Published:Updated:

யூரோ டூர் – 18: ஹிட்லர் எனும் சிப்பாய் ஒரு சர்வாதிகாரி ஆனது எப்படி?

அடால்ஃப் ஹிட்லர்
News
அடால்ஃப் ஹிட்லர்

“தவறாக வேண்டியவை தவறாமல் தவறாகும்” என்பது Murphy-யின் முதல் விதி. அது போல ஹிட்லரின் வாழ்வில் அதன் பின் நிகழ்ந்தவை எல்லாம் மர்ஃபி விதிப்படி தவறான திசை நோக்கி திருப்பிவிடப்பட்ட திருப்பங்கள்தான்.

Published:Updated:

யூரோ டூர் – 18: ஹிட்லர் எனும் சிப்பாய் ஒரு சர்வாதிகாரி ஆனது எப்படி?

“தவறாக வேண்டியவை தவறாமல் தவறாகும்” என்பது Murphy-யின் முதல் விதி. அது போல ஹிட்லரின் வாழ்வில் அதன் பின் நிகழ்ந்தவை எல்லாம் மர்ஃபி விதிப்படி தவறான திசை நோக்கி திருப்பிவிடப்பட்ட திருப்பங்கள்தான்.

அடால்ஃப் ஹிட்லர்
News
அடால்ஃப் ஹிட்லர்

பல லட்சம் அப்பாவி மக்களைக் கொன்றவன், ஓர் இனத்தை அழித்தவன், அரக்கன், சர்வாதிகாரி, கொடுங்கோலன்… இப்படி எந்த அடைமொழியால் சொன்னாலும் சிறுகுழந்தைக்கும் முதலில் நினைவுக்கு வரும் பெயர் அடால்ஃப் ஹிட்லராகத்தான் இருக்கும். ஹிட்லர் இறந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. ஆனாலும், ஹிட்லரின் கொடூரங்களை இன்னமும் ஐரோப்பாவின் வரலாற்றில் இருந்து துடைக்க முடியவில்லை.

ஐரோப்பாவின் சரித்திரத்தை அடால்ஃப் ஹிட்லரின் கதையை தவிர்த்துவிட்டு எழுதிவிடவே முடியாது. ஹிட்லரின் வாழ்க்கையை எழுதுவதன் மூலம், மறைமுகமாக அந்த சர்வாதிகாரியை புகழ்வதாகவோ, பெருமைப்படுத்துவதாகவோ, உயர்த்துவதாகவோ யாரும் தவறாகப் புரிந்து கொள்ளவேண்டாம். ஹிட்லர் எனும் சர்வாதிகாரி எப்படி உருவானார் என்பதை அவரின் வாழ்வனுபவத்தின் வழியாகத்தான் சொல்ல முடியும். சொல்கிறேன்!
“நீங்கள் வெற்றிபெற்றால் யாருக்கும் விளக்கம் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை. தோல்வியடைந்தால், விளக்கம் அளிக்க நீங்களே அங்கு இருக்கமாட்டீர்கள்!”
அடால்ஃப் ஹிட்லர்
அடால்ஃப் ஹிட்லர்
அடால்ஃப் ஹிட்லர்

தந்தையின் அன்புக்கு ஏங்கிய அந்தச் சிறுவனுக்கு அவனது தந்தை, அடியையும் உதையையும் பரிசளிக்காமல், பாசத்தையும் பரிவையும் காட்டியிருந்தால், ஒருவேளை அச்சிறுவனும் தன் தந்தையைப் போல ஒரு சாதாரண அரசு அதிகாரியாகவே வாழ்ந்து முடித்திருக்கலாம்!

தாய் மீது அதீத அன்பு வைத்திருந்த அந்த மகன், அத்தாய் புற்றுநோயால் மரணிக்காமல் இருந்திருந்தால் விரக்தியின் விளிம்புக்கே தள்ளப்பட்டு பிற்காலத்தில் ஒரு சர்வாதிகாரியாக உருவாகாமல் இருந்திருக்கலாம்.

ஐரோப்பாவின் தலைசிறந்த ஓவியனாக வேண்டும் என்ற ஒரே லட்சியத்தோடு வியன்னா நோக்கி சென்ற அந்த இளைஞனை, வியன்னா பல்கலைக்கழகம் நிராகரித்து திருப்பி அனுப்பாமல் இருந்திருந்தால், இன்று இந்தக் கட்டுரை ஒரு திறமையான ஓவியனைப் புகழும் கட்டுரையாக மாறியிருக்கும்.

வியன்னா வீதிகளில் தான் வரைந்த அழகிய ஓவியங்களை விற்ற அந்த திறமையான ஓவியனை அப்போதே இனம் கண்டு அவனுக்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் அளித்திருந்தால், அவன் ஆஸ்திரியா பெருமைப்படும் ஒரு பிரபலமாக, ஐரோப்பிய வரலாற்றுப் பக்கங்களை நிரப்பி இருக்கலாம்.

முதலாம் உலகப்போரில் சாதாரண ஒரு சிப்பாயாக இருந்த அந்த ராணுவ வீரன், நேச நாடுகளின் நச்சு வாயுத் தாக்குதலால் தற்காலிகமாக பார்வையைப் பறிகொடுக்காமல் இருந்திருந்தால், ஏதோ ஒரு போரில் அவன் உயிரிழந்து போயிருக்கலாம்.

வெர்சாய்ஸ் ஒப்பந்தத்தில், ஜெர்மனின் ராணுவ அளவைக் குறைக்கும்படி நேச நாடுகள் கட்டளை இடாமல் இருந்திருந்தால், அந்த சிப்பாய் தன் வேலையை இழந்திருக்கமாட்டான். வேலை பறிபோன அந்தச் சிப்பாய், இனி பிழைப்புக்கு என்ன செய்வது என்ற விரக்தியில், ஒரு சிறிய உணவு விடுதியின் மூலையில் இயங்கிய ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் இணையாமல் இருந்திருந்தால், நாஜி என்கிற நச்சு அமைப்பே உருவாகாமல் போயிருக்கலாம்.

ஹிட்லர்
ஹிட்லர்
அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என 5 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அந்தக் கலகக்காரனை வெறும் 6 மாதங்களில் விடுதலை செய்யாமல் இருந்திருந்தால், உலகையே உலுக்கிய ஒரு கொடூரமான யுத்தம் நடக்காமலேயே போயிருக்கலாம்.

ஆறு மாத காலம் சிறையில் இருந்தபோது, ‘சிறையில் இருந்து நான் வெளியே வந்ததும் ஒரு மிகப்பெரிய ராணுவத்தைத் திரட்டி, மொத்த யூதர்களையும் வேரோடு பிடுங்கி, ஐரோப்பாவின் முழு அதிகாரத்தையும் எப்படி ஜெர்மனி கைவசம் கொண்டுவருவேன்’ என ‘எனது போராட்டம்' (Mein Kampf - My Struggle) என்ற நூலில் அவன் எழுதியிருந்ததை யாராவது கொஞ்சம் உன்னிப்பாகப் படித்திருந்தால் கூட ஐரோப்பாவின் தலைவிதி மாற்றி எழுதப்பட்டிருக்கலாம்.

‘தவறாக நிகழக்கூடிய எதுவும், மிக மோசமான தருணத்தில் நிகழ்ந்து முடியும்’ என்பது Finagle’s Law of Dynamic Negatives எனப்படும் விதி. இந்த விதி அடால்ஃப் ஹிட்லரின் வாழ்வில், ஜெர்மனியின் வரலாற்றில், யூத இனத்துக்கு எதிராக, ஐரோப்பிய சரித்திரத்தில் சரியாகப் பொருந்திப் போய் மிக மிக மோசமான நிகழ்வாக நிகழ்ந்து முடிந்தது.

ஆஸ்திரியாவில் பிறந்தவர் ஜெர்மனியின் சர்வாதிகாரியான கதை!

1889-ல், ஆஸ்திரியாவின் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில், தந்தையின் மூன்றாவது மனைவிக்கு, நான்காவது குழந்தையாக பிறந்தவர்தான் அடால்ஃப் ஹிட்லர். தந்தை குடிநோயாளி. தினமும் குடிபோதையில் தாயை அடித்து துன்புறுத்துவதைப் பார்த்து பிஞ்சு மனம் பிறழ்வுபட்டது. அதனாலேயே அவன் தாயின் மேல் அளவு கடந்த பாசத்தை வைத்தான். அவன் உலகமே தாய் என்றானது. அவனுக்கு ஒரு குட்டித் தம்பி. அவன் சிறு வயதிலேயே இறந்து போக, இச்சிறுவனின் வாழ்வில் வெறுமை படரத் தொடங்கியது.

தினமும் தன் தம்பியின் கல்லறைக்கு ஓடி, பல மணி நேரம் தனியாக நின்று பேசியிருக்கிறான். அவனது சிறுவயது ஆசைகள் அழகியல் நிறைந்த தேவதைக் கதைகளாகவே இருந்திருக்கின்றன. “நீ வளர்ந்து ஒரு பெரிய ஆளாக வருவாய்” என அவன் தந்தை ஒரு நாள் சொல்ல, “இல்லை நான் வளர்ந்து ஒரு கழுகாக மாறி, உயர்ந்த வானில் மேகங்களுக்கு மேலே பறக்கப் போகிறேன்” என்று சொல்லியிருக்கிறான்.

நேதாஜி - ஹிட்லர்
நேதாஜி - ஹிட்லர்

தன் தாய்க்கு குடிகார தந்தையிடம் இருந்து இறப்பின் வழியே ஒரு விடுதலை கிடைத்துவிட்டது. தனக்கும் வியன்னா ஓவியக்கல்லூரி மூலம் ஒரு விடுதலை கிடைக்கும் என நம்பினான் அந்த இளைஞன். புகழ்பெற்ற ஓவியனாகி, பல சிறப்பான ஓவியங்கள் வரைய வேண்டும் என்ற ஆசையும், லட்சியமும் அவனுக்குள் இருந்தது.

ஆனால் விதி தன் விபரீதமான விளையாட்டை ஆரம்பித்தது. தாயின் மரணம், தந்தையின் அலட்சியம், லட்சியத்தை நோக்கிச் சென்ற இடங்களில் எல்லாம் நிராகரிப்பு, அவமானம், பசி, வறுமை, வெறுமை, தனிமை என எல்லாம் சேர்ந்து ஒன்றாக அவனைத் துரத்தியது. ஓடினான், ஓடினான்... ஜெர்மனியின் எல்லை வரை ஓடினான். எல்லா நம்பிக்கைகளும் கைவிட்ட நிலையில் ஹிட்லருக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்தது ஜெர்மனி.

சிப்பாய் டு சர்வாதிகாரி!

“தவறாக வேண்டியவை தவறாமல் தவறாகும்” என்பது Murphy-யின் முதல் விதி. அது போல ஹிட்லரின் வாழ்வில் அதன்பின் நிகழ்ந்தவை எல்லாம் மர்ஃபி விதிப்படி தவறான திசை நோக்கி திருப்பிவிடப்பட்ட திருப்பங்கள்தான். சபையில் சரியாகப் பேசத் தெரியாத, நாலு பேருடன் பழகத் தெரியாத, கூச்ச சுபாவம் கொண்ட, மதியம் பன்னிரண்டு மணிக்குக்கூட எழுந்திருக்காத ஒரு படு சோம்பேறி இளைஞன், அடுத்த சில வருடங்களில் ஐரோப்பாவின் அசைக்க முடியா சர்வாதிகாரியாக உச்சம் தொட்டது எல்லாம் எதிர்பாராத ட்விஸ்ட்.

செப்டம்பர் 1919-ல் ம்யூனிச்சில் செயல்பட்ட ஜெர்மன் தொழிலாளர் கட்சி என்று அழைக்கப்படும் ஒரு சிறிய குழுவை ரகசியமாக வேவு பார்க்க ஹிட்லருக்கு மேலிடத்து உத்தரவு வந்தது. Munich Beer Hall-ன் பின்புற அறையில், சுமார் 25 பேருடன் நடந்த ஜெர்மன் தொழிலாளர் கட்சியின் கூட்டத்துக்கு முதல்முறையாக யூனிஃபார்ம் இல்லாமல் சாதாரண உடையில் சென்றார் சிப்பாய் ஹிட்லர். ‘முதலாளித்துவம் எப்படி, எதன் வழியாக ஒழிக்கப்பட வேண்டும்?’ என்ற தலைப்பில் அங்கு ஓர் உரையாடல் நிகழ்ந்தது. அது முடிந்ததும் ஹிட்லர் அங்கிருந்து வெளியேற முற்பட்ட போது, அங்கிருந்த ஒருவர் ஜெர்மனியில் இருந்து பவேரியா மாகாணத்தைப் பிரித்து ஆஸ்திரியாவுடன் சேர்த்து ஒரு புதிய தென் ஜெர்மனி நாட்டை உருவாக்குவதைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்.

Hitler
Hitler

இந்தப் பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த ஹிட்லர், அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு அந்த நபருடன் அது பற்றிய தன் எதிர் கருத்துகளை காரசாரமாக முன்வைத்திருக்கிறார். அவரது பேச்சு அங்கிருந்த அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறது. அமைதியாக ஹிட்லரின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஜெர்மன் தொழிலாளர் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான அன்டன் ட்ரெக்ஸ்லர் அருகிலிருந்த தன் கட்சிக்காரர்களிடம் ‘‘பேச்சால் மற்றவரை வசீகரித்து கட்டிப்போடும் திறமை கொண்டவன் இவன். இவனை நாம் நம்முடன் வைத்துக்கொள்ளலாம். பிற்காலத்தில் உதவுவான்” என்று கிசுகிசுத்திருக்கிறார். பின் ஹிட்லர் அருகில் போய் ‘My Political Awakening’ என்ற தலைப்பில் ஒரு நாற்பது பக்க பிரசுரத்தை கொடுத்து, ‘‘இதைப் படித்துவிட்டு என்னை வந்து பார்’’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.

மறுநாள் அதிகாலை, தனது படைப்பிரிவின் ஓர் அறையில் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்த ஹிட்லருக்கு அந்தத் துண்டுப் பிரசுரம் ஞாபகம் வந்திருக்கிறது. படிக்க ஆரம்பித்தவர், அதில் தனது சுய சிந்தனையை ஒத்த அரசியல் கருத்துகள் பிரதிபலித்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியில் மூழ்க ஆரம்பித்திருக்கிறார். அடுத்த சில நாள்களில் அதே கட்சியில் இருந்து எதிர்பாராத அஞ்சல் அட்டை ஒன்று ஹிட்லரை தேடி வந்திருக்கிறது.

ஹிட்லரின் அரசியல் பிரவேசத்துக்கான வாயிலைத் திறந்து விட்ட அந்தக் கடிதத்தில், ஹிட்லரை கட்சியின் புதிய உறுப்பினராக சேர்த்துக் கொள்ள விரும்புவதாக எழுதப்பட்டிருந்தது. “இரண்டு நாள்கள் யோசித்துவிட்டு அந்த அழைப்பை ஏற்பதாக இறுதியாக முடிவு செய்தேன். அது என் வாழ்க்கையின் மிக தீர்க்கமான தீர்மானம். ஒரு வழிப்பாதையான இதில் இருந்து மீண்டும் என்னால் திரும்ப முடியாது. திரும்பவும் மாட்டேன்’’ என்று இந்தச் சம்பவம் குறித்து தன்னுடைய புத்தகத்தில் எழுதியிருக்கிறார் ஹிட்லர்.

Hitler
Hitler
ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் இணைந்து, அரசியலில் நுழைந்தார் ஹிட்லர். அவருக்குள் புதைந்திருந்த மிகத் திறமையான பேச்சாளன் வெளிவரத் தொடங்கினான். தனது பேச்சைக் கேட்க கூட்டம் கூடத் தொடங்கியதைப் பார்த்த ஹிட்லர், Public Speaking எனும் கலையை கற்றுக்கொள்ளத் தொடங்கி அதில் வித்தகன் ஆனார்.

ஹிட்லர் எனும் ஒற்றை மனிதனால் கட்சி பலப்பட தொடங்கியது. மக்கள் அதன் கொள்கைகளிலும், கருத்துக்களிலும் மெல்ல மெல்ல ஈர்க்கப்பட்டனர். ஹிட்லரின் கட்டற்ற அணை போன்ற பேச்சில், ஏனைய அரசியல் அமைப்புகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன. அவர் பேசப் பேச, மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல மக்கள் கூட்டம் அவர் பின்னால் மெய் மறந்து செல்லத் தொடங்கியது. விளைவு... ஜெர்மன் தொழிலாளர் கட்சியின் தலைவராக ஹிட்லர் நியமிக்கப்பட்டார்.

ஜெர்மனியின் மீட்சியும், வளர்ச்சியும்!

தனக்கு அடைக்கலம் கொடுத்த ஜெர்மனி மேல் அளவில்லா பற்றுகொண்டார் ஹிட்லர். சிதைந்த ஜெர்மனியை சீர்படுத்த தன்னால் முடியும் என மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். முதல் உலகப்போரில் ஜெர்மனி வசம் வரவேண்டிய வெற்றி ஒரு சில துரோகங்களால் கை நழுவிப் போனது என்றார். ஜெர்மனின் தோல்வி ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று என்றும், விட்டதைப் பிடிக்க, நாம் ஒன்றுபடுவோம் என்றும் அவர் பேசிய வார்த்தைகள், ஒவ்வொரு ஜெர்மானியனின் மனதிலும் நாட்டுப்பற்று என்னும் தீயைப் பற்றி எரிய வைத்தது.

ஹிட்லரின் பேச்சில் ஒரு கவர்ச்சி இருந்தது. ஐரோப்பாவின் சூப்பர் பவராக ஜெர்மனியை மாற்றுவோம் என அவர் முழங்கிய முழக்கத்தின் தொடர்ச்சியாக, அடுத்த சில ஆண்டுகளில் ஜெர்மன் வளரத் தொடங்கியது. ராணுவம், தொழில்நுட்பம் என எல்லா பக்கங்களிலும் பலம் பெற்று, மீண்டும் பிரமாண்டமான வல்லரசாக மாற ஆரம்பித்தது.
அடால்ஃப் ஹிட்லர்
அடால்ஃப் ஹிட்லர்

முதல் உலகப் போரில் ஜெர்மனி ஒரு தற்காப்புப் போரையே நடத்தியது என்றும், கெய்சர் வில்ஹெல்ம்-II திறமையான தலைமையை வழங்கத் தவறிவிட்டார் என்றும், துரோகங்களால்தான் ஜெர்மனி வீழ்ந்தது என்றும் நம்பிய ஜெர்மனின் ராணுவ தளபதி லுடென்டோர்ஃப் (Erich Friedrich Wilhelm Ludendorff) ஹிட்லரோடு கைகோத்தார். அவரைப்போல பல அரசியல் மற்றும் ராணுவத்தின் முக்கிய பிரமுகர்கள் ஹிட்லரோடு இணைந்தனர்.

ஜெர்மன் தொழிலாளர் கட்சி, ஹிட்லர் தலைமையில் The National Socialist German Workers Party எனும் நாஜி அமைப்பாக பெயர் மாற்றம் கொண்டது. 1932-களில் நாஜிக்கள் மிகப்பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்தனர். அடுத்து வந்த தேர்தலில் வேறு எந்தத் தலைவரும் மக்கள் மத்தியில் போதிய ஆதரவைப் பெறாத நிலையில், ஜனாதிபதி பால் வான் ஹிண்டன்பர்க் (President Paul von Hindenburg) ஜெர்மனியின் Chancellor-ஆக ஹிட்லரை நியமித்தார்.

ஜெர்மனியின் ஆட்டம் ஆரம்பமானது!

யூரோ டூர் போவோம்!