மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எதுவும் கடந்து போகும்! - 14 - நிறம் மாறும் அரசியல்

நிறம் மாறும் அரசியல்
பிரீமியம் ஸ்டோரி
News
நிறம் மாறும் அரசியல்

இந்த வாரம் சுதீர் செந்தில்

1971 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நேரம். அப்போது எனக்கு வயது ஒன்பது, மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் எங்கள் ஊர் போடிநாயக்கனூர் சந்தைத் திடலில் நடைபெற்றது.

சுதீர் செந்தில்
சுதீர் செந்தில்

காங்கிரஸ்காரரான என் அப்பா அந்தக் கூட்டத்திற்கு என்னையும் அழைத்துச் சென்றிருந்தார். அந்தக் கூட்டத்திற்குத் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கு.காமராஜர் வந்திருந்தார். தேர்தல் நிதி அளிக்க வந்தவர்கள் வரிசையில் நின்று காமராஜரிடம் நேரில் நிதியைக் கொடுத்துக்கொண்டிருந்தனர். என் தந்தையாரோடு நானும் வரிசையில் நின்று காமராஜரைச் சென்றடைந்தேன். அந்த வயதில் எனக்குக் காமராஜர் குறித்து என் தந்தை நிறைய கூறியிருந்தார் என்றாலும் அன்றுதான் முதலும் கடைசியுமாக அவரை நேரில் பார்த்தது. என்னை விடவும் ஐந்து மடங்கு உயரமாகத் தெரிந்தார். என் தந்தையார் ஐந்து ரூபாய் நோட்டை என்னிடம் கொடுத்து அதைக் காமராஜரிடம் கொடுக்கும்படி மகிழ்ச்சியோடு சொன்னார். நானும் என் பிஞ்சுக் கரத்தில் நன்றாக அண்ணாந்து பார்த்தபடி அந்த நோட்டைக் காமராஜரிடம் நீட்டினேன். தூய வெள்ளைநிறச் சட்டை, வேட்டியில் கருகருவென அந்த மாலை நேர மேடை விளக்கொளியில் மின்னிக்கொண்டிருந்த அவர், சற்றே என்னருகில் குனிந்து என் கரத்தைப் பற்றிக் குலுக்கினார். என் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளித் தட்டிக்கொடுத்தவாறு ‘‘எத்தனாப்பு படிக்கிற’’ எனக் கேட்டார். நான் சொன்னேன். ‘‘நல்லா படிக்கணும்’’ என்றபடி நிமிர்ந்தார். என் தந்தையார் பரவசத்துடன் அவரை வணங்கிவிட்டு என்னை அழைத்துக்கொண்டு மேடையை விட்டு இறங்கிக் கூட்டத்திற்குள் சென்று அமர்ந்தது (மண் தரையில்தான்) இன்றும் என் நினைவிலிருந்து அகலவில்லை. இன்று நினைத்தாலும் பரவசமாக உணர்கிறேன்.

எங்கள் ஊர் அப்போதைய மதுரை மாவட்டத்தில் இருந்த தேவாரம் என்கிற மிகச் சிறிய அழகிய கிராமம். மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. நாங்கள் ஏலக்காய் பயிர் செய்யும் விவசாயக் குடும்பம். நிலம் கேரளத்தில் இருந்தது. நடந்தே தோட்டங்களுக்குச் சென்றுவிடுவோம். எங்கள் குடும்பம் விவசாயத்தோடு வியாபாரத்தையும் செய்தது. என் பாட்டனார் அப்பொழுது குடும்பத்தின் சார்பாகக் கல்கத்தாவிற்குச் சென்று கடை வைத்து வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டார். அந்தக் காலத்தில் முதன்முதலாகக் கல்கத்தா சென்றவர் என்பதனால் இன்றளவுக்கும் அவரைக் ‘கல்கத்தா' என்கிற முன்னொட்டோடுதான் ‘கல்கத்தா காமராஜ்' என்று சொல்வார்கள்.

என் பாட்டனாரின் மறைவிற்குப் பிறகு என் தந்தையாரும் வியாபார நிமித்தமாகக் குடும்பத்தைக் கல்கத்தாவிற்கு மாற்றினார். இது நடந்தேறியது 1977-ம் ஆண்டு. அப்போது நான் எட்டாம் வகுப்பை முடித்திருந்தேன். கல்கத்தாவில் ‘த நேஷனல் ஹயர் செகண்டரி ஸ்கூல் (பாய்ஸ்)’ என்கிற பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தேன்.

அந்தக் காலத்தில் ஒரு நாள் கல்கத்தாவின் கடை வீதியில் (படா பஜார்) டீக்கடையில் நான் என் தந்தையுடன் நின்றுகொண்டிருந்தேன். கருங்கற்களால் பாவப்பட்ட அந்தத் தெருவில் அப்போது வந்துகொண்டிருந்த மூவரில் ஒருவரைச் சுட்டிக்காட்டிய என் தந்தை, ‘‘பாரு, சீப் மினிஸ்டர் வர்ராரு. போ. போய்க் கைகொடுத்துட்டு வா’’ என்றார். அதன் பின்தான் கவனித்தேன். சந்தடி மிகுந்த அந்தத் தெருவில் மூன்று பேர் பேசியபடியே நடந்து வந்துகொண்டிருந்தனர். மூவரில் ஒருவர் நல்ல உயரமாக இருந்தார். சந்தனக் கலர் பைஜாமா அணிந்திருந்தார். மக்கள் அவரை நெருங்க முயலாமல் ஓரமாக ஒதுங்கி வழிவிட்டு அவரை நோக்கி வணங்கியபடி இருந்தனர். அவர் மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு. முதல்முறையாக முதலமைச்சர் ஆகியிருந்த தருணம். நான் குடுகுடுவென ஓடிப்போய் அவர் முன் சென்று நின்று அவரைப் பார்த்துச் சிரித்தபடி என் கையை அவர் முன் நீட்டினேன். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஜோதி பாசு ஒரு கணம் நின்றார். என் கையைப் பற்றிக் குலுக்கியபடி ‘‘தும் க நாம் கீ’’ என வங்காளத்தில் கேட்டார். நான் ‘‘செந்தில் குமார்’’ என்றேன். ‘‘ஓ, மதராசி’’ என அவரும் என் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளி முதுகைத் தட்டிக்கொடுத்தார். அதற்குள் என் தந்தையார் சற்று நெருங்கிவந்து ஜோதி பாசுவைப் பார்த்து இரண்டு கரங்களையும் குவித்து வணங்கினார். அவரும் பதிலுக்கு வணக்கம் செலுத்தியபடி எங்களைக் கடந்து சென்றார். மேற்கு வங்கத்தின் அசைக்க முடியாத இடதுசாரித் தலைவராக 23 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர்.

1982-ம் ஆண்டு மதுரை தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். முதலாண்டு முடிந்து விடுமுறையில் என் அக்கா வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர் குன்னூரில் இருந்தார். அப்போது உதகை மலர்க் கண்காட்சி தொடங்கவிருந்தது. அதற்காக அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் வருவதாகக் கேள்விப்பட்டு உதகை சென்றேன். பொட்டானிகல் கார்டனில் வருடாவருடம் நடக்கும் கண்காட்சி. பெரிய கூட்டம் இல்லை. ஏற்கெனவே தொலைவிலிருந்து சிலமுறை எம்ஜிஆரைப் பார்த்திருந்தேன். அன்று அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்தது. முதல்வரைப் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தனர். கோடைக் காலம் முழுவதும் அவர் உதகையில் வந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று அங்கு பேசிய அனைவரும் சொன்னார்கள். நிறைவாகப் பேசிய முதல்வர், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என நகைச்சுவையாகப் பேசி மறுத்தார். கூட்டம் முடிந்து அவர் மேடையிலிருந்து இறங்கிவந்தார். நான் அவரைப் பார்த்தபடி அசையாமல் நின்றிருந்தேன். அவர் இன்னும் நெருங்கி நெருங்கி என் பக்கமாக வந்துகொண்டிருந்தார். அந்தப் பட்டு ஜிப்பாவில் தங்கம்போல ஜொலித்தபடி கூட்டத்தினரைப் பார்த்துக் கைகளை அசைத்தபடி வந்தார். அவர் பாதை மாறி வந்துவிட்டார்போலும். அதிகாரிகள் பதற்றத்தோடு அவரைத் தொடர்ந்து வந்தனர். என்னை நெருங்கிக் கடந்துபோகும்போது அனிச்சையாக என் கையை அவரை நோக்கி நீட்டினேன். எம்.ஜி.ஆர் என் கையைப் பற்றிக் குலுக்கினார். பொன்னிறக் கையால் என் கையைப் பிடித்து மென்மையாகக் குலுக்கிப் புன்னகைத்துவிட்டுக் கடந்தார். அந்த மிருதுவான கையைத் தொட்டுணர்ந்த அந்தக் கணம் கடந்துபோனது.

எதுவும் கடந்து போகும்! - 14 - நிறம் மாறும் அரசியல்

1991-ல் ஜெயலலிதா முதலமைச்சர் ஆகிவிட்டார். அப்போது நான் தென்னக இருப்புப் பாதையில் பொறியாளராகத் திருச்சியில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். என்னோடு பணிபுரிந்த மனோகரன் என்பவரின் மாமா (அக்காவின் கணவர்) கிருஷ்ணராயபுரம் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக அ.தி.மு.க சார்பாகச் சட்டமன்ற உறுப்பினராக ஆகியிருந்தார். அண்ணா தொழிற்சங்கத்தில் நண்பர்களும் இருந்ததனால் அ.தி.மு.க தொடர்பில் செயல்பாட்டில் இருந்தேன். முதல்வர் ஜெயலலிதாவை யாரும் நெருங்கவே முடியவில்லை. `எலைட்' முதலமைச்சராக விளங்கினார் ஜெயலலிதா. 1995-ம் ஆண்டு அ.தி.மு.க உட்கட்சித் தேர்தலை நடத்தினார். அதில் நான் போட்டியிட்டு வட்டச் செயலாளர் ஆனேன். உட்கட்சித் தேர்தலை நடத்திய கையோடு ஜெயலலிதா, தன் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தை அறிவித்துக் கட்சியில் உள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பிதழ் அனுப்பிவைத்தார். அந்தத் திருமணத்திற்குச் சென்ற நான் அடையாறில் பச்சை நிறப் பட்டுப் புடவையில் பத்தடி தொலைவில் வைத்துப் பார்த்தேன். பின்னர், திருச்சியில் அ.தி.மு.க மாநாடு. மாநாடு முடிந்து திரும்புகையில், விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் என் வட்டம் இருந்ததனால் நானும் என் பக்கத்து வட்டச் செயலாளரும் கைகளில் சால்வைகளுடன் பார்வையில் படுவதற்கு வசதியாகச் சுப்பிரமணியபுரத்தில் தோதான ஓர் இடத்தில் நின்றிருந்தோம். முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் எங்களைக் கடக்கும் முன் எங்கள் அருகே நின்றது. முன் இருக்கைக் கண்ணாடியை ஜெயலலிதா இறக்கினார். நான் என் கையிலிருந்த சால்வையைக் கொடுத்தேன். வாங்கிக்கொண்டார். அதற்குள் என்னோடு இருந்த வட்டச் செயலாளர் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்துவிட்டார். கறுப்புப்பூனைகள் வந்து அவரைத் தூக்கிவிட்டார்கள். நான் பதற்றம் கொள்ளாமல் என் விசிட்டிங் கார்டைக் கொடுத்துவிட்டு ‘‘வணக்கம்மா’’ என்று சொன்னேன். பதிலுக்கு, அவர் வணக்கம் சொல்லவில்லை. நான் தொடர்ந்து ‘‘வணக்கம்மா’’ எனச் சொல்லியபடியே இருக்கவும் அவர் பதிலுக்கு ‘‘வணக்கம்’’ என்று சொன்னார். இது நடந்து சில மாதங்களில் ஒரு காலைப்பொழுதில் நான் பணி நிமித்தமாக விமான நிலையம் இருந்த பகுதிக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது கற்கள் கொட்டப்பட்டிருந்த சாலையில் மஞ்சள் துண்டு அணிந்து அப்பகுதியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார் கலைஞர். உடன் கே.என்.நேரு, நாகவேணி வேலு, மண்வெட்டி துரை (இவருக்கு 1996 சட்ட மன்றத் தேர்தலில் திருவரம்பூர்த் தொகுதி கொடுக்கப்பட்டு வெற்றியும் பெற்றார்) ஆகியோர் இருந்தனர். நான் என் வண்டியை நிறுத்திவிட்டு கலைஞருக்கு வணக்கம் சொல்லும்விதமாகக் கைகூப்பினேன். அவரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார். உடனே அவ்விடம் விட்டு அகன்றுவிட்டேன்.

இப்போதெல்லாம் சட்டமன்ற உறுப்பினர்களையோ நாடாளுமன்ற உறுப்பினர்களையோ அமைச்சர்களையோ கட்சித் தொண்டர்களே எளிதில் பார்க்க முடியாது என்றால் மக்களால் எப்படி முடியும்? 1996-ம் ஆண்டுத் தேர்தலோடு கட்சித் தொண்டர்கள் இருந்தால்தான் தேர்தலைச் சந்திக்க முடியும் என்கிற நிலைமை முடிந்துவிட்டது. அந்த வகையில் என்னுடைய செட்தான் கடைசி. 1996-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இரட்டை இலையில் நின்று போட்டியிட்டேன்.

தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால் முதலில் தெருவில் சுவர் விளம்பரம் செய்வதற்கு இடம் பிடிக்க வேண்டும். அப்புறம் நம் தொடர்பில் உள்ளவர்களிடமும் மக்களிடமும் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிச் செய்ய வேண்டும். தேர்தல் நிதியை மக்களிடத்தில் கேட்டுப் பெற்றுக் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். அடுத்து வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு வீடுவீடாகச் சென்று சரிபார்க்க வேண்டும். அப்படிச் சரிபார்க்கும்போது வாக்காளர் காலமாகியிருந்தால் D (டெத்) என்று அதில் குறித்துவைக்க வேண்டும். பக்கத்துத் தெருவிற்குக் குடிமாறிச் சென்றிருந்தால் T (டிரான்ஸ்பர்) என்றும் வெளிநாடு சென்று இருந்தால் F என்றும் குறித்து வைக்க வேண்டும். இந்தப் பணியைச் செய்பவரே வேட்பாளரின் பிரதிநிதியாக வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவின்போது இருக்க வேண்டும். வாக்குப் பதிவின்போது விலைபோகாமல் இருப்பவர்களைக் கண்டுபிடித்து இந்தப் பணியில் அமர்த்த வேண்டும். இல்லையென்றால் வாக்குப் பதிவின் கடைசி மணி நேரத்தில், வாக்களிக்காதவர்களின் வாக்குகளை மொத்தமாக யாரோ ஒரு ‘வலுவான’ வேட்பாளருக்குப் போட்டுவிடுவார்கள்.

எதுவும் கடந்து போகும்! - 14 - நிறம் மாறும் அரசியல்

ஏனென்றால் இந்தப் புள்ளிவிவரங்கள்தான் கள்ள ஓட்டு விழாமல் பார்த்துக்கொள்ள உதவும்; கள்ள ஓட்டு போடவும் உதவும். அடுத்து வாக்காளர்களுக்கு வாக்கு அளிக்க உதவும் கட்சிச் சின்னம் அச்சிட்ட துண்டுச் சீட்டை வீடுவீடாகச் சென்று விநியோகிக்க வேண்டும். அப்போது நம்பகமான ஆள்களுக்கு ‘அன்பளிப்பு'ம் வழங்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முதல் நாள் இரவு விடிய விடியத் தோரணம் கட்டிக் கட்சிச் சின்னத்தை வாக்குச் சாவடிக்குப் போகும் வழியில் வரைய வேண்டும். வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்து அவர்களுக்கு உதவ வேண்டும். வாக்குப்பதிவு முடிந்தபின் வாக்கு எண்ணிக்கை முடியும் வரைக்கும் வாக்குப்பெட்டிகளைப் பாதுகாக்க வேண்டும்.

ஆனால், இன்று இவற்றில் பலவற்றைச் செய்யத் தேவையில்லை. தேர்தல் ஆணையமே முக்கியமானவற்றைச் செய்துவிடுகின்றது. கொடி நடுவது, தோரணம் கட்டுவது, பரப்புரை செய்வது, தேர்தல் வியூகம் அமைப்பது போன்ற வேலைகளை உணர்வுபூர்வமான தொண்டர்கள் செய்த நிலை மாறி அவை நிறுவனமயமாகிவிட்ட கார்ப்பரேட்டுகளிடமும் ஒப்பந்தக்காரர்களிடமும் உள்ளூர் மாபியாக்களிடமும் போய்விட்டன. பணம் - அரசியல் - பணம் என்கிற சூத்திரத்தில் கட்சிகள் இயங்குகின்றன. கார்ப்பரேட்டுகள் பெருமளவில் நிதியை வழங்குகின்றன. அது பின்பு மக்களின் வரிப் பணத்திலிருந்து கொழுத்த லாபத்தோடு திருப்பியளிக்கப்படுகிறது.

தொண்டர்கள், மக்கள் எல்லாமே பெயருக்குத்தான். அறிவியல்மயமாவதில் எத்தனை நன்மைகள் உள்ளனவோ அதற்குச் சமமான தீமைகளும் விளைகின்றன. இதை எப்படிக் கடந்து போவது? மக்களுக்கும் இயற்கைக்கும் பாதிப்பில்லாத சமச்சீரான அறிவியல் வளர்ச்சியும் பார்வையும் மட்டுமே இன்றைய தேவை. இவற்றையெல்லாம் இப்போதே உடனடியாகக் கவனித்துச் செயல்படத் தவறினால் பேரழிவிலிருந்து எவரும் தப்பவியலாது.

- இடைவெளி இணைப்போம்