மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எதுவும் கடந்து போகும்! - 7 - சொற்களால் கட்டப்படும் பாலம்!

எதுவும் கடந்து போகும்!
பிரீமியம் ஸ்டோரி
News
எதுவும் கடந்து போகும்!

இந்த வாரம் கை.அறிவழகன் - ஓவியங்கள்:நீலன்

கை.அறிவழகன்
கை.அறிவழகன்

‘`இப்ப இருக்கிற பிள்ளைங்ககிட்ட ஏதாச்சும் பேச முடியுதா? எல்லாம் அகராதி புடிச்சதுங்க’’ என்றொரு சொல்லாடலை வழியெங்கும் கேட்க முடியும். ஆனால், பல நேரங்களில் அந்த அகராதி என்பது ‘பதிலுரைத்தல்’, அவ்வளவுதான். அமைதியாகத் தலையை ஆட்டியபடி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த பிள்ளைகள், பதிலுக்குப் பதில் பேசத் தொடங்கியவுடன் முந்தைய தலைமுறைக்கு ஒரு கோபம் வருகிறது. இது தலைமுறை இடைவெளியாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது, ஆனால், தலைமுறை இடைவெளி என்பது மனித மனங்களில் உருப்பெறுவதில்லை. உலகம் பொருளை நோக்கிய ஓட்டத்தை அதிகப்படுத்தியதும் மிதமிஞ்சிய தொழில்நுட்ப வளர்ச்சியும்தான் தலைமுறை இடைவெளி.

தலைமுறை இடைவெளி குறித்த விவாதங்கள் வரும்போதெல்லாம் இசை, இலக்கியம், சினிமா மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை முன்வைக்கிறவர்கள் உண்டு. இசை இப்போது தொழில்நுட்பத்தோடு இணைந்து புதிய வடிவங்களில் பரிணமித்திருக்கிறது, இலக்கியம் ‘ஒரு ஊர்ல ஒரு நரி இருந்துச்சாம்...’ பாணியிலிருந்து மாறி, தொட முடியாத நுட்பமான மனித உணர்வுகளையும், கூறுகளையும் கண்டடைந்திருக்கிறது. சினிமா அசாத்தியமான பேசுபொருள்களை எல்லாம் பேசுவதோடு, மகத்தான தொழில்நுட்ப மாற்றங்களைக் கண்டடைந்து காட்சி அனுபவத்தை மறக்கவியலாத மானுட இயக்கமாக மாற்றியிருக்கிறது.

சில ஆண்டுகள் கடக்கும்போது இப்படிப் பல்வேறு துறைகளில் நிகழும் மாற்றங்களை நாம் தலைமுறை இடைவெளி என்று சொல்ல முடியாது. இவை வழக்கமாக நிகழும் தொழில்நுட்ப இடைவெளி. இன்றைய இளைஞர்கள் தங்கள் காலத்தின் உள்ளீடுகளை வைத்துதான் தரத்தைத் தீர்மானிப்பார்கள். அவர்களிடம், ‘`பார், எங்கள் காலத்து இசை எவ்வளவு அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் இருக்கிறது. கூச்சலும் இரைச்சலும் தவிர நீங்கள் கேட்கும் இசையில் என்ன இருக்கிறது? பார், எங்கள் காலத்து இலக்கியங்களில் நல்லொழுக்கங்கள் போதிக்கப்பட்டன. நீங்கள் ரசிப்பதெல்லாம் வெறும் குப்பைகள்’’ என்றால், அவர்கள் சிரிக்கத்தான் செய்வார்கள். அந்தச் சிரிப்பு தலைமுறை இடைவெளி அல்ல; அது தொழில்நுட்ப இடைவெளி, அது வெறும் கால இடைவெளி.

உண்மையான தலைமுறை இடைவெளியை நீங்கள் கவனிக்க வேண்டுமானால், காலையில் இருந்து முன்னிரவு வரைக்கும் சம்பாதிக்க ஓடுகிற அப்பாக்களைக் கவனியுங்கள்... பொருளாதாரச் சிக்கல்களையும், ஆண்களின் கவலைகளையும் தீர்ப்பதற்கு ஏதாவது யோசித்துக்கொண்டே எந்நேரமும் வீட்டைப் பராமரிக்கிற அம்மாக்களைக் கவனியுங்கள்... எட்டாம் வகுப்பிலேயே நீட் தேர்வுக்கான சிறப்பு வகுப்புகளுக்குப் போகிற குழந்தைகளைக் கவனியுங்கள்... சுருங்கிப்போன நகர வாழிடங்களில் இருந்து துரத்தப்பட்டு இல்லங்களில் வாழ்கிற முதியவர்களைக் கவனியுங்கள்... இவர்களுக்கு இடையே தொலைந்துபோன நெருக்கத்தையும் நேசத்தையும் கவனியுங்கள். ஏனெனில், நாம் கவலைப்பட வேண்டிய தலைமுறை இடைவெளி அதுதான்.

எதுவும் கடந்து போகும்! - 7 - சொற்களால் கட்டப்படும் பாலம்!

சில நாள்களுக்கு முன்பு சென்னையில் நண்பகலில் தேநீர் குடிப்பதற்காக நடந்துகொண்டிருந்தேன், பிரதான சாலையில் இருந்து குறுகலான ஒரு தெருவுக்குள் நுழையும் முனையில் சின்ன விபத்து. தன் வண்டியின் கீழே விழுந்து கிடந்தவர் ஒரு பெரியவர், அவருக்கு எதிர்ப்புறம் விழாமல் வண்டியில் அமர்ந்திருந்தான் உடற்கட்டான இளைஞன் ஒருவன். தவறாக வண்டி ஓட்டியவர் பெரியவர்தான் போலிருக்கிறது. அவரால் வண்டியின் சுமையை சமாளிக்க முடியவில்லை. ஓடிப் போய் வண்டிக்குக் கீழே கிடந்தவரைத் தூக்கி விட்டு, கைகளைக் கொடுத்து எழுப்ப முயன்றால், அந்த இளைஞனை வசைபாடியபடி எழுந்தார்.

வண்டியில் அமர்ந்தபடியே இளைஞன் அவரை முறைத்தபடி இருந்தான். அவன்மீதுதான் தவறென்பது போல பெரியவர் பேசியதில் அவனுக்குக் கோபம். உணர்ச்சி வேகத்தில் இருவரும் சொற்களால் சண்டையிடுகிறார்கள். ‘`சரி, விடுங்கய்யா. கை கால்ல ஏதாச்சும் அடிபட்டிருக்கான்னு பாருங்க. கொஞ்ச நேரம் அமைதியா உக்காருங்க’’ என்று சொல்லிவிட்டுக் கூர்ந்து பார்த்தால், படபடப்பாகவே இருந்தார். இளைஞனின் கோபமும் குறைந்தபாடில்லை, அவனுக்கு அருகில் போய் நின்று, ‘`விடு தம்பி, நம்ம அப்பா இதுமாதிரி ரோட்ல விழுந்திருந்தா, அவர் மேலே தப்பிருந்தாலும், அவருக்கு என்ன ஆச்சோன்னு கவனிக்க மாட்டோமா?’’ என்று கேட்டேன்.

அவ்வளவுதான்... வண்டியை ஓரமாக விட்டவன், தேநீர்க் கடையில் போய் தண்ணீர் வாங்கி வந்து பெரியவருக்குக் கொடுத்தான். ‘`கை காலெல்லாம் உதறுங்க, ஒன்னும் ஆகலையே’’ என்றவன், குனிந்து அவரது முழங்கால்களைத் தொடப்போனான். பெரியவரும் நெகிழ்ந்துபோனவராக கோபமும் தணிந்து, ‘`இல்ல, நான்தான் வேன் வருதேன்னு திடீர்னு ரொம்ப ஒதுங்கிட்டேன். தப்பு என் மேலதான்’’ என்று படபடப்பைக் குறைத்துக்கொண்டார். இருவரும் அங்கிருந்து பிரிந்து அவரவர் பாதையில் போனார்கள்.

நான் தேநீர் குடித்தபடி யோசித்தேன். தனித்தனியாக இயங்குகிற உடல்களை, மேலான அன்புதான் இணைக்கிறது. தாழ்ந்த குரலில் நேசத்தோடு நாம் வெளிப்படுத்துகிற சொற்களில் அமைதியாகிவிடுகிறார்கள் மனிதர்கள். மானுடத்தின் கூட்டு மனம் சங்கிலியின் கண்ணிகளைப் போல ஒவ்வொரு உடலிலும் தொக்கிக் கொண்டிருக்கிறது. அந்தக் கண்ணிகளை இணைக்கிற அற்புதமான நூல், அன்பு. எல்லா மனித மனங்களிலும் இருத்தலின் அதே வலியும், நெகிழும் மகிழ்ச்சியும் தவிர வேறென்னதான் இருக்கிறது?

அப்பாவின் உடலையும் மனதையும் பெரியவரின் கண்களில் பார்த்தேன், அந்த இளைஞனுக்கும் காட்டினேன். அன்பென்ன காசா பணமா, கொடுக்கக் குறைவதற்கு!

காலம்காலமாகத் தலைமுறை இடைவெளி என்பது பேசுபொருள்தான், நான் பள்ளி இறுதி வகுப்புகளில் இருந்தபோது அப்பா இல்லாத நேரத்தில் அவருடைய டி.வி.எஸ் 50-யை எடுத்துக்கொண்டு ஒரு சுற்றுச் சுற்றி வந்து சுவடு தெரியாமல் நிறுத்தியிருந்தாலும், அப்பாவின் காதுகளைச் செய்தி எட்டியிருக்கும். வழிநெடுக நமக்குத் தெரியாமல் நிறைய கண்கள் நம்மைக் கண்காணித்துக்கொண்டே இருந்தன. அவை நம்மீது நேசம் கொண்ட கண்கள். நம்மைத் தவறான வழிகளுக்குப் போகாமல் தடுத்த கண்கள்.

இன்றைய இளைய தலைமுறை மூன்று விதமாகப் பிரிந்திருக்கிறார்கள். ஒரு பகுதி பெற்றோரோடும், சமூகத்தோடும் நெருக்கமாக உரையாடுகிறவர்கள். எப்போதும் இல்லாத நெருக்கமான உரையாடலை முன்வைக்கிறார்கள். 10-20 ஆண்டுகளுக்கு முன்பாகக் குடும்பங்களில் மிக ரகசியமாகப் பேசப்பட்ட விஷயங்களைக்கூட நகைச்சுவையோடும் பகடியோடும் இவர்களால் பேச முடிகிறது, தங்கள் செயல்பாடுகளையும் விமர்சித்துக் கொள்கிற ரகம் இவர்கள், நகர்ப்புறங்களில் இத்தகைய இளைஞர்களை அதிகம் சந்திக்க முடிகிறது. தலைமுறை இடை வெளியை வெல்ல முடிந்தவர்கள் இவர்கள்.

இரண்டாவது பகுதி, கேட்ஜெட் களோடு நெருக்கமாக உரையாடுபவர்கள். பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகிற சூழலில் தனிமையில் தள்ளப்படு பவர்கள். சமூக இணையதளங்களில் இருக்கிற நண்பர்களோடு தொடர்ந்து உரையாடுபவர்கள், அல்லது இணைய விளையாட்டுகளில் மூழ்கிப்போகிறவர்கள். இந்த வகை இளைஞர்களுக்கு நேரடியான ஒரு நல்ல நட்போ, மாற்றுச்சூழலோ வாய்க்கும் பட்சத்தில் இவர்கள் தலைமுறை இடைவெளியைத் தாண்டி விளையாட்டுகளில் சாதனையாளர்களாகவும், படைப்பாற்றல் கொண்ட வர்களாகவும் மாறி இருப்பதை நான் கவனித்திருக்கிறேன்.

மூன்றாவது பகுதியினர் மிக முக்கியமானவர்கள். இவர்கள் ரகசியமானவர்கள். பொதுச் சமூகத்துடனோ, குடும்பத்தினருடனோ உரையாடலைத் தவிர்ப்பவர்கள் இவர்கள். முதல் இரண்டு பகுதியினர் போல இல்லாமல் இவர்கள் ஆபத்தானவர்கள், அல்லது, ஆபத்தை நோக்கிப் போகிறவர்கள். ஏதாவது ஒரு துயரத்தையோ, மிதமிஞ்சிய மகிழ்ச்சியையோ அடைகாத்தபடி மன அழுத்தத்தை நோக்கிப்போகிறவர்கள். மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்க ஏதாவது ஒரு பழக்கத்தில் மிக வேகமாகச் சிக்கிக்கொள்பவர்கள் இவர்கள்தான். தலைமுறை இடைவெளியை அதிகப்படுத்துபவர்கள் இவர்கள்தான்.

தலைமுறை இடைவெளிகளை நிரப்புவதில், தடம் புரளாமல் பல குடும்பங்கள் பயணிப்பதில் பெண்களின் பங்கு மகத்தானது, நமது குடும்பங்களில் அப்பாவுக்கும் மகன்களுக்கும் இடையில் ஓர் இடைவெளி எப்போதும் இருந்துகொண்டே இருக்கும், அப்பாக்களுடனான நேரடி உரையாடல்களைத் தவிர்த்து மகன்கள் தங்களுக்கான தனி உலகைக் கனவு காண்கிறார்கள், இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிற சூழலில் குடும்ப உறவுகளைக் கரை சேர்ப்பவர்கள் அம்மாக்கள். ஆண் பிள்ளைகளின் சண்டித் தனத்தை, அவர்களின் தவறுகளை மன்னித்து, அவர்களுக்காக எப்போதும் கணவன்மாரோடு போராடிக்கொண்டே இருக்கிற அம்மாக்களைப் பெரும்பாலான வீடுகளில் பார்க்க முடியும்.

அண்ணன் தம்பிகளுக் கிடையிலான உரசல்கள், சொத்து விவகாரங்களில், குடும்பங்களில் உருவாகும் மோதல்கள் எல்லாம் குற்றங்களாக மாறிவிடாமல் இடையில் நின்று அரணாகப் பாதுகாப்பவர்களும் பல இடங்களில் சகோதரிகள்தான். லாக்டௌன் முடிந்து பலரும் வேலைகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்த காலத்தில் வீட்டுக்குப் பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த சில குழந்தைகளிடம் உரையாடினேன், 12 வயதிருக்கும் ஒரு பெண் குழந்தை தன் தம்பியின் கைகளை விடாமல் பற்றிக்கொண்டும், அவனது இயக்கத்தைத் தொடர்ந்து கண்காணித்தபடியும் விளையாடிக்கொண்டிருந்தாள். அந்தக் குழந்தையிடம் ‘`உங்கள் அம்மாவும் அப்பாவும் எங்கே?’’ என்று கேட்டேன்.

அப்பா தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்பதற்காக காலை 6 மணிக்கெல்லாம் சென்றுவிடுவார். அம்மா ஓர் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலைக்குப் போகிறவர். இருவரும் வீடு திரும்புவதற்கு இரவாகிவிடும். அதுவரைக்கும் தம்பிக்குத் தாயும் தந்தையுமாய் இருந்து கண்ணிமை போலப் பாதுகாக்கிற அந்த மனம் இந்தத் தலைமுறை மனம்தான். யோசித்துப் பாருங்கள், 12 வயதில் இத்தனை பொறுப்போடு நடந்து கொள்கிற மனதை அவள் எங்கிருந்து பெற்றுக்கொண்டாள்? அந்தக் குடும்பத்தில் இடைவெளி ஏற்படாமல் பாதுகாக்கிற மனோதிடத்தையும், முதிர்ச்சியையும் யாரும் அந்தக் குழந்தைக்குக் கற்றுக்கொடுத்திருக்க மாட்டார்கள். தொடர்ந்து இந்தியச் சமூகத்தில் ஆணுலகம் கடைப்பிடிக்கிற ஆதிக்க மேலாண்மையைக் கண்டுகொள்ளாமல் தலைமுறை இடைவெளியை இட்டு நிரப்புகிற பெண்களின் மேன்மையை நான் அந்தக் குழந்தையிடம் பார்த்தேன்.

எதுவும் கடந்து போகும்! - 7 - சொற்களால் கட்டப்படும் பாலம்!

தலைமுறை இடைவெளி மட்டுமல்ல, மனித மனங்களில் இருக்கும் எந்த இடைவெளியையும் நிறைத்து மேவுபவை சொற்கள்தான். இதற்குத் தேவைப்படும் ஆரோக்கியமான உரையாடலை முந்தைய தலைமுறைதான் முன்னெடுக்க வேண்டும். இளையவர்களைக் குற்றம் சாட்டுவதை விட முன்னோடிகளாக இருக்க வேண்டியது அனுபவம் வாய்ந்த பெரியவர்கள்தான். தொடர்ந்து மற்றவர்களால் விமர்சிக்கப்படுகிற குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் உரையாடலை முன்னெடுப்பது அல்லது பெற்றோர் Vs பிள்ளைகள் உறவானது மிக அழகிய முறையில் நடைமுறையில் இருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவர்கள் தங்கள் அன்றாட அலுவலில் அனுபவித்த விஷயங்களை, பள்ளி கல்லூரிகளில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை என்று அத்தனையையும் குடும்பத்தாரோடு பகிர்ந்து கொள்கிறார்கள். தங்கள் செயல் பாடுகளில் நிறைகுறைகளைக் குறித்து அலசுகிறார்கள். இந்தப் பழக்கம் ஒரு நேர்மறையான வாழ்க்கை முறையை நோக்கி அவர்களை நகர்த்துகிறது. இந்த நற்பண்புகளை நாம் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதில் எந்தத் தப்புமில்லை.

இன்றைய இளைஞர்கள் வெளிப்படைத்தன்மை அதிகம் கொண்டவர்களாக மாறியிருக்கிறார்கள், முந்தைய தலைமுறை சொல்லத் தயங்கிய விஷயங்களை தடாலடியாகச் சொல்கிறார்கள். பிடிக்காத விஷயங்களைக்கூட மரியாதை நிமித்தமாக முந்தைய தலைமுறை ஏற்றுக்கொண்டது. அதையெல்லாம் மறுப்பதில் இன்றைய இளைஞர்கள் வெகுவாக முன்னேறி இருக்கிறார்கள். ஒரு இளம் கேமராமேனை நான் பணியிடத்தில் சந்தித்தேன். பணியில் சேர்ந்த இரண்டாவது நாளன்று படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபொழுதில் நாயகனிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல், ‘`நீங்கள் உடலை இப்படிச் சாய்த்துக்கொள்வது எந்த வகையிலும் காட்சிக்கு உகந்ததாக இருக்காது. உங்கள் முகத்தில் களைப்பும் உறக்கமும் இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு வாருங்கள். பிறகு படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்’’ என்று தடாலடியாகச் சொன்னான். முந்தைய தலைமுறை கேமராமேன்கள் சொல்லத் தயங்கிய விஷயம், எடிட்டிங்கில் சமாளித்துக்கொள்ளலாம் என்று சமாதானம் செய்துகொண்ட விஷயம். ஒரு சில சொற்களில் சரி செய்தான் அந்த இளைஞன். அதன்பின் அந்த நாயகன் உடல்மொழியில் மிகுந்த கவனம் செலுத்தியதைப் பார்க்க முடிகிறது.

எதுவும் கடந்து போகும்! - 7 - சொற்களால் கட்டப்படும் பாலம்!

பிறகு மாலையில் அந்த இளைஞனிடம் உரையாடும் போது அவன் சொன்னது இன்னும் வியப்பானது. “அண்ணா, நான் என் தொழிலுக்கு நேர்மையானவனாக இருக்க வேண்டுமானால், முதலில் சமரசங்களைக் களைந்தாக வேண்டும், சமரசங்கள் ஒருபோதும் தொழில் நேர்த்தி கொண்ட கலைஞர்களை உருவாக்குவதில்லை.’’ இதுவும் தலைமுறை இடைவெளிதான், முந்தைய தலைமுறை முகதாட்சண்யம் பார்க்கிற, சமரசம் செய்துகொள்கிற தலைமுறை. அதை ‘மரியாதை நிமித்தமாக’ என்று அடைமொழியிட்ட தலைமுறை. இன்றைய இளைஞர்களிடம் நீங்கள் அத்தகைய முகதாட்சண்யத்தை எதிர்பார்க்க முடியாது.

மனித இனம் தோன்றி வளர்ச்சியுற்ற காலத்திலிருந்து இன்றுவரை மட்டுமல்ல, நாளையும்கூட மனங்களில் புதிய உணர்வுகள் எதுவும் தோன்றிவிடப்போவதில்லை, அதே அன்பு, அதே கோபம், அதே மகிழ்ச்சி, அதே காதல், அதே துயரங்கள்தான். காலத்தின் போக்கில் இடைவெளிகள் இயல்பானவைதான். ஆனால், அந்த இடைவெளிகளை நிரப்புவதற்கான சொற்களையும் செயல்பாடுகளையும் நாம் கைவசம் வைத்திருக்கிறோமா என்பதுதான் கேள்வி. இடைவெளிகளில் சொற்களின் பாலத்தைக் கட்டத் தெரிந்த சமூகத்துக்குத் தலைமுறை இடைவெளி ஒன்றும் இட்டு நிரப்ப முடியாத பள்ளத்தாக்கு இல்லை.

- இடைவெளி இணைப்போம்