மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எதுவும் கடந்து போகும்! - 12 - பேசினோம் – பேசட்டும்

எதுவும் கடந்து போகும்! - 12 - பேசினோம் – பேசட்டும்
பிரீமியம் ஸ்டோரி
News
எதுவும் கடந்து போகும்! - 12 - பேசினோம் – பேசட்டும்

இந்த வாரம் யாழன் ஆதி

ஒன்பதாம் வகுப்பு முடித்த அந்தக் கோடை விடுமுறையை மறக்கமுடியாத ஒன்றாக என் அம்மா மாற்றினார்கள். அவர்கள் பணியாற்றிவிட்டு வரும்வழியில் இருக்கும் மாவட்டக் கிளை நூலகத்தில் என்னை உறுப்பினராக்கி விட்டார்கள். பள்ளியில் ஒரு குழந்தையைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதைப் போன்ற பாவனை அதில் இருந்ததை இப்போதுகூட என்னால் நினைக்குக் கொண்டுவர முடிகிறது.

யாழன் ஆதி
யாழன் ஆதி

நூலகர் ராஜகோபால் அய்யா, வெள்ளைச்சட்டையும் வேட்டியும் அணிந்து என்னை ஏற்றுக்கொண்ட அந்தத் தருணம் மிக உன்னதமானது.

`குறிஞ்சி மலர் நாவல் நா.பார்த்தசாரதி எழுதியது எங்கிருக்கு சார்?’ அம்மாவின் கேள்வி.

`நாவல் பகுதியிலே கீழ இருக்கு பாருங்க.’

தன்னுடைய இடது முழங்கையில் மாட்டிவைத்திருந்த ஒயர் பின்னல் பையை வைத்துவிட்டு அந்தப் புத்தகத்தை எடுத்து வந்து புத்தகம் எடுக்கும் குறிப்பேட்டில் எழுதி வைத்துவிட்டு என்னிடம் தந்துவிட்டு அம்மா கடைத்தெருவுக்குப் போய்விட்டார்கள். அன்று தொடங்கிய புத்தகங்களுடனான வாழ்க்கை இந்த நொடிவரை நீள்கிறது. இப்போதும் அந்த நூலகத்தில் நான் புழங்குகிறேன். என்னுடைய நூல்கள் அந்த நூலகத்தின் அலமாரிகளில் இருக்கின்றன.

எங்கள் ஊரில் நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது அண்ணன்கள் அக்காக்கள் புத்தகங்களோடு நடமாடுவதை நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறோம். மல்லிகைப் பூந்தோட்டங்கள் நிறைந்த எங்கள் ஊரில் தண்ணீர் ஓடும் கால்வாய்களில் உட்கார்ந்து வாசித்துக்கொண்டிருந்த தலைமுறை அண்ணன்களைப் பார்த்து பார்த்து, படிப்பின்மீது தீவிரத்தை வளர்த்துக்கொண்டது எங்கள் தலைமுறை. ஒரு அண்ணன் இருந்தார். எப்போதும் பாடிக்கொண்டே இருப்பார். எல்லா வகையான பாடல்களையும் பாடுவார். ஆனால் அவர் எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தைத் தன் கையில் வைத்திருப்பார். சைக்கிள்களின் கேரியர்களில் புத்தகங்களோடு அலையும் தந்தைகள் திரிந்த தெருக்கள் எங்களுடையவை.

படித்தே தீர வேண்டும் என்னும் வெறியுடன் என்னுடைய மூத்த தலைமுறை அலைந்துகொண்டிருந்தது. அவர்கள் எல்லோரும் பெரும் அரசுப்பணிகளைப் பெற்றனர். ஆசிரியர்களாக, வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக, அதிகாரிகளாகக் கண்ணெதிரே மாறினார்கள். படிப்பின் சுவை கூடிய தலைமுறை அது.

தெருவில் எங்களைப் போன்ற மாணவர்கள் பள்ளி முடிந்து கோலி விளையாடுவது, பாறை விளையாட்டு விளையாடுவது, சிகரெட் பாக்கெட் அட்டைகளை வைத்து விளையாடும் விளையாட்டு, குதிரை பத் என விளையாடிக்கொண்டிருந்தால் யாராவது ஒரு அண்ணனுடைய கால் அங்கு வந்து இந்த விளையாட்டுப் பொருள்களை மிதிக்கும். கை எங்கள் காதுகளைத் திருகும்.

எதுவும் கடந்து போகும்! - 12 - பேசினோம் – பேசட்டும்

‘`படிங்கடான்னா...” அதட்டும் குரலில் அதிகாரம் மிதக்கும். வீட்டுக்கு ஓடுவோம். புத்தகங்களை எடுத்து உட்கார்ந்து விடுவோம். இன்று நாங்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இந்த வாழ்க்கையை எதிர்கொள்கிறோம்.

பதின்மங்கள் முடிந்து கருத்தியல்ரீதியாக ஒருநிலையை நான் எட்டியபோது அது என் அப்பாவின் கருத்தியலுக்கு எதிரானதாக இருந்தது. வீட்டில் எப்போதும் விவாதம். அப்பாவோடு முரண்கொள்வேன். அவரும் சளைக்காமல் அவர் கருத்துகளை முன்வைப்பார். பேச்சு பேச்சு என வீடே எப்போதும் ஒரு பொதுக்கூட்ட மனநிலையில் இருக்கும். தினமும் எங்காவது ஒரு மணித்துளியில் ஓர் உரையாடல் தொடங்கிவிடும். அந்த உரையாடல்கள் ஊரில் இருக்கும் அண்ணன்களுடனும் தொடரும். இப்படிப் பேசியும் படித்தும் எங்கள் முந்தைய தலைமுறையோடு நாங்கள் கொண்ட இருப்பு தற்போதைய தலைமுறையில் தென்படவில்லை என்றே கருதுகிறேன்.

மாறிவந்திருக்கிற தொழில்நுட்பம், சமூகப் பொருளாதாரம், பாலியல் சுதந்திரம் எனப் பல காரணங்களை நாம் அடுக்கினாலும் வாசிப்பின் வாசல்களை இந்தத் தலைமுறையும் வெகுவாகப் பெற்றிருக்கிறது. உரையாடல்களை நிகழ்த்தும் வாய்ப்பு அதிகமிருந்தும் எங்கோ ஓர் இடத்தில் இந்தத் தலைமுறைக்குச் சிறு இடறல் இருக்கிறதோ எனத் தோன்றுகிறது. அறிவைப் பெறுகிற அத்தனை அம்சங்களும் இந்தத் தலைமுறையின் கைகளிலேயே இருக்கின்றன. ஆனால் அதற்கான சமூகப் பொறுப்பு மிகவும் குறைந்துபோயிருப்பதாகவே உணர்கிறேன்.

தான் பெறுகிற அறிவைத் தனக்கானதாகவே பார்க்கும் இந்தத் தலைமுறையின் போக்கு அவர்களுக்கான வாழ்வை வசதிப்படுத்துகிறது. ஆனால் அவ்வாழ்வின் பயன்பாடு என்பது தன் வேர்களுக்கு நீர்பாய்ச்சுவதாக இல்லாமல் தன்னோடு முடிந்துபோய்விடும் அபாயம் நிறைந்ததாக இருக்கிறதோ என ஓர் ஐயம் எப்போதும் சூழ்கிறது.

இந்தத் தலைமுறையின் முக்கியத் தன்மையாக நான் பார்ப்பது பாலின வேறுபாடற்ற நட்பு. எங்கள் தலைமுறையில் அது ஒரு கோட்பாடாகச் சொல்லப்பட்டது. பத்தாம் வகுப்பு படிக்கும்போது அரைக் கால்சட்டையை அணிந்துகொண்டு வகுப்புக்குப் போவோம். சக மாணவியிடம் ஒரு நோட்டை வாங்க முடியாது. போய்ப் பேசவே வெட்கமாக இருக்கும். அந்த நோட்டை வாங்கிக்கொண்டு திருப்பிக்கொடுக்கும் வரை இருக்கும் மனநிலை சொல்ல முடியாததாக இருக்கும். இயல்பாக இருக்காது. தேன்மொழியிடம் ஒரு அறிவியல் நோட்டை வாங்க நான் பட்டபாட்டை நினைத்தால் சிரிப்பாக வருகிறது.

எதுவும் கடந்து போகும்! - 12 - பேசினோம் – பேசட்டும்

ஆனால் இப்போது அப்படியில்லை. இந்தத் தலைமுறை மிக இயல்பாகத் தன் எதிர் பாலினத்தை அணுகுகிறது. பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளோடு மிக நட்பாக இருக்கிறார்கள். அதை அனுமதிக்கிற குடும்ப அமைப்பும் இப்போது வந்திருக்கிறது என்பதுதான் சமூக மாற்றம்.

கல்வியும் அறிவியலும் இன்றைய தலைமுறையைத் தேடி வந்திருக்கின்றன. புதிய புதிய கண்டுபிடிப்புகள், மிக நுட்பமாகக் கிடைக்கும் மருத்துவ அறிவியல், போக்குவரத்திற்கான காரணிகள், எல்லாவற்றையும் அடைவதற்கான இணைய சேவைகள், தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கத் தேவையான சமூக ஊடகங்கள் என விரிந்த வானத்தைப்போல அவர்களின் பாதைகளும் விரிந்திருக்கின்றன. இந்தத் தலைமுறைக்குக் கிடைத்திருக்கக்கூடிய அடைவுகள் எதுவும் முழுமையாக எங்கள் தலைமுறைக்கு இல்லை. ஆனால் அவற்றை உருவாக்க முனைந்த தலைமுறையாக அது இருந்தது. அதன் பயனை இந்தத் தலைமுறை அனுபவிக்கிறது.

எனினும் இந்தத் தலைமுறையின் உணர்வெழுச்சிகள் குறித்து நாம் கவலை கொள்ளவே வேண்டியிருக்கிறது. சாலை ஆத்திரத்தைப் போலவே வாழ்வையும் அணுகும் போக்கு இங்கு நிலவுகிறது. அறிவியல் விளைந்ததைப்போல சமூக அறிவியலும் அறவியலும் இன்னும் கூடுதலாக விளைய வேண்டும்.

உரையாடல்களும் கதைகளும் சமூகம் சார்ந்த புரிதல்களும் இன்னும் கூடுதலாக இந்தத் தலைமுறைக்குத் தேவைப்படுவதாகவே நான் கருதுகிறேன். அதற்கு தீவிரமான படைப்பு வெளியும் வாசிப்பும் அவர்களுக்குத் திறப்புகளாக அமையும். உரையாடல்கள் மூலமே ஓர் உன்னத ஜனநாயகத்தை உருவாக்க முடியும். பேசட்டும் அவர்கள்.

- இடைவெளி இணைப்போம்