Published:Updated:

பிரச்னையாகும் மக்கள் தொகை அதிகரிப்பு... அழியும் இயற்கை... எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

மக்கள் தொகை ( மாதிரி படம் )
News
மக்கள் தொகை ( மாதிரி படம் ) ( Unsplash )

தன்னைச் சுற்றி இந்தப் பூமியில் வாழ்கின்ற மற்ற அனைத்து உயிரினங்களுக்குமே உணவு மற்றும் வாழிடப் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்ற அளவுக்கு, மனித இனம் எண்ணிக்கையில் மிகவும் அதிகமாகிவிட்டது.

மக்கள் தொகைப் பெருக்கம். பூமியின் மிக முக்கியப் பிரச்னையாக உள்ளது. இப்போது `தி லேன்சட்' என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கை, எதிர்காலத்தில் மக்கள் தொகை அதிகரிக்காது. ஆனால், குறையுமென்று குறிப்பிடுகின்றது. மக்கள் தொகைப் பெருக்கம், எதிர்காலத்தில் அது வீழ்ச்சியடையும் என்பன போன்ற கூற்றுகளைப் பற்றிப் பேச வேண்டுமென்றால், இயற்கையினுடைய பல பில்லியன் ஆண்டுக்காலச் செயற்பாடுகளைத் தவிர்த்துவிட்டுப் பேசவே முடியாது.

ஆம், மனித இனம் மட்டுமல்ல. அனைத்து உயிர்களுமே இந்தப் பிரச்னையைச் சந்தித்துள்ளன, சந்திக்கின்றன. ஓர் உயிரினம் எண்ணிக்கையில் அதிகமாகும்போது, அதன் வாழிடம், உணவுத் தேவை அனைத்துமே அதிகமாகும். அது, அதைச் சுற்றி வாழ்கின்ற இதர உயிரினங்களின் தேவைகளில் பற்றாக்குறையை ஏற்படுத்தும். பின் அந்த உயிரினத்திற்கே உணவுப் பற்றாக்குறை, வாழிடம் போதாமை போன்றவற்றை ஏற்படுத்தும்.

இந்தச் செய்திகள் மனித குலத்திற்கு எப்படியோ, ஆனால் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும்.
கிரிஸ்டோபர் முர்ரே, வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வுக்குழு தலைவர்

அந்தப் போதாமை, பல்வேறு துணைப் பிரச்னைகளைக் கொண்டுவரும். அதற்கு மனித இனத்தை ஓர் உதாரணமாகக் கொண்டு இப்போது பேசுவோம். மனிதன் என்கின்ற உயிரினம், அதன் எண்ணிக்கையில் மிகவும் அதிகமாகிவிட்டது. எந்தளவுக்கு என்றால், தன்னைச் சுற்றி இந்தப் பூமியில் வாழ்கின்ற மற்ற அனைத்து உயிரினங்களுக்குமே உணவு மற்றும் வாழிடப் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்ற அளவுக்கு அதிகமாகிவிட்டது. இது இயற்கையின் பின்விளைவுகளுக்கு நம்மை ஆட்படுத்திக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிகரித்துக் கொண்டே போகின்ற மக்கள் தொகை, சுற்றுச்சூழல் மீது பெரும் அழுத்தத்தை உண்டாகிக்கொண்டிருப்பதாக, நைஜிரீயாவிலுள்ள போவென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 2016-ம் ஆண்டு உறுதிப்படுத்தினர். அந்த ஆய்வறிக்கையில், மனித இனத்தின் எண்ணிக்கை, இந்தப் பூமியினால் சுமக்க முடியாத அளவுக்கு எல்லைமீறிக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ``பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் இரண்டுக்கும் இடையிலான சமநிலை காக்கப்பட வேண்டும். அந்தச் சமநிலை சீர்குலையும்போது அதற்குரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று குறிப்பிடுகின்றது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

டெல்லியில் அமைந்துள்ள குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராகுல் மிட்டல் என்பவர் 2013-ம் ஆண்டு ரிசர்ச் கேட்டில் (researchgate) வெளியிட்டிருந்த ஆய்வுக்கட்டுரையில், ``வளர்ந்த நாடுகள் தொடர்ந்து இயற்கை வளங்களைச் சுரண்டிக் கொண்டேயிருக்கிறார்கள், வளரும் நாடுகள் பொருளாதாரத்திலும் தொழில் முன்னேற்றங்களிலும் அவர்களோடு போட்டியிடப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவையிரண்டுமே, இயற்கையைச் சீர்குலைத்துக் கொண்டிருக்கின்றன. பூமியின் எதிர்கால நிலைத்தன்மையை இந்தச் செயல்பாடுகள் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு அடிப்படையாக இருப்பது மக்கள் தொகை அதிகரிப்பு. அந்த மக்கள் தொகை அதிகரிப்புதான், இப்போது மிகப்பெரிய பிரச்னையாகச் சொல்லப்படும் புவி வெப்பமயமாதலுக்கான மூல காரணம். அதன் காரணமாகவே, அதீத நுகர்வு, நுகர்வை ஊக்கப்படுத்துகின்ற அதீத உற்பத்தி, உற்பத்தியை ஊக்கப்படுத்தத் தேவைப்படும் அதீத இயற்கை வளச் சுரண்டல் என்று அனைத்துமே நடக்கின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

வளரும் நாடுகள் ( மாதிரி படம் )
வளரும் நாடுகள் ( மாதிரி படம் )
Unsplash

பூமியின் தாங்கு திறனைத் தாண்டி நம்முடைய எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதால்தான், இந்தப் பிரச்னை இவ்வளவு பெரிதாகிக்கொண்டிருப்பதாக உலகளவிலுள்ள அனைத்து ஆய்வாளர்களுமே ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளனர். இந்நிலையில் தான், இந்த ஆய்வறிக்கை வெளியானது. இத்தாலி, ஜப்பான், போலந்து, போர்ச்சுகல், தென் கொரியா, ஸ்பெயின், தாய்லாந்து உட்பட 20 நாடுகளின் மக்கள் தொகை 2100-ம் ஆண்டுக்குள் பெருமளவு குறையும் என்று சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவு லேன்சட் இதழில் வெளியானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீனாவின் இப்போதைய மொத்த மக்கள் தொகை 1.43 பில்லியன். அடுத்த 80 ஆண்டுகளில், அது வெறும் 730 மில்லியனாக, அதாவது இப்போதைவிடப் பாதியாகக் குறைந்துவிடும் என்று 25 பேர் கொண்ட ஆய்வுக்குழு மேற்கொண்ட அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்போது பூமியின் மக்கள் தொகை 7.8 பில்லியன். இதுவரையிலான ஆய்வுகளின்படி, ஐக்கிய நாடுகள் அமைப்பு, 2050 மற்றும் 2100 ஆகிய ஆண்டுகளில் முறையே 9.7, 10.9 பில்லியனாக உயரும் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால், இந்த ஆய்வுமுடிவுகள் அந்தக் கணிப்புகளைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டுவிட்டது. இந்த ஆய்வறிக்கை, 2100-ம் ஆண்டில் 8.8 பில்லியனாகத்தான் இருக்குமென்று கூறுகின்றது.

காலநிலை அவசரம் ( மாதிரி படம் )
காலநிலை அவசரம் ( மாதிரி படம் )
Unsplash

இந்த நூற்றாண்டின் இறுதியில், 195 நாடுகளில் 183 நாடுகள், தங்கள் எல்லைக்குள் வாழக்கூடிய மக்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைப்பதற்காக, மேற்கொண்டு புதிதாகக் குடியேறத் தடை விதிப்பார்கள் என்று அந்த அறிக்கை கணிக்கின்றது. அதேநேரத்தில், ஆப்பிரிக்கத் துணை-சஹாரா பகுதியில், மக்கள் தொகை இப்போதைவிட மூன்று மடங்கு அதிகமாகும். நைஜீரியாவில் மட்டுமே சுமார் 800 மில்லியனாக அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. இரண்டாவதாக, இந்தியாவில் அந்தக் கணக்கு 1.1 பில்லியனாக இருக்கும்.

``இந்தச் செய்திகள் மனித குலத்திற்கு எப்படியோ, ஆனால் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும். உணவு உற்பத்தி குறையும், வாழிடத் தேவை குறையும், மக்கள் தொகை அடர்த்தி குறையும் அதனால் குறைந்த நிலப்பரப்பில் அதிக மக்கள் வாழவேண்டிய நெருக்கடியான நிலை மாறும், கரிம வெளியீடு குறையும், இவற்றோடு சேர்த்துப் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள மூன்றாம் உலக நாடுகளில் அதிகமாகும்" என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் இந்த ஆய்வுக்குழுவின் தலைவரான, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, கிரிஸ்டோபர் முர்ரே. இவை நடக்கின்ற நேரத்திலேயே, ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு வெளியேயுள்ள நாடுகளில் உழைக்கும் ஆற்றலுள்ள மனிதர்களின் எண்ணிக்கை குறையும் என்றும் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படுமென்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

உலகளவில், பிறப்பு விகிதம் குறையும்போது, ஐந்து வயதிற்கும் குறைவாக இருக்கும் குழந்தைகளுடைய எண்ணிக்கை 40 சதவிகிதம் வீழ்ச்சியடையும் என்று அந்த ஆய்வு குறிப்பிடுகின்றது. அதில், 2017-ம் ஆண்டுக் கணக்குப்படி 681 மில்லியன் குழந்தைகள் என்றிருந்த எண்ணிக்கை, 2100-ம் ஆண்டின்போது, 401 மில்லியனாகக் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம், சுமார் 2.37 பில்லியன் மக்கள், அதாவது பூமியின் மொத்த மக்கள் தொகையில் கால் பங்கு மக்கள், 65 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருப்பார்கள். இப்போது 80 வயதுக்கும் மேற்பட்டவர்களுடைய எண்ணிக்கை 140 மில்லியன். அது எதிர்காலத்தில் 866 மில்லியனாக உயரும் என்று கணிக்கின்றனர். இந்தக் கூற்றின்படி பார்த்தால், எதிர்காலத்தில் பிறப்பு விகிதம் பெருமளவில் குறையும் என்று தெரிகின்றது. அதன்மூலம், பெரும்பான்மை நாடுகளில் உழைக்கும் திறனுள்ள வயதிலுள்ளவர்களின் விகிதம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். அது பெரிய சவாலை உண்டாக்கும். குறைந்தபட்ச உழைக்கும் மக்களையும் மிகக் குறைந்த வரி கட்டுவோரையும் கொண்ட பொருளாதார நெருக்கடி நிறைந்த சமுதாயம் உருவாகும்.

உதாரணத்திற்கு, சீனாவில் இப்போது உழைக்கும் திறனுடையவர்கள் 950 மில்லியன் பேர் இருக்கின்றார்கள். அந்த எண்ணிக்கை, இந்த நூற்றாண்டின் இறுதியில் 350 மில்லியனாகக் குறையும். அதாவது, 62 சதவிகிதம் வீழ்ச்சியடையும். இந்த வீழ்ச்சி இந்தியாவில்தான் ஓரளவுக்குக் குறைவாக இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இப்போது இங்கு 762 மில்லியனாக இருக்கும் உழைக்கும் திறனுள்ளோரின் எண்ணிக்கை, 578 மில்லியனாகக் குறையும். இதுவே, ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள நைஜிரீயாவில் இப்போது 86 மில்லியனாக இருக்கும் அந்த விகிதம் 2100-ல் 450 மில்லியனாக உயரும் என்று கணிக்கப்படுகின்றது.

2050-ம் ஆண்டில், சீனாவுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி அமெரிக்காவுடையதை விட அதிகமாக இருக்கும். ஆனால், அது நிலைக்காது. மீண்டும் 2100-ல் குறைந்து இரண்டாம் இடத்திற்கே சீனா வந்துவிடும் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உலகின் 10 பெரிய பொருளாதாரங்களாக நிலைத்திருக்க, இந்தியா அவர்களை முந்திக்கொண்டு மூன்றாவது பெரிய பொருளாதாரமுள்ள நாடாக வளர்ந்திருக்கும் என்றும் கூறுகின்றனர். மேலும், இன்று எட்டாவது இடத்திலுள்ள பிரேசில் எதிர்காலத்தில் 13-வது இடத்திற்கும் 10-வது இடத்திலுள்ள ரஷ்யா 14வது இடத்திற்கும் சென்றுவிடும். இத்தாலி மற்றும் ஸ்பெயின், முறையே 25-வது மற்றும் 28-வது இடங்களுக்குப் பின்தங்கிவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நைஜீரியா முதல் 10 நாடுகளில் ஒன்றாகவும் இந்தோனேசியா 12-வது பெரிய பொருளாதாரமாகவும் வளரும்.

மக்கள் தொகை நெருக்கடி ( மாதிரி படம் )
மக்கள் தொகை நெருக்கடி ( மாதிரி படம் )
Unsplash

இந்த ஆய்வறிக்கையின்படி பார்த்தால், 21-ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியா, நைஜீரியா, சீனா மற்றும் இவற்றுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா ஆகிய நாடுகளே சக்தி வாய்ந்த நாடுகளாக இருக்கும். அதாவது, நடைபெறவுள்ள சூழலியல் மாற்றங்களும் நிலவியல் மற்றும் சமூகப் பொருளாதார மாற்றங்கள், நூற்றாண்டின் இறுதியில் இன்றுள்ள உலக நாடுகளின் நிலையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிடும் என்று குறிப்பிட்டுள்ளார் கிரிஸ்டோபர் முர்ரே.

உலக நாடுகள் சந்திக்கக்கூடிய இயற்கைப் பேரிடர்கள், அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரிக்கும் என்றும் அதனால் அதிகப் பாதிப்புகள் ஏற்படுமென்றும் காலநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். உலகம் முழுக்கவுள்ள காடுகளில் அதிகரிக்கும் காட்டுத்தீ சம்பவங்கள். வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகரிக்கும் வறட்சி. ஐரோப்பிய நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் அதிகமாகும் வெள்ளச் சேதங்கள். ஆசிய நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் அதிகரிக்கும் வெள்ளம், வெப்பச் சலனம், கடலோரப் பகுதிகளில் கடல் மட்ட உயர்வு போன்ற பேரிடர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றது.

உலக வானிலை ஆய்வு மையம் (World Meteorological Organization) பிரச்னை தொடர்ந்து வீரியமடைந்து கொண்டேயிருப்பதாகக் கடந்த டிசம்பர் மாதமே எச்சரித்தது. எச்சரிக்கைகளை ஆய்வாளர்கள் முன்வைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். நாமும் அடுத்தடுத்த ஆண்டுகளில் முந்தைய ஆண்டுகளைவிட அதிக இழப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

இதன் விளைவுகள் அனைத்துமே, இறுதியில் கொண்டு போய்ச் சேர்ப்பது மனித இனத்தின் அழிவுப் பாதையில்தான். அதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகலாம். அல்லது ஆயிரம் ஆண்டு கூட ஆகலாம். ஆனால், அந்தப் பாதையில் நாம் ஏற்கெனவே திரும்பிவிட்டோம் என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.

காலநிலை அவசரம் ( மாதிரி படம் )
காலநிலை அவசரம் ( மாதிரி படம் )
Unsplash

இது ஏதோ, மனித இனம் சபிக்கப்பட்டதைப் போன்றதோர் உணர்வு ஏற்படலாம். ஆனால், இதை மனித இயல்பு என்றுதான் சொல்ல வேண்டும். சிலர் இதற்குக் காரணம் அதிகரிக்கும் மாசுபாடு, சுரண்டல் என்கின்றனர். ஆனால், அதற்கும் கூட அடிப்படை மக்கள் தொகை அதிகரிப்புதான். சில ஆய்வாளர்கள் இந்தப் பாதைக்குள் நாம் நுழைவோம் என்பதையும் நுழைந்துவிட்டோம் என்பதையும் அழிந்துகொண்டிருக்கிறோம் என்பதையும் குறித்துக் கூட எச்சரிக்கை செய்தனர். நம்முடைய அரசுகள் அதைப் பொருட்படுத்தவே இல்லை. கடந்த ஆண்டும்கூட, 11,000 விஞ்ஞானிகள் அதுகுறித்து எச்சரித்தனர். இன்றளவும் அதுகுறித்தோ அதற்குச் சாதகமாகவோ எந்தவித நடவடிக்கையையுமே அரசுகள் மேற்கொள்ளவில்லை.

இப்போது நம் பூமி, அது பிழைத்திருப்பதற்காக மிக மூர்க்கமாகப் போராடிக்கொண்டிருக்கின்றது. இயற்கை, அதைப் பிழைக்க வைப்பதற்காக, அதை இந்த நிலைமைக்குக் கொண்டுவந்த மனித இனத்தை அதிலிருந்து துடைத்தெறியத் துடித்துக் கொண்டிருக்கிறது. பூமி அழிவதாக நாம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அது அழியவில்லை. தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. மறுபிறவி எடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த மறுபிறவியில், நாம் இருப்போமா என்பது நிச்சயமாகச் சந்தேகம்தான்.