Published:Updated:

54 லட்சம் பேரை அகதிகளாக்கிய வெள்ளம்... சாலைகளில் அலையும் காட்டுயிர்கள்... தத்தளிக்கும் அஸ்ஸாம்!

அஸ்ஸாமின் 30 மாவட்டங்களைச் சேர்ந்த 54 லட்சம் பேர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு, வெள்ளத்தில் மூழ்கி இதுவரை 81 பேர் மரணமடைந்துள்ளனர்.

கடந்த 13-ம் தேதியன்று, அஸ்ஸாம் மாநிலத்தின் காசிரங்கா தேசியப் பூங்காவுக்கு அருகிலிருந்த ஒரு கிராமத்தில் ஓர் ஒளிப்படம் எடுக்கப்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த நேரத்தில், புலியொன்று அதிலிருந்து தப்பிக்க கண்டோலிமாரா என்ற கிராமத்துக்குள் புகுந்து மக்கள் வளர்த்துக் கொண்டிருந்த ஆடுகளுக்காக அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்குள் தஞ்சம் புகுந்தது. அதுகுறித்து காணொளிகளும் ஒளிப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின. காசிரங்கா தேசியப் பூங்கா அதிகாரிகள், அந்தக் கிராம மக்களுக்கும் சரி, தஞ்சம் புகுந்த புலிக்கும் சரி எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்வோம் என்று உறுதியளித்தனர்.

இரண்டு நாள்களுக்கு முன்னர், ஜூலை 17-ம் தேதியன்று, பகோரி மலைத்தொடரை ஊடுருவிச் செல்கின்ற தேசிய நெடுஞ்சாலை 37-ல் ஓர் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் விழுந்து கிடந்தது. முதலில், ஏதேனும் காயம்பட்டிருக்குமோ என்று பரிசோதித்துப் பார்த்தபோதுதான், அது மிகவும் சோர்வடைந்து, நகர முடியாமல், ஓய்வெடுத்துக்கொண்டிருப்பது தெரியவந்தது. வெள்ளத்திலிருந்து தப்பித்து வரப் போராடியதில், நகர முடியாதளவுக்குச் சோர்வடைந்துவிட்ட அந்தக் காண்டாமிருகத்திற்கு, தேசியப் பூங்காவைச் சேர்ந்த அதிகாரிகள், மருத்துவர்கள் மூலமாகச் சிகிச்சையளித்து, அதன் உடல்நிலை சிறிது மேம்பட்டவுடன் மீண்டும் பூங்காவிற்குள் அழைத்துச் சென்றனர். அதுவரை, உயிரைக் காப்பாற்றப் போராடியதில் உண்டான சோர்வு மொத்தமும் உடலை அழுத்தவே, தொப்பென்று நெடுஞ்சாலையில் தன் உடலைக் கிடத்தி, ஓய்வெடுத்துக் கொண்டிருந்த காண்டாமிருகத்தின் ஆழமான ஆசுவாசப் பெருமூச்சுகள், `ஒருவழியாகப் பிழைத்துவிட்டோம்' என்ற அதன் நிம்மதியை அவர்களுக்கு உணர்த்தியிருக்கும்.

இதுவரை கிடைத்த தகவலின்படி, சுமார் 96 விலங்குகள் வெள்ளத்தில் பலியாகியிருக்கலாம் என்று தெரியவருகிறது. அதில், 8 காண்டாமிருகங்களும் அடக்கம். அவற்றோடு சேர்த்து, 7 காட்டுப் பன்றிகள், மூன்று காட்டெருமைகள், இரண்டு சதுப்பு நில மான்கள் (swamp deer), 74 பன்றி மான்கள் (Hog deer), இரண்டு முள்ளம் பன்றிகள் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளன. காசிரங்கா நிர்வாகிகள் 59 வேட்டைத்தடுப்பு முகாம்கள், 223 காவலர் முகாம்கள் நீருக்குள் மூழ்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். காட்டிலிருந்து பல்வேறு விலங்குகள், வெளியேறி அருகருகே இருக்கும் உயரமான பகுதிகளை நோக்கிப் படையெடுக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து அருகிலிருக்கும் கர்பி மலையை நோக்கி அவை இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றன. வனத்துறை அதிகாரிகள், காட்டுயிர் பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவோடு (Wildlife Rehabilitation and Conservation) சேர்ந்து இதுவரை, இரண்டு காண்டாமிருகக் குட்டிகள், நான்கு புலிகள், 103 பன்றி மான்கள் உட்பட, 132 காட்டுயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்.

இது வெள்ளத்தால் சூழ்ந்திருக்கும் அஸ்ஸாம் மாநில வனப்பகுதியில் ஏற்பட்ட சேதங்களின் சில உதாரணங்கள் மட்டுமே. இதுபோக, 30 மாவட்டங்களைச் சேர்ந்த 54 லட்சம் பேர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு, வெள்ளத்தில் மூழ்கியும் அடித்துச் செல்லப்பட்டும் 81 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 26 பேர், நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதுவரை, மொத்தம் 107 பேர் அஸ்ஸாம் வெள்ளத்திற்குப் பலியாகியுள்ளனர். அஸ்ஸாம் மாநில அரசு, இதுவரை 99,176 குவிண்டால் அரிசி, 19,397 குவிண்டால் பருப்பு, 1,73,006 லிட்டர் சமையல் எண்ணெய் போன்ற நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளது. அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவல், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உதவுமாறு வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் அஸ்ஸாம்... சூழலியல் அகதிகளான லட்சக்கணக்கான மக்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுவரை, 200 ஏரிக்கரைகள் உடைந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 167 பாலங்கள், 1600 சாலைகள் சேதமடைந்துள்ளன. அதிகபட்சமாக, நிலப்பரப்பைவிட 80 சென்டிமீட்டர் உயரம் வரை வெள்ளநீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று இரவிற்குள் பிரம்மப்புத்திரா நதியின் தற்போதைய மட்டத்தைவிட, மேலும் 5 மீட்டர் உயரும் என்று கணிக்கப்படுகின்றது.

காசிரங்கா தேசியப் பூங்கா
காசிரங்கா தேசியப் பூங்கா
Twitter/Kaziranga National Park

இந்தச் சூழலில் நாம் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் குறித்தும் சிறிது நினைவுபடுத்திப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. கடந்த ஜூலை மாதம் இதே காலகட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒரே வாரத்தில் சுமார் 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 17 பேர் பலியாகியிருந்தனர். 2019-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி தொடங்கி, நிற்காமல் பெய்த மழை லட்சக்கணக்கான மக்களுக்கு மரண வாசனையைக் காட்டி, சூழலியல் அகதிகளாக்கியது. இந்த ஆண்டு, வெள்ளத்திலிருந்து தப்பிக்கச் சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் காண்டாமிருகங்களைப் போலவே, கடந்த ஆண்டு எட்டு காண்டாமிருகங்கள் வெள்ளத்திலிருந்து தப்பித்து, சிறிய மணல் திட்டில் கரையேறி, உயிர் பிழைத்த ஆசுவாசத்தோடும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடியதால் ஏற்பட்ட களைப்போடும் மணல் திட்டின் மீது தொப்பென்று உடலைக் கிடத்தி ஓய்வெடுத்த ஒளிப்படம் வைரலானது.

இப்படியாக ஒவ்வோர் ஆண்டும் வெள்ளத்தில் தத்தளிக்கும் காட்டுயிர்களின் ஒளிப்படங்கள் வைரலாகின்றன. ஆண்டுக்கு ஆண்டு, வெள்ளச் சேதங்களுக்கு ஆளாகும் மக்களின் எண்ணிக்கையும் லட்சங்களில் அதிகரிக்கின்றன. கடந்த ஆண்டு, 2,168 கிராமங்களில் 51,752 ஹெக்டேர் விவசாய நிலம் சேதமடைந்தது. இந்த ஆண்டு அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக சுமார் 1.28 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் நீரில் மூழ்கியுள்ளது. இந்த ஆண்டில் 54 லட்சம் பேர் சூழலியல் அகதிகளாக ஆக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் அதே போன்ற தீவிர மழைப்பொழிவு இருக்குமென்று ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டது. இருந்தும், முந்தைய ஆண்டில் அனுபவித்த இழப்புகளிலிருந்து சேதங்களிலிருந்து பாடம் கற்காததால், அஸ்ஸாம் மீண்டுமொரு பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்தமுறை, அது முன்பைவிட இரண்டு மடங்கு வீரியமிக்கதாக இருக்கிறது.

காசிரங்கா தேசியப் பூங்காவில் தப்பிக்க முயலும் மான்கள்
காசிரங்கா தேசியப் பூங்காவில் தப்பிக்க முயலும் மான்கள்
Twitter/Kaziranga National Park

இந்நிலையில், வடகிழக்கு இந்தியாவில் மழைப் பொழிவும் வெள்ளமும் குறையாது... மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது அங்கு கடும் மழைப்பொழிவு இருந்து வருகின்றது. இனி வரும் நாள்களில், மழைப்பொழிவு மிகக் கடுமையாக இருக்குமென்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, அஸ்ஸாம், மேகாலயா, சிக்கிம், மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதிகளில் மழைப் பொழிவு இப்போதைவிட வீரியமிக்கதாகவும் வெள்ளச் சேதங்கள் கடுமையாகவும் இருக்குமென்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிலும், 19 முதல் 21-ம் தேதிவரை அதிகளவில் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

அஸ்ஸாம் மாநிலம், ஜூன் மாதத்தின் கடைசி வாரத்திலிருந்தே கடும் மழைப்பொழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. கடந்த மே மாதமே குறிப்பிடத்தக்க அளவில் வெள்ளம் ஏற்பட்டது. கடந்த ஜூன் 22-ம் தேதி வரையிலும் 309 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவானது. ஒவ்வோர் ஆண்டும், ஆண்டின் அந்தக் காலகட்டத்தில் இருக்கக்கூடிய சராசரி மழைப்பொழிவை விடவே இது அதிகம். அதற்கு அடுத்த மூன்று நாள்களில் அந்த விகிதம், மேலும் 51.5 மில்லிமீட்டர் அதிகரித்தது. மேற்கொண்டு அதிகரித்த மழைப் பொழிவின் வேகம், 395 மில்லிமீட்டர் அளவுக்குப் பதிவானது.

வெள்ளச் சேதங்கள்
வெள்ளச் சேதங்கள்
Photo: AP

அந்த மாநில அரசாங்கம், கடந்த ஆண்டின் சேதங்களிலிருந்து பாடம் கற்கவில்லை எனினும்கூட, கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின் போதாவது சுதாரித்திருக்க வேண்டும். அப்படியில்லாமல், மெத்தனமாக இருந்ததே இப்போதைய கடும் இழப்புகளுக்கு முக்கியக் காரணமென்று அஸ்ஸாமைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஜூலை 17-ம் தேதிப்படி, அஸ்ஸாமில் 810 மில்லிமீட்டர் அளவுக்கு மழைப் பொழிவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோக, மேகாலயா, சிக்கிம் ஆகிய பகுதிகளில் முறையே, 38 சதவிகிதம் மற்றும் 97 சதவிகிதம் சராசரி மழையளவைவிட அதிகமாகப் பதிவாகியுள்ளது. அதுபோக, மணிப்பூர், மிசோரம் மாநிலங்களில் முறையே 43 மற்றும் 37 சதவிகிதம் சராசரி மழையளவைவிட அதிகமாகப் பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளம், அஸ்ஸாம் மாநிலத்தில் கொரோனா தாக்குதலையும் தீவிரப்படுத்தியது. ஜூன் மாதத்தில் வெள்ளம் தொடங்கிய ஒரே வாரத்தில் 1,186 பேர் பாதிக்கப்பட்டனர். தொற்றுக்குப் பாதிக்கப்படுபவர்களுடைய விகிதம் அதுவரை இருந்ததைவிட 52.87 சதவிகிதம் அதிகமாக அந்த ஒரு வாரமே இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூலை 15-ம் தேதி வரையிலான தரவுகளின்படி, கடந்த இரண்டே வாரங்களில் கொரோனாவுக்குப் பாதிக்கப்பட்டு, உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரம், நோயாளிகளில் 68 சதவிகிதம் பேர் குணமடைந்து திரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள்
வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள்
Photo: AP

இருப்பினும், வெள்ளச் சேதம், பொதுமக்களை முகாம்களில் கூட்டமாகத் தங்க வைக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, அங்கு கொரோனா தொற்றுப் பரவலும் தீவிரமடைந்துள்ளது.

ஜூலை 14-ம் தேதி வரையிலான தரவுகளின்படி, அஸ்ஸாமில் 18,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19-ம் தேதியுடைய அம்மாநிலத் தரவுகள்படி, மொத்தம் 22,918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மொத்தம் 15,165 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர். 7,760 நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். 53 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.

மாநில அரசு, வெள்ள முகாம்களில் மக்களுக்கு இடையே சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டியது குறித்த வழிமுறைகளை அறிவித்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு நபருக்கும் 7 சதுர மீட்டர் இடம் ஒதுக்கப்பட வேண்டுமென்றும், முகாமில் தங்கியிருக்கும் ஒவ்வொருவருக்கும் இடையே 1 மீட்டர் இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், கொரோனா அறிகுறி யாருக்காவது தென்பட்டால், அவர்கள் உடனடியாக முகாமிலிருந்து தனித்து வெளியேற்றப்பட்டு கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தனித்த ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முகாம்களில் அதற்கெனத் தனி அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வெள்ள நீரில் மூழ்கியுள்ள கிராமம்
வெள்ள நீரில் மூழ்கியுள்ள கிராமம்
Photo: AP

மேலும், குளியலறைகள், கழிவறைகள் அனைத்திலும் உரிய சுகாதார வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கையுறைகள், முகக் கவசங்களை அனைவருக்கும் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. வெள்ளப் பேரிடர், கொரோனா கொள்ளை நோய்ப் பேரிடர் இரண்டையும் ஒருசேர எதிர்கொண்டிருக்கும் அஸ்ஸாம் மாநிலம், மிகவும் திணறிக் கொண்டிருக்கின்றது.

அவர்களுடைய இந்தப் பெருஞ்சேதங்களுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கத் தவறிய, அஸ்ஸாம் மாநில அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு ஒரு முக்கியக் காரணம். இதிலிருந்து மீண்டு வருவதற்கேனும், மாநில அரசாங்கம் உரிய திட்டமிடுதலோடு செயல்பட வேண்டும். அதேநேரம், எதிர்காலப் பேரிடர்களையாவது, முன்னெச்சரிக்கையோடு கையாள வேண்டும் என்பதே நாடு முழுவதுமுள்ள சூழலியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு