மன்னராட்சி, மக்களாட்சி, இறையாட்சி, சர்வாதிகாரம், எதேச்சதிகாரம்… இப்படி பல வகையான கருத்தியல்கள் அரசியலில் தொன்று தொட்டு இருந்து வருகின்றன. முதல் உலகப்போருக்கு பின்னர் பல புதிய அரசியல் சித்தாந்தங்கள் ஆங்காங்கே தலை தூக்கின. ஐரோப்பாவில் மன்னராட்சி முடிவுக்கு வந்ததால் மார்க்சியம், சோஷலிசம், கம்யூனிசம், முதலாளித்துவ ஏகாதிபத்தியம் என முளைத்த பல சித்தாங்களுக்கு இடையே உருவான இன்னொரு முக்கிய அரசியல் சித்தாந்தம் பாசிசம். இத்தாலியில் பெனிடோ முசோலினியால் உருவாக்கப்பட்ட இந்த பாசிச சித்தாந்தம் இன்னொரு உலகப்போருக்குக் காரணமாக அமைந்தது.
பொருளாதார சமத்துவம், வர்க்கமற்ற சமூகம் உருவாக கம்யூனிசம் தன் போராட்டத்தைத் தொடங்கியபோது அதற்கு நேர் மாறான அமைப்பாக உருவானது பாசிசம். சகல அதிகாரமும் கொண்ட ஒரு சர்வாதிகாரியால் ஆளப்படும் கடுமையான சட்டங்களையும் கொள்கைகளையும் பாசிசம் கொண்டிருந்தது. இத்தாலியில் பிறந்து, அங்கேயே இறந்து போன பாசிசக் கொள்கைகள் இன்றும் பல நாடுகளில் மறைமுக அரசியலாகத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

பாசிசத்தின் பிறப்பு
தனியுரிமை முதலாளித்துவத்தின் தேய்ந்த நிலை என மார்க்சியவாதிகள் விமர்சிக்கும் பாசிசம், ஓர் ஆழமான அரசியல் கருத்து. ஐரோப்பாவில் 1920 மற்றும் 1930களில் முக்கியத்துவம் பெற்ற இந்த அரசியல் கொள்கையை பின்பற்றும் நாடுகளில், பெரும்பாலான அதிகாரம் ஒரு சர்வாதிகார ஆட்சியாளரால் நடத்தப்படும். தீவிர ராணுவவாதம், தேசியவாதம், பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிர்ப்பு, வசதி படைத்தவர்களுக்கு ஆதரவான பொருளாதாரக் கொள்கைகள், சமூக படிநிலை மீதான நம்பிக்கை உட்பட பல அடிப்படைவாதக் கொள்கைகளை பாசிச ஆட்சி கொண்டிருந்தது.
இத்தாலியில் பாசிசம், அவர்களுக்குச் சொந்தமான நிலப்பரப்புகளை மீட்டெடுக்கவும், விரிவுபடுத்தவும், தங்களின் மேன்மையையும், வலிமையையும் ஐரோப்பாவில் நிலைநிறுத்துவதற்கும், ஏனைய நாடுகளின் வளர்ச்சியால் இத்தாலி நலிவுற்று அவர்களுக்கு அடிபணிவதைத் தவிர்ப்பதற்கும் அவசியமான ஒரு கட்டமைப்பாகக் கருதப்பட்டது. அதேபோல இத்தாலிய பாசிஸ்டுகள், நவீன இத்தாலியை பண்டைய ரோம் மற்றும் அதன் பாரம்பரியத்தின் வாரிசு என்று குறிப்பிட்டனர். பண்டைய ரோமாபுரிக்கு ஈடாக ஒரு இத்தாலிய பேரரசை உருவாக்குவதற்கு இதுவே சரியான வழி என அவர்கள் நம்பினர்.
முதல் உலகப்போரில் சிதைந்துபோன இத்தாலிய பொருளாதாரத்தை சீர்படுத்தி, மக்களை ஒன்று திரட்டி, பண்டைய ரோமாபுரிக்கு ஈடான ஒரு சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் கட்டியெழுப்ப தலைவன் ஒருவன் வரமாட்டானா என மக்கள் ஏங்கித் தவித்தபோதுதான் வந்தார் பெனிடோ முசோலினி. ஆனால், அவர் கொண்டு வந்திருந்தது ஓர் ஆபத்தான சித்தாந்தம் என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை. தன் கவர்ச்சிகரமான பேச்சாலும், எழுச்சி ஊட்டும் வார்த்தைகளாலும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி, இத்தாலியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் முசோலினி. இவர் கையில் எடுத்த பாசிசம் எனும் ஆயுதம் பின்னாளில் ஐரோப்பாவையே இரண்டாகப் பிளக்கும் கத்தியாக மாறியது.

பெனிட்டோ முசோலினி
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்த ஒரு சாமானியன், பிற்காலத்தில் இத்தாலியை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தன் கைவசம் வைத்திருந்த சர்வாதிகாரியாக மாறியது எல்லாம் நாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என நினைக்கும் ஹீரோயிசம். "Il Duce" என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்ட Benito Amilcare Andrea Mussolini இத்தாலியின் தலைவனானதும், இறுதியில் அதே மக்களாலேயே கொல்லப்பட்டதும் வரலாற்றின் விபரீதமான விளையாட்டு.
அதி புத்திசாலித்தனமான ஓர் இளைஞனாக, யாருக்கும் கட்டுப்படாத முரட்டுக் காளையாக, அரசியலில் ஆர்வமுள்ள ஒரு தொண்டனாக, காதல் மன்னனாக எனப் பல முகங்களைக் கொண்டிருந்த முசோலினி, தன் தந்தையிடம் இருந்து சோஷியலிச அரசியலையும், அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பையும் கற்றுக்கொண்டார்.
பள்ளியில் கீழ்படியாத மாணவனாக பல பாடசாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டாலும், ஆசிரியையான தாயாரின் விடா முயற்சியால் எப்படியோ பள்ளிப்படிப்பை முடித்து, சிறிது காலம் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். பள்ளி நிர்வாகத்தோடு ஏற்பட்ட பிணக்கால் வேலையில் இருந்து தூக்கி எறியப்பட்டவர் பின்பு பிழைப்பு தேடி சுவிட்சர்லாந்து சென்றார்.
சாமானியனின் அசாதாரணமான எழுச்சி
முசோலினி சுவிட்சர்லாந்து சென்று சிறிது காலம் தன் அரசியல் கருத்துகளை பிரசாரம் செய்து வந்ததால் பல தடவை நாடு கடத்தப்பட்டார். 1909-ம் ஆண்டில் ஆஸ்திரியா-ஹங்கேரியில் ஒரு சோஷியலிச செய்தித்தாளின் ஆசிரியராக பதவி ஏற்றவர், பத்திரிகை சுதந்திரத்தை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, மீண்டும் அங்கிருந்து இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டார். அதன் பின் 1910-ல், இன்னுமொரு இத்தாலிய சோஷியலிச செய்தித்தாளின் ஆசிரியரானார். ஆனால் அப்போதும் எழுத்துகள் மூலம் வன்முறையைத் தூண்டியதற்காக ஆறு மாதங்கள் சிறையில் தள்ளப்பட்டார். அந்த சிறைவாசத்தின் போதுதான் 'My Autobiography' என்ற பிரபலமான தனது சுயசரிதையை எழுதத் தொடங்கினார்.

அதன் பின் இத்தாலிய சோஷியலிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், 1914-ல் கருத்து வேறுபாடுகள் காரணமாக அதிலிருந்து பிரிந்து, Il Popolo d'Italia ("The People of Italy") எனும் பத்திரிகையை தொடங்கி, பல விமர்சனக் கட்டுரைகளை பிரசுரித்தார். இது ஏற்கெனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணையை ஊற்றியது. முதல் பதிப்பில் அவர் எழுதிய புகழ்பெற்ற வாக்கியமான “Blood alone moves the wheels of history” என்ற வார்த்தைகளில், இத்தாலியே தீப்பற்றி எரியத் தொடங்கியது. அந்த நேரத்தில்தான் முசோலினியின் பேச்சுத்திறன் வெளிப்படத் தொடங்கியது. தனது பேச்சுத் திறனாலும், திறமையான எழுத்தாற்றலாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கினார். 'நாம் தேடும் தலைவன் இவன்தான்' என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்தார்.
முதல் உலகப்போர் உக்கிரம் அடைந்த சமயம், முசோலினுக்குள் உறங்கிக்கொண்டிருந்த போர் வீரன் விழித்தெழுந்தான். 1915-ம் ஆண்டு இத்தாலிய ராணுவத்தில் இணைந்து, முதல் உலகப்போரில் முன் வரிசையில் போராடியது முசோலினியின் வரலாறு. யுத்தத்தின்போது கடும் காயங்களுடன் ராணுவத்திலிருந்து வெளியேறியவர் மீண்டும் பத்திரிகைத் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
இத்தாலியில் பாசிசத்தின் ஆட்சி
போருக்குப் பிந்தைய பாரிஸ் பேச்சுவார்த்தைகளின் போது, ஏற்கெனவே லண்டன் உடன்படிக்கையில் வாக்குறுதியளிக்கப்பட்ட பிரதேசங்கள் ஒப்படைக்கப்படாமல் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நேச நாடுகளால் ஏமாற்றப்பட்டது இத்தாலி. அதிருப்தி அடைந்த இத்தாலிய மக்களால், பிரதமர் விட்டோரியோ ஆர்லாண்டோ பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். கிடைத்த வாய்ப்பை இறுக்கிப் பிடித்துக் கொண்ட முசோலினி தன் 39-வது வயதில் மன்னரின் ஆதரவோடு இத்தாலிய பிரதமராக பதவியேற்றார். இத்தாலியை பாசிசம் ஆளத் தொடங்கியது.
பிரதம மந்திரியானதும் முதல் வேலையாக பாசிஸ்டுகளுக்கு ஆதரவான பல சட்டங்களை இத்தாலிய பாராளுமன்றத்தில் அமுல்படுத்தினார் முசோலினி. பாசிசத்திற்கு எதிரான அனைவரும் விசாரணையின்றி சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். சோஷியலிஸ்டுகளை சுற்றி வளைத்த போலீசார் அவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தினர். கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். அனைத்து சோஷியலிஸ்ட் உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இத்தாலிய திரை அரங்குகளில் பாசிச அரசுப் பிரசாரங்கள் படங்களாகத் திரையிடப்பட்டன. பத்திரிகைத் துறையில் 66 சதவிகிதத்தை பாசிஸ்டுகள் தம் வசம் வைத்திருந்தனர். பாசிசத்துக்கு எதிராக எழுதும் எவரும் கைது செய்யப்பட்டனர். காவல்துறை அதிக அதிகாரங்களைப் பெற்றது. மக்களின் ஒவ்வொரு சொல்லும், செயலும், நடத்தையும் கண்காணிக்கப்பட்டன. பொது வெளியில் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் பேச வேண்டியிருந்தது. போலீஸ் ஒடுக்குமுறை எல்லை மீறியது.
இத்தாலி ஒரு பெரிய ஐரோப்பிய சக்தியாக மாற வேண்டுமானால் முதலில் பொருளாதாரத்தை சீர்படுத்த வேண்டும் எனத் தீர்மானித்த முசோலினி உற்பத்தியை தேசியமயமாக்கத் தீர்மானித்தார். இத்தாலியின் லிராவின் மதிப்பை ஏற்றி, ஏற்றுமதி விலையை உயர்த்தினார். இதனால் பல தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் பொருள்களைச் சந்தைப்படுத்த முடியாமல் நஷ்டமடைந்து முடங்கின. இதனால் நாட்டில் வேலையின்மை உயர்ந்தது. பாசிச இத்தாலியின் பொருளாதாரம் மிகவும் பலவீனமடைந்தது. கருத்தியல் கல்வியில் அதிக கவனம் செலுத்திய முசோலினி அரசு, பாசிச கருத்துக்களின் பலவந்த ஊடுருவல்களை ஆரம்பப் பள்ளிகளில் ஆரம்பித்து பல்கலைக்கழகங்கள் வரை கொண்டு சென்றது. இவ்வாறு அனைத்து துறைகளிலும் பாசிச சர்வாதிகாரம் தன் வெறித்தனத்தை மக்கள் மேல் கொட்ட ஆரம்பித்தது.
வலியவன் வாழ்வான் (Survival of the strongest)
பாசிசம் பதவி பீடம் ஏற வேண்டும் என நினைத்த முசோலினியின் கனவை அவர் உயிருடன் இருக்கும் வரைக்கும் யாராலும் கலைக்க முடியாமல் போனது. இத்தாலி வல்லரசானது. ஐரோப்பாவின் ஒரு முக்கிய அங்கமாக இத்தாலி மாறியது. ஆனாலும் முசோலினி வீசிய கர்மா எனும் பூமராங் மீண்டும் அவரைத் தேடி வந்தது. தக்கன தப்பிப் பிழைக்கும் என்பது போல 'வலியவன் வாழ்வான்' என்ற கொள்கையை முன் நிறுத்திய பாசிசமும் ஒரு நாள் முடிவுக்கு வந்தது.

கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல, முசோலினியை தேடி வந்தது ஒரு நட்பு. ஐரோப்பா இரண்டாவது முறையாக பிளவுபெற காரணமாக இருந்த ஒரு உலக மகா யுத்தத்துக்கு இட்டுச்சென்றது இந்த ராஜதந்திர நட்பு. பாசிசத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இன்னுமொரு தலைவன் ஐரோப்பாவில் உருவானான். அவன் முசோலினியை தேடி வந்தான். முசோலினி அவன் கை பிடித்து நடக்கத் தொடங்கிய வெற்றியின் பாதை, இறுதியில் வழிமாறி அழிவின் ஆழத்துக்குள் அவர்களை அழைத்துச் சென்றது. அவை எல்லாம் கறுப்பு தாள்களில் சிவப்புக் கரைகளால் எழுதப்பட்ட ரத்த சரித்திரம்.
இத்தாலியில் பாசிச ஆட்சி கொடி கட்டிப் பரந்த நேரத்தில், ஜெர்மனியில் புதியதொரு அரசியல் சித்தாந்தத்தோடு ஒருவர் வந்தார். அதுவரை நீறு பூத்த நெருப்பாக இருந்த ஆட்டம் அதன் பின் சூடு பிடிக்கத் தொடங்கியது. ஸ்டாலின், முசோலினி போன்றவர்களுக்கு நிகராக ஜெர்மனியில் இருந்து புறப்பட்ட அந்தத் தலைவனின் பின்னால் ஒருதரப்பு மக்கள் அணி திரண்டனர். அவனின் வருகை ஜெர்மனிக்கு புதிய ரத்தத்தைப் பாய்ச்சப்போவதாக மக்கள் நம்பினர். அவனின் துணிச்சல் ஜெர்மனியர்களுக்கு புதிய தைரியத்தைக் கொடுத்தது. நேச நாடுகளிடம் வாங்கிய அடியை ஜெர்மனி வட்டியும் முதலுமாகச் சேர்த்து திருப்பிக் கொடுக்க ஆரம்பித்த அந்த ரணகள ஆட்டம் அடுத்த வாரம்...