Published:Updated:

யூரோ டூர் 14: சிதைந்த ஐரோப்பா - யார் எந்த நாடு எனக் குழம்பி தவித்த மக்கள்... நெருக்கடியில் ஜெர்மனி!

ஐரோப்பிய யூனியன்
News
ஐரோப்பிய யூனியன்

ஒரு புறம் கடன், மறு புறம் சீர்குலைந்த பொருளாதாரம் என எல்லாத் திசைகளிலும் இறுக்கிப் போன ஜெர்மனி, நிலைமையை சமாளிக்க புதிய நாணய நோட்டுக்களை அச்சடிக்க எடுத்த முடிவு, இதுவரை வரலாறு காணாத ஒரு சம்பவத்தை ஐரோப்பாவில் நிகழ்த்தியது.

Published:Updated:

யூரோ டூர் 14: சிதைந்த ஐரோப்பா - யார் எந்த நாடு எனக் குழம்பி தவித்த மக்கள்... நெருக்கடியில் ஜெர்மனி!

ஒரு புறம் கடன், மறு புறம் சீர்குலைந்த பொருளாதாரம் என எல்லாத் திசைகளிலும் இறுக்கிப் போன ஜெர்மனி, நிலைமையை சமாளிக்க புதிய நாணய நோட்டுக்களை அச்சடிக்க எடுத்த முடிவு, இதுவரை வரலாறு காணாத ஒரு சம்பவத்தை ஐரோப்பாவில் நிகழ்த்தியது.

ஐரோப்பிய யூனியன்
News
ஐரோப்பிய யூனியன்

முதல் உலகப் போருக்கு பின்னரான ஐரோப்பா

உலகப் போரின் பின்னர் நாடுகள் தம் எல்லைகளை வரைந்து தமக்கான சுதந்திரத்தை அறிவித்துக்கொண்ட போது மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் மையப் பகுதிகளில் உள்ள மக்கள், தாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாத ஒரு குழப்பமான உலகினுள் தள்ளப்பட்டனர். தாம் வாழ்கின்ற நாட்டின் எல்லைகள் என்னவாக இருக்கும் என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்வதே பெரும் பாடாக இருந்தது. ஒரே நாட்டு எல்லைக்குள் மாமன் மச்சானாய் இருந்தவர்கள் திடீரென முளைத்த எல்லைக் கோட்டால் பிரிபட்டு, பங்காளிகளாகி ஒருவரோடு ஒருவர் முட்டிக் கொண்டார்கள். பல்வேறு தேசிய இயக்கங்களுக்கிடையில் சிறிய போர்கள் வெடித்து, பிற பிரதேசங்களைக் கைப்பற்ற முயன்றன. கலையிலும், அறிவியலிலும் செழித்திருந்த மறுமலர்ச்சிக் காலத்தில் மலர்ந்த பல எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், அறிவியாளர்கள்,கண்டுபிடிப்பாளர்கள் என தனது விலையில்லா செல்வங்களை ஐரோப்பா பறிகொடுத்தது.

ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் லட்சக்கணக்கான உயிர்ச் சேதத்தை கண்டது. தந்தையை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தன. வீட்டின் பொருளாதார பாரம் பெண்கள் தலையில் அழுத்தப்பட்டதால் பெண்கள் அதிகளவில் வேலைக்குச் செல்லத் தொடங்கினார். வறுமையின் ஆழத்துக்குள் தள்ளப்பட்ட ஐரோப்பிய குழந்தைகள் பள்ளிகளை கைவிட்டு வேலைக்குச் செல்லவேண்டிய சூழலுக்குள் சிக்கிக் கொண்டனர். குழந்தைகளின் பால்யம் சிதைக்கப்பட்டது. Shell shocked எனப்படும் ஒரு வித மன அழுத்தத்துக்கு ஆளான படை வீரர்கள் மீண்டும் தம் குடும்பத்தைக் கட்டி எழுப்புவதில் சிரமம் கண்டனர்.

வேலைக்குச் செல்லும் பெண்கள்
வேலைக்குச் செல்லும் பெண்கள்

ஜெர்மனி மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நிலைமை இன்னும் படு குழப்பமாக இருந்தது. முக்கியமாகக் கிழக்கு ஐரோப்பாவின் வரைபடம் அடுத்த சில ஆண்டுகளில் பலமுறை திருத்தி வரையப்பட்டது. போரில் ஜெர்மனியிடம் பிடுங்கியதை, பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் மும்முரமாகத் தங்களுக்குள் பங்கு பிரித்துக் கொண்டனர். போர் இழப்பீடுகள், உள்நாட்டு அமைதியின்மை, பணவீக்கம் ஆகியவை ஐரோப்பிய பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்தது. அனைத்து ஐரோப்பிய நாடுகளும் பாரிய பொருளாதார வீழ்ச்சியில் முடங்கியது.

முதல் உலகப் போரின் தொடக்கத்தில், அமெரிக்கா ஐரோப்பாவிற்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன்பட்டிருந்தது. ஆனால் அதுவே போரின் இறுதியில் ஐரோப்பா அமெரிக்காவிற்கு 10 பில்லியன் டாலர்கள் கடனாளியாகி இருந்தது.

முதல் உலகப் போருக்கு பின்னரான பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்

போருக்கு முன்னதாக, உலகப் பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 9% வெளிநாட்டிலிருந்து நிகர சொத்து வருவாயுடன் பிரிட்டன் முன்னணி மூலதன ஏற்றுமதியாளராக இருந்தது. ஜெர்மனி போன்ற பிற முன்னணி பொருளாதாரங்களை விட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வர்த்தகத்தில் அதிக பங்கைக் கொண்டிருந்தது. ஆனால் இவை அனைத்துமே முதல் உலகப் போருக்குப் பின்னர் தலைகீழாக மாறியது.

முதல் உலகப் போரில் கொடுக்கப்பட்ட மனித விலை மிகக் கொடூரமானது. ஐரோப்பாவின் இளம் தலைமுறை இளைஞர்கள் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டனர். 1919-ம் ஆண்டில், பிரான்சில் போர் முடிந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, 18 முதல் 30 வயதிற்குட்பட்ட ஒவ்வொரு ஆணுக்கும் 15 பெண்கள் என்ற விகிதத்திலேயே இருந்தனர். நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்தது. மேற்கத்திய போர்முனையில் பல முக்கிய போர்கள் பிரான்ஸில் நடந்ததால் அங்கு கணக்கிட முடியாத உள்கட்டமைப்பு சேதம் ஏற்பட்டது. பிரான்சில் சில பகுதிகள் மறுகட்டமைப்பு கூட தொடங்க முடியாதளவுக்கு மோசமாக சேதமடைந்தன. உற்பத்திக்கான மனிதவள இழப்பு, விவசாய நிலங்களின் சிதைவு ஆகியவை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதியின் தேவையை பிரான்ஸில் அதிகரித்தன. போரில் உயிர் பிழைத்த லட்சக்கணக்கான காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க அரசு பெரும் தொகையை செலவிட நேரிட்டது. சமூகக் கட்டமைப்பில் ஏனைய நாடுகள் அனைத்தையும் விட பிரான்ஸ் மிக மோசமாக அடி வாங்கியது. ஏறக்குறைய ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது ஒருவரையாவது போரில் இழந்திருந்தது.

வெர்சாய்ஸ் ஒப்பந்தம்
வெர்சாய்ஸ் ஒப்பந்தம்

அரசியல் ரீதியில் வெர்சாய்ஸ் உடன்படிக்கை கையெழுத்தான பிறகு, ஜெர்மனி போருக்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் பிரான்ஸ் உற்பட ஏனைய நாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. ஜெர்மனியிடம் பறிகொடுத்த அல்சேஸ்-லோரெய்ன் மீண்டும் பிரான்ஸ் வசம் திரும்பியது. அதேபோல ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையில் ஓடிய ரைன் ஆற்றின் இருபுறமும் உள்ள நிலமான ரைன்லேண்டிலிருந்து அனைத்து ஜெர்மன் துருப்புக்களும் அகற்றப்பட்டு ஜெர்மன் ராணுவத்தை பிரான்ஸ் மட்டுப்படுத்தியது. இவை ஜெர்மனிக்கு பிரான்ஸ் மீது கடுமையான வெறுப்பை ஏற்படுத்தி பிற்காலத்தில் இரண்டாம் உலகப் போருக்கான விதையை விதைத்தது.

வீழ்ந்த ஜெர்மனி – The Fall of Weimar Republic

வெய்மர் குடியரசு எனப்பட்ட Weimar Republic, முதல் உலகப் போர் முடிவுற்று கெய்சர் வில்ஹெல்ம் II பதவி விலகிய பிறகான காலம் முதல், ஹிட்லரின் நாஜி எழுச்சி வரையான (1919 - 1933) காலப்பகுதி வரை, ஜெர்மனியின் தேசிய சட்டமன்றத்தால் அமைக்கப்பட்ட அரசாங்கமாக இருந்தது. பொதுவாக ஒரு மிகப்பெரிய அனர்த்தத்தின் பின் பதவி ஏற்கும் எந்தவொரு அரசும் அனுபவிக்கும் அத்தனை சவால்களையும் வெய்மர் குடியரசும் சந்தித்தது. ஏன் ஒரு படி மேலேயே போய், இதுவரை வரலாற்றில் எந்த மேற்கத்திய ஜனநாயகமும் அனுபவிக்காத மிகக் கடுமையான பொருளாதாரப் பிரச்னைகளை எதிர்கொண்டது.

பரவலான பணவீக்கம், பாரிய வேலையின்மை மற்றும் வாழ்க்கைத் தரத்தில் பெரும் வீழ்ச்சி போன்றன ஜெர்மனியை உலுக்கி எடுத்தது. அதுவரை அசைக்க முடியா பலத்துடன் அடித்து ஆடிய ஜெர்மனி, ஒரு சிக்கலான பொருளாதார மற்றும் சமூக சீர்கேட்டினுள் தூக்கி வீசப்பட்டது. கைசர் வில்ஹெல்ம்-II பதவி விலகியதை அடுத்து, சமூக ஜனநாயகக் கட்சி (SDP) மற்றும் ஜெர்மனியின் சுதந்திர சமூக ஜனநாயகக் கட்சி (USDP) உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தற்காலிக அரசாங்கம் அறிவிக்கப்பட்டு, ராணுவத்திடம் இருந்து ஆட்சி கைமாறியது.

Berlin, Reichsbank 
| பணவீக்கம்
Berlin, Reichsbank | பணவீக்கம்

அதிக பணவீக்கம், உற்பத்தி தேக்கம், போன்றவற்றுடன் போர்க்கடன்கள் மற்றும் இழப்பீடுகள் போன்றவை ஜெர்மன் கஜானாவை காலி செய்ததால், கடன்களை திருப்பி செலுத்த முடியா நிலைக்கு ஜெர்மன் பொருளாதாரம் நலிவடைந்தது. கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கி நின்ற ஜெர்மனியைப் பார்த்து பரிதாபப்படும் நிலையில் நேச நாடுகள் இருக்கவில்லை. மாறாக தமது இழப்புகளுக்கு எவ்வாறேனும் நஷ்டஈட்டை பெற்றுவிடுவதில் குறியாக இருந்தன. ஜெர்மனி மீது சுமத்தப்பட்ட மிகப்பெரிய அபராதத் தொகை ஜெர்மனியின் சிக்கலான பொருளாதார சவால்களில் ஒன்றாக மாறியது.

முதல் தவணை இழப்பீட்டை செலுத்திய ஜெர்மனியால் அதன் பிறகு மிகுதித் தொகையை செலுத்த முடியவில்லை. இதனை ஏற்றுக்கொள்ளாத பிரான்சும் பெல்ஜியமும், ஜெர்மனியின் முக்கிய தொழில்துறை பகுதியான Ruhr Valley-க்கு தமது படைகளை அனுப்பி, ஜெர்மனியின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களித்த அனைத்தையும் ஆக்கிரமித்தன. தொழில்துறை பொருள்களை இழப்பீட்டுத் தொகையாக பறிமுதல் செய்வதே அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. இதன்போது ஜெர்மன் தொழிற்சாலை தொழிலாளர்கள், அரச ஆணைக்கு அமைய ஆக்கிரமித்துள்ள பிரெஞ்சு மற்றும் பெல்ஜிய ராணுவங்களுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். வெய்மர் அரசாங்கம் ஜெர்மன் தொழிலாளர்கள் ஆக்கிரமிப்பை செயலற்ற முறையில் எதிர்க்கவும், வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும், நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் இரும்பு தொழிற்சாலைகளை மூடவும் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் அரசு சார்பாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஜெர்மனியின் முக்கிய வருவாய் மார்க்கமான நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் இரும்பு தொழிற்சாலைகளை மூடப்பட்டதான் விளைவாக ஏற்கெனவே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஜெர்மனியின் பொருளாதாரம் அதால பாதாளத்துக்குள் சரிந்தது.

சிக்கலில் தொழில்துறை
சிக்கலில் தொழில்துறை

ஒரு புறம் கடன், மறு புறம் சீர்குலைந்த பொருளாதாரம் என எல்லாத் திசைகளிலும் இறுக்கிப் போன ஜெர்மனி, நிலைமையை சமாளிக்க புதிய நாணய நோட்டுக்களை அச்சடிக்க எடுத்த முடிவு, இதுவரை வரலாறு காணாத ஒரு சம்பவத்தை ஐரோப்பாவில் நிகழ்த்தியது. இந்த முடிவு பணவீக்கத்தை பலமடங்கு அதிகரித்து அரசியல் ஸ்திரமின்மையைக் கொண்டுவந்தது. அதுவரை அசுர வேகத்தில் வளர்ந்த பொருளாதார சக்தியால், உலகின் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததும், நிலையானதுமானதாக மதிக்கப்பட்ட ஜெர்மனியின் மார்க், தனக்குத் தானே குழி தொண்டி புதைத்துக் கொண்டது போலானது இந்த முடிவு. சர்வதேச தளத்தில் அசைத்துப் பார்க்க முடியாத ஜாம்பவானாக இருந்த ஜெர்மனியின் அஸ்திவாரம் மெல்ல மெல்ல ஆட்டம் காணத் தொடங்கியது.

கடனை செலுத்துவதற்கும், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்குமாகவே அரசாங்கம் வெறுமனே அதிக பணத்தை அச்சிட்டது. கட்டற்ற ஆறாகப் பாய்ந்த இந்த பண வெள்ளம், மாதத்திற்கு 3,250,000% வரையாக பணவீக்கத்தை கொண்டுசென்றது. ஜெர்மனியின் பண மதிப்பு இறங்கு வரிசையில் சறுக்கிச் சென்றது. பொருள்களின் விலை உயர்ந்தது. விலைகள் கட்டுப்பாட்டை மீறியது. உணவு விலைகளில் 50%க்கும் மேல் அதிகரிப்பு ஏற்பட்டது. உதாரணத்துக்கு ஒரு முட்டையின் விலை 1914க்கும் 1922க்கும் இடைப்பட்ட காலத்தில் 180 மடங்காக உயர்ந்தது. 1923ஆம் ஆண்டு ஜனவரியில் 250 ஜெர்மன் mark-ற்கு விற்கப்பட்ட ஒரு பானின் விலை, நவம்பர் 1923இல் 200,000 மில்லியன் மார்க்காக உயர்ந்தது. ஏப்ரல் 1919இல் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கான உணவுக்கு வாரத்திற்கு 60 ஜெர்மன் மார்க்குகள் என்று இருந்த கணக்கு செப்டம்பர் 1920இல் 1198 ஜெர்மன் மார்க்குகளாகவும், நவம்பர் 1920க்குள் 230,000 ஜெர்மன் மார்க்குகளாகவும் அதிகரித்தன. ஜூலை 1922இல் மாதந்தோறும் 50%-ஆக உயர்ந்த பொருள்களின் விலைகள், அடுத்த ஆண்டின் இறுதியில் சில மணி நேரங்களுக்கு ஒருமுறையாக உயர ஆரம்பித்தது.

பணவீக்கம்
பணவீக்கம்

ஜெர்மன் அரசுக்கு ஒரு நோட்டை அச்சடிக்க ஆகும் செலவு அதன் பெறுமதியை விடக் கூடியது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு தடவை சம்பளம் வழங்கப்பட்டது ஏனெனில், தொழிலாளர்களுக்கு காலையில் வழங்கப்பட்ட சம்பளம், மதிய நேரத்தில் பெறுமதி இழந்தது. அந்தளவுக்கு பணத்தின் பெறுமதி ஜெட் வேகத்தில் குறைந்தது. 1918இல் ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான ஜெர்மன் மார்க்கின் பெறுமதி 7.4 இருந்து, 1923-ல் 4.5 டிரில்லியனாக குறைந்தது.

குழந்தைகள் லெகோ பிரிக்ஸ்க்குப் பதிலாக பயனற்று போன பணக்கட்டுக்களை வைத்து விளையாடும் அளவுக்கு பண நோட்டுக்கள் மதிப்பிழந்து போயின. ஒரு கட்டத்தில் வீடுகளில் விறகுக்கு பதிலாக பண நோட்டுக்களை எரிப்பது இலாபகரமான ஒன்றாகக் கருதும் அளவுக்கு நிலைமை மோசமானது. ஒவ்வொரு பொருளாதாரப் பொருளுக்கும் சேவைக்கும் டிரில்லியன் கணக்கான ஜெர்மன் மார்க்குகள் செலவாகின.

ஒரு போர் அது சார்ந்த மக்களின் மொத்த வாழ்வாதாரத்தையும் கசக்கிப் பிழிந்து சிதைத்து விடும். அதே வேளையில், எரியும் தீயின், கருகும் சாம்பலின் துகள்களில் இருந்து உயிர்பெறும் ஃபீனிக்ஸ் பறவையாய் உருவாகும் தலைவர்கள், புதிய சரித்திரத்தை தீட்டிச் செல்வார்கள் என்பது, மீண்டும் ஒருமுறை ஐரோப்பாவில் நிரூபணம் ஆனது. யுத்தத்தின் வெப்ப அனல் அணையும் முன்பே அதிலிருந்து குதித்து எழுந்து மீண்டு வந்த ஜெர்மனி, வேறு வழியில் தனது இரண்டாவது ஆட்டத்தை ஆரம்பித்தது. பல சிக்கல்கள், கொடூரங்கள், இன அழிப்பு என அனைத்து குற்றங்களும் அதில் அடக்கம்.

ஐரோப்பிய அரசியல் அடையாளங்கள்!
ஐரோப்பிய அரசியல் அடையாளங்கள்!
கடனில் வீழ்ந்த ஐரோப்பா கரையேறியது எப்படி? அதால பாதளத்துக்குள் விழுந்த ஜெர்மனியின் கதை முடிந்தது என்று நேச நாடுகள் பெருமூச்சு விட்ட வேளை, வீழ்வேனென்று நினைத்தாயோ என விஸ்வரூபம் எடுத்த ஜெர்மனியின், சர்ச்சைக்குரிய இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்ட நாயகர்கள் ஆடிய ருத்ர தாண்டவங்களை அடுத்த வாரங்களில் பார்க்கலாமா?!

யூரோ டூர் போவோம்!