ஆப்கானிஸ்தான் மீண்டும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தாலிபன் கைகளுக்கே சென்றுள்ளது. உலக நாடுகள் அனைத்துமே காபுல் நகரத்தைக் கைப்பற்றியுள்ள தாலிபன்களின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்று உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த மாற்றத்துக்கு முன்பிருந்தே ஆப்கானிஸ்தான், வறட்சி, கோவிட்-19, புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் என்று மூன்று முக்கியப் பிரச்னைகளைச் சந்தித்துக்கொண்டிருந்தது. அந்தப் பிரச்னைகளிலிருந்து அந்நாட்டு மக்கள் எப்படி விடுபடப் போகிறார்கள் என்ற கேள்வி தாலிபன்களின் கைப்பற்றலுக்கு நடுவே மூழ்கிப்போய்விட்டது.

இப்போது தஜிகிஸ்தானுக்குத் தப்பிச் சென்ற அதிபர் அஷ்ரஃப் கானி, கடந்த ஜூன் 22-ம் தேதியன்று ஆப்கானிஸ்தான் வறட்சியில் தவித்துக்கொண்டிருப்பதாக அறிவித்தார். நாட்டு மக்கள் வறட்சியின் பிடியில் சிக்கி, பசியால் வாடிக்கொண்டிருந்தார்கள். அதுபோக, கோவிட்-19 தொற்றுப் பேரிடரும் அவர்களைப் பீடித்திருந்தது. ரெட் கிராஸின் சர்வதேச கூட்டமைப்பு, ஆப்கனின் 30 சதவிகித நிலப்பகுதி அதிதீவிர வறட்சியையும் 50 சதவிகித நிலப்பகுதி தீவிர வறட்சியையும் 20 சதவிகித நிலப்பகுதியில் வறட்சியையும் எதிர்கொள்வதாகக் கடந்த 4-ம் தேதி தெரிவித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனால் ஆப்கனின் கோதுமை உற்பத்தி 20 லட்சம் டன் குறைந்துவிட்டது. 30 லட்சம் கால்நடைகள் பசியால் உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்று இப்போது கவிழ்க்கப்பட்டுள்ள அரசு கவிழ்க்கப்படுவதற்கு முன்னர் அறிவித்திருந்தது. இந்த வறட்சியால், ஏற்கெனவே நாடு முழுக்க உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஆரோக்கியக் குறைபாடுகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஏப்ரல் 2020-ம் ஆண்டு அமெரிக்க அரசின் ஓர் அறிக்கை, ``ஆப்கானில் 3 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வருகிறார்க. 1.10 கோடி ஆப்கானியர்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கூடுதலாக, 33.5 லட்சம் குழந்தைகள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கு ஆளாகியுள்ளார்கள்" என்று குறிப்பிட்டது.

வறட்சி உணவுத் தட்டுப்பாட்டையும் ஊட்டச்சத்து குறைபாட்டையும் மட்டும் அதிகரிக்கவில்லை. ஒரு வீட்டுக்கான நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வது, சமையல், பயிர்களைப் பராமரிப்பது அனைத்தையும் பெண்களே மேற்கொள்கிறார்கள். அதற்குத் தேவையான தண்ணீரைத் தேடி பல மைல்களுக்கு அவர்கள் நடக்க வேண்டியுள்ளது. இதனால், பல பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது நிறுத்தப்படுகிறது. பாமியான் என்ற பகுதியிலுள்ள பெண் குழந்தைகளுக்கான பள்ளிகளில் ஐந்தில் ஒரு குழந்தை என்ற விகிதத்தில் அவர்களுடய குடும்பங்களால் பள்ளிக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. மழை பெய்தபோதும்கூட, அந்த மக்களின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. மலைச் சரிவுகளில் இருந்த மரங்களையும் அழித்துவிட்டதால், மண் நீரை உறிஞ்சும் திறனை இழந்து, முற்றிலுமாக அடித்துச் செல்லப்படுகிறது.
2001-ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா 744.9 பில்லியன் டாலர்களை ஆப்கன் போருக்காகச் செலவழித்துள்ளது. கூடுதலாக சர்வதேச அளவில் இன்னும் பல மில்லியன்கள் ஆப்கானுக்குக் கிடைத்தன. ஆனால், அவையனைத்துமே ராணுவ வீரர்களுக்கான பயிற்சி, வெடிகுண்டுகள், வெளிநாட்டுப் படைகளுக்கான செலவு ஆகியவற்றுக்கே அதிகமாகச் செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த பட்ஜெட்டில் ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்காக, மறுகட்டுமானங்களுக்காக என்று செலவிடப்பட்டது 16 சதவிகிதம் மட்டும்தான். ராணுவப் பாதுகாப்பு, போதைப்பொருள் உற்பத்தியைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுகே பெரும்பான்மை நிதி செலவிடப்பட்டது. இதுபோக மிச்சமிருக்கும் மிகக் குறைந்த நிதி மட்டுமே, காலநிலை மாற்றத்துக்கு ஆப்கான் மக்கள் தகவமைத்துக்கொள்ள, இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்க போன்றவற்றுக்காக ஒதுக்கப்பட்டது.

அந்த நாட்டின் வளர்ச்சிக் கட்டமைப்பு சரியாக இல்லை. அவர்கள் நீண்டகால வளர்ச்சியை அடைவதில் இருக்கும் சிக்கல்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. உடனடித் தீர்வுகளின் மீது மட்டுமே அவர்களின் கவனம் இருந்தது.
பாதுகாப்பின்மை, ஊழல், நிதிப் பற்றாக்குறை ஆகிய அனைத்தையும் தாண்டி, சில நிதியுதவிகளோடு அந்த மக்கள் காலநிலை மாற்றப் பாதிப்புகளுக்கு எதிராகக் கடந்த சில ஆண்டுகளில் செயல்படத் தொடங்கினார்கள். பெண்கள் தங்கள் விவசாய நிலங்களில் வறட்சியான நிலத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத பாப்பி செடிகளை வளர்ப்பதைத் தவிர்த்து, வறட்சியைத் தாக்குப்பிடித்து வளரும் குங்குமப்பூ போன்ற பயிர்களைச் சாகுபடி செய்வதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். பாப்பி சாகுபடிதான் ஆப்கானிஸ்தானின் ஹெராயின் வர்த்தகதந்துக்கு மிகவும் முக்கியமானது. அதைத் தவிர்ப்பது, அவர்களுக்குப் பல ஆபத்துகளைக் கொண்டுவரலாம் என்று தெரிந்தும் தைரியமாகக் களமிறங்கினார்கள்.
சில வெளிநாட்டு நிதியுதவிகளோடு, இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே எச்சரிக்கும் வகையிலான கட்டமைப்புகளை ஒரு சில இடங்களில் உருவாக்கினார்கள். கிணறுகள் தோண்டப்பட்டன. அங்கு நிலவிய மோசமான அரசியல், சமூக சூழலையும் தாண்டிய, காலநிலை மாற்றம் என்ற மற்றுமொரு பிரச்னை அவர்களுக்கு இன்னும் பல இழப்புகளைக் கொண்டு வர இருப்பதை உணர்ந்து, அதுகுறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த முயன்றனர். ஆனால், இந்த முயற்சிகளைத் தாண்டிய ஆபத்தான சமூக சூழல் அவர்களுக்கு மேன்மேலும் பிரச்னைகளையே கொண்டுவந்தன. அதன்விளைவாக, இந்த ஆண்டும் வறட்சி தீவிரமடைந்தது. கோடிக்கணக்கான மக்கள் தாலிபன்களுடனான போரால் ஏற்படும் இழப்புகளோடு, வறட்சி பேரிடரின் இழப்புகளை எதிர்கொண்டு வந்தார்கள்.

காலநிலை மாற்றம், வறட்சி, இயற்கைப் பேரிடர் ஆகியவற்றைப் போலவே மற்றுமொரு பேரிடரான கோவிட்-19 நோய்த்தொற்றுப் பரவலும் அந்த மக்களிடையே இழப்புளுக்குக் காரணமாகின.
இவைபோக, இன்னொரு முக்கியமான கேள்வியும் இருக்கிறது. அங்கு புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் என்னவாகும்?
40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கன் மண்ணில் கண்ணி வெடிகளும் இன்னும் பல வெடிகளும் புதைக்கப்பட்டன. இவை, பள்ளத்தாக்கு, வேளாண் நிலம், நீர்நிலைகள் என்று பல்வேறு வகையான நிலப்பகுதிகளில் இருக்கின்றன. மண்ணில் எங்கு கண்ணிவெடி இருக்கிறதோ என்ற அச்சத்தோடு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும் கொடுமையான வாழ்வை அம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் சவாலாக இது நிலவிவருகிறது. ஐக்கிய நாடுகல் சபையின் கண்ணிவெடி செயல்திட்டத்தின்படி, ஆப்கன் குடிமக்களில் 41,085 பேர் கண்ணிவெடிகளில் சிக்கியும் பல ஆண்டுகளாக வெடிக்காமல் இருந்து திடீரென எதிர்பாராத நேரத்தில் வெடித்த வெடிகுண்டுகளில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர்.
இதுபோல் போரின் எச்சங்களுக்கு 2020-ம் ஆண்டில் பலியானவர்களில் மட்டும் 72 சதவிகித குழந்தைகள். கடந்த சில ஆண்டுகளில் சுமார் 3,300 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதிகளில் இருந்த கண்ணிவெடிகளை ஐக்கிய நாடுகள் கண்ணிவெடி செயல்திட்டக் குழு அகற்றிவிட்டது. ஆனால், என்ன செய்தாலும் புதைக்கப்படும் கண்ணிவெடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருந்தது. இதுவரை கண்ணிவெடி ஆபத்துள்ள சுமார் 3,983 பகுதிகள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அந்த நிலத்தில் அவை எங்கு புதைக்கப்பட்டுள்ளன என்பதற்கு எந்த அடையாளமும் வைக்கப்படவில்லை. இது அங்கு வாழும் 1,528 சமூகக் குழுக்களுக்கு தினசரி ஆபத்தாக விளங்குகிறது. ஆப்கன் மண்ணில் அந்த மக்களைக் காவு வாங்க அவை காத்திருக்கின்றன.

மேலும், இந்த ஆபத்து இருப்பதால், புதிய சாலைகளைக் கட்டமைப்பது, விமான நிலையம் அமைப்பது, மின் இணைப்பு கொடுப்பது, இடம் பெயர் மக்கள் மீண்டும் குடியேறுவது என்று அனைத்துவிதமான வளர்ச்சித் திட்டங்களுமே தடைப்பட்டுள்ளது. இப்போது ஆப்கானை கைப்பற்றியுள்ள தாலிபன்கள், இனிவரும் நாள்களில் கண்ணிவெடிகளை அப்புறப்படுத்தி, ஆபத்தைச் சரிசெய்ய ஒப்புக்கொண்டாலும்கூட, அதை முழுமையாகச் செய்துமுடிக்க, அவர்களுக்கு உதவி தேவைப்படும். கண்ணிவெடி வைப்பது எளிதான காரியம். ஆனால், அதை ஆபத்தின்றி அகற்றுவது அவ்வளவு எளிதல்ல. அதைச் செய்வதற்கான வளம் ஆப்கனிடம் இல்லை. சர்வதேச உதவி தேவைப்படும்.
ஆப்கானிஸ்தான் மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் அனைத்தையும் சரிகட்ட, நீண்டகால நிலையான வளர்ச்சித் திட்டங்களே தீர்வாக இருக்கும். அவர்களுடைய சமூக, பொருளாதார, சூழலியல் பாதுகாப்பை அதுவே உறுதி செய்யும். ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக நிலையற்ற வாழ்வையே வாழ்ந்து வரும் அவர்களுக்கு இந்த நிலைத்தன்மையை எப்படிக் கொண்டுவருவது என்ற கேள்வி, கேள்வியாகவே இருப்பதுதான் வேதனை.