Published:Updated:

வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அனுமதி; ஏன் இந்த அவசரம்?-பிரகாஷ் ஜவடேகருக்கு எதிராகக் கொதிக்கும் ஆர்வலர்கள்

பிரகாஷ் ஜவடேகர்
பிரகாஷ் ஜவடேகர்

அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வனவிலங்குகளுக்கான தேசிய வாரியம் கூட்டத்தை வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நடத்தி வனப்பகுதியை அழித்து வரவுள்ள திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் 11 மாநிலங்களிலிருந்து முன்வைக்கப்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து வனப்பரப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் நேற்று வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் வனவிலங்குகளுக்கான தேசிய வாரிய உறுப்பினர்களிடன் ஆலோசனை நடத்தினார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

முடிவில் கோவா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட 11 மாநிலங்களில் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ட்விட்டரில் தெரிவித்தார். நாடு இப்போது கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இருக்கும் போது வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக புதிய திட்டங்களுக்கு அவசர அவசரமாக அனுமதி அளித்தது ஏன் எனச் சுற்றுசூழல் ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காடுகள் பாதுகாப்பு
காடுகள் பாதுகாப்பு
Pixabay

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர், ``வனப்பரப்பை அழிப்பதன் காரணமாகத்தான் கொரோனா போன்ற பெருந்தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்கள் மனிதரிடையே பரவுகிறது. இதுபோன்ற நேரத்தில் ஒரு பொறுப்புள்ள சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் வனம்-விலங்கு-சுற்றுச்சூழல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆய்வுகளை முடுக்கிவிட வேண்டும்.

ஆனால், நமது அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வனவிலங்குகளுக்கான தேசிய வாரியம் கூட்டத்தை வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நடத்தி வனப்பகுதியை அழித்து வரவுள்ள திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளார். திட்ட அறிக்கைகளை நிபுணர்கள் பரிசீலித்து, திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து ஆராய்ந்து, சாதக பாதகங்களை உள்வாங்கி எடுக்க வேண்டிய முடிவுகளை இப்படி வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் முடிக்க வேண்டியே அவசரம் ஏன்?

காடுகள்
காடுகள்
vikatan

இந்தியாவின் காடுகள் கொரோனா போன்ற பல நூறு வைரஸ்களின் இருப்பிடமாக உள்ளது என்ற விஷயம் அறிவியல் ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதை உணர்ந்து நம் காடுகளைப் பல்வேறு திட்டங்களுக்காக அழிக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு