பின்தங்கிய ஆப்பிரிக்க தேசங்களில் சர்வாதிகாரிகள் தோன்றுவதில் ஆச்சரியமில்லை. ஜனநாயக அரசாங்கமும், பத்திரிகைச் சுதந்திரமும், உயர்ந்த கல்வியறிவும் கொண்டிருந்த ஜெர்மனியில் எப்படி அது நிகழ்ந்தது? இலக்கியம், கலை, கட்டடக்கலை, அறிவியல், தொழில்நுட்பம் என அத்தனை துறைகளிலும் மேம்பட்டு இருந்த ஒரு நாட்டில் எப்படி ஹிட்லர் போன்ற ஒரு சர்வாதிகாரி உருவானார்? எப்படி நாஜி போன்ற ஒரு நச்சு அமைப்பு சாத்தியமானது? ஹிட்லர் எப்படி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்?
‘We shall squeeze the German lemon until the pips squeak!’ - ஒரு பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி வெர்சாய்ஸ் உடன்படிக்கையின் போது கிண்டலும் எகத்தாளமுமாக சொன்ன வார்த்தைகள் இவை. இப்படிப் பல கேலி, கிண்டல், அவமானங்களால் கொந்தளிப்பில் இருந்தனர் ஜெர்மானியர்கள். நீறுபூத்த நெருப்பாக இருந்த அவர்களின் ஆற்றாமையை, மனவேதனையை, கொதிப்பை, இதயத் துடிப்பை கச்சிதமாகப் புரிந்துகொண்டு களமிறங்கினார் ஹிட்லர்.

ஹிட்லர் வழி தனி வழி!
“Either victory of the Aryan, or annihilation of the Aryan and the victory of the Jew” என்று சொன்ன ஹிட்லரின் ஒரே குறிக்கோள், ‘ஜெர்மனி வளர வேண்டும்’ என்பதையும் தாண்டி, ‘Aryan என்று அழைக்கப்பட்ட உயர்சாதி ஜெர்மானியர்கள் ஐரோப்பாவை ஆள வேண்டும்’ என்பதாகவே இருந்தது. தன் கைக்கு ஆட்சி வந்தால் என்னவெல்லாம் செய்வேன் என ஏற்கெனவே Mein Kampf எனும் சுயசரிதை நூலில் தெளிவாக எழுதியிருந்த ஹிட்லர், முதல் வேலையாக வெர்சாய்ஸ் உடன்படிக்கையின் அத்தனை விதிகளையும் தூக்கி எறிந்துவிட்டு, 'என் வழி தனி வழி' என தன் ஆட்டத்தை ஆரம்பித்தார். ஜெர்மானியர்களின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் நாஜி எனும் ஒரு சர்வாதிகார அரசால் கட்டுப்படுத்தப்பட்டன.
ஹிட்லரின் இருப்பும், நாஜிக் கட்சியும் ஜெர்மன் மக்களின் வாழ்க்கையில் ஒரு நிலையான அங்கமாக மாறியிருந்தன. ஹிட்லரின் ஸ்வஸ்திகா சின்னம் (Swastika symbol) ஒவ்வொரு அரசு சீருடையிலும் பொது கட்டடத்திலும் இடம்பெற்றது. திரும்பும் இடமெல்லாம் ஹிட்லரின் படங்கள்தான் கண்ணுக்குத் தென்பட்டன. இரு ஜெர்மானியர்கள் சந்தித்துக் கொள்ளும்போதெல்லாம் கையை உயர்த்தி ‘ஹிட்லர் நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர்’ என்பது போன்ற அர்த்தம் பொதிந்த ‘Heil Hitler’ எனும் வணக்கத்தை வைக்க வேண்டும் போன்ற விநோதமான சட்டங்களும் அமல்படுத்தப்பட்டன.
ஹிட்லரின் ஆட்டம் ஆரம்பம்
ஜனவரி 1933-ல் அடால்ஃப் ஹிட்லர், ஜெர்மனியின் அதிபராக பொறுப்பேற்றதோடு ஜெர்மனியின் புதிய வரலாறு ஆரம்பமானது. இரண்டாம் உலகப்போர் வரையிலான 11 வருட ஹிட்லர் ஆட்சியில் ஜெர்மனியின் வளர்ச்சி எல்லோரும் பிரமிக்கும் வகையில் இருந்தது. ஏற்கெனவே தனது முக்கிய பொருளாதார பிராந்தியங்களையும், வளங்களையும் பிரான்ஸிடம் பறிகொடுத்த ஜெர்மனி, முன்னரை விட பல மடங்கு பலத்துடன் மீண்டும் தன் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முன்னெடுத்த ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற்றது. குறிப்பாக ஆயுத உற்பத்தி மற்றும் தேசிய சேவைகள் மூலம் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பை ஹிட்லர் உருவாக்கிக் கொடுத்தார். மக்கள் சுதந்திரத்தை இழந்தபோதிலும், நாஜிப் பொருளாதாரக் கொள்கைகள் சமூகத்தில் வெவ்வேறு குழுக்களில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தியபோதிலும், சாதாரண நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் பல வழிகளில் மேம்படத் தொடங்கியது.

முதல் உலகப்போரினால் ஏற்பட்ட கடும் பொருளாதார சரிவின் விளைவாக 1933-ல் 60 லட்சமாக இருந்த ஜெர்மனின் வேலையின்மை அளவை, 1939-ல் வெறும் 3 லட்சமாகக் குறைந்தார் ஹிட்லர். 1940வாக்கில் ஜெர்மனியின் வேலையின்மை இன்டெக்ஸ் அதிகாரப்பூர்வமாக பூஜ்ஜியத்தை எட்டியது. மருத்துவமனைகள், பள்ளிகள், தொழிற்சாலைகள், பொது கட்டட நிர்மாணம் என ஆரம்பித்த ஹிட்லரின் அதிரடித் திட்டத்தால் பல லட்சம் ஜெர்மானியர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். 1936-ல் கட்டப்பட்ட மிகப்பெரிய ஒலிம்பிக் ஸ்டேடியத்தின் கட்டுமானப் பணி மட்டுமே 80,000 பேருக்கான வேலையை உருவாக்கியது. ப்ரோரா ஹாலிடே ரிசார்ட், கெரோமன் நீர்மூழ்கிக் கப்பல் தளம், நாஜிக் கட்சிப் பேரணி மைதானம், ஃப்ளாக் டவர்ஸ், விமானப் போக்குவரத்து அமைச்சகம், ஈகிள்ஸ் நெஸ்ட் போன்ற ஜெர்மனியின் பிரமாண்டமான கட்டடங்கள் நாஜி ஆட்சியில் உருவானவைதான்.
தொழில்நுட்பத்தில் ஜெர்மனியின் புரட்சியும் புதுமையும்
ஜெர்மன் தொழிலாளர்களுக்கு மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கிய மற்றுமொரு முக்கிய துறை ஆயுத உற்பத்தி. நாஜி பொறியாளர்கள் ராணுவத் தொழில்நுட்பத்தில் புதுமையானதும், மிகவும் முன்னேற்றமானதுமான வளர்ச்சியை சாத்தியமாக்கினார்கள். துல்லியமான பீரங்கிகள், எக்ஸ்ரே துப்பாக்கிகள், தரைவழிக் கப்பல்கள் போன்ற பல நவீன ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இன்றைய ஸ்மார்ட் வெடிகுண்டுகளின் முன்னோடியாகக் கருதப்படும் The Fritz X, நாஜி ஆட்சியில் உருவான மிக முக்கியமான ஆயுதங்களில் ஒன்றாகும்.
700 பவுண்டுகளுக்கு மேல் வெடிபொருள்களைச் சுமந்து சென்று, போர்க்கப்பல்கள் மற்றும் கனரக கப்பல்களை இலக்கு தவறாமல் தாக்கும் The glide bomb, தரை மட்டத்திலிருந்து 49,000 அடி உயரத்தில் பறந்து 600 மைல் வேகத்தில் பயணிக்கும் The flying wing bomber போன்றவை ஹிட்லர் காலத்து ஆயுத உற்பத்தியின் அசுரப் பாய்ச்சலுக்கு சில உதாரணங்கள்.

வெர்சாய்ஸ் உடன்படிக்கையில் முற்றாக முடக்கப்பட்ட ஜெர்மன் விமானப் படை, ஹிட்லரின் நாஜி ஆட்சியில் மீண்டும் தன் சிறகுகளை விரித்து உயிர்பெற்றது. The Horten Ho என்று அழைக்கப்பட்ட இரட்டை டர்போஜெட் இயந்திரங்கள், இரண்டு பீரங்கிகள் மற்றும் R4M ராக்கெட்டுகளைக் கொண்ட உலகின் முதல் fighter jet விமானம் ஹிட்லரின் காலத்தில் ஜெர்மனி கண்டுபிடித்த மிக முக்கியமான பொக்கிஷம். Northrop Grumman B-2 bomber போன்ற கனரக குண்டுவீச்சு விமானங்களைத் தயாரிக்க, அரை மில்லியன் ஜெர்மன் மார்க்குகளை நாஜிக்கள் ஒதுக்கினர்.
முதல் உலகப்போரில் தோல்வியுற்ற ஜெர்மனியிடம் இருந்த அத்தனை ஃபைட்டர் விமானங்களையும் நேச நாடுகள் கைப்பற்றின. அவற்றை வட்டியோடு சேர்த்து குட்டி போட்டுப் பெருக்கியது நாஜி ராணுவம். 220 பவுண்டுகள் வரையிலான உயர் வெடிமருந்துகளை எடுத்துச் சென்று கனரக வாகனங்களையும், உறுதியான பங்கர் மற்றும் கட்டடங்களையும் தாக்க, நாஜி ராணுவ தொழில்நுட்ப மேதைகள் கண்டுபிடித்த மினியேச்சர் டாங்கிகள் எல்லாம் இன்றைய ரேடியோ கட்டுப்பாட்டு ஆயுதங்களுக்கு முன்னோடி. அதேபோல நாஜிக்களின் மற்றுமொரு கண்டுபிடிப்பான Messerschmitt Me 163 Komet எனும் மணிக்கு 700 மைல் வேகத்தில் பறக்கும் ராக்கெட் இன்ஜின் பொருத்தப்பட்ட ஜெட் விமானம் நேச நாடுகளின் ராணுவத்தை அழிக்க போதுமானதாக இருந்தது.
அதேபோல ஹிட்லர் காலத்தில் உருவான மற்றுமொரு நவீன கண்டுபிடிப்பு Führersonderzug Amerika. 430 மீட்டர் நீளம் மற்றும் 12 டன் எடையுடனும் ஹிட்லர் உருவாக்கிய இந்த இரும்பு அரக்கன், anti-aircraft பேட்டரிகளால் பாதுகாக்கப்பட்டிருந்தது. இரண்டு லோகோமோட்டிவ்களால் இழுக்கப்பட்ட அந்தப் பிரமாண்டமான ரயிலில், போர்க்காலத்திற்குத் தயாராக அணி திரட்டப்பட்ட ராணுவம், தனியார் மெய்க்காவலர்கள், ரயில்வே போலீஸ் மற்றும் ஜெர்மன் ராணுவ அதிகாரிகள் என 200க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். அதி உயர் தொழில்நுட்பத்துடனும், பலத்த பாதுகாப்புகளுடனும் ஹிட்லர் உருவாக்கிய அந்த எஃகு இயந்திரம் ஒரு நாஜி கோட்டையாகவே இருந்தது.
ஆட்டோமொபைலில் அடித்து ஆடிய ஜெர்மனி!
ஏனைய துறைகளைப் போலவே ஜெர்மனியில் ஆட்டோமொபைல் துறையும் நாஜி ஆட்சியில் வலுப்பெற்றது.

ஜெர்மனியை விட எந்த நாடும் வலிமையானதாகவும் வளமானதாகவும் இருப்பதை ஹிட்லர் விரும்பவில்லை. 1930-களில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட எல்லோரது வீடுகளிலும் ஒரு கார் இருந்தது. அதை ஹிட்லரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் கார்களை விட, தரத்தில் சிறப்பாகவும் விலையில் குறைவாகவும் ஒரு காரை உருவாக்க வேண்டும் என நினைத்தார். இந்த விஷயத்தில் ஹிட்லருடன் கை கோத்தார் அக்காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த ஆட்டோமொபைல் இன்ஜினியரான Ferdinand Porsche. இன்று வரை உலகில் மிகவும் பாதுகாப்பான, அதிகளவில் உற்பத்தி செய்யப்படும், விற்பனையில் சாதனை புரியும் ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) கார் நிறுவனம் உருவானது.
மே 28, 1937-ல் “Today I reveal to the world, The peoples car” என்று ஹிட்லர் பேசியதெல்லாம் ஜெர்மன் வரலாற்றின் முக்கிய பக்கங்கள். நாஜி அமைப்பின் ஸ்வஸ்திகா சின்னத்திலிருந்து உருவான ஒரு லோகோவுடன் உருவான Volkswagen இன்று வரை அதன் லோகோவை மாற்றிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வரை மிடில் கிளாஸ் மக்களின் ஒரு கனவாகவே இருக்கும் சொந்தமான ஒரு கார் என்ற ஒன்றை, 1933-களிலேயே ஜெர்மானியர்களின் வாழ்வில் நிஜமாக்கினார் ஹிட்லர். அக்காலத்தில் 500 டாலருக்கு அமெரிக்காவில் விற்பனையான கார்களைவிட, தொழில்நுட்பத்தில் சிறந்த கார்களை வெறும் 150 டாலருக்கு உருவாக்கி ஆட்டோமொபைல் புரட்சி செய்தது ஜெர்மனி.
1939-ல் இரண்டாம் உலகப்போர் வெடித்தபோது கார் உற்பத்தியை நிறுத்திவிட்டு ஜெர்மன் ராணுவத்துக்கு தேவையான ஆயுதம், வெடிமருந்து, போர்க்கப்பல்கள், யுத்த விமானங்கள், ராணுவ வாகனங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் களமாக ஃபோக்ஸ்வேகன் தொழிற்சாலையை மாற்றினார் ஹிட்லர்.

வெர்சாய்ஸ் ஒப்பந்தத்தில் ‘ஜெர்மனியின் விமானப்படையைத் தடை செய்ய வேண்டும்’ என்றும், ‘போர் விமானங்களைத் தயாரிக்கவே கூடாது’ என்றும் கடும் நிபந்தனை விதிக்கப்பட்டதால், அடால்ஃப் ஹிட்லர் இந்த ஃபோக்ஸ்வேகன் தொழிற்சாலையை வெளி உலகுக்குத் தெரியாமல் யுத்த விமானங்கள் தயாரிக்கும் இடமாகப் பயன்படுத்தினார். இதை மோப்பம் பிடித்த அமெரிக்க விமானப்படை, 1944-ல் ஃபோக்ஸ்வேகன் தொழிற்சாலையின் மீது மிகப்பெரிய குண்டுவெடிப்பை நிகழ்த்தி முற்றிலுமாகத் தகர்த்தது. இருப்பினும் இரண்டாம் உலகப்போருக்கு பின் மீண்டும் உயிர்த்தெழுந்த ஜெர்மனி, இன்றுவரை ஆட்டோமொபைல் துறையில் யாராலும் அசைத்தும் பார்க்க முடியாத ஜாம்பவானாக தன் இடத்தை நிலைநிறுத்தி உள்ளது.
ஜெர்மனியின் அசைக்கமுடியாத அரசனாக விஸ்வரூபமெடுத்த ஹிட்லர், வீழ்ந்தது எப்படி? பீனிக்ஸ் பறவைபோல தன் சாம்பலில் இருந்தே மீண்டு வந்த ஜெர்மனி சறுக்கிய இடம் எது? வெறும் இருபது வருடங்களிலேயே மீண்டும் ஒரு யுத்தத் தீ பற்றியெரிந்தது எப்படி?