Published:Updated:

``சுற்றுச்சூழல் கெடுவதால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளுமே!"-  பூவுலகு சுந்தரராஜன்

வங்காரி மாத்தாய் முதல் கிரெட்டா துன்பர்க் வரை பூமியின் மீதான தாக்குதல்களுக்கு எதிரான முதல் குரல் எப்போதும் பெண்கள் தரப்பிலிருந்தே ஒலித்துள்ளது. ஏன்?

உலகளவில் இயற்கை வளங்களைப் பெரும்பான்மையாகச் சார்ந்திருக்கின்ற மக்கள் தொகையின் மீதுதான் காலநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது. வறட்சி தொடங்கி நிலச்சரிவு வரை அதிகச் சேதங்களை அத்தகைய மக்கள்தான் சந்திக்கின்றனர். அதில், அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்கின்றன ஐக்கிய நாடுகள் அமைப்பினுடைய பெண்கள் பாதுகாப்புக் குழுவின் தரவுகள். இயற்கைப் பேரிடர்களின் போதும் சரி, அதற்குப் பிறகு குடும்பங்களை மீட்டுக்கொண்டுவருவதிலும் சரி, பெண்களின் பங்கே அதிகமாக உள்ளது. சர்வதேச அளவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களில் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. முடிவுகளை எடுப்பதில் அவர்களுக்கு முதலுரிமை வழங்கப்படுவதில்லை. உழைக்கும் வர்க்கத்தில் அவர்களுடைய பங்கு அதிகமாக இருந்தாலும்கூட, அவர்களுக்குச் சமத்துவம் இருப்பதில்லை.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் மட்டுமே பெண்களும் சிறுமிகளும் நீரைக் கொண்டுவருவதற்காக, ஆண்டுக்கு 40 பில்லியன் மணி நேரங்களைச் செலவு செய்கிறார்கள்.
சுந்தரராஜன், பூவுலகின் நண்பர்கள்

காலநிலை அவசத்தைச் சரிக்கட்டுவதில் பெண்களுடைய பங்கு மிக முக்கியமானது. அவர்களுக்கே அந்தந்த உள்ளூர்ச் சூழலியலின் முக்கியத்துவம் தெரியும். அந்த அறிவைப் பயன்படுத்திக் கொள்வதில், கொள்கை முடிவுகளைத் திட்டமிடுவதில் உலக நாடுகள் அனைத்துமே தோற்றுக்கொண்டிருக்கின்றன என்கின்றது ஐக்கிய நாடுகள் அமைப்பு. காலநிலை அவசரம் குறித்த திட்டங்கள், கொள்கைகளில் பெண்களின் தலைமை இன்றைய சூழலில் அதிகம் தேவைப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே சூழலியல் பாதுகாப்பில் பெண்களின் பங்கு அதிகமாக இருந்துவருகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெண்களுடைய பங்கு என்ன? காலநிலை அவசரம் குறித்துப் பேசுகையில், அவர்களுக்கு முதலுரிமை அளிக்கவேண்டிய தேவை என்ன? பெண்கள் இயற்கைப் பேரிடர்களால் சந்திக்கும் இன்னல்கள் என்னென்ன?

இவை குறித்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர் ராஜனிடம் பேசினோம்.

பெண்கள்
பெண்கள்
Europarl

``காலநிலை மாற்றத்தால் 2050 ஆம் ஆண்டிற்குள் 150 கோடிபேர் `காலநிலை அகதிகளாக' (climate refugees) இடம்பெயர இருக்கிறார்கள் என்கிறது ஆய்வு ஒன்று, அவற்றுள் 80% பேர் பெண்களும் குழந்தைகளுமே. தற்போது உலகத்தில் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழக்கூடிய 140 கோடி மக்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் சிறுமிகளும்தான். வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழக்கூடியவர்கள்தான் காலநிலை மாற்றத்தால் அதிகப் பாதிப்புகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள், சந்திக்கவும்போகிறார்கள். இயற்கைப் பேரிடர்க் காலங்களில் ஆண்களைவிடப் பெண்கள் ஐந்து மடங்கு அதிகமாக உயிரிழக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவ்வுலகத்தில் இருக்கக்கூடிய விவசாயத் தொழிலாளர்களில் 43% பெண்களே, ஆப்பிரிக்காவில் நடைபெறும் உணவு உற்பத்தியில் சுமார் 90 சதவிகிதத்தை உற்பத்தி செய்வது பெண் விவசாயிகளே. வரலாற்றுரீதியாகப் பெண்களின் மீது திணிக்கப்பட்ட குடும்பம் சார்ந்த வேலைப்பளுவை இன்னமும் அதிகரிக்கப்போகிறது காலநிலை மாற்றம்.

ஏற்கெனவே வன்முறைகளுக்கு அதிகமாக உள்ளாவது பெண்கள்தான். காலநிலை மாற்றம் இந்த மோதல்களை இன்னமும் அதிகரிக்கச் செய்யும். காலநிலை மாற்றத்தால் வளங்களுக்கான மோதல்கள் அதிகமாகும். தண்ணீர் கொண்டுவரப்போகும் பெண்கள் அதிக வன்முறைக்கு ஆளாவார்கள் என்கிறது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த `உலக ஒழுங்குகள் மற்றும் மாற்றங்கள்' குறித்து ஆய்வு செய்யும் குழு.

``சுற்றுச்சூழல் கெடுவதால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளுமே!"- 
பூவுலகு சுந்தரராஜன்

புகழ்பெற்ற `லண்டன் பொருளாதார நிறுவனம்' (london schoool of Economics) 2006-ம் ஆண்டில், உலகம் முழுவதிலும் ஏற்பட்ட பேரிடர்களை ஆய்வு செய்தது. கத்ரினா சூறாவளி முதல் ஆசிய கண்டதைத் தாக்கிய சுனாமி மற்றும் அதிவெப்ப அலைகள் என அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியக் கண்டங்களில் ஏற்பட்ட 141 பேரிடர்களை ஆய்வுசெய்து அதன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டது. எந்தெந்தச் சமூகங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான சமத்துவமின்மை அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் இயற்கைப் பேரிடர்களால் பெண்கள் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறது அந்த ஆய்வின் முடிவுகள். அதற்கு முக்கியக் காரணம் பெண்கள் அணியும் உடை. அவர்களின் உடைகள் வேகமாக ஓடித் தப்பிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்றும் வீட்டிலுள்ள குழந்தைகளைத் தேடிக் காப்பாற்றும் பொறுப்பு அவர்களையே சார்ந்து இருப்பதாலும் அவர்களால் பேரிடர்களிலிருந்து தப்பிக்க முடியாமல் போய்விடுகின்றது.

குடிநீர்ப் பற்றாக்குறையால், தங்கள் குடும்பத்திற்குத் தேவையான தண்ணீரைக் கொண்டுவருவதற்காக உலகம் முழுவதும் உள்ள பெண்களும் குழந்தைகளும் சேர்ந்து நாளொன்றிற்குச் சுமார் 140 கோடி மணிநேரங்களைச் செலவு செய்கிறார்கள். ஆப்பிரிக்கக் கண்டத்தில் மட்டும் நீரைக் கொண்டுவருவதற்காக ஒரு வருடத்திற்கு 40 பில்லியன் மணி நேரங்களைச் செலவு செய்கிறார்கள் பெண்களும் சிறுமிகளும். இத்தனை மணிநேரங்களை அவர்களால் கல்விக்கும் தங்கள் பொருளாதார மேம்பாட்டிற்கும் செலவு செய்யமுடியாமல் போகிறது. காலநிலை மாற்றம் தண்ணீருக்காகப் பெண்கள் இன்னும் அதிக தூரத்திற்கு அலைய வேண்டிய தேவைகளை ஏற்படுத்தும். அந்தக் காலகட்டத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாக அதிக வாய்ப்புகள் உள்ளன.

Climate protest
Climate protest

பேரிடர்களுக்குப் பின்னரான காலகட்டங்களில் பெண்கள் அதிக பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். பங்களாதேஷில் இயற்கைப் பேரிடருக்குப் பிறகான காலகட்டத்தில் நடைபெற்ற கணக்கெடுப்பில் 35 சதவிகிதப் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளார்கள்.

மேற்சொன்ன புள்ளிவிரங்கள் நமக்குப் பல உண்மைகளைத் தெரியப்படுத்துகின்றன. சூழல் சார்ந்த பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அதனால்தான் பெண்கள், சூழல் சார்ந்த போராட்டங்களில் அதிகளவில் கலந்துகொள்கிறார்கள். பெண்கள் முன்னெடுக்கும் சூழல் சார்ந்த போராட்டங்கள் அநேகம் வெற்றிபெற்றுள்ளன. உலகை உலுக்கிய புத்தகம் ``மௌன வசந்தம்", ரேச்சல் கார்ஸன் எழுதியது, அவர் நடத்திய போராட்டங்களின் மூலம் பூச்சிக்கொல்லிகளின் கேடுகளை உலகத்தின் முன்னர் எடுத்துவைத்தது. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ``வங்காரி மாத்தாய்" அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி ஆவார். அவர் ஆப்பிரிக்கக் காடுகளைக் காப்பாற்ற நடத்திய போராட்டங்களுக்காக அவ்விருது வழங்கப்பட்டது.

Climate Change
Climate Change
Pixabay

70-களின் தொடக்கத்தில் இந்தியாவில் ``டெஹ்ரி" அணைக்கு எதிராக ``சிப்கோ இயக்கத்தை" சேர்ந்த பெண்கள் மரங்களைத் தழுவி நடத்திய போராட்டம்தான் இந்தியாவின் முதல் சுற்றுச்சூழல் போராட்டம்.

அன்று போடப்பட்ட விதையின் வளர்ச்சிதான், இன்று விருட்சமாகி, தேசம் முழுவதும் சுற்றுச்சூழலைக் காக்கப் பெண்கள் திரண்டெழுந்து கொண்டிருக்கிறார்கள்.

தற்காலத்தில் நடந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள் முதல் கதிராமங்கலம் நெடுவாசல் வரை அதிகம் முன்னின்று போராடியது பெண்கள்தான். வங்காரி மாத்தாய் முதல் கிரெட்டா துன்பர்க் வரை பூமியின் மீதான தாக்குதல்களுக்கு எதிரான முதல் குரல் எப்போதும் பெண்களிடமிருந்தே ஒலித்துள்ளது" என்று கூறினார்.

வறட்சி
வறட்சி
Pixabay

பூமிக்கும் பெண்களுக்குமான தொடர்பு ஏன் அத்தனை முக்கியமானது? அதுகுறித்து கூடி உரையாட பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைக்கும் `பூவுலகும் பெண்களும்: உரையாடல்' என்ற நிகழ்வு வருகின்ற 8-ம் தேதி மாலை 6 மணியளவில் நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்வில் சூழலியல் போராட்டத்தில் பெண்களின் பங்கு என்ன என்பதில் தொடங்கி, பெண்கள் சாதித்த பல சூழலியல் சாதனைகள் வரை பலவும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு