Published:Updated:

கார்ப்பரேட் மர வணிகமா... காவிரி மீட்டெடுப்பா... ஈஷாவின் `காவேரி கூக்குரல்' சிக்கல்கள்!

Cauvery
Cauvery

காய்ந்துபோன காவிரிப் பரப்பை மீட்டெடுக்கும் செயல் என்கிறது ஈஷா. இதுவொரு வியாபாரம்தானே தவிர இதற்கும் காவிரி நதி மீட்புக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது என்கின்றனர் சூழலியலாளர்கள். `காவேரி கூக்குரல்' பஞ்சாயத்து என்ன?

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்த காவிரி ஆற்றின் பரப்பளவில் இன்று 39 சதவிகிதம் வற்றிவிட்டது. நதியின் வறண்ட மணற்படுகைகளைத்தான் ஆண்டின் பல மாதங்களுக்கு அந்த மக்கள் பார்க்கின்றனர். காவிரி ஆற்றின் வடிநிலத்திலிருந்த 87 சதவிகித மரப்போர்வையை நாம் இழந்து நிற்கிறோம். காவிரிப் பிரச்னை அரசியல் ரீதியாக மட்டுமன்றி சூழலியல் ரீதியாகவும் பல சிக்கலான முடிச்சுகளுக்குள் சிக்கியுள்ளது. இந்நிலையில் காவேரி கூக்குரல் என்ற முன்னெடுப்பின் வழியாகக் காவிரி நதியை மீட்டெடுக்கப் போவதாக ஈஷா யோகா அமைப்பு சொல்கிறது. அதைப்பற்றித் தெரிந்துகொள்ள அவர்களைத் தொடர்புகொண்டோம்.

Cauvery River
Cauvery River

``மலைக் காடுகளிலிருந்துதான் காவிரி உற்பத்தியாகின்றது. வரலாறுகளில் எங்கெல்லாம் இது குறிப்பிடப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் இவை காடுகள் நிறைந்த பகுதியாகவே கூறப்பட்டுள்ளன. அதன்மூலம் அங்கு வாழ்ந்த உயிரினங்கள் வழியாக மண்ணுக்கு ஊட்டச்சத்துகளும் உயிர்மச்சத்துகளும் கிடைத்த வண்ணம் இருந்தன. மண் ஈரப்பதத்தை உறிஞ்சி நதியிடம் சேர்ப்பதற்கு அதன் உயிர்மப்பொருள்களே வழிசெய்தன. ஆனால், காலப்போக்கில் காவிரியைச் சார்ந்து வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது அந்த நிலத்தை அப்படியே இருக்கவிடவில்லை.

இன்றைய நிலையில், காடுகளிலிருந்து பிறக்கும் காவிரியின் மண்பரப்பில் ஊட்டச்சத்து மிகக் குறைவாகவே உள்ளது. மரப்போர்வை குறையும்போது மண்ணிற்கு ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போகின்றன. குறைந்துவரும் நீரோட்டமும் வலிமையிழக்கும் மண்வளமும் விளைச்சலைக் குறைக்கிறது. இதனால் அதைச் சார்ந்திருக்கும் விவசாயிகளுக்குப் பேரிழப்பு ஏற்படுகிறது.. அது அவர்களை கடனாளியாக்குகின்றது. இதற்கு ஒரே தீர்வு வேளாண் காடுகளை வளர்ப்பதுதான்" என்கிறார் காவேரி கூக்குரல் இயக்கத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த சுயக்னா. இந்த முன்னெடுப்பு குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த ஆனந்திடம் மேலும் விரிவாகக் கேட்டோம்,

மிகச் சாதாரணமான மரங்களிலிருந்து பொருளாதார ரீதியாக அதிக பயனளிக்கக்கூடிய மரங்கள்வரை நாங்கள் விவசாயிகளுக்குத் தருகிறோம். நம் தட்பவெப்பநிலைக்குத் தகுந்தவாறுதான் மரங்களை நடுகிறோம். நாங்கள் நடப்போவதில்லை, ஈஷாவின் நர்சரிகள் மூலமாக விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை விற்று வளர்க்கச் சொல்கிறோம்.
சுயக்னா, காவேரி கூக்குரல் குழு

ஒவ்வொரு நர்சரியிலும் 70 முதல் 80 வகையான மரங்களை வைத்துள்ளோம். அதை யார் வேண்டுமானாலும் எடுத்து நட்டு வளர்க்கலாம். அதில் சராசரியாக 25 வகைகள் பண மர வகைகளில் வருகின்றன. அவற்றில் விவசாயிகளுக்குப் பயனளிக்கக்கூடிய மரங்களை அவர்களுக்கு வழங்குகிறோம். அதோடு, அவற்றை எப்படி நட்டு, பராமரிக்க வேண்டுமென்ற விழிப்புணர்வையும் தருகிறோம். ஆனால், அடிப்படையில் அவர்களுக்கு என்ன வேண்டுமென்பதை அவர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

இப்படிப்பட்ட பண மரங்களை வளர்ப்பதன் மூலமாக விவசாயிகள் தம் குழந்தைகளின் திருமண மற்றும் கல்விச் செலவுகளுக்கான தொகையைச் சம்பாதித்துக் கொள்ளமுடியும். அதன்முலம் கடன் வாங்காமல் தற்சார்பாகவே விவசாயிகளை இருக்க வைப்பதே இதன் நோக்கம்" என்றார்.

காவேரி கூக்குரல் என்ற திட்டத்தின்கீழ் வளர்க்கப்படும் மரங்களின் பட்டியலைக் கேட்டுப் பெற்றிருந்தோம். அந்தப் பட்டியலிலுள்ள மரங்கள் குறித்துத் தாவரவியல் ஆய்வாளர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டபோது, ``பெரும்பாலானவை பொருளாதாரப் பயனளிக்கக்கூடியவை. அவற்றை வளர்ப்பதால், வருமானம் பார்க்க முடியும். ஆனால், அவற்றால் இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கமாகச் சொல்லப்பட்ட `காவிரி நதியை மீட்டெடுத்தல்' நடக்காது. ஏனென்றால், அவர்கள் தரக்கூடிய மரங்கள் அந்த மண்ணுக்குப் பயனளிப்பவையல்ல. உதாரணமாக, மகாகனி என்ற மரம் தரப்படுகிறது. அது இறக்கை விதைகளை உடைய வெட்டு மர வகையைச் சேர்ந்தது. இது ஓர் அயல் தாவரம். அந்த மண்ணுக்கானது கிடையாது. காற்றில் பறந்து பரவக்கூடியது.

Isha's Cauvery Calling
Isha's Cauvery Calling

அதேபோல், ஜகரன்டா (Jacaranda) என்ற வகை மரம் ஜாவா தீவைச் சேர்ந்தது. டேபியா ரோசியா என்ற மரமும் இறக்கை விதைகளையுடையது. அதைத் தேனீக்கள் அண்டாது. நிழல்கூடத் தராது. ஆப்பிரிக்க துலிப் மரம் மிக விரைவாகப் பரவக்கூடியது. அதைவிட அதிகமாகப் பரவக்கூடியது சில்வர் வுட் என்ற மரம். இவை பரவினால், அந்தப் பகுதி முழுவதுமே அவை மட்டும்தான் இருக்கும். நாட்டு மரங்கள் குறைந்துவிடும். நாட்டு மரங்கள்தான் அந்த மண்ணுக்கு ஊட்டச்சத்துகளையும் உயிர்மச் சத்துகளையும் வழங்க வல்லவை. இதுபோன்ற அயல்நாட்டு மரங்களல்ல உள்நாட்டு இயல் தாவரங்களை வளர்ப்பது, மண்ணுக்கும் காவிரி நதியை மீட்டெடுக்கவும் பெரும் பயனளிக்கும். அதன்மூலம் நிலம் சீரடைவதால், அப்பகுதி விவசாயிகளின் விளைச்சலும் பெருகும் காவிரியை மீட்டெடுப்பதிலும் அவை பங்கு வகிக்கும். ஆனால், இதுபோன்ற அயல் தாவரங்களை நடுவதால் இயல் மரங்கள் பெரிதும் பாதிக்கப்படும்" என்று கூறினார்.

இதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள இயற்கையியலாளர் பாரதி ராஜாவை அணுகியபோது, ``வேளாண் காடு என்று சொல்கிறார்கள். அவர்கள் நடுவதில் பாதிக்கும் மேலானவை பணப்பயிர்கள், அழகு மரங்கள். அதிலும் அதிகமானவை அயல்நாட்டைச் சேர்ந்தவை. விவசாய நிலத்தில் பாதாம் மரத்தை வளர்க்கமுடியாது. அதிகமாக இலைகளை உதிர்க்கும். அந்த மரத்தின் கீழ் புற்கள்கூட முளைக்காது. இந்த மாதிரியான மரங்களின் மூலம் லாபம் பார்க்கலாம். ஆனால், அதற்கும் நதியை மீட்டெடுப்பதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. இவர்கள் ஊக்கப்படுத்தும் கொய்யா, மாதுளம் பழம் போன்ற மரங்கள் முழுக்க முழுக்கப் பண்ணைப் பயிர்கள்.

இதைச் செய்தால் அங்கொரு பண்ணை உருவாகுமே தவிர காடு உருவாகாது. நதிக்கரையோரத்திலும் விவசாய நிலத்திலும் நடுவதற்கு நூற்றுக்கணக்கான காட்டு மரங்கள் உள்ளன. உதாரணமாக, பாதிரி, நறுவிழி, ஆடலி, சொக்களை, தேற்றான், இலுப்பை, அரச மரம், ஆல மரம், பொலவு, நீர்க்கடம்பு, நீர்க்கடப்பா போன்றவை.
பாரதி ராஜா, இயற்கையியலாளர்

மரங்களைத் தங்கள் நர்சரி மூலமாக விற்பனைதான் செய்கிறார்கள். இது மரக்கன்று விற்பனை. விற்பனையில் அழகு மற்றும் பழ மரங்களைத்தானே விற்பார்கள். இதுவொரு வியாபாரம்தானே தவிர இதற்கும் காவிரி நதி மீட்புக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது" என்று கூறினார்.

இது தொடர்பாக ஈஷா அமைப்பைச் சேர்ந்த சுயக்னாவிடம் கேட்டோம், ``எதிர்காலத்தில் தமிழ்நாடு முழுக்கத் தாலுகா வாரியாக நர்சரி அமைக்கும் திட்டம் உள்ளது. அதற்குப் பொதுமக்கள் முதல் அனைவரும் வருவார்கள் என்பதால் அனைத்து வகையான மரங்களையும் அந்தப் பட்டியலில் இணைத்துள்ளோம். ஆனால், வேளாண் காடுகள் திட்டத்தில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய மரங்களைத்தான் விற்போம். அவர்களுக்குப் பொருளாதார நலன் தரக்கூடிய மற்றும் அந்த நிலத்திற்கு உரிய இயல்தாவரங்களையும்தான் விற்கப்போகிறோம். விரைவில் பரவக்கூடிய சில்வர் மரத்தைத் தமிழகத்தில் இதுவரை நாங்கள் ஊக்கப்படுத்தியதே இல்லை.

Green Cover
Green Cover

இந்த மரங்கள் அனைத்தையுமே கோயம்புத்தூரில் வேளாண் காடுகள் தொடர்பான கல்லூரியின் பேராசிரியரிடமும் வன மரங்கள் உற்பத்தி மையத்தின் தலைவரிடமும் ஆலோசனை பெற்றுத்தான் இதில் சேர்த்துள்ளோம். அதோடு, நதியை மீட்டெடுப்பதற்காக வேங்கை, மஞ்சக் கடம்பு போன்ற மரங்களையும்தான் கொடுக்கிறோம். இப்போது 90 சதவிகித வெட்டுமரங்கள் வெளிநாடுகளிலிருந்துதான் வருகின்றன. அதற்கான தேவை அதிகமாகவே இருக்கிறது. இந்த முன்னெடுப்பின் மூலம் வெட்டு மரங்களைப் பயன்படுத்திக்கொள்ள இங்கு எதிர்காலத்தில் மரத் தொழிற்சாலைகள் வரும், அதன்மூலம் மக்கள் பயனடைவார்கள். வேளாண் காடுகள் திட்டத்தின்கீழ் இப்போதே மரம், பிளைவுட், பேப்பர் என்று சுமார் முப்பது நிறுவனங்களோடு கைகோத்துள்ளோம். அதனால், விவசாயிகள் வளர்க்கும் மரங்களை விற்பதிலும் சிக்கல் இருக்காது." என்றார்.

" காவிரி நதியை மீட்டெடுக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். ஆனால், அதற்கான செயல்திட்டம் ஒன்றும் அவ்வளவு வலிமையாக அவர்களிடம் இல்லையே. மரங்களை விவசாயிகளுக்கு விற்று மரக்கன்று வியாபாரம் செய்கிறார்கள். பேரணி நடத்துகிறார்கள். மிஸ்டு கால் கொடுக்கச் சொல்கிறார்கள். இவையெல்லாம் மேம்போக்கான செயல்பாடுகளே. காவிரி மீட்டெடுப்பு என்பது முதலில் சூழலியல் பிரச்னை. அதற்கு அடுத்ததாகத்தான் அதில் சமூக-அரசியல் சார்ந்த பிரச்னைகள் வருகின்றன. அந்த நதி தொடங்கும் குடகு முதலே இந்தச் சிக்கல் தொடங்கிவிடுகிறது. காபித் தோட்டங்களை அதிகப்படுத்தியதிலிருந்து ஆக்கிரமிப்புகள் வரை அங்குப் பிரச்னைகள் நீள்கின்றன. உற்பத்தி இடத்திலேயே ஒரு சூழலியல் சிக்கல் உள்ளது. கர்நாடகாவிலும் சரி, தமிழகத்திலும் சரி காவிரியைச் சார்ந்திருக்கக்கூடிய நிலப்பரப்பின் அளவு அதிகரித்துவிட்டது. இவையல்லாமல் தொழிற்சாலைகள் மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றன. இறுதியாக அதன் வழித்தடங்களைப் பாதுகாப்பதிலேயே பல பிரச்னைகள் உள்ளன.

மத்திய அரசு வரை நேரடியான செல்வாக்குள்ள ஓர் அமைப்பு அது. வெறுமனே மரக்கன்று விற்பதோடு தங்கள் முன்னெடுப்பைச் சுருக்கிக் கொள்ளாமல் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு கொண்டுவருமாறு மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கலாமே!
வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

ஒரு நீண்டகாலத் திட்டத்தின் மூலமாகத்தான் இவற்றுக்கெல்லாம் தீர்வு கிடைக்கும். இரண்டு மாநில விவசாயிகளையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட குழு புதுப்பிக்கப்பட வேண்டும். அவர்களின் ஆலோசனையுடன் அந்தத் திட்டம் தீட்டப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இவற்றுக்கான முன்னெடுப்புகள்தான் நமக்கு வேண்டும். இவ்வளவு பிரச்னைகள் இருக்கையில் பண மரங்கள் நட்டுப் பொருளாதார லாபம் பார்ப்பதால் மட்டுமே காவிரி மீட்கப்பட்டுவிடாது" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

Vikatan

விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியில் பயன் கிடைக்கவேண்டியது அவசியமே. அந்தப் பயன்கள் அவர்களுக்கு நீண்டகாலம் நீடிக்க வேண்டுமெனில் அவர்களின் நிலத் தன்மையை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும். 1960-களில் தொடங்கிய பசுமைப் புரட்சியை நாம் கொண்டாடினோம். ஆனால், அதில் நீண்டகால நன்மைகள் இல்லையென்பதைக் காலம் கடந்து உணர்ந்து இன்று வருந்திக் கொண்டிருக்கிறோம். தமிழக விவசாய உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் காவிரிப் படுகையில் பண்ணை மரங்களை வளர்த்து அங்கு மரத் தொழிற்சாலைகளையும் மரம் சார்ந்த தொழில்களையும் கொண்டு வந்தால் அங்கு எப்படி விவசாயம் சீராக நடைபெறும்?

Farmers
Farmers

ஏற்கெனவே காவிரி விவசாயிகள் பல பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நிலையில் அங்கு இதுபோன்ற பண மரங்களை விற்று வளர்க்க ஊக்குவித்தால், அவர்களின் நிலையைப் பயன்படுத்தி மரம் சார்ந்த பல தொழிற்சாலைகள் அங்கு ஊடுருவ வாய்ப்புள்ளது என்பதையும் எச்சரிக்கை உணர்வோடு சிந்திக்க வேண்டியிருக்கிறது. மரங்களைப் பொருளாதார நோக்கோடு வளர்ப்பதை மிகப்பெரிய முன்னெடுப்பின் மூலம் ஊக்கப்படுத்துவதால், பலரும் அதில் ஈடுபட்டு லாபம் பார்க்க விரும்புவார்கள். விவசாயம் அங்கு சீரடையவும் செழிக்கவும் உரிய நடவடிக்கைகளைச் சூழலியல் பாதுகாப்பு உணர்வோடு எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு மரக்கன்று விற்பனை செய்வதைவிட அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் முக்கியப் பிரச்னைகளில் கவனம் செலுத்தி அதைத் தீர்த்து வைப்பதே மிகச் சரியான முன்னெடுப்பாக இருக்கும்" என்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.

பொருளாதார ரீதியாகப் பல சிக்கல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்கள் அதை உடனடியாகத் தீர்த்து வைக்கக்கூடிய வடிவங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்குப் போவது இயல்புதான். ஆனால், அத்தகைய வடிவங்கள் தற்காலிகத் தீர்வுகளை மட்டும் கொடுப்பதாகவே உள்ளன. அவர்களின் சிக்கல்களை நிரந்தரமாகக் களையக்கூடிய வடிவங்களாக இல்லை.

அவர்களின் நிலையைப் பயன்படுத்தி, மண்ணுக்குத் தொடர்பில்லாத பண மரங்களைப் பயிரிடும் பழக்கத்தை மரம் சார்ந்த தொழிற்சாலைகள் ஊக்குவித்துவிடக்கூடாது.
Vikatan

அப்படி அதிகரித்து, அதுவே இரண்டாவது பசுமைப் புரட்சிக்கும் வித்திட்டுவிடக் கூடாது. இந்த நிலமும் விவசாயிகளும் இன்னொரு பசுமைப் புரட்சியைத் தாங்கும் வலிமையோடு இன்று இல்லை.

அடுத்த கட்டுரைக்கு