Published:Updated:

விரைவில் அமலாகும் அணு ஆயுத தடை ஒப்பந்தம்... என்ன செய்யப்போகின்றன வல்லரசு நாடுகள்?

Radiation Warning
Radiation Warning ( Photo by Dan Meyers on Unsplash )

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய அணு ஆயுத நாடுகள் இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட ஆயுத நாடுகளும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

`அணு ஆயுதம் இல்லா உலகைப் படைப்போம்' என்பதுதான் உலகம் முழுக்க இருக்கும் சூழலியலாளர்களின் முக்கியமான கோரிக்கை. அந்தக் கோரிக்கைக்கான விதை இப்போது விதைக்கப்பட்டிருக்கிறது. ஆம், வரும் ஜனவரி 22-ம் தேதி முதல் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவோ, பரிமாற்றம் செய்யவோ தடை விதிக்கும் உலக நாடுகளின் அணு ஆயுத தடை ஒப்பந்தம் அமலுக்கு வர இருக்கிறது.

அணு ஆயுதங்கள் கொடூரமான பேரழிவை ஏற்படுத்தக் கூடியவை. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இருந்தே அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் ஏராளமான சூழலியலாளர்கள் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில் 2017-ம் ஆண்டு `அணு ஆயுத தடை ஒப்பந்தம்' ஐ.நா சபையில் கொண்டு வரப்பட்டது. அந்த ஒப்பந்தம் அணு ஆயுத சோதனை, தயாரிப்பு, இருப்பு வைத்தல், ஏற்றுமதி, பயன்பாடு ஆகியவற்றைத் தடை செய்யும் வகையிலிருந்தது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வர 50 நாடுகளின் அங்கீகாரம் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது ஐ.நா சபையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான நிகழ்ச்சி தொடங்கியதும், முதல் நாடாகப் பிரேசில் கையெழுத்திட்டது. அதைத் தொடர்ந்து அயர்லாந்து, இந்தோனேசியா என 42 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட நாளிலிருந்து மொத்தம் 49 நாடுகளே கையெழுத்திட்டிருந்தன.

இந்த நிலையில், மத்திய அமெரிக்க நாடான ஹாண்டுராஸ் (Honduras) 50-வது நாடாக அண்மையில் ஒப்புதல் கொடுத்திருக்கிறது. இந்த ஒப்புதலை அடுத்து இப்போது ஐ.நா-வின் அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்த 50 நாடுகளின் கையெழுத்து மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்தும் என்கிறார்கள் சூழலியலாளர்கள். இந்த ஒப்பந்தம் அடுத்த 90-ம் நாள் சட்டமாகிவிடும்.

United Nations Secretary-General António Guterres
United Nations Secretary-General António Guterres
AP Photo/Bebeto Matthews

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா கட்ரஸ், ``அணு ஆயுத தடை ஒப்பந்தம் ஜனவரி 22-ம் தேதி முதல் அமலுக்கு வரும். அணு ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுதச் சோதனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஒப்பந்தம் சமர்ப்பணம். இது மொத்த அணு ஆயுதங்களையும் ஒழிக்கும் முயற்சியை முன்னெடுக்கிறது" என்றிருக்கிறார்.

கடந்த 50 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட அணு ஆயுத சோதனைகள் நடைபெற்றுள்ளன. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய அணு ஆயுத நாடுகள் இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட ஆயுத நாடுகளும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 50 நாடுகளுக்கு மட்டும், இந்த விதிகள் அமலுக்கு வரும்.

பொறியாளர் சுந்தர்ராஜன்
பொறியாளர் சுந்தர்ராஜன்

இதுபற்றிப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் மற்றும் சூழலியலாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம். ``இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஹிரோஷிமா, நாகசாகி போலக் கொடூரங்கள் அரங்கேறக் கூடாது என்பதற்காகவும், மூன்றாவது போர் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவும்தான் ஐ.நா சபை பல காலமாக முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இப்போது அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்திட்டிருக்கின்றன. இது ஜனவரி 22-ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்தால் இவர்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது சர்வதேச குற்றமாகக் கருதப்படும். முன்னர், இதுபோல 50 நாடுகள் இணைந்து எடுத்த முடிவு காரணமாகத்தான் `கண்ணி வெடி' பயன்பாட்டுக்கு இன்று சர்வதேச அளவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதுபோலத்தான் இனி அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதும், பரிமாற்றம் செய்வதும் சட்டப்படி குற்றம். அணுகுண்டு வெடிப்பால் ஹிரோஷிமா, நாகசாகி பாதிக்கப்பட்டு 75 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்தச் சட்டம் வருவது நல்ல விஷயம். இனி உலக நாடுகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறையும்.

Members of Atomic Bomb survivors groups gather, holding a banner calling for Japanese government to ratify the Treaty on the Prohibition of Nuclear Weapons, with the Atomic Bomb Dome in background, in Hiroshima, western Japan
Members of Atomic Bomb survivors groups gather, holding a banner calling for Japanese government to ratify the Treaty on the Prohibition of Nuclear Weapons, with the Atomic Bomb Dome in background, in Hiroshima, western Japan
Kyodo News via AP

ஹிரோஷிமா மேயர், அணு சக்தியும் மனித இனமும் ஒன்றாக வாழ முடியாது, இரண்டில் ஏதாவது ஒன்றுதான் இருக்க முடியும் என்கிறார். ஏற்கெனவே அணு ஆயுத குண்டுகள் உலகில் மொத்தம் 15,000 இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவை எல்லாவற்றையும் என்றைக்குச் செயலிழக்கச் செய்கிறோமோ அன்றைக்குத்தான் முழுமையான அணு ஆயுதங்கள் இல்லாத உலகைப் படைக்க முடியும். இதுவரை அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாமெனத் தார்மீக அடிப்படையில் கோரிக்கை வைத்து வந்தோம். இப்போது அதைச் சட்டமாக ஆக்கும்போது எதிர்த்துக் கேள்விகளை எழுப்பலாம். இனி அணு ஆயுதங்கள் பயன்படுத்தினால் மக்களே கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வல்லரசு நாடுகள் எனச் சொல்லி அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவது எதிர்காலத்தில் படிப்படியாகக் குறையும்" என்றார்.

இப்போதைக்கு 50 நாடுகளே அணு ஆயுத ஒழிப்பை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்திருக்கின்றன என்றாலும், இது எதிர்காலத்தில் வல்லரசுகளையும் இதே பாதையில் பயணிக்க வைக்க வழிவகுக்கும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் சிறப்பம்சம். பேரழிவா... உலகின் அமைதியா... வல்லரசு நாடுகள் என்ன செய்யப்போகின்றன?

அடுத்த கட்டுரைக்கு