Published:Updated:

யூரோ டூர் - 11 | விக்டோரியா மகாராணியின் பேரனே ஏன் பிரிட்டனுக்கு எதிராகப் போர் தொடுத்தார்?

Queen Victoria, Kaiser Wilhelm II
News
Queen Victoria, Kaiser Wilhelm II

Older men declare war. But it is the youth that must fight and die. என்ற Herbert Hoover-ன் கூற்றுப் போல, பெருந்தலைகளின் வஞ்சம், குரோதம், ஆசை, தேவை, அலட்சியம், பழிவாங்கல், என தனிப்பட்ட சுயலாபத்திற்காக பலிகொடுக்கப்பட்ட உயிர்கள் பல கோடி.

Published:Updated:

யூரோ டூர் - 11 | விக்டோரியா மகாராணியின் பேரனே ஏன் பிரிட்டனுக்கு எதிராகப் போர் தொடுத்தார்?

Older men declare war. But it is the youth that must fight and die. என்ற Herbert Hoover-ன் கூற்றுப் போல, பெருந்தலைகளின் வஞ்சம், குரோதம், ஆசை, தேவை, அலட்சியம், பழிவாங்கல், என தனிப்பட்ட சுயலாபத்திற்காக பலிகொடுக்கப்பட்ட உயிர்கள் பல கோடி.

Queen Victoria, Kaiser Wilhelm II
News
Queen Victoria, Kaiser Wilhelm II

வரலாற்றில் நிகழ்ந்த பல கோர யுத்தங்களின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் அதன் ஆரம்பப்புள்ளி யாரோ ஒரு தனிமனிதனின் ஈகோ, கோபம், வஞ்சம், துரோகம் என்றுதான் இருக்கும். நாடுகளுக்கு இடையேயான யுத்தங்களில் பிரதானமாக பொருளாதார ஆதாயம், பிராந்திய ஆதாயம், மதவாதம், தேசியவாதம், பழிவாங்கல் போன்ற பல்வேறு காரணங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் அதன் பின்னணியில் இருந்து இயக்கும் சக்திவாய்ந்த தலைவனின் முடிவில்தான் அப்போரின் தலைவிதியே எழுதப்பட்டு இருக்கும்.

நான்கு வருடங்களில் ஐரோப்பாவை சிதைத்து, உலகின் தலையெழுத்தையே தலைகீழாக மாற்றிய உக்கிரமான முதல் உலகப் போரின் சில முக்கியமான அரசியல் ராஜாதந்திரிகள் இங்கே...

Kaiser Wilhelm II (ஜெர்மனி)

முதல் உலகப்போரின் போது, ஒட்டுமொத்த உலகின் கண்களிலும் விரலை விட்டு ஆட்டிய ஜெர்மனியின் ஆட்ட நாயகன் பேரரசர் கைசர் வில்ஹெல்ம் II. உக்கிரமான பேச்சுக்கும், உறுதியான ராஜாதந்திரத்துக்கும் பெயர்போன பேரரசர் கைசர் உருவாக்கிய ஜெர்மன் ராணுவம் நேச நாடுகளுக்கு மரண பயத்தை காட்டியது. ஜெர்மன் ராணுவத்தின் வலிமையை அதிகரித்து, ஒரு மிகப்பெரிய ஜெர்மன் கடற்படை சாம்ராஜ்யத்தை உருவாக்கி, உலகிலேயே அசைக்க முடியாத காலனித்துவ மற்றும் பொருளாதார சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்று வில்ஹெல்ம் கண்ட கனவு, பின்னாளில் ஒரு உலக மகா யுத்தத்திற்கு விதை போட்டது.

Kaiser Wilhelm II
Kaiser Wilhelm II
Thomas Heinrich Voigt, Public domain, via Wikimedia Commons

யார் இந்த கைசர் வில்ஹெல்ம்?

பிரிட்டனின் அதி சக்தி வாய்ந்த அரசாட்சியை நடத்திய பேரரசி விக்டோரியாவின் பேரக் குழந்தைதான் இவர். புலி வம்சத்தில் பிறந்தது பூனையாகுமா என்பதை நிரூபிக்கும் விதமாக வீரத்தோடு வளர்ந்த கைசர் வில்ஹெல்ம், பேரரசி விக்டோரியாவினாலேயே கட்டுப்படுத்த முடியாத கலகக்கார பிள்ளையாகவும் இருந்தார்.

ஜெர்மனியின் கடைசி பேரரசரான கைசர் வில்ஹெல்ம் II (1859-1941), ஜெர்மன் அரசர் பிரடெரிக் III-க்கும் இங்கிலாந்து விக்டோரியா மகாராணியின் மூத்த மகளான இளவரசி விக்டோரியாவுக்கும் மகனாக, 1859 ஜனவரி 27-ல் போட்ஸ்டாமில் பிறந்தார். பிறப்பிலேயே இடது கை, வலது கையை விட சிறிது குட்டையாக இருப்பதுபோல பிறந்த வில்ஹெல்ம், அதை மறைக்க மிகவும் முரட்டுத்தனமான வழிகளைத் தேர்ந்தெடுத்தார்.

பள்ளிக்காலத்தில் திறமையான மாணவனான வில்ஹெல்ம், 18-வது வயதில் அரசியல் மற்றும் சட்ட நிர்வாக பட்டப்படிப்பை முடித்து இங்கிலாந்து மகாராணி விக்டோரியாவிடம் இருந்து மிக உயர்ந்த விருதை வாங்கினார். தனது 21-வது வயதில் ராணுவத்தில் இணைந்த வில்ஹெல்ம், 29வது வயதில் தந்தையின் மறைவிற்குப் பின் அரியணை ஏறினார். ஜெர்மனியில் ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசக் கல்வி உட்பட பல சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்திய வில்ஹெல்ம், அரசியல் மேடையில் ஜெர்மனி ஒரு அதிகாரம் மிக்க ராஜ்ஜியமாக வளர வேண்டும் என்று விருப்பம் கொண்டார்.

அதிரடியான முடிவுகளை எடுப்பதில் புகழ் பெற்ற வில்ஹெல்ம்-II கையில் ஜெர்மன் அரசியலமைப்பு இரண்டு முக்கிய அதிகாரங்களைக் கொடுத்தது. முதலாவதாக, ஜெர்மன் சிவில் அரசாங்கத்தின் Chancellor பதிவிக்கான அதிபரை இஷ்டத்திற்கு நியமிக்கவோ, பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறியவோ முடியும். இரண்டாவதாக, ஜெர்மன் ராணுவ மற்றும் கடற்படையின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் பேரரசர் கைசர் கைவசம் இருந்தது.

Kaiser Wilhelm II
Kaiser Wilhelm II
Emil Rothe

மிகவும் கட்டுப்பாட்டோடு வளர்க்கப்பட்ட வில்ஹெல்மின் சிக்கலான குணாதிசயமும், இறுக்கமான வாழ்க்கைமுறையும் முதல் உலகப்போரின் அழிவுகளில் முக்கிய பங்கு வகித்தது. விக்டோரியா மகாராணியின் நெருங்கிய சொந்தமாயினும் கூட, பிரிட்டன் மீதான அவரது தெளிவற்ற அபிப்பிராயங்களும், வெறுப்பு மனப்பான்மையும் இரு நாடுகளுக்கிடையேயான உறவை மோசமாக்கியது. முதல் உலகப் போரில் ஜெர்மனி தோல்வியடையும் என்பதை உணர்ந்த பின், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு இணங்க பதவி துறந்த வில்ஹெல்ம், நவம்பர் 9, 1918 அன்று அரியணையை கைவிட்டு நெதர்லாந்துக்கு தப்பிச் சென்று, தன் இறப்பு வரை (ஜூன் 4, 1941) அங்கேயே வாழ்ந்தார். உண்மையிலேயே பிற்காலத்தில் ஜெர்மனிக்குத் திரும்பலாம் என்ற முடிவை பேரரசர் கைசர், ஹிண்டன்பர்க் ஜனாதிபதியானார் என்ற செய்தியால் மாற்றிக்கொண்டார்.

தான் வளர்த்த கடா ஹிண்டன்பர்க்கினால் தனக்கு பெரிய துரோகம் இழைக்கப்பட்டது என்ற கசப்பான உணர்வு பேரரசர் கைசர் மனதில் கடைசி வரை பதிந்திருந்தது.

“Germany must have her place in the Sun” என்று தன் லட்சியத்தை உலகுக்கு முழக்கமிட்ட கைசர் வில்ஹெல்ம் முதல் உலகப்போரின் இரும்பு மனிதன்.

ஜெர்மனியின் மாஸ்டர் மைண்ட் - Hindenburg & Ludendorff

முதல் உலகப்போரில் ஜெர்மனியின் அசைக்க முடியா வெற்றிகளுக்கு சொந்தக்காரர்கள். நேச நாடுகள் சுற்றி வளைத்து அடித்தபோதும் சிங்கம் போல தனித்து நின்று திருப்பியடித்த ஜெர்மனியின் தளபதிகள். The Battle Of Somme-யில் பிரான்சையும் பிரிட்டனையும் ஓட ஓட விரட்டி அடித்த வீர நாயகர்கள். Battle of Tannenberg-ல் ரஷ்யப் படைகளை மண்ணைக் கவ்வ வைத்த ஜெர்மனின் அதிரடி ஆட்டக்காரர்கள். ஒற்றை ஆளாக வெற்றியை நோக்கி ஜெர்மனி சீரிப்பாய, துல்லியமான ஸ்கெட்ச் போட்ட ஜெர்மனியின் மாஸ்டர் மைண்ட் ஹிண்டன்பர்க் மற்றும் லுடென்டோர்ஃப் இருவரும் முதல் உலகப் போரின் போக்கையே திசை திருப்பிய முக்கிய இரண்டு புள்ளிகள்.

ஜெர்மனியின் ஃபீல்ட் மார்ஷல் பால் வான் ஹிண்டன்பர்க் முதல் உலகப்போரில் ஜெர்மன் ராணுவத்தை வலுவோடு தாங்கிப் பிடித்த இரும்புத் தூண். ராணுவத் தளபதியாகவும் பின்னர் ஜெர்மன் குடியரசின் ஜனாதிபதியாகவும் இருந்த ஹிண்டன்பர்க், ஜெர்மனியின் வெற்றிப் பக்கங்களின் கதாநாயகன். கிழக்குப் பகுதியில் ஜெர்மன் ராணுவத்தின் முயற்சிகளை வலுப்படுத்த, ஓய்விலிருந்த ஹிண்டன்பர்க், பேரரசர் கைசரால் மீண்டும் அழைக்கப்பட்டு களத்தில் இறக்கப்பட்டார். தன் தளபதி லுடென்டோர்ஃப்புடன் கைகோத்து இவர் ஆடிய ஒவ்வொரு ஆட்டமும் எதிரிகளை துவம்சம் பண்ணித் தூக்கி எறிந்தது.

Paul v. Hindenburg, Erich Ludendorff
Paul v. Hindenburg, Erich Ludendorff
Bundesarchiv, Bild 146-1970-073-47 / CC-BY-SA 3.0, CC BY-SA 3.0 DE, via Wikimedia Commons

ஜெர்மன் ராணுவத்தின் ஜெனரல் எரிச் லுடென்டோர்ஃப் முதல் உலகப் போரின் ஜெர்மனியின் அச்சாணி. ஜெர்மன் ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்ற இவரது ஆக்ரோஷமான பேச்சும் வெளிப்படையான நடவடிக்கைகளும் ஜெர்மன் ராணுவத்தில் இவரை தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றியது. முதலாம் உலகப் போரின்போது கிழக்கு முன்னணியில் அவர் ஆடிய ருத்ரதாண்டவம் நேசநாடுகளை கதிகலங்க வைத்தது. உலகமே அதிர்ந்து போகும் வண்ணம் கிழக்கில் ஒரு ராணுவ சாம்ராஜ்யத்தையே கட்டியெழுப்பியவர்.

முதல் உலகப் போர் வெடித்த போது ஜெர்மன் ராணுவத்தின் ஃபீல்ட் மார்ஷல் ஹிண்டன்பர்க்கின் இரண்டாவது தளபதியாக இணைந்த லுடென்டார்ஃப், ஹிண்டன்பர்க்குடன் சேர்ந்து வகுத்த ஒவ்வொரு திட்டங்களும் சாணக்கிய தந்திரங்கள். இவர்களது துல்லியமான திட்டங்கள் ஜெர்மனியின் அபார வெற்றிக்கு அடித்தளமிட்டது. கடைசி வரை கிழக்கு முன்னணியை யாருமே நெருங்க முடியாத பகுதியாக வைத்திருந்த இந்தக் கூட்டணி, போரின் இறுதிக் கட்டத்தில் மேற்கு முன்னணிக்கு அழைக்கப்பட்டது. ஆனால், ஏற்கெனவே ஒரு மில்லியனுக்கும் அதிகமான வீரர்களை மேற்கு முன்னணியில் இழந்திருந்த ஜெர்மனியின் பின் வாங்கலுக்கு துரதிஷ்டவசமாக இவர்கள் தலைமை தாங்க வேண்டிய சூழல் உருவானது.

ஜெர்மனி எனும் பலம் வாய்ந்த ராணுவ சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய இரு தூண்கள் Hindenburg & Ludendorff.

பிரிட்டனின் Lord Horatio Kitchener

முதல் உலகப் போரில் பிரிட்டனை வழி நடத்திய முரட்டுச் சிங்கம் பிரிட்டிஷ் ராணுவ தலைவர் ஹொராஷியோ கிச்சனர். முன்னெப்போதும் இல்லாத அளவில் பிரிட்டனில் ராணுவ படை பலத்தை அதிகரித்த இவரின் ‘Your country needs you’ என்ற எழுச்சியூட்டும் போஸ்டர் லட்சக்கணக்கான பிரிட்டிஷ் இளைஞர்களைக் கவர்ந்திழுத்தது.

24 ஜூன் 1850-ல் அயர்லாந்தின் கவுன்ட்டி கெர்ரியில் பிறந்த ஹொராஷியோ கிச்சனர், சுவிட்சர்லாந்திலும், வூல்விச்சின் ராயல் மிலிட்டரி அகாடமியிலும் கல்வி பயின்றவர். 1871-ல் ராயல் இன்ஜினியர்ஸில் சேர்ந்த கிச்சனர், 1886-ல் கிழக்கு சூடானின் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். ஆறு வருடங்களுக்குப் பிறகு எகிப்தின் பிரிட்டிஷ் ராணுவ தளபதியான இவர், 1896-ம் ஆண்டில் அல்-மஹ்தியின் படைகளிலிருந்து சூடானைக் கைப்பற்றி பிரிட்டிஷ் வசமாக்கியதை தொடர்ந்து இவரது ஹீரோயிசம் ஆரம்பமானது. சூடானின் பிரிட்டிஷ் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஹொராஷியோ கிச்சனர், 1900-ம் ஆண்டில், போயர் போரில் பிரிட்டிஷ் தளபதியான லார்ட் ராபர்ட்ஸின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

Portrait of Field-Marshal Horatio Herbert Kitchener
Portrait of Field-Marshal Horatio Herbert Kitchener
National Portrait Gallery London

1902-ல் இந்தியாவில் கமாண்டராகவும், 1911-ல் எகிப்தின் அதிபராகவும் பதவி வகித்த ஹொராஷியோ கிச்சனர், முதல் உலக யுத்தம் தொடங்கியபோது, பிரிட்டனின் மாநிலச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டார். முதல் உலகப் போர் கிறிஸ்துமஸுக்குள் முடிவடைந்து விடும் என்று பிரிட்டன் எதிர்பார்த்த போது, “இல்லை இந்தப் போர் பல வருடங்களுக்கு நீடிக்கப் போகிறது” என்பதை மிகத் துல்லியமாக கணித்தார். அத்தோடு அதற்கான சரியான திட்டமிடலையும் தொடங்கி, லட்சக்கணக்கான தன்னார்வலர்களை ராணுவத்தில் விரைவாகப் பணியமர்த்தி பயிற்சிகளை அளிக்கத் தொடங்கினார்.

முதல் உலகப்போரில் பிரிட்டன் அசைந்து கொடுக்காமல் அடித்து முன்னேற, பின்னால் இருந்த மாஸ்டர் ப்ளான் ஹொராஷியோ கிச்சனர்.

பிரான்ஸின் Georges Clemenceau

Tiger, Father of Victory போன்ற பெயர்களால் அழைக்கப்பட்ட பிரெஞ்சு பிரதம மந்திரி ஜார்ஜ் கிளெமென்சியோ, முதல் உலகப்போரில் மைய நாடுகளைத் துவம்சம் செய்த பிரான்சின் வீர வேங்கை. செப்டம்பர் 28, 1841-ல் பிரான்ஸில் பிறந்த கிளெமென்சியோ, ஒரு புகழ்பெற்ற அரசியல்வாதியாகவும், பரபரப்பான பத்திரிகையாளராகவும், பொறுப்பான மருத்துவராகவும் மட்டுமல்ல, முதல் உலகப்போரில் கூட்டணி வெற்றியின் முக்கிய பங்களிப்பாளராகவும், போருக்குப் பிந்தைய வெர்சாய்ஸ் ஒப்பந்தத்தின் பிரதான கட்டமைப்பாளராகவும் வரலாற்றின் பக்கங்களை நிறைக்கிறார்.

மருத்துவரான கிளெமென்சியோவின் அரசியல் வாழ்க்கை 1870-ம் ஆண்டில் பாரிஸில் மாண்ட்மார்ட்டரின் மேயராக ஆரம்பமானது. ஜெர்மனியின் காலடியில் தோற்று வீழ்ந்த பிரான்சின் தோல்வியை அவர் ஏற்க மறுத்தாலும், அதற்குப் பதிலாக வன்முறையைப் பயன்படுத்த அவர் மனம் அனுமதிக்கவில்லை. மார்ச் 1871-ல் பிரான்ஸின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அல்சேஸ்-லோரெய்ன் (Alsace-Lorraine) ஜெர்மனியிடம் ஒப்படைக்கப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். எனினும் அது கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் நீடித்த அவரது வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையின் முடிவாக மாறவில்லை.

Français : Georges Clemenceau par Nadar
Français : Georges Clemenceau par Nadar
Paul Nadar, Public domain, via Wikimedia Commons

பிரான்ஸின் மிகச் சிறந்த பேச்சாளராக இருந்த இவர் ஒரு நேர்மையான பத்திரிகையாளரும் கூட. தனது நண்பர்களையே தன் எழுத்தின் மூலம் எதிர்க்க இவர் தவறியதில்லை. 1914-ல் போர் வெடித்த போது, வேட்டையை முடித்து ஓய்வை நோக்கி சென்றுகொண்டிருந்த க்ளெமென்சியோ எனும் புலி, எதிரிகளை பந்தாட மீண்டும் களத்தில் குதித்தது. அதுவரை பதுக்கி வைத்திருந்த ஜெர்மன் வெறுப்பை உமிழ, அந்தப் போரை க்ளெமென்சியோ சரியாக பயன்படுத்திக் கொண்டார். Alsace-Lorraine-ல் ஜெர்மனியிடம் பட்ட அவமானத்தை, வட்டியும் முதலுமாக திருப்பி செலுத்த இதுதான் தருணம் என்று உணர்ந்த இந்த அடிபட்ட வேங்கை, தேக்கி வைத்திருந்த வேகத்தோடு தீவிரமாக வேட்டையில் இறங்கியது. பிரான்ஸின் ஏனைய தலைவர்கள் ஜெர்மனியுடனான ஒரு பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை நிகழ்த்த பரிசீலித்தபோது, அதை மறுத்து, பிரான்ஸின் பூரண வெற்றிக்காக போராட க்ளெமென்சியோ எடுத்த முடிவு உலகப் போரில் ஒரு முக்கிய திருப்புமுனை.

அடுத்த 20 வருடங்களில் ஜெர்மனி ஒரு மூர்க்கமான போருடன் மீண்டும் பொங்கியெழக் காரணமாக இருந்த வெர்சாய்ஸ் ஒப்பந்தத்தில் ஜெர்மனிக்கு எதிரான கடுமையான தீர்மானங்களில் க்ளெமென்சியோவின் செல்வாக்கும் பங்களிப்பு மிக முக்கியமாக இருந்தது.

ரஷ்யாவின் Nicholas II

கடைசி ரஷ்ய பேரரசரான நிக்கோலஸ் II, முதல் உலகப் போரில் ரஷ்யா நுழைவதற்கான தீர்க்கமான முடிவை எடுத்த முக்கியமான செக் மேக்கர். ரஷ்ய பேரரசின் வாரிசான அலெக்சாண்டர் அலெக்ஸாண்ட்ரோவிச் (Alexander Alexandrovich) மற்றும் டென்மார்க் பட்டத்து இளவரசி மரியா ஃபெடோரோவ்னா (Maria Feodorovna) விற்கு, மே 6, 1868-ல் பிறந்த நிக்கோலஸ் II, பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் பேத்தியை மணம் முடித்தார்.

ராஜவம்சத்தவர் கற்கும் மிக உயர்மட்ட கல்லூரியில் தனது கல்வியை கற்ற நிக்கோலஸ் II அரசியல், வரலாறு மற்றும் வெளிநாட்டு மொழிகளில் சிறந்து விளங்கினார். 19 வயதாக இருந்தபோது ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த அவர் 3 ஆண்டுகளில் கர்னல் பதவிக்கு உயர்ந்தார். ரஷ்யாவின் பட்டத்து இளவரசராக இருந்த போதிலும், ராணுவத்தின் மேலிருந்த பெருங்காதலால் தன்னை இராணுவ சேவையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். 49-வது வயதில் தந்தையின் மறைவின் பின் சிம்மாசனம் நிக்கோலஸ் II-ன் கைகளுக்கு வந்தபோது அவர் அதற்கு தயாராக இருக்கவில்லை. இதுபற்றி தன் நெருங்கிய நண்பரிடம் "நான் ஒரு பேரரசராவதற்குத் தயாராக இல்லை. எனக்கு அரசியல் பற்றியோ, ஆட்சி பற்றியோ எதுவும் தெரியாது." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Photo of Nicholas II of Russia
Photo of Nicholas II of Russia
Library of Congress

பேரரசாராக நிக்கோலஸ் II-ன் ஆரம்ப கால ஆட்சியில் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கம், புதிய நிலப்பரப்பைக் கைப்பற்றுவதை விட, ஐரோப்பாவில் ரஷ்யாவின் நிலையை தக்க வைத்துக் கொள்வதாக இருந்தது. இருந்தாலும் ஆசை யாரை விட்டது... 1890-களில், ரஷ்ய பொருளாதாரம் பெருமலர்ச்சி அடைந்ததால், அவர் தனது எல்லையை தூரக் கிழக்கில் விரிவுபடுத்த தொடங்கினார். அதைத்தொடர்ந்து ரஷ்யாவை பசிபிக் கடற்கரையுடன் இணைக்கும் டிரான்ஸ்-சைபீரியன் ரயில் பாதையின் கட்டுமானம் தொடங்கியது. இது ஜப்பானுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியதால் ஜப்பான், ரஷ்யாவை தாக்கத் தொடங்கியது. இதில் படு தோல்வியடைந்த நிக்கோலஸின் இராணுவம் ஜப்பானிடம் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முதல் உலகப் போரின் தொடக்கத்தில், ரஷ்ய படைகள் அளவில் பெரியதாக இருந்தாலும், சரியான வழிநடத்தல் இல்லாமல் மிகவும் மோசமாக செயல்பட்டன. இதனால் ரஷ்ய ராணுவத்தில் படைத் தளபதியாக, நிக்கோலஸ் II தன்னைத்தானே நியமித்தது, பின்னாளில் அவர் தனக்குத்தானே வைத்துக் கொண்ட சூனியமாகிப் போனது.

நிக்கோலஸ் II-ன் வாழ்க்கையில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் நபராக இருந்த மனைவி அலெக்ஸாண்ட்ரா அவரின் சமயோசிதம் இல்லாத முரட்டு ஆட்சிக்கு முட்டுக் கொடுத்தார். தனது பெரும்பாலான அமைச்சர்கள் மேல் அவநம்பிக்கை கொண்டிருந்த மன்னர், பரந்த ரஷ்ய சாம்ராஜ்யத்தை சுயாட்சியாகவே ஆள முயன்றாலும் அது வெற்றிகரமான ஒன்றாக அமையவில்லை.

நலிவடையத் தொடங்கியிருந்த ரஷ்ய முடியாட்சி 1914-ல் வெடித்த முதல் உலகப் போரில் மீண்டும் வலுப்பெற்றது. ஆஸ்திரியா-ஹங்கேரி மற்றும் ஜெர்மனிக்கு எதிராக பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடன் ரஷ்யா கைகோர்த்தது. ராணுவப் படைத்தளபதி பதவியை கையில் எடுத்ததால் அதன் பின் ரஷ்யா அடைந்த தொடர் தோல்விகளுக்கும், பேரழிவுகளுக்கும் இவரே நேரடிக் காரணமாக அமைய நேரிட்டது மிகவும் துர்ப்பாக்கியம் ஒன்றானது.

Tsar Nicholas II and Alexandra Feodorovna
Tsar Nicholas II and Alexandra Feodorovna
Eduard Uhlenhuth, Public domain, via Wikimedia Commons

3.3 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களை இழந்து முதல் உலகப் போரில் ரஷ்யா பின்வாங்கியது. ரஷ்ய வரலாற்றின் ரத்தக் கரை படிந்த Bloody Sunday கலவரத்தை சரியாக நிர்வகிக்க தவறியதும், முதல் உலகப் போரில் ரஷ்யா பங்குபெற எடுத்த முடிவும் ஜார் நிக்கோலஸ் II-ன் அரியணைக்கு ஆப்பு வைத்தது. வெடித்த மக்கள் போராட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட போல்ஷ்விக் கட்சித் தலைவர் விளாடிமிர் லெனினின் உத்தரவின் பேரில் மன்னர் நிக்கோலஸ் II-வும் அவரது குடும்பத்தினரும் ஜூலை 16, 1918 அன்று தூக்கிலிடப்பட்டனர்.

Older men declare war. But it is the youth that must fight and die. என்ற Herbert Hoover-ன் கூற்றுப் போல, பெருந்தலைகளின் வஞ்சம், குரோதம், ஆசை, தேவை, அலட்சியம், பழிவாங்கல், என தனிப்பட்ட சுயலாபத்திற்காக பலிகொடுக்கப்பட்ட உயிர்கள் பல கோடி.

முதல் உலகப்போரின் பின்னரான ஐரோப்பா எப்படி இருந்தது? யுத்த முடிவில் ஐரோப்பிய மக்களுக்கு அமைதியும், சமாதானமும் திரும்பியதா இல்லை அவர்களை மீண்டும் சகதிக்குள் தூக்கி தூர எறியும் ஒரு சுழிக்காற்று சூழ் கொண்டதா... வரும் வாரங்களில் பார்க்கலாம்!

யூரோ டூர் போவோம்!