Published:Updated:

``இதுதான் முடிவு. எந்த மாற்றமும் கிடையாது!" ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து பிரகாஷ் ஜவடேகர் 

ஹைட்ரோகார்பன்
ஹைட்ரோகார்பன்

இந்த மாற்றம் என்ன, என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்துக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். அதை ஒரு சிறிய உதாரணத்தோடு தொடங்குவோம்.

கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி, ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில்,

"காவிரி டெல்டா பகுதி சூழலியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, எளிதில் பாதிக்கக்கூடிய பகுதி. சட்டப்படி, அதற்கு இதுவரை இருந்த நிலையே இனியும் நீடிக்க வேண்டும். சூழலியல் தாக்க மதிப்பீடு செய்வதற்குத் தேவையான சட்ட திருத்தங்களை உடனடியாகச் செய்ய வேண்டும். நிலம் மற்றும் கடலுக்குள் செய்யக்கூடிய எண்ணெய் மற்றும் வாயு உற்பத்திக்காக வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் அதற்குரிய பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது போன்றவற்றுக்கு 2006-ம் ஆண்டு சட்டப்படி முதலுரிமை வழங்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் நடக்கும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கிணறு திட்டத்தை, A வகைப்பாட்டுக்குள்ளேயே முன்னர்போல் வைக்க வேண்டும்" என்று கேட்டிருந்தார்.
காவிரி டெல்டா
காவிரி டெல்டா

தமிழக முதல்வரின் இந்தக் கடிதத்துக்கு மத்தியிலிருந்து வந்த பதிலைப் பார்ப்பதற்கு முன்னால், இந்த வகைப்பாடு மாற்றம் என்ன, அதனால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்துக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். அதை ஒரு சிறிய உதாரணத்தோடு தொடங்குவோம்.

உங்களுக்கென்று ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில், நீங்கள் உங்களால் இயன்ற அளவுக்கு விவசாயம் செய்து வருகிறீர்கள். அதன் மூலம்தான், உங்களுடைய, உங்கள் குடும்பத்தினருடைய வாழ்வாதாரமும் வரலாறும் பொதிந்து கிடக்கிறது. திடீரென்று ஒருநாள், அந்த நிலத்துக்கு அடியில் நிறைய தங்கம் இருக்கலாம் எனத் தகவல் கிடைக்கிறது. அதைக் கண்டுபிடிக்க ஒரு தனியார் நிறுவனம், உங்கள் நிலத்தை விலைக்கு வாங்கப்பார்க்கிறது. அதை விலைக்குக் கொடுத்துவிட்டால் உங்கள் வாழ்வே சிதைந்துவிடும். அந்த நிலத்தைத் தோண்டி, தங்கம் வெட்டியெடுக்கச் சுரங்கம் அமைத்துவிட்டால் மீண்டும் விவசாயம் செய்வதைக் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது. அதனால் அதை நீங்கள் மறுக்கிறீர்கள்.

ஓ.என்.ஜி.சி
ஓ.என்.ஜி.சி

உங்களுடைய நிலத்தை, உங்கள் அனுமதியின்றி அபகரித்தாவது தங்கத்தை எடுத்துப் பொருளாதார ஆதாயம் பெற அந்தத் தனியார் நிறுவனம் முயல்கிறது. அரசும் அதன் பக்கமே நிற்கிறது. ஆனால், சட்டம் உங்கள் நிலத்துக்கான உரிமையை உங்களிடமே கொடுக்கிறது. அதனால், நிறுவனமோ அரசோ யாராலுமே உங்களிடமிருந்து நிலத்தைப் பிடுங்க முடியவில்லை. உடனடியாக அரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. 'தங்கம் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள, அந்த நிலத்தில் ஆய்வுக்குழி வெட்டிப் பரிசோதிக்கப் பெரியளவில் அனுமதி வாங்க வேண்டியதில்லை, நில உரிமையாளருடைய கருத்துக்கு இங்கு இடமில்லை' என்று மாற்றுகிறது.

இப்போது அந்தத் தனியார் நிறுவனம் அங்கு அரசு திருத்திய சட்டத்தை வைத்து பரிசோதனை வேலைகளைத் தொடங்குகிறது. அங்கு தங்கம் இருப்பது உறுதியான பின், பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் அரசின் உதவியோடு அந்நிறுவனம் தன் விருப்பம்போல் அந்த நிலத்தைப் பிடுங்கி, தங்கம் எடுத்து லாபத்தில் கொழிக்கும். அடிப்படை வேலைகளில் மறுத்துப் பேசும் உரிமையை இழந்த நில உரிமையாளர் தன் தொழிலை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து அரசு கொடுத்த சொற்ப நஷ்ட ஈட்டைப் பெற்றுக்கொண்டு சொந்த மண்ணிலேயே அகதியாக வாழத் தொடங்குவார்.

இப்போது, இந்த உதாரணத்தை உண்மை நிலையோடு பொருத்திப் பார்ப்போம். கதையில் தங்கம் எடுக்க முயலும் நிறுவனம்தான், நிஜத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க முயலும் வேதாந்தா, ஓ.என்.ஜி.சி போன்றவை. நிலத்தைக் கொடுக்க மறுத்தவர்கள்தான், தஞ்சாவூர், புதுச்சேரி பகுதி மக்கள். நிலம் மக்களின் சொத்து. அதைப் பாதுகாப்பது மட்டுமே அரசாங்கத்தின் கடமை. அதனால்தான், நிலம் சம்பந்தப்பட்டவரை சட்டமே மக்களுடைய கருத்துகளைக் கேட்காமல் எந்தப் பெரிய முடிவையும் முதலீட்டையும் முன்னெடுக்கக் கூடாது என்று சொல்கின்றது. இப்போது அதையே உடைத்து, மக்கள் கடுமையாக எதிர்க்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அத்தகைய வசதியைச் செய்துகொடுத்துள்ளது மத்திய அரசாங்கம்.

மக்கள் போராட்டம்
மக்கள் போராட்டம்

சுற்றுச்சூழல் சட்டப்படி, A என்ற வகைப்பாட்டின் கீழ் வரும் திட்டங்களுக்கு சூழலியல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும். அதோடு, பொதுமக்களிடம் அதுகுறித்துக் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். நீண்டகாலமாக, மக்கள் எதிர்த்துக்கொண்டிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டமும் இந்த வகைப்பாட்டின் கீழ்தான் இருந்தது. அதற்கான முதல்கட்ட ஆய்வுக்கிணறு அமைக்கும் பணிகளை B2 என்ற வகைப்பாட்டுக்கு மத்திய அரசு மாற்றியுள்ளது. இந்த வகைப்பாட்டின்கீழ் வருகின்ற திட்டங்களுக்குச் சூழலியல் தாக்க மதிப்பீடு செய்யவோ, பொதுமக்களிடம் கருத்து கேட்கவோ வேண்டியதில்லை.

மக்கள் எதிர்ப்பு அதிகமிருப்பதால், வேதாந்தா உட்பட காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்கவுள்ள நிறுவனங்கள், இந்தக் கோரிக்கையை வைத்ததன் அடிப்படையில் இப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 16-ம் தேதி வெளியான உத்தரவுப்படி, 2006-ம் ஆண்டின் சட்டம் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தித் திட்டங்களை இந்த வகைப்பாட்டுக்கு மாற்றியுள்ளது. இதன்படி, இனி ஓ.என்.ஜி.சி, வேதாந்தா போன்ற நிறுவனங்கள் எந்தத் தடையுமின்றி ஆய்வுக்கிணறு அமைக்கும் தங்கள் வேலையைத் தொடங்கலாம். இறுதியாக, உதாரணத்தில் வருவதுபோல் அடுத்தகட்ட வேலைகளையும் அரசின் உதவியோடு தொடங்கிவிடும் நிறுவனங்கள் உதாரணத்தில் குறிப்பிட்டதுபோல் மக்களைச் சொந்த மண்ணிலேயே அகதி முகாமும் இதனால் ஏற்பட்டுள்ளது.

1986-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டப்படி, ஏதேனும் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டுமென்றால், 30 நாள்கள் மக்கள் கருத்துக்காகப் பொறுத்திருக்க வேண்டும்.

இதற்கு எதிராக வலுத்துக்கொண்டிருந்த போராட்டங்களுக்குப் பிறகு தமிழக முதல்வர், மேற்கூறிய கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். அதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தற்போது பதில் கூறியுள்ளார். அதில்,

"எங்கள் கொள்கை முடிவுகளைப் பொதுவெளியில் பகிரங்கமாகவும் மிகத் தெளிவாகவும் கூறிவிட்டோம். இதில், மறு பரிசீலனை செய்வதற்கு இடமே இல்லை" என்று வெளியிட்டுள்ள கருத்து தமிழக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திருத்தத்தைப் பொறுத்தவரை மாநில அரசாங்கத்திடமிருந்து வந்த கடுமையான எதிர்ப்பையும் மத்திய அரசு பொருட்படுத்தவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது.

1986-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டப்படி, ஏதேனும் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டுமென்றால், அதற்கு முன்னரே என்னென்ன திருத்தங்கள் வரப்போகின்றன என்பதை வெளியிட்டு, 30 நாள்கள் மக்கள் கருத்துக்காகப் பொறுத்திருக்க வேண்டும். ஆனால், சுற்றுச்சூழல் அமைச்சகம் அந்த விதியை மீறி மக்கள் கருத்துகளைக் கேட்காமலே இதைக் கொண்டுவந்துள்ளது. இதேபோலத்தான், சூழலியல் தாக்க மதிப்பீடு செய்வது குறித்த விதிகளிலும் கடலோர பாதுகாப்பு மண்டலங்கள் குறித்து விதிமுறைகளிலும் செய்தார்கள். இப்போதும் அதையே செய்துள்ளார்கள். இதன்மூலம், இந்திய ஜனநாயகத்தின் அடையாளமான மக்கள் முடிவெடுக்கும் அதிகாரம் தொடர்ந்து பிடுங்கப்பட்டுக் கொண்டிருப்பதாக மக்களும் சூழலியல் ஆர்வலர்களும் அஞ்சுகின்றனர்.

தமிழகத்தைச் சூழும் சூழலியல் பிரச்னைகள்
தமிழகத்தைச் சூழும் சூழலியல் பிரச்னைகள்

இப்படியொரு திருத்தத்தைச் செய்துள்ளது, பன்னாட்டு முதலாளிகளுக்காகவும் லாபத்தில் கொழிக்கும் பெருமுதலைகளுக்காகவும்தான் என்பது தெளிவாகத் தெரிகின்ற சூழலில், மாநில அரசாங்கத்தின் கோரிக்கைகளையும் பரிசீலிக்காமல் மத்திய அரசு புறந்தள்ளியுள்ளது. பெருநிறுவனங்களால், பெருநிறுவனங்களுக்காக இயங்கும் அரசு என்று ஏற்கெனவே இப்போதைய மோடி அரசின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதை உண்மையாக்கும் விதத்தில்தான் இந்த அரசின் இப்போதைய நடவடிக்கையும் அமைந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு