Published:Updated:

யூரோ டூர் - 13: வெர்சாய்ஸ் உடன்படிக்கையால் சிதைந்த ஜெர்மனி... அதில் சொல்லப்பட்டவை என்னென்ன?

war
News
war ( Wikipedia )

சமாதானம் என்ற போலி முலாம் பூசப்பட்ட இந்த உடன்படிக்கையின் முடிவுகளில் பங்கேற்க ஜெர்மனிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

Published:Updated:

யூரோ டூர் - 13: வெர்சாய்ஸ் உடன்படிக்கையால் சிதைந்த ஜெர்மனி... அதில் சொல்லப்பட்டவை என்னென்ன?

சமாதானம் என்ற போலி முலாம் பூசப்பட்ட இந்த உடன்படிக்கையின் முடிவுகளில் பங்கேற்க ஜெர்மனிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

war
News
war ( Wikipedia )

போர் நிறுத்த உடன்படிக்கை - நவம்பர் 11.

இன்றைக்கு சரியாக 103 ஆண்டுகளுக்கு முன்பு, நவம்பர் 11, 1918, காலை சரியாக 11 மணிக்கு பிரான்ஸின் Le Francport அருகில் Compiègne எனும் இடத்தில், general fauces ரயில் பெட்டிக்குள் ஜெர்மனி இட்ட கையொப்பம், அடுத்த இருபது ஆண்டுகளில் மீண்டுமொரு தீ ஐரோப்பாவை பற்றிப் படர பொறி போட்டது. முதல் உலகப்போரின் முடிவுரையை எழுதிய அதே இடத்திலேயே இரண்டாம் உலகப்போருக்கான தொடக்க உரையும் எழுதப்பட்டது.

நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து ஒலித்த இயந்திர அரக்கன் ஓய்வுக்கு வந்தான். பல மில்லியன் உயிர்களைக் குடித்த துப்பாக்கிகள் அமைதியாகின. இந்த மகிழ்ச்சியான செய்தி சில மணி நேரங்களுக்குள் ஐரோப்பா முழுதும் பரவியது. அடுத்த இருபது ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்கப் போகும் தற்காலிக மகிழ்ச்சி இது, என்பதை அறியாத ஐரோப்பியர், களிப்பில் கூச்சலிட்டு தம் பரவசத்தை வெளிப்படுத்தினர். முன்னணியில் இருந்த ராணுவ வீரர்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

ஒரு யுத்தம் எப்படி முடிவடைந்தது என்பதை வைத்து அடுத்த போர் ஏன் ஆரம்பித்தது என்பதை கூறிவிட முடியும். “A War to end all war” எனத் தொடங்கப்பட்ட ஒரு யுத்தம், அதைவிடக் கொடூரமான இன்னுமொரு போர் முளைப்பதற்க்கான விதையை விதைத்துச் சென்றது. ஜெர்மனி வீழ்வதற்கும், வீழ்ந்த வேகத்திலேயே விஸ்வரூபம் கொண்டு மீள்வதற்கும் காரணியாக இருந்த வெர்சாய்ஸ் உடன்படிக்கை, ஐரோப்பிய வரலாற்றின் திருப்புமுனை. ஜெர்மனி இன்னுமொரு போருக்குத் தயாராவது பற்றி கனவிலும் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு அதன் கழுத்து இறுக்கப்பட்டதற்கும், பிரிட்டனுக்கு சமமாக ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்த எண்ணிய அதனின் சிறகுகள் முடக்கப்பட்டதற்குமான பின்னணி என்ன?

வெர்சாய்ஸ் ஒப்பந்தம்
வெர்சாய்ஸ் ஒப்பந்தம்

வெர்சாய்ஸ் ஒப்பந்தம்

முதல் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்து, 32 நாடுகள் பிரான்ஸில் ஒரு சமாதான உடன்படிக்கைக்காக ஒன்று கூடினாலும் அதில் முக்கிய மூவரின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஜெர்மனியின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட இவர்களது ஒரே குறிக்கோள் ஐரோப்பாவில் தமக்கு போட்டியாக முளைத்த ஜெர்மனை வேரோடு பிடுங்கி வீசுவதே. பிரிட்டனின் டேவிட் லோயிட் ஜார்ஜ், பிரான்ஸின் ஜார்ஜ் க்ளெமேன்ஸோ மற்றும் அமெரிக்காவின் வுட்ரோ வில்ஸன் எனும் மும்மூர்த்திகளால் ஆடப்பட்ட அரசியல் சதுரங்க ஆட்டத்தில், ஜெர்மனுக்கு வைக்கப்பட்ட செக், வெர்சாய்ஸ் நிபந்தனைகள்.

சமாதானம் என்ற போலி முலாம் பூசப்பட்ட இந்த உடன்படிக்கையின் முடிவுகளில் பங்கேற்க ஜெர்மனிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதே போல இதன் நிபந்தனைகளை மறுக்கவோ, வேறு பேச்சுவார்த்தைக்கோ அங்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. ஒரு பலவந்தத்தின் அடிப்படையில் கையெழுத்திட, ஜெர்மனிக்கு மறைமுகமான கட்டளை இடப்பட்டது.

ஜெர்மனி
ஜெர்மனி

அமெரிக்கா இந்த யுத்தத்தில் இறுதிக் கட்டத்திலேயே நுழைந்ததனாலும், பிரிட்டன் மற்றும் பிரான்ஸுடன் ஒப்பிடுகையில் அவர்கள் அடைந்த சேதம் மிகவும் குறைந்த அளவில் இருந்ததனாலும், ஜெர்மனி மீது கடுமையான தண்டனைகளை விதிக்க வுட்ரோ வில்ஸன் ஒப்புக்கொள்ளவில்லை. நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் மற்றொரு போர் உருவாவதைத் தடுக்க அவர் விரும்பினார். அதேபோல, கடுமையான தண்டனைகளால் ஜெர்மனி முற்றாக நொடிந்து போவதையோ, உலகப் போரின் முற்று முழுதான பழியையும் ஜெர்மன் மீது போடுவதையோ அவர் விரும்பவில்லை. இது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும் என்ற வுட்ரோ வில்ஸனின் பயம் பிற்காலத்தில் இரண்டாம் உலகமகா யுத்தமாக வெடித்தது.

ஜெர்மனியை பழிவாங்க தக்க தருணம் பார்த்துப் பதுங்கி இருந்த கிளெமென்சோ எனும் பிரெஞ்சுப் புலி, இந்த வாய்ப்பை கிட்டியாகப் பற்றிக்கொண்டு மிகக்கடுமையான தண்டனைகளால் ஜெர்மனியை நார் நாராக கிழித்துப் போடத் திட்டமிட்டது. பிரிட்டனின் லாய்ட் ஜார்ஜோ மதில் மேல் பூனையாக எந்தப் பக்கம் சாய்வது என்று தெரியாத குழப்பத்தில் இருந்தார். ஏனெனில் முதல் உலகப் போரில் பிரிட்டனுக்கு மிகப்பெரிய சேதம் அதன் கடற்படைக்கே ஏற்பட்டது. எனவே எதிர்காலத்தில் பிரிட்டன் கடற்படைக்கு ஜெர்மனியால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதை உறுதிப் படுத்துவதே இவரது பிரதான நோக்கமாக இருந்தது.

வெர்சாய்ஸ் ஒப்பந்தத்தின் முக்கிய மூன்று பிரிவுகள்:

உலகையே அதிரடித்த ஒரு போர்த் தலைவன் உருவாகவும், மனித வரலாற்றில் இன்னுமொரு ரத்த சரித்திரம் எழுதப்படவும், பிடுங்கப்பட்ட இடத்திலேயே வேர்விட்டு, உலகின் சூப்பர் பவராக ஜெர்மன் உருவெடுக்கவும் காரணமாக இருந்த வெர்சாய்ஸ் ஒப்பந்தத்தின் சாரம்சத்தை பிராந்திய, ராணுவ மற்றும் நிதி மற்றும் பொருளாதாரம் எனும் மூன்று முக்கிய கட்டத்துக்குள் அடக்கி விடலாம்.

பிராந்திய ரீதியான நிபந்தனைகளில், பிரான்ஸிடம் இருந்து கைப்பற்றிய அல்சேஸ்-லோரெய்ன் மீண்டும் பிரான்ஸ் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும், ஜெர்மனி மீண்டும் ஒருபோதும் ஆஸ்திரியாவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளக்கூடாது, ஜெர்மனின் வளமான நிலக்கரி நிலங்களுடன் கூடிய சார் பிரதேசம் அடுத்த 15 ஆண்டுகளுக்கு பிரான்சுக்கு வழங்கப்பட்ட வேண்டும், ஜெர்மனியின் காலணிகள் அனைத்தையும் பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும், கிழக்கு ஜெர்மனியின் கணிசமான அளவு பிரதேசத்தை போலந்துக்கு வழங்க வேண்டும் போன்ற கடுமையான நிபந்தனைகள் இதில் அடங்கின.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி
பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி

அதுவே ராணுவ ரீதியான நிபந்தனைகளில் ஜெர்மனியின் ஏர் ஃபோர்ஸ் தடைசெய்யப்பட்டது. அவர்களது அனைத்து போர் விமானங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ஜெர்மன் ராணுவம் மொத்தமே ஒரு லட்சம் வீரர்களுக்கு ஆட்குறைப்பு செய்யப்பட்டது, ஜெர்மன் கடற்படைக்கு வெறும் ஆறு போர்க்கப்பல்கள் மட்டுமே வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டது. முக்கியமாக, முதல் உலகப் போரில் ஜெர்மன் வெற்றிக்கு அச்சானியாய் இருந்த அனைத்து U-boat நீர்மூழ்கிக் கப்பல்களும் பிடுங்கப்பட்டன. பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த Rhineland பிரதேசத்தில் இருந்து ஜெர்மன் ராணுவம் முற்றாக அகற்றப்பட்டது.

நிதி மற்றும் பொருளாதார நிபந்தனைகளில், போர் இழப்புகளுக்காக 138 பில்லியன் Gold Mark-கள் அபராதமாக விதிக்கப்பட்டன. League of nations நாடுகளின் கூட்டமைப்பில் ஜெர்மனி இணைந்து கொள்ள தடைசெய்யப் பட்டது. யுத்தத்தால் ஏற்பட்ட மொத்த இழப்புக்களுக்கும், சேதங்களுக்கும் ஜெர்மனி முழுப் பொறுப்பும் ஏற்க நிர்பந்திக்கப்பட்டது. ஆக மொத்தத்தில், வெர்சாய்ஸ் ஒப்பந்தம் ஜெர்மனிக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய ஆப்பானது. எதிர்பார்த்தபடியே இது ஜெர்மனியர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணியது. தலைவர்கள் மட்டுமல்ல, பொது மக்கள் கூட தமது அதிருப்தியை பல வழிகளிலும் தெரிவித்தனர்.

பிரிட்டன் vs - ஜெர்மனி
பிரிட்டன் vs - ஜெர்மனி

ஜெர்மனியர்கள் தங்கள் நாடு முதலாம் உலகப் போரில் தோல்வியடையும் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்கள் பெரிதும் நம்பிய தலைமை கடைசியில் சரணடைந்ததை தமக்கு இழைக்கப்பட்ட துரோகமாகக் கருதினார். முடியாட்சியின் சரிவு ஜெர்மனில் மிகப்பெரிய அதிகார வெற்றிடத்தை உருவாக்கியது. வெர்சாய்ஸ் ஒப்பந்தத்தை தமக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானமாகப் பார்த்தனர். இந்த அவமானத்தில் இருந்து மீண்டுவர அவர்களுக்கு நம்பிக்கையான ஒரு நாயகன் தேவைப்பட்டான். விட்டதைப் பிடிக்க ஓர் உறுதியான பிடி தேவைப்பட்டது. தமக்கு துரோகம் இளைத்தவர்களை தண்டிக்க ஒரு காப்பாளன் தேவைப்பட்டான். உறுதியான ஜெர்மனியை உருவாக்க ஒரு துணிவான இளைஞனைத் தேடினார்கள்.

அவமானங்களாலும், அலட்சியங்களாலும் சிதைந்து போன ஜெர்மனியை மீண்டும் சேர்த்தெடுத்து, செதுக்கி, ஐரோப்பாவின் அதிகாரமாக மாற்ற ஒரு இளைஞன் வந்தான். அவன் பின்னால் ஒன்று நூறாகி, நூறு ஆயிரமாகி, ஆயிரம் லட்சங்களாகி, கடைசியில் கோடி கோடியாக வந்து குவிந்தனர் ஜெர்மனியர்கள். இத்தோடு கதை முடிந்தது என்று மூலையில் தூக்கிப் போடப்பட்ட ஜெர்மனி, வெறும் இருபதே ஆண்டுகளில் பாய்ந்த அசுரப் பாய்ச்சலில் உலகமே ஆடிப்போனது. வரலாற்றில் காய்ந்திடாத ரத்தக்கறையாக இருக்கும் அந்தச் சம்பவங்கள் இனி வரும் வாரங்களில் தொடரும்.

யூரோ டூர் போலாமா..?