற்றி வருவது ஏன்?

இந்த விவசாய முறையே, காடுகளைச் சார்ந்து வாழும் பூர்வகுடிகளுக்குத் தேவையான உணவுப் பாதுகாப்பையும் ஊட்டச்சத்துகளையும் வழங்கின.
ஆய்வுக்குழுவின் தலைவர் திலிப் குமார் பாண்டே

இந்தக் கேள்விக்கான விடையைச் சமீபத்தில் வெளியான வனக் கொள்கை மற்றும் பொருளாதாரம் சார்ந்த ஒரு ஆய்வுக் கட்டுரை கொடுத்துள்ளது.

வடகிழக்கு இந்தியாவிலுள்ள அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய ஆறு மாநிலங்களில் அமைந்துள்ள 52 கிராமங்களில் வாழும் மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஏன், இன்றளவும் இந்த விவசாய முறையைக் கைவிடாமல் செய்கின்றனர் என்ற கேள்வியை அந்த மக்களிடம் கேட்டு ஒரு கேள்வி-பதில் சர்வே நடத்தினர். இதன்மூலம் கிடைக்கும் சூழலியல் நன்மைகள், சமூகப் பொருளாதாரப் பலன்கள் போன்றவை குறித்து அந்த மக்கள் பதிலளித்துள்ளனர். இந்த ஆய்வின் மூலம், உலகளவில் காலநிலை மாற்றத்தால் ஏற்படுகின்ற தாக்கத்தின் வேகம் அதிகரிக்கும் இன்றைய சூழலில் இந்த விவசாயமுறை நம்மை இன்றைய சூழலோடு தகவமைக்க வைப்பது தெரியவந்துள்ளது. ஒரேயிடத்தில் தங்கியிருந்து விவசாயம் செய்யும் முறையே நாடு முழுவதும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் வடகிழக்கு மாநிலங்களில் இருக்கின்றது. இதனால், மிகப்பெரிய பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடம் மாற்று விவசாய முறை அழிந்துகொண்டிருப்பதாகவும் ஆய்வின்போது கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மரபு மற்றும் சமூக ஒற்றுமை, பொருளாதார ஒற்றுமை, இயற்கையுடனான பிணைப்பு ஆகிய மூன்றுமே இந்த வகை விவசாயத்தைத் தக்க வைக்கத் தேவைப்படுகின்றது. முதலில் இந்த விவசாய முறையைக் கடைப்பிடிக்கும் மக்கள் சமூகங்களின் நடுவே பண்பாட்டு ரீதியிலான ஒற்றுமையைப் பேண வேண்டும். அதன்மூலம், அவர்களுடைய பொருளாதார அமைப்புகளையும் சமூக வாழ்வியலில் ஒன்றாகப் பிணைக்க வேண்டும். இறுதியாக, மரபுசார் வாழ்க்கை முறையின்மூலம் இயற்கையோடு அவர்களுக்கு இருக்கும் பிணைப்பைப் பாதுகாக்க வேண்டும். இவையனைத்துமே சாத்தியமாக அடிப்படையில் தேவைப்படுவது சமூகப் பிணைப்பு. மக்கள் சமூகங்களுக்கு இடையே அந்தப் பிணைப்பு இருந்தால்தான், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். அதுவே, தொன்மைவாய்ந்த இந்த விவசாய முறையைக் காப்பாற்றுவதில், அந்த மக்களின் விவசாயச் சுழற்சியைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

இந்த விவசாயமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றாலே, அதற்கு அதைக் கடைப்பிடிக்கும் சமூகத்தில் ஒற்றுமை இருக்க வேண்டும். பல குடும்பங்கள் இணைந்து விவசாயம் செய்துவிட்டு, மீண்டும் ஒற்றுமையாகவே இடம் பெயர்ந்து செல்வார்கள். விவசாயத்துக்குப் பின்பு எரிக்கப்பட்டு, மீட்டுருவாகக் காத்திருக்கும் ஒவ்வொரு நிலப்பகுதியும் அத்தகைய குடும்பங்களுடைய பல கதைகளைச் சுமந்து நிற்கின்றன.

``இந்த விவசாய முறையே, காடுகளைச் சார்ந்து வாழும் பூர்வகுடிகளுக்குத் தேவையான உணவுப் பாதுகாப்பையும் ஊட்டச்சத்துகளையும் வழங்கின. ஒருவேளை, இவற்றை வழங்கும் வேறு ஏதேனும் நிலைத்தன்மை வாய்ந்த முறையை அவர்களுக்குப் பரிந்துரை செய்திருந்தால் அவர்கள் இதைக் கைவிட்டிருப்பார்கள்" என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வுக்குழுவின் தலைவர் திலிப் குமார் பாண்டே.

அனைவரும் எளிதில் அணுகிவிட முடியாத மலைப்பகுதிகளில் வாழ்வதால், நாடு முழுவதும் நடக்கின்ற சந்தைப்படுத்துதலை அங்கு மேற்கொள்வது கடினமாக உள்ளது. இந்நிலையில், இந்த முறை அவர்களுடைய பொருளாதாரப் பிணைப்பையும் வலுவாக்குகின்றது. ஓரிடத்திலேயே தங்கி விவசாயம் செய்வதாக இருந்தால், அதற்கான விதைகள் முதல் வேதிம உரங்கள், பூச்சிக்கொல்லிகள் வரை பல முதலீடுகளைச் செய்ய வேண்டும். இந்த முறையில் விதைகளை மட்டும் கையில் வைத்திருந்தாலே போதுமானது, மற்றவற்றை இயற்கையே தந்துவிடும்.

மலைகளில் இடம் மாற்று விவசாய முறை மேற்கொள்ளப்பட்டு மீட்டுருவாக்கத்திற்காக விஅடப்பட்டிருக்கும் நிலப்பகுதிகள்
மலைகளில் இடம் மாற்று விவசாய முறை மேற்கொள்ளப்பட்டு மீட்டுருவாக்கத்திற்காக விஅடப்பட்டிருக்கும் நிலப்பகுதிகள்
BMC Ecology/ Wikimedia

இடம் மாற்று விவசாயத்தை மேற்கொள்கின்ற பூர்வகுடிகளைப் பொறுத்தவரை, காடுகள் புனிதமானவை. அதோடு, அவர்கள் ஒற்றைப் பயிரிடுதல் முறையில் விதைப்பதில்லை. பன்மைப் பயிரிடுதல் முறையில், பல்வேறு பயிர்களை ஒரே நேரத்தில் விளைவிப்பதால் நிலமும் சீரழிவதில்லை, உணவுப் பாதுகாப்பும் கேள்விக்குறியாவதில்லை. இதன்மூலம் இயற்கையோடு ஒன்றியே வாழ்கின்றனர். இந்த விவசாய முறையிலேயே பல துணை வகைகள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலுள்ள நிலப்பகுதிக்கும், ஒவ்வொரு கிராமத்துக்கும் அது மாறுபடுகின்றது. காடுகளினூடே இருக்கின்ற கிராமங்கள், அவர்களுக்குத் தேவைப்படும் வகையில் மட்டுமே பெரும்பாலும் விளைவிக்கின்றனர். காடுகளிலிருந்து சற்று வெளியே வந்து வாழ்கின்ற மக்கள், உணவுக்காக மட்டுமன்றி வருமானத்துக்கான வகையிலும் இதை மேற்கொள்கின்றனர்.

காடு அவர்களுக்குத் தேவையான அனைத்தையுமே அதன்மூலம் வழங்குகின்றது. வீடுகள் கட்டத் தேவைப்படும் மரம், உணவு, மருந்து என்று அவர்களுடைய வாழ்வுக்குத் தேவையான அனைத்தையுமே வழங்குகின்றது. இடம் மாற்று விவசாய முறை உணவு உற்பத்திக்கானது மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கைமுறை. அதனால்தான், அந்த மக்கள் அதைக் கைவிடாமல் இருக்கின்றனர். தமிழகத்திலும் இதேபோன்ற விவசாய முறை மலைவாழ் மக்களிடத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் அதீத ஆக்கிரமிப்புகளுக்கு ஆளான மலைப் பகுதிகள், தேயிலைத் தோட்டங்களுக்காகத் தொடர்ந்து அழிக்கப்பட்டன. அதனால் காலப்போக்கில் இந்தமுறையே இல்லாமல் போய்விட்டது. தென்னிந்தியாவின் வெகுசில பகுதிகளில் இது தற்போது மிகச் சொற்ப மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்றது. இப்போது ஒரு நிலத்தை முற்றிலுமாக அழித்து, தீவிரமாகத் தேயிலை விவசாயம் மேற்கொள்வதன் மூலம் அந்நிலத்தின் சூழலியலையே அழிக்கின்றனர். இந்தத் தொன்மையான முறையில், விளைச்சலுக்குப் பிறகு அந்நிலம் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ள அவகாசம் கொடுத்து அடுத்த பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு அதைத் தொந்தரவு செய்யாமல் இருப்பதன் மூலம் மண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றனர்.

இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக, இன்றைய கொரோனா பேரிடர் காலத்திலும்கூட இவ்வகை விவசாயத்தை மேற்கொள்ளும் மக்களுடைய உணவுப் பாதுகாப்பு சிக்கலின்றி இருக்கின்றது. இந்த முறை, காலநிலை மாற்றத்தையும் அதன் விளைவுகளையும் சமாளிக்க ஏதுவாக இருப்பதாக, சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்ட மத்திய அரசு இடம் மாற்று விவசாய முறை, சட்டரீதியில் அதன் அங்கீகாரத்தைப் பெறக்கூடும் என்று கூறியுள்ளது. மத்திய அரசாங்கத்தின் ஓர் அமைப்பான நிதி ஆயோக், இந்த முறை விவசாயத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதும் இதைக் கடைப்பிடிக்கும் விவசாயிகளுக்கு கடன் உதவி மற்றும் மானியங்கள் போன்ற உதவிகளை வழங்குமாறு பரிந்துரைத்துள்ளதும் அதற்கு முக்கிய காரணம். அதன் தொடக்கமாக, விரைவில் இடம் மாற்று விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படும் நிலம் விவசாய நிலமாக அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு