உத்தரப்பிரதேசப் பாசனத் துறை, கங்காநகரில் ஓடும் யமுனையின் ஒரு பகுதியில் 500 கனஅடி நீரைத் திறந்துவிட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமையன்று இதுகுறித்துப் பேசிய அதிகாரிகள், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருவதால், அவர் ஆக்ராவுக்கு வருகையில் அங்கு யமுனை நதியின் மாசுபாடு தெரியாமலிருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறியுள்ளனர்.

பிப்ரவர் 23 மற்றும் 26 ஆகிய இரண்டு நாள்களில் இந்தியாவுக்கு அதிபர் ட்ரம்ப் வரவுள்ளார். இந்த வருகையின் முக்கியப் பகுதி டெல்லியில்தான் நடக்கவுள்ளது. கூடுதலாக, அவர் அருகிலிருக்கும் ஆக்ராவுக்கும் குஜராத்திலுள்ள அகமதாபாத்துக்கும் சிறிய பயணமொன்றை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. இப்போது திறந்துவிடப்பட்டுள்ள இந்த 500 கனஅடி நீர், பிப்ரவரி 20-ம் தேதியன்று மதுராவையும் அடுத்தநாள் மதியத்துக்குள் ஆக்ராவையும் சென்றடையும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பிப்ரவரி 24-ம் தேதி வரையிலுமே குறிப்பிட்ட அளவு நீர் யமுனையில் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யமுனையிலிருந்து வரக்கூடிய மோசமான வாடை வெளியே தெரியாமலிருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூடுதலாக, 500 கனஅடி நீரை யமுனையில் திறந்துவிடுவதன் மூலமாக அதிலிருக்கும் ஆக்சிஜன் குறைபாடு ஓரளவுக்குச் சரியாகும். அந்த நீர் குடிக்கும் அளவுக்குத் தரம் உயராது என்றாலும், அதிலிருந்து துர்நாற்றம் வராது என்றும் உத்தரப்பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை குறித்து உத்தரப்பிரதேசத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டுக்குப் பேட்டியளித்துள்ள சூழலியலாளர் கோபேஷ்வர் நாத் சதுர்வேதி, ``இந்த நடவடிக்கையால் யமுனையில் ஒரு மாற்றம்கூட நிகழப்போவதில்லை" என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.