Published:Updated:

கோவிட்-19 பேரிடரால் காட்டுயிர்களுக்கு வந்த பேராபத்து; அச்சத்தில் ஆய்வாளர்கள் - காரணம் என்ன?

காட்டுயிர்/ Representational Image
காட்டுயிர்/ Representational Image ( Pixabay )

கொரோனா பேரிடர் தொடங்கியதிலிருந்து காட்டுயிர் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் நிதி மிகப்பெரிய அளவில் குறைந்ததால், பல்லாண்டு கால பாதுகாப்பு நடவடிக்கைகள் வீணாகும் அபாயம் உருவாகியுள்ளது.

கொரோனா தொற்றுநோய் பரவத் தொடங்கியது முதல் உலகமே வேறு மாதிரியாக மாறிக்கொண்டிருக்கின்றது. 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் நாம் பார்த்ததைப்போல் இப்போது பூமி இல்லை. கொரோனாவால் மொத்த உலகமும் முடங்கியதால், இயற்கை தன்னைப் புதுப்பித்துக்கொண்டிருக்கிறது என்று ஒருபுறம் சொல்லப்பட்டாலும், காட்டுயிர் பாதுகாப்பு இந்தப் பேரிடரால் பெரும் அபாயத்தில் சிக்கியுள்ளது. இத்தனை ஆண்டுகளாக, காட்டுயிர் பாதுகாப்பில் பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலம், உலகம் முழுவதுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சந்தித்துள்ளது.

இதன்மூலம், அழியும் நிலையிலுள்ள பல்வேறு உயிரினங்களின் வாழ்விடங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு உயிரினங்கள் பராமரிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால், கொரோனா பேரிடர் தொடங்கியதிலிருந்து காட்டுயிர் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் நிதி மிகப்பெரிய அளவில் குறைந்ததால், பல்லாண்டு கால பாதுகாப்பு நடவடிக்கைகள் வீணாகும் அபாயம் உருவாகியுள்ளது.

Coronavirus
Coronavirus
Unsplash

பிரிட்டனில் அமைந்துள்ள அழியும் நிலையிலுள்ள உயிரினங்களுக்கான மக்கள் அறக்கட்டளையின் ஊடக வெளியீட்டில், இந்தப் பிரச்னை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுப்பதிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

கோவிட்-19 பெருந்தொற்று மீது உலக நாடுகளின் முழுக் கவனமும் குவிந்ததால், பல்வேறு துறைகள் கவனம் இழந்தன. அதில் இயற்கைப் பாதுகாப்பும் ஒன்று. ஆனால், அஞ்சத்தக்க வகையில், நாம் இன்று இந்த நிலைமையில் சிக்கித் தவிப்பதற்குக் காரணமே, இயற்கைப் பாதுகாப்பின் மீது உரிய கவனம் செலுத்தாததுதான் என்று அறிவியலாளர்கள் வருந்துகின்றனர். இந்நிலையில், தற்போதைய பேரிடரைக் காரணம் காட்டி, மீண்டும் அதே தவற்றைச் செய்வதன் மூலம், தவிர்க்க முடியாத பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று இந்த அறக்கட்டளை எச்சரிக்கிறது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கடந்த 40 ஆண்டுகளில், 60 நாடுகளில், 200-க்கும் மேற்பட்ட உயிரினங்களின் பாதுகாப்புக்காக 7.5 மில்லியன் யூரோக்களைச் செலவு செய்துள்ளது இந்த அறக்கட்டளை. அழியும் நிலையிலுள்ள உயிரினங்களுக்கான மக்கள் அறக்கட்டளை (PTES) மற்றும் அதோடு இணைந்து பணியாற்றக்கூடிய அமைப்புகள், ஆராய்ச்சியாளர்கள், உலகளவில் அழியும் நிலையிலிருக்கும் உயிரினங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால், இவை அனைத்துமே கொரோனா பேரிடர் தொடங்குவதற்கு முன்னர்.

இப்போது, இந்தப் பணிகளை மேற்கொள்வதற்குப் போதுமான நிதி இல்லாததால், பல காட்டுயிர் பாதுகாப்புத் திட்டங்கள் அப்படியே தேங்கியிருக்கின்றன. இதுமட்டுமன்றி, சூழலியல் சுற்றுலா சமுதாயத்தின் பல்வேறு மக்கள் சமூகங்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுத்தது.

காட்டுயிர் / Representational Image
காட்டுயிர் / Representational Image
Pixabay

கடந்த இரண்டு ஆண்டுகளில், அது நிலையற்றுப் போனதால் அதைச் சார்ந்திருந்த மக்களில் சிலர் காட்டுயிர் வேட்டையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இது, ஏற்கெனவே அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களை மேலும் ஆபத்தில் தள்ளுகிறது.

பி.டி.இ.எஸ் அறக்கட்டளையின் மேலாளர் நிடா அல்-ஃபுலைஜ் (Nida Al-Fulaij), ``வாழ்வின் அனைத்துக் கோணங்களிலுமே கோவிட்-19 மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்திவிட்டது. மனிதர்களின் ஆரோக்கியம், உலகப் பொருளாதாரம், கல்வி ஆகியவற்றில் பெரும் பின்னடைவைச் சந்திக்கிறோம். அதேநேரம், பூமியில் எளிதில் பாதிக்கக்கூடிய நிலையில் வாழும் மற்ற உயிரினங்களைப் பற்றியும் நாம் மறந்துவிடக் கூடாது. அலங்கு போன்ற உயிரினங்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. நாம் உடனடியாக இதில் செயல்படவில்லையெனில், சூழலியல் சமநிலையில் மிகப்பெரிய குலைவைச் சந்திக்க நேரிடும்" என்று கூறுகிறார்.

இந்தியாவிலும் சட்டவிரோத காட்டுயிர் வேட்டைகள் அதிகரித்துள்ளன. அதோடு, யானை-மனித எதிர்கொள்ளல் பிரச்னைகளும் அதிகரித்துள்ளன. ஆனால், உலக அளவில் லட்சக்கணக்கான ஆய்வாளர்களும் களப் பணியாளர்களும் வேலையிழப்பு, நிதிப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் இயற்கைப் பாதுகாப்பில் முழுமையாக ஈடுபட முடியாத சூழலில் சிக்கியுள்ளனர். மேற்கு வங்கத்திலுள்ள மயூர்ஜர்னா யானைகள் காப்பிடத்தில், மிக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு, தந்தத்துக்காக சட்டவிரோத யானை வேட்டை நடந்துள்ளது. தந்தம் கடத்தியதற்காக ஏழு பேர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் நிதிப் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் சிக்கல், இந்தியா முழுக்க இதுபோன்ற பிரச்னைகள் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

அலங்கு/ எறும்புத் தின்னி / Representational Image
அலங்கு/ எறும்புத் தின்னி / Representational Image
Pixabay

பிரேசிலில், எறும்புத் தின்னிகள் கடத்தப்படுவது கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்ததைவிடப் பல மடங்கு அதிகரித்துள்ளது. பிரேசில் சாலைகளில் அவை விபத்துக்குள்ளாகி உயிரிழக்கின்றன. கோவிட் ஊரடங்கு காரணமாகக் காலியாக இருக்கும் காடுகளையொட்டியுள்ள சாலைகளில் பயணிப்பவர்கள் வழக்கத்தைவிட அதிவேகத்தில் செல்வதாலும் ஊரடங்கு காலத்தில் மனித நடமாட்டம் குறைந்துவிட்டதைக் கவனித்த அலங்குகள், தைரியமாக வரத் தொடங்கியதன் விளைவாக, இந்த அபாயங்களுக்கு ஆளாகின்றன. அதோடு, கோவிட் பிரச்னைகள் முடிந்து நிலைமை சகஜமாகும்போது, வாகனங்களின் போக்குவரத்து அதிகரிக்கும். அதன்விளைவாக, இப்போதே இதுபோன்ற விபத்துகளுக்கு ஆளாகும் காட்டுயிர்கள், அதிகளவிலான விபத்துகளைச் சந்திக்க நேரிடும்.

இந்தியாவில் கோவிட் தொற்றுப் பரவல் தொடங்கிய பிறகு, காடு மற்றும் காட்டுயிர் பாதுகாப்பின் நிலை எப்படியுள்ளது என்பது குறித்துப் புரிந்துகொள்ள, சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அறக்கட்டளையான அசோகாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் முனைவர் கணேஷிடம் பேசினோம். அவர், ``இந்தியாவில் ஆரம்பத்திலிருந்தே பல்லுயிரியவளப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதில்லை. இருந்தபோதிலும், கிடைக்கும் நிதியை வைத்து, இதுசார்ந்த ஆய்வுகள் நடந்துகொண்டிருந்தன. ஆனால், 2020-ம் ஆண்டு பிப்ரவரி முதல், கோவிட் பேரிடர் காரணமாகக் கிடைத்த நிதியைப் பயன்படுத்தியும்கூட கள ஆய்வுகளை மேற்கொள்ள முடியாத சூழல் உருவானது.

முனைவர் கணேஷ், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்
முனைவர் கணேஷ், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்

பிறகு, அக்டோபர் மாதத்துக்குப் பிறகு, மீண்டும் பழைய நிலை திரும்பிக் கொண்டிருந்தபோது ஆய்வுகளைத் தொடங்குவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால், இந்தச் சூழலில் அரசாங்கம் பல்லுயிரிய வளப் பாதுகாப்புக்கோ சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கோ செலவு செய்ய முன்வரவில்லை.

பல்லுயிரிய வளப் பாதுகாப்பின் மூலம் பெரிய மாற்றத்தையோ பொருளாதார முன்னேற்றத்தையோ உருவாக்க முடியாது என்று அரசு நினைக்கிறது. இதனால், இந்தத் துறையில் தொடர்ந்து நிதிப் பற்றாக்குறை நிலவி வருகிறது. குறிப்பாக, கோவிட் காலகட்டத்தில், காடுகள் பாதுகாப்பிலும் முன்பிருந்த அளவிலான திறம்மிக்க செயல்பாடுகள் கூட இல்லை. இதனால் காட்டுயிர் வேட்டைகள் அதிகரித்துவிட்டன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், நாட்டின் பல்லுயிரிய வளப் பாதுகாப்பு நடவடிக்கைகள், வேட்டைத் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற அனைத்துமே முடங்கிப் போய்விட்டது என்றே சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது" என்று கூறினார்.

மேலும், பல்லுயிரிய வளப் பாதுகாப்புக்கும் கோவிட்-19 போன்ற விலங்கு-வழி தொற்றுநோய் பரவலுக்கும் இடையிலான தொடர்பு முக்கியமானது. உலகளவிலான ஆய்வாளர்கள் பல்லுயிரிய வளப் பாதுகாப்பின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் மற்ற உயிரினங்களிடமிருந்து பரவக்கூடிய தொற்றுநோய்களின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று வலியுறுத்துகின்றனர். இந்நிலையில், ``மக்களுடைய வாழ்வாதாரத்தை, அவர்கள் வாழும் நிலத்தைச் சார்ந்திருக்கும் உயிர்ப் பன்மையோடு தொடர்புபடுத்தும்போது, பல்லுயிரிய வளப் பாதுகாப்பை திறம்பட மேற்கொள்ள முடியும். அதன்மூலம், தொற்றுநோய்ப் பரவலை கட்டுப்படுத்த முடியும்" என்றும் உறுதியாக நம்புகிறார்" சுற்றுச்சூழல் ஆய்வாளர் முனைவர் கணேஷ்.

Representational Image
Representational Image
Pixabay
கோவிட் 19 பாதிப்பைக் குறிக்கும் சி.டி.ஸ்கேன் மதிப்பெண்... எப்படி வழங்கப்படுகிறது?

ஒரு பெருந்தொற்றுப் பேரிடர் காலகட்டத்தில் இருக்கின்ற அனைத்து வளங்களையும் அந்தப் பேரிடரைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குப் பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை. ஆனால், அந்தப் பேரிடர்க் காலம் நீண்ட காலத்துக்கு நீடிக்கும்போது, அதுபோன்ற சிக்கல்கள் எதிர்காலத்தில் மீண்டுமொரு முறை ஏற்பட்டு விடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை, அதேநேரத்தில் இன்னொருபுறம் எடுத்தாக வேண்டியது அவசியம். இல்லையேல், இன்று இவ்வளவு போராட்டங்களைக் கடந்து நாம் கட்டுக்குள் கொண்டுவரும் தொற்றுப் பரவல் நிரந்தரமானதாக இருக்காது என்ற எச்சரிக்கையும் பன்னாட்டு ஆராய்ச்சியாளர்களால் முன்வைக்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு