Published:Updated:

சதுப்பு நிலங்களில்தான் 40 சதவிகித அரியவகை பறவைகள் வாழ்கின்றன #WorldWetlandsDay

சதுப்புநிலம்
சதுப்புநிலம்

2019-ம் ஆண்டு இந்திய வன அளவை நிறுவனம் நாட்டின் மொத்த வனப்பரப்பளவு குறித்து வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்த 4,975.22 சதுர கி.மீ சதுப்புநிலங்கள் உள்ளன.

மனித ஆக்கிரமிப்புகளாலும் தொடர் செய்கையாலும் இயற்கை வளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவது குறைந்து, தற்போது முற்றிலும் துடைத்தெறியப்படும் நிலையில் உள்ளன. இந்த அபாயப் பட்டியலில் சதுப்புநிலங்கள் முதலிடத்தில் உள்ளன. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவிகிதம் சதுப்புநிலங்கள் உள்ளன. அந்த 6 சதவிகிதமும் நீர் வள மேம்பாட்டிலும் உயிர்ச்சூழலைத் தக்கவைப்பதிலும் மற்ற காடுகளுக்கு நிகரான பெரும் பங்கைச் செய்கின்றன. மன்னிக்கவும் செய்துகொண்டிருந்தன. இப்போது, அந்தச் சேவைக்கு, மனிதர்கள் கொடுத்த `அழிவு' என்னும் தண்டனைக்காலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

சதுப்புநிலங்கள்
சதுப்புநிலங்கள்

இந்தியா, தென்அமெரிக்காவின் அமேசான் வடிநிலப் பகுதி, ஆப்பிரிக்காவின் விக்டோரியா ஏரி, காங்கோ நதி முகத்துவாரப் பகுதிகள், ரஷ்யாவின் வோல்கா நதி பாயும் மத்திய சமவெளிப் பகுதி என்று சதுப்புநிலங்கள் பல்வேறு கண்டங்களில் பரந்துள்ளன. இந்தியாவில் தமிழகம், குஜராத், ஒடிசா, கேரளா, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ளன.

உலகெங்கிலும் உள்ள ஈரப்பதம் மிக்க புல்வெளிகள், நதிகள், கழிமுகப் பகுதிகள், கடலோரக் குடியிருப்புப் பகுதிகள், பவளத் திட்டுக்கள், தாழ்வான நிலங்கள், குளம், குட்டை மற்றும் ஏரிகள், நீர்த்தேக்கங்கள், நெல்வயல்கள், சதுப்பு நிலக்காடுகள் உள்ளிட்டவை ஈரநிலங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. பெருகி வரும் நகரமயமாக்கல், தொழிற்சாலைகளுக்கான ஆக்கிரமிப்புகள், புதிதாக உருவாகும் குடியிருப்புகள், ரியல் எஸ்டேட், சுற்றுலாத்தலங்கள் அமைத்தல், நீர்த்தேக்கங்கள் அமைத்தல், வேளாண் உற்பத்திக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அதிகமாகிவரும் இறால் பண்ணைகள் போன்றவற்றால் மிகப்பெரிய அழிவைச் சந்தித்து வருகின்றன சதுப்புநிலங்கள்.

பள்ளிக்கரணை
பள்ளிக்கரணை

வெள்ளப் பெருக்கு, புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுபவை சதுப்புநிலங்கள். இந்த நிலங்களின் அழிவைத் தடுப்பதற்காகவும் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவும் `ராம்சார் அமைப்பு' என்ற சர்வதேச அமைப்பு செயல்பட்டு வருகிறது. 1971-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி இரான் நாட்டின் ராம்சார் நகரில் சர்வதேச மாநாடு நடைபெற்றது.

மாநாட்டின் முடிவில் உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை மக்களிடம் பரப்புவது, இதற்காக உள்ளூர், மாநில, தேசிய, சர்வதேச அளவில் திட்டங்களை உருவாக்கி சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தும் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது. இதற்கு ராம்சார் பிரகடனம் என்று பெயரிடப்பட்டது. இதில், இந்தியா உள்ளிட்ட 161 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தப் பிரகடனத்தைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ம் தேதி உலக சதுப்புநில தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

ராம்சார் அமைப்பு
ராம்சார் அமைப்பு
Ramsar

சதுப்புநிலங்களைப் பாதுகாக்கும் நடைமுறை 1982-ம் ஆண்டு முதல் இந்தியாவிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சதுப்புநிலங்களின் அவசியம், மனிதத் தலையீடுகள் ஏற்படுத்திய சூழலியல் மாற்றங்களால் சதுப்புநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அதனால் உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சதுப்புநிலங்களில்தான் 40 சதவிகிதம் அரியவகைப் பறவைகள் உயிர்வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
Wetland Wildlife
Wetland Wildlife
Wild Life Watch

2019-ம் ஆண்டு இந்திய வன அளவை நிறுவனம் நாட்டின் மொத்த வனப்பரப்பளவு குறித்து வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்த 4,975.22 சதுர கி.மீ சதுப்புநிலங்கள் உள்ளன. இதில், அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 2,112 சதுர கி.மீ சதுப்புநிலங்கள் உள்ளன. அதாவது, இந்தியாவில் உள்ள சதுப்புநிலங்களில் 42.45 சதவிகிதம் அங்குள்ளது. அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 1,177 சதுர கி.மீ சதுப்புநிலங்கள் உள்ளன. தமிழகத்தில் 45 சதுர கி.மீ சதுப்புநிலங்களே உள்ளன. அதாவது, இந்தியாவில் உள்ள சதுப்புநிலங்களில் 0.90 சதவிகிதம் மட்டுமே.

தமிழகத்தில் திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சதுப்புநிலங்கள் உள்ளன.

பல இடங்களில் சதுப்புநிலங்கள் பறவைகள் சரணாலயங்களாக அறிவிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பு, மேம்பாட்டுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்புநிலப் பகுதிகளைப் பாதுகாக்க மற்றும் பராமரிப்பதற்காக மத்திய அரசு ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வருகிறது. கடந்த 2018-19-ல் இந்தியா முழுவதும் ரூ.63.95 கோடியும், அதில் தமிழகத்துக்கு ரூ.1.20 கோடியும் ஒதுக்கியது.

சதுப்புநிலம்
சதுப்புநிலம்
Vikatan Infographics

1965-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்னையிலுள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் உண்மையான பரப்பளவு 5,500 ஹெக்டேர். அதாவது 55 சதுர கி.மீ. ஆனால், மனித ஆக்கிரமிப்புகளால் அதன் பரப்பளவு குறைந்து இப்போது வெறும் 6 சதுர கி.மீட்டரே உள்ளது. இங்கு 1,085 குடியிருப்புகள் ஆக்கிரமித்துள்ளன. பறக்கும் ரயில் நிலையத்தால் 100 ஏக்கர், தேசிய கடல் சார் கல்வி நிறுவனத்தால் 20.25 ஏக்கர், மத்திய காற்றாலைகள் நிறுவனம் மற்றும் பல தனியார் நிறுவனங்களும் பள்ளிக்கரணை சதுப்புநிலங்களை ஆக்கிரமித்துள்ளன. இப்படி அழிக்கப்பட்டவையின் அளவு குறித்த முழுமையான விவரங்கள் நம்மிடம் இல்லை. தமிழகத்தின் இப்போதைய மொத்த சதுப்பு நிலப் பரப்பளவை, பள்ளிக்கரணையின் பழைய பரப்பளவே மிஞ்சிவிட்டது. எனில், இன்னும் எவ்வளவு இதுபோல் அழிக்கப்பட்டிருக்கும். எவ்வளவு பெரிய சூழலியல் பொக்கிஷத்தை நாம் இழந்துகொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

India state forest report 2019 வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கரணை சதுப்புநிலம் பட்டியலில் இல்லை. இதை ராம்சார் பகுதியாக அறிவிக்க பலவேறு வருடங்களாகவே வனத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. (மேற்கண்ட Infography-யிலும் அதனால்தான் குறிப்பிடவில்லை)

சதுப்பு நிலங்களில் முறையான அனுமதி பெறாமல் ஏதாவது திட்டத்தை செயல்படுத்தினால் ராம்சார் அமைப்பில் அந்நிலம் தகுதியற்றதாக கருதப்படும். சதுப்புநிலங்களில் எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தாமல் இருந்தால் மட்டுமே ராம்சார் பகுதியாக பதிவு செய்யப்படும். பள்ளிக்கரணை சதுப்புநிலம் ராம்சார் அமைப்பில் இல்லாததற்கும் இதுபோன்ற பல்வேறு காரணங்கள் இருப்பதாக பலதரப்பினர் கூறுகின்றனர்.

பள்ளிக்கரணை சதுப்புநிலம்
பள்ளிக்கரணை சதுப்புநிலம்

சதுப்புநில ஆக்கிரமிப்புகளுக்கு முறையான நடவடிக்கை இல்லாமல் இருப்பதால், தொடர்ச்சியாக அழிந்துகொண்டே வருகிறது. இதன் அழிவால் நமக்குக் கிடைக்கும் நீர் ஆதாரங்கள் அனைத்தும் அழிந்துகொண்டிருக்கின்றன. நம் எதிர்காலப் பாதுகாப்பை மனதில் கொண்டு, அழிந்துவரும் சதுப்புநிலங்களைப் பாதுகாக்கச் செயல்பட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அதற்கான முதல் படியாக, நீங்கள் வாழும் பகுதிக்கு அருகிலிருக்கும் சதுப்பு நிலங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முயலுங்கள். அவற்றின் இப்போதைய நிலை என்ன, அவை உங்கள் பகுதியின் சுற்றுச்சூழலுக்குச் செய்யும் பங்கு என்ன என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள முயலுங்கள். உங்கள் பகுதியின் சதுப்புநிலம் பற்றி உங்களுக்குத் தெரிந்தவற்றைக் கீழே கமென்டில் குறிப்பிடுங்கள். அவை பற்றி நீங்கள் மேலும், தெரிந்துகொள்ள விரும்பும் கேள்விகளை விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.

#DoubtOfCommonMan
#DoubtOfCommonMan
உங்கள் கேள்விகள் சந்தேகங்களைக் கேட்க... இங்கே க்ளிக் செய்யுங்கள் : Doubt Of Common Man
பின் செல்ல