மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எதுவும் கடந்து போகும்! - 13 - இது மகள்களின் காலம்!

எதுவும் கடந்து போகும்!
பிரீமியம் ஸ்டோரி
News
எதுவும் கடந்து போகும்!

இந்த வாரம் கீதா இளங்கோவன், ஓவியங்கள்: நீலன்

சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுவயதுத் தோழியைச் சந்தித்தேன். பழைய பள்ளி நினைவுகள், இனிமையான தருணங்களை நினைவுகூர்ந்து மகிழ்ந்தோம். குடித்துவிட்டு தினமும் அடிக்கும் கணவரிடமிருந்து, கல்யாணமான சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்று, தன் மகனுடன் தனித்து வாழ்வதாகக் கூறினார். தோழி நல்ல பணியில் இருக்கிறார். பொருளாதாரத்திற்கு யாரையும் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இல்லை என்பதால் நிம்மதியுடன், சுயமரியாதையுடன் வாழ்வதாகக் கூறினார். அவர் மகனின் படிப்பு, பள்ளி பற்றிய பேச்சினூடே ‘`அம்மா எப்படி இருக்காங்க?’’ என்று கேட்டேன். தோழியின் கண்களில் நீர் துளித்தது. ‘`என்னாச்சுப்பா’’ என்று பதறியவாறு கேட்க, ``அம்மா நல்லாதான் இருக்காங்கப்பா. ஆனா, நா விவாகரத்து பண்ணினதை அவங்களால ஏத்துக்கவே முடியலை. பையனுக்காகவாவது அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருந்திருக்கலாம்லன்னு கரிச்சுக் கொட்றாங்க. `புருஷன் குடிக்கறதெல்லாம் ஒரு தப்பா, அவனைத் திருத்தி, கூடவச்சுக்கத் துப்பில்ல, டிவோர்ஸ் பண்ணிட்டு தனிமரமா நிக்கறா பாரு’ன்னு உறவுக்காரங்க முன்னாடியே திட்டுறாங்க. எம் புருஷன்கிட்ட தினந்தினம் எவ்வளவு அடி உதை வாங்கினேன்னு அம்மாக்கு நல்லாவே தெரியும். இருந்தாலும் ஏன்தான் இப்படிப் பேசறாங்களோ?’’ என்று அழுதார். மிகவும் வருத்தமாக இருந்தது.

கீதா இளங்கோவன்
கீதா இளங்கோவன்

இன்னொரு தோழி, வேலையில்லாத பொறுப்பற்ற கணவனை விவாகரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகத் தன் அம்மாவிடம் கூறியபோது அவர் அம்மா பயன்படுத்திய மோசமான வார்த்தைகளை இங்கே எழுத முடியாது. இந்தத் தோழியும் வேலையில் இருப்பவர். இவர் பெற்றோரைச் சார்ந்திருக்காதது மட்டுமல்ல, அவர்களுக்கு மாதாமாதம் பண உதவியும் செய்துவருகிறார்.

என் தோழியின் அம்மா மட்டுமல்ல. விவாகரத்தான, கணவரைப் பிரிந்து வாழும் பெண்களின் அம்மாக்கள் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள். குறிப்பாக, கீழ்நடுத்தர, நடுத்தர, மேல்தட்டு அம்மாக்களில் பலரின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது. அடுத்த தலைமுறை மகள்கள் விவாகரத்து செய்தால், முந்தைய தலைமுறை அம்மாக்களுக்கு என்ன பிரச்னை? முந்தைய தலைமுறையில் விவாகரத்து செய்த பெண்களின் எண்ணிக்கை குறைவு. அதேபோல வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பெண்களும் குறைவாகவே இருந்தனர். பெரும்பாலும் இல்லத்தரசிகள்தான். கணவன் மிக மோசமானவனாக இருந்தாலும் சென்ற தலைமுறைப் பெண்களுக்கு திருமண வாழ்க்கையிலிருந்து விடுபட வழியில்லை. தான் சம்பாதிக்காததாலும், பெற்றோர் வீட்டில் விவாகரத்துக்குப் பெரிய ஆதரவு இல்லாததாலும், குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி அட்ஜஸ்ட் செய்து வாழ்ந்தனர். இந்தத் தலைமுறையில் சம்பாதிக்கும் பெண்களும் அதிகம். மனதுக்கு இசைவான மணவாழ்க்கை அமையாவிட்டால் விவாகரத்து செய்துவிட்டு, சுயமரியாதையுடன் குழந்தைகளோடு தனித்து வாழும் பெண்களும் அதிகம்.

விவாகரத்து செய்துவிட்டு தனித்து வாழும் இந்தத் தலைமுறைப் பெண்ணான மகள், சென்ற தலைமுறை அம்மாவை மனதளவில் வெகுவாகத் தொந்தரவு செய்கிறார். தான் சரியாகக் கண்டித்து வளர்க்காமல் போய்விட்டோமோ, மகளுக்குச் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டோமோ, தக்க நேரத்தில் அறிவுரை சொல்லாமல் விட்டுவிட்டோமோ என்றெல்லாம் அம்மா அனாவசியமாகத் தன்னை நொந்து கொள்கிறார். குற்றவுணர்வு கொள்கிறார். ‘ஒரு துணையில்லாமல் மகள் வாழ்க்கை இனி என்னவாகும்’ என்று துக்கப்படுகிறார். ஆண்துணை இல்லாமல் மகளும், அப்பா இல்லாமல் தன் பேரப்பிள்ளைகளும் வருங்காலத்தில் எப்படியெல்லாம் கஷ்டப்படுவார்களோ என்று வேதனைப்படுகிறார். இவை எல்லாவற்றையும்விட, குடும்ப மானம் போய்விட்டதே; கடைசிவரை ஒருவனுடன் மட்டும் வாழுமாறு மகளை வளர்க்கத் தவறிவிட்டதாக ஊர் தன்னை இழிவாகப் பேசுமே என்றுதான் மிகவும் பயப்படுகிறார். இந்த பயம்தான் மகள்மீதான கேள்விகளாக மாறி, இந்தத் தலைமுறைப் பெண்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.

எதுவும் கடந்து போகும்! - 13 - இது மகள்களின் காலம்!

விவாகரத்து மட்டுமல்ல, காலங்காலமாகப் பெண்மீது சுமத்தப்பட்ட ஒழுக்க விழுமியங்களும் இந்தத் தலைமுறையில் மாறியுள்ளன. ஐ.டி நிறுவன வேலைகளும், கைநிறைய சம்பளமும், பெருநகர வாழ்க்கையும் பெண்களுக்குச் சுதந்திரத்தை அளித்துள்ளன. டேட்டிங் போவதும் காதலிப்பதும் லிவ்விங் டுகெதரும், ஒத்து வரவில்லை என்றால் பிரேக்-அப்பும், பெற்றோரைப் பிரிந்து பெருநகரங்களில் குடியேறி வேலை பார்க்கும் பெண்ணுக்கு இயல்பான ஒன்று. விரும்பிய உடையணிந்து, வாகனத்தில் விரைந்து, பெரிய நிறுவனங்களில் தன்னம்பிக்கையுடன் பணிபுரியும் பெண்ணை சென்ற தலைமுறை அம்மாக்கள் மிரட்சியுடன் பார்க்கிறார்கள். வீட்டில் குடும்பத்தினர் சொல்படி உடையணிந்து, அவர்கள் சொன்னதைப் படித்து, நல்ல மாப்பிள்ளை வந்தவுடன் படிப்பைப் பாதியில் நிறுத்தி, கல்யாணம் செய்துகொண்டு, குழந்தை பெற்று, கணவரும் புகுந்த வீட்டினரும் மனம் நோகக் கூடாது என்று எல்லாவற்றுக்கும் - தனக்குப் பிடிக்காவிட்டால்கூட - தலையாட்டி, தனக்கு விருப்பங்கள் இருக்கிறதா என்று சிந்திக்கக்கூட முடியாதவர்களாய் இருந்தவர்கள்தான் இந்த அம்மாக்கள். மகள் தன் சுயவிருப்பப்படி படிப்பதையும், உடையணிவதையும், கல்யாணம் செய்துகொள்வதையும், ஒத்துவராவிட்டால் விவாகரத்து செய்வதையும் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

காதல் திருமணம் விவாகரத்தில் முடிவதில்தான் பிரச்னையா என்றால், இல்லை. ஏற்பாட்டுத் திருமணத்திலும் இதே சிக்கல் இருக்கிறது. மகளுக்குத் திருமணம் நடந்தால் அது முறியவேகூடாது, வாழ்க்கை முழுவதற்கும் அந்த உறவு நீடிக்க வேண்டும் என்று அம்மாக்கள் எதிர்பார்க்கிறார்கள். அது நியாயமான விருப்பம்தான். ஆனால், எதார்த்தத்தில் எல்லோருக்கும் சாத்தியம் இல்லையே.

தன்மேல் சுமத்தப்பட்ட ஒழுக்க விழுமியங்களை சென்ற தலைமுறை அம்மாக்களால் துறக்க முடியவில்லை. அவற்றைத் துறந்து சுதந்திரத்துடன், சுயமரியாதையுடன் வாழும் இந்தத் தலைமுறை மகள்களை முழுதாக ஏற்கவும் முடியவில்லை. தன்னுடைய `ஒழுக்கக் கண்ணாடியை’ அணிந்து கொண்டு மகள்களைக் கேள்வி கேட்கிறார்கள். காலம் மாறிவிட்டது என்று மகள் சொல்வதை ஒப்புக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. தன் சொல்படி கேட்டால்தான் மகளால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நிர்பந்திக்கிறார்கள். இதனால் மன நிம்மதியிழக்கும் மகள்கள் ஒருகட்டத்தில், தன் வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என்று சொல்ல வேண்டியதாகியுள்ளது. இருவர் உறவிலும் விரிசல் வளர்கிறது. `நான் கஷ்டப்பட்டேன், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டேன், இப்போ நல்லா இல்லையா? நீயும் அப்படி இருக்க வேண்டியதுதானே?’ என்று சென்ற தலைமுறை கேட்கிறது. `நீங்க நல்லா இருக்கலாம். ஆனால் சந்தோஷமா, முழுமனசா உங்க வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்ந்தீங்களா?’ என்ற இந்தத் தலைமுறையின் கேள்வியில் நியாயம் இருக்கிறது. தனது ஒழுக்க விழுமியங்களைத் தள்ளி வைத்துவிட்டு, மாறும் கால ஓட்டத்திற்கேற்ப மகளின் நிலையிலிருந்து அவளைப் புரிந்துகொள்ள அம்மாக்கள் முயற்சி செய்யலாம்.

எதுவும் கடந்து போகும்! - 13 - இது மகள்களின் காலம்!

மகள்களும், தான் துன்பப்படும்போது அம்மா ஆதரவாக இல்லையே என்று மட்டும்தான் பார்க்கிறார்களே ஒழிய, சென்ற தலைமுறை அம்மா வளர்ந்த சூழலையும், அவர்கள் எதிர்கொண்ட ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் கருத்தில் கொள்வதில்லை. அம்மா என்பதற்கு சமுதாயம் கற்பித்து வைத்துள்ள பிம்பமும் முக்கியமானது. அம்மா என்றால் அன்பு, பரிவு, கருணை, நேசம் என்றெல்லாம் குறிப்பு வரைந்து, அவரை இயல்பான மனுஷியாகப் பார்க்கத் தவறுகிறோம். அவரும் நம்மை மாதிரி ஒரு பெண்தான்; என்ன, வயதில் மிகவும் மூத்த பெண். அவரின் போராட்டங்களை நாம் சந்தித்ததில்லை. அவர் பார்வையில், இந்தத் தலைமுறைப் பெண்ணிற்கு எல்லாமே கிடைத்துள்ளது. அதனால், அந்த மூத்த பெண்ணிற்கு உள்ளுக்குள் வரக்கூடிய பொறாமையும் இயல்பானதுதான். அதெப்படி அம்மாவுக்கு மகள்மீது பொறாமை வரும் என்று இந்தத் தலைமுறைப் பெண்ணுக்கு அதிர்ச்சி ஏற்படலாம். உறவைத் தாண்டி, அம்மாவை சக பெண்ணாகப் பார்த்தால் இதைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்த ஆணாதிக்க சமுதாயம் பெண்ணுக்குப் பல `ஒழுக்க விதிகளை’ வகுத்துள்ளது. இந்த விதிகள் யாவும் ஆணுக்கு சாதகமானவை. மிகத் தந்திரமாக இந்த விதிகளைப் பெண்களிடம் மூளைச்சலவை செய்து, வயதில் மூத்த பெண்ணை வைத்தே அடுத்த தலைமுறையிடம் கடத்துகிறது. அந்தப் பெண், அம்மாவாக இருக்கலாம். பாட்டி, மாமியார், பெரியம்மா, அத்தை, சித்தி, அக்கா, அண்ணி என யாராகவும் இருக்கலாம். உடனே, ‘பார்த்தீர்களா, பெண்ணுக்குப் பெண்தான் எதிரி’ என்று சொம்பைத் தூக்கிக்கொண்டு வரவேண்டாம். ஒரு பெண்ணை சக பெண்ணுக்கு எதிராகப் பேசவைப்பதையே ஆணாதிக்கப் பொதுப்புத்தியின் வெற்றியாக நான் பார்க்கிறேன். சக பெண்ணுக்கு எதிராகப் பேசும் பெண்கள், ஏதோ ஒரு வகையில் ஆண்களைச் சார்ந்து இருக்கிறார்கள். அது பொருளாதாரமாகவோ, குடும்ப அமைப்பாகவோ, அங்கீகாரமாகவோ, துணைக்கான தேவையாகவோ இருக்கலாம். இங்கு பெண்கள் அனைவருக்கும் பொதுவான எதிரி ஆணாதிக்கம்தான், அதைத் திணிக்கும் கொடுமையான ஜாதியக் கட்டமைப்பும், மதங்களும்தான். இதற்கு எதிராக பெண்கள் என்ற பொதுப்புள்ளியில் ஒன்றிணைய வேண்டும்.

இதற்காக வீதியில் இறங்கிப் போராட முடியாது. ஏனென்றால், பெரும்பாலும் வீட்டில்தான், குடும்பத்தில்தான் இந்தப் பிரச்னைகளைச் சந்திக்கிறோம். ‘அலுவலகத்தில்கூட எதிர்த்துக் குரல் கொடுத்து, விவாதித்து, புரிய வைத்துவிடலாம் போலிருக்கிறது; வீட்டில் பேசுவதுதான் பெரும்பாடாக இருக்கிறது’ என்று என் தோழியொருவர் அடிக்கடி சலித்துக்கொள்வார். உண்மைதான், வீட்டில் பேசும்போது, விஷயத்தை மட்டும் பேச முடிவதில்லை. உணர்வுகளும் கண்ணீரும் சஞ்சலமும் இயலாமையும் போட்டி போட்டுக்கொண்டு உடன் வருகின்றன. பரவாயில்லை, எல்லாம் வரட்டும்.

சென்ற தலைமுறையைவிட, இந்தத் தலைமுறைப் பெண்ணின் வாழ்க்கை பலவகையில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. அமைதியாக உட்கார்ந்து, அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு அவர் கதையைக் கேளுங்கள். அவரின் வெளியே சொல்லப்படாத விருப்பங்களுக்கு, கோபதாபங்களுக்கு, கேவல்களுக்குக் காதுகொடுங்கள். சக பெண்ணாக அவரைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களை ஆளுமையோடு வளர்த்ததில், சென்ற தலைமுறையின் போராட்டங்களும், தன் விருப்பங்களைப் பலிகொடுத்த வலிகளும் மௌனம் காக்கின்றன. அது இந்தத் தலைமுறைப் பெண்ணின் மீதான பேரன்பின் வெளிப்பாடு தோழிகளே. உங்களைப் புரிந்துகொண்டேயாக வேண்டும் என்ற முனைப்பைப் புறந்தள்ளி, அணைத்துக்கொள்ளுங்கள் அந்த முதியவளை.

எதுவும் கடந்து போகும்! - 13 - இது மகள்களின் காலம்!

சென்ற தலைமுறைப் பெண்களுக்கும் ஒன்றைச் சொல்ல வேண்டும். இந்தத் தலைமுறைப் பெண்ணான உங்கள் மகள் அங்கே தனியே உட்கார்ந்து, யாரும் பார்க்காதவாறு அழுது கொண்டிருக்கிறாள். `ஏன் அம்மா என்னைப் புரிந்துகொள்ளவில்லை? எப்போதுதான் என்னைப் புரிந்துகொள்ளப்போகிறார்? என் வாழ்க்கையை என் உழைப்பில் என் விருப்பப்படி சுயமரியாதையுடன் வாழ்வது தப்பா?’ என்று உள்ளுக்குள் புலம்பிக்கொண்டிருக்கிறாள். அப்படியென்ன அவள் தவறு செய்துவிட்டாள், இந்த மன அழுத்தத்திற்கு ஆட்பட. அவளருகே சென்று தலைகோதுங்கள், அவள் சாய்ந்து கொள்ள, சக பெண்ணாகத் தோள் கொடுங்கள். அவள் நிம்மதியாக உறங்குவாள். அளப்பரிய சாதனைகளைச் செய்யும் தெம்பைப் பெறுவாள்.

சென்ற தலைமுறைப் பெண்ணுக்கும், இந்தத் தலைமுறைப் பெண்ணுக்குமானதாக இந்தப் பிரச்னையைச் சுருக்கிவிட முடியாது. காலங்காலமாக எல்லாப் பெண்களின் மீதும் `ஒழுக்க விதிகளை’ ஏவிக்கொண்டேயிருக்கும் ஆணாதிக்கச் சமுதாயம்தான் இதற்கான ஆணிவேர். அதைப் பெண்களாக மட்டும் உழைத்துச் சரிசெய்துவிட முடியாது தோழர்களே. ஆண்களாகிய உங்கள் பங்கு மிக முக்கியம். பொதுப்புத்தியும், கொடுமையான ஜாதியக் கட்டமைப்பும், மதங்களும் பெண்களுக்கு மட்டுமே வலியுறுத்தும் ஒழுக்கக் கற்பிதங்களால் அவர்களின் வாழ்வே குலைந்துவிடுகிறது. இந்த உலகில் பிறக்கும் மனித உயிருக்குக் கிடைக்கும் நியாயமான உரிமைகள் கிடைக்காமல் போகின்றன. இதைத் தடுக்கக் குரல் கொடுத்த பெரியாருடன், அண்ணல் அம்பேத்கருடன் இணைந்து ஆண்களும் தொடர்ச்சியாகச் செயலாற்ற வேண்டும். சென்ற தலைமுறைப் பெண்கள் இப்பொழுதாவது தம் விருப்பப்படி வாழவும், பட்டாம்பூச்சிகளாக வானத்தை எட்டிப் பிடிக்கும் துடிப்போடு சிறகடிக்கும் அடுத்த தலைமுறைப் பெண்களுக்காகவும் நம்பிக்கையான இடத்தை உருவாக்குவோம். நம் பெண்களை அழுத்திக்கொண்டிருக்கும் யாவும் கடந்து போகட்டும்.

- இடைவெளி இணைப்போம்