Published:Updated:

யூரோ டூர் 20: இரண்டாம் உலகப் போர் யாரால், எதற்காகத் தொடங்கப்பட்டது? அதில் ஜெர்மனி போட்ட கணக்கு என்ன?

இரண்டாம் உலக போர்
News
இரண்டாம் உலக போர்

செப்டம்பர் 17ல் சோவியத் யூனியன் கிழக்கிலிருந்து போலந்தைத் தாக்கத் தொடங்க, இரு பலம் பொருந்திய வல்லரசுகளின் தாக்குதளில் தாக்குப் பிடிக்க முடியாத போலந்து சரியாக பத்தே பத்து நாள்களில் ஜெர்மனியிடம் சரணடைந்தது.

Published:Updated:

யூரோ டூர் 20: இரண்டாம் உலகப் போர் யாரால், எதற்காகத் தொடங்கப்பட்டது? அதில் ஜெர்மனி போட்ட கணக்கு என்ன?

செப்டம்பர் 17ல் சோவியத் யூனியன் கிழக்கிலிருந்து போலந்தைத் தாக்கத் தொடங்க, இரு பலம் பொருந்திய வல்லரசுகளின் தாக்குதளில் தாக்குப் பிடிக்க முடியாத போலந்து சரியாக பத்தே பத்து நாள்களில் ஜெர்மனியிடம் சரணடைந்தது.

இரண்டாம் உலக போர்
News
இரண்டாம் உலக போர்
மனிதனால் எங்கேயாவது சண்டை போடாமல் ஓரிரண்டு வருடங்களுக்கு மேல் இருக்க முடியாது. இது அவனது ஆதார மிருக குணம். ஆதிமனித காட்டுமிராண்டி நாள்களில் இருந்து வந்தது. மேலும் நாசங்களை உற்பத்தி செய்து விட்டு நேசங்களைத் தேடுவதும், நவீன வாழ்வை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிக்கலாக்கிக் கொள்வதும் மனித குணம்.
சுஜாதா

ஆதிமனிதன் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை யுத்தம் என்பது ஒரு முடிவிலி சோகம். மனித வரலாற்றிலேயே யுத்தம் என்ற ஒன்று இல்லாத காலப்பகுதியை அடையாளப்படுத்தவே முடியாது. யுத்தம், பலத்தை நிரூபிப்பதற்கும் அதிகாரத்தைத் தீர்மானிப்பதற்க்கும் அவசியமான ஓர் அளவுகோலாகிவிட்டது. பிறந்திருக்கும் இந்தப் புது வருடம்கூட ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நிகழுமா, அது மூன்றாம் உலக யுத்தமாக வெடிக்குமா போன்ற ஒரு பதற்ற நிலையிலேயே பிறந்திருக்கிறது.

பல யுத்தங்களை உலகம் இதுவரை பார்த்துவிட்டாலும் முதல் இரண்டு உலகப்போர்கள் அளவுக்கு இதுவரை ஒரு பயங்கரம் நிகழ்ந்ததில்லை.
இரண்டாம் உலகப் போர்
இரண்டாம் உலகப் போர்
FOTO:FORTEPAN / Konok Tamás id

இரண்டாம் உலக யுத்தத்தின் ஆரம்பம்

முதலாம் உலக யுத்தத்தின் இறுதியில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் எல்லாமே ஜெர்மனி மீண்டும் பலம் பெற்றுவிடக் கூடாது என்பதை மறைமுகமாக உறுதிப்படுத்துவதாக இருந்த போதிலும், வீழ்வேன் என்று நினைத்தாயோ என அடுத்த 20 வருடங்களிலேயே விட்ட இடத்தை வட்டியும் முதலுமாகச் சேர்த்துப் பிடித்தது ஜெர்மனி. ஹிட்லரும் ஜெர்மனியை மீட்டெடுப்போம் என்று கூறியதை வெறும் 20 ஆண்டுகளில் செய்து முடித்தார். 1938ல் முழு ஐரோப்பாவும் யுத்தம் ஒரு குற்றச்செயல் என்று எண்ணியபோது ஒரே ஒருவருக்கு மட்டும் யுத்தம் தேவைப்பட்டது. ஒரே ஒரு அரசு மட்டும் யுத்தத்தை ஆதரித்தது. அந்த ஒருவர் ஹிட்லர். அந்த அரசு நாஜி ஜெர்மனி.

முதல் உலக யுத்தத்தில் தாம் இழந்தவற்றை மீட்டெடுக்க விரும்பியது ஜெர்மனி. அதன் முதல் கட்டமாக ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரியை மீண்டும் ஜெர்மனியோடு இணைத்துக் கொண்டது. ஏற்கெனவே முதல் உலகப் போரில் வாங்கிய அடி காரணமாக உலக நாடுகளில் பொருளாதாரம் மந்த நிலையில் காணப்பட்டது. சூடு கண்ட பூனையான பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா போன்ற நாடுகள் மீண்டும் ஒரு யுத்தத்தை விரும்பவில்லை. எனவே ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் ஆட்டங்களைக் கண்டும் காணாதது போல இருந்தன. இத்தாலியின் முசோலினி 1935-ல் எத்தியோப்பியா மீதும், 1937-ல் ஜப்பான் சீனா மீதும் பாரியளவில் ஒரு படையெடுப்பினை மேற்கொண்டு கைப்பற்றிய போது கூட அப்போது கிட்டத்தட்ட ஐ.நா. போன்ற ஒரு அமைப்பாக இருந்த லீக் ஆஃப் நேஷன்ஸ் என்ற அமைப்பு கூட இதைக் கண்டும் காணாதது போல அப்படியே டீலில் விட்டது.

ஹிட்லர் கையில் ஐரோப்பா

ஐரோப்பாவில் இனி பிராந்திய கோரிக்கைகள் எதுவும் இல்லை என்று கூறிய ஜெர்மனி அடுத்தபடியாக செகோஸ்லோவாக்கியா மீது படை எடுத்து Sudetenland என்ற பகுதியைக் கைப்பற்றியது. பிரிட்டன் பிரதமர் Neville Chamberlain-இடம் இது குறித்து கண்டிக்கும்படி வற்புறுத்திய போது, அவர் “Sudetenland ஒரு ஜெர்மன் மொழிப் பேசும் பகுதி என்பதால் ஹிட்லர் அதை வென்றது வென்றதாகவே இருக்கட்டும். ஆனால் இனிமேல் ஹிட்லர் எந்தநாட்டின் மீதும் போர் செய்யக்கூடாது" என்று கூறி மியூனிச் உடன்படிக்கை ஒன்றை ஹிட்லருடன் செய்துகொண்டார். ஹிட்லரும் அதை அச்சமயம் ஏற்றுக்கொண்டார். ஆனால், ஆறு மாதங்கள் கழித்து, கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு, அதே ஆண்டிலேயே செக்கோஸ்லோவாக்கியாவின் எஞ்சிய பகுதியை ஜெர்மன் துருப்புக்கள் கைப்பற்றின.

ஹிட்லர்
ஹிட்லர்
National Archives and Records Administration, 242-HAP-1928 (46)
ஜெர்மனியின் அடுத்து டார்கெட் போலந்து. பூகோள அமைப்பின் படி ஜெர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போலந்து இருந்தது. போலந்தைத் தாக்கினால் ரஷ்யாவின் பகையைச் சம்பாதிக்க நேரிடுமோ என்று எண்ணி போலந்தின் சில பகுதிகளை ரஷ்யாவிற்குக் கொடுப்பதாக ரஷ்யாவிடம் ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டார் ஹிட்லர்.

இதற்கு மேலும் ஜெர்மனை வளரவிட்டால் முதலுக்கே மோசம் வந்து விடும் என்று எண்ணிய பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் போலந்து மீது ஜெர்மனி படை எடுத்தால் நாங்கள் போலந்துக்கு ஆதரவாக போரில் குதிப்போம் என்று அறிவித்தது ஜெர்மனியே எதிர்பாராத புதிய ட்விஸ்ட். ஆனாலும் இதற்கெல்லாம் ஹிட்லர் அசருவதாக இல்லை. செப்டம்பர் 1, 1939ல் போலந்தை ஜெர்மன் ராணுவம் ஆக்கிரமித்தது. சரியாக எண்ணி இரண்டாவது நாள், அதாவது செப்டம்பர் 3, 1939ல் பிரிட்டனும் பிரான்ஸும் ஜெர்மனி மீது போரை அறிவித்தன. இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்பமானது. ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகள் Axis alliance எனும் ஒரு அணியாகவும், சோவியத் யூனியன், பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நேச நாடுகள் The Allied Powers எனும் மறு அணியாகவும் கூட்டணி சேர்ந்தன.

செப்டம்பர் 17ல் சோவியத் யூனியன் கிழக்கிலிருந்து போலந்தைத் தாக்கத் தொடங்க, இரு பலம் பொருந்திய வல்லரசுகளின் தாக்குதளில் தாக்குப் பிடிக்க முடியாத போலந்து சரியாக பத்தே பத்து நாள்களில் ஜெர்மனியிடம் சரணடைந்தது. ஏற்கெனவே பேசிக்கொண்டபடி ஜெர்மனியும் சோவியத் யூனியனும் போலந்தைத் தங்களுக்கு இடையே பங்கு பிரித்துக் கொண்டன.

ஜெர்மனின் பார்வை அடுத்து மேற்கு ஐரோப்பா நோக்கித் திரும்பியது. ஏப்ரல் 9, 1940யில், தாக்குதல் ஆரம்பித்த முதல் நாளே டென்மார்க் சரணடைந்தது. அடுத்த ஒன்பதாவது நாள் நார்வேயும் சரணடைந்தது. அடுத்த மாதமே நாஜிப் படைகளின் வலிமையின் முன்னால் ஈடுகொடுக்க முடியாமல் லக்சம்பர்க், நெதர்லாந்து, பெல்ஜியம் என நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக ஜெர்மனிடம் சரணடைந்தன.

யுத்தத்தின் நடுவே இளைப்பாறும் சோவியத் வீரர்கள்
யுத்தத்தின் நடுவே இளைப்பாறும் சோவியத் வீரர்கள்
FOTO:FORTEPAN / Konok Tamás id

இதைப் பார்த்துக்கொண்டிருந்த இத்தாலியும் கோதாவில் குதித்து தெற்கு பிரான்ஸ், கிரீஸ் மற்றும் எகிப்தை ஆக்கிரமித்தது. தன் பங்குக்கு சோவியத் யூனியனும் எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியா போன்ற நாடுகளை ஆக்கிரமித்தது. அதே நேரம் ஜெர்மனுக்கு எதிரான உக்கிரமான பிரிட்டிஷ் வான்படைத் தாக்குதலான Battle of Britain-இல் ஜெர்மன் முதல் தடவை தோல்வியைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து ஹங்கேரி, ருமேனியா, ஸ்லோவாக்கியா, பல்கேரியா போன்ற நாடுகள் ஜெர்மனியின் Axis கூட்டணியில் இணைந்து மீண்டும் ஜெர்மனியை பலப்படுத்தியது.

ஜெர்மனின் இரண்டாவது இன்னிங்ஸ்

ஜெர்மனியை மீட்பேன் என ஹிட்லர் கூறியபோது ஜெர்மனியர்கள் அவர் மீது முழு நம்பிக்கையையும் வைத்தனர். அந்த நம்பிக்கையை அவர் பொய்யாக்கவில்லை. ராணுவம் ஒரு லட்சமாக குறைக்கப்பட்டு, விமானப்படை முற்றாக ஒழிக்கப்பட்டு, போர்க்கப்பல்கள் பிடுங்கப்பட்டு, ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, நாட்டின் முக்கிய பகுதிகளை இழந்து, மிகப்பெரிய கடன் சுமைக்குள் நசுக்கப்பட்டு, பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட ஜெர்மனி, வெறும் இருபதே வருடங்களில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. முதல் உலகப்போரில் தன்னை நசுக்கிய அனைவரது கணக்கையும் வட்டியும் முதலுமாக திருப்பிச் செலுத்தியது. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற பலம் வாய்ந்த வல்லரசுகளை One Man ஆர்மியாக ஜெர்மன் சமாளித்தது எப்படி என்ற முக்கியமான கேள்விக்கு விடை Blitzkrieg. ஜெர்மனிக்கு வெற்றிகளை குவித்த Blitzkrieg யுக்திதான் இறுதியில் அதன் சறுக்களுக்கும் காரணமானது.

ஜெர்மனியின் Blitzkrieg தாக்குதல் யுக்தி

ஏற்கெனவே கிழக்கை மொத்தமாக ஆக்கிரமித்த ஹிட்லரின் கவனம் மேற்கு நோக்கி திரும்பியது. நார்வே, பெல்ஜியம், போலந்து, மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளை அதி வேகத்துடனும், வலிமையுடனும் தெறிக்கவிட்டு நாஜி ஜெர்மனிய படைகள் மின்னல் வேகத்தில் ஊடுருவப் பயன்படுத்திய வெற்றிகரமான தந்திரோபாயம் இந்த பிளிட்ஸ்கிரீக்.

'மின்னல் போர்' என அழைக்கப்படும் பிளிட்ஸ்கிரீக் என்பது தரைப்படையின் கவச டாங்கிகள், விமானப்படையின் வான் ஆதரவுடன், எதிரியைக் குழப்பி, சிந்திக்க ஒரு கணத்தைக் கூட கொடுக்காமல், மிக வேகமாக தாக்குதல் நடத்திக் கொண்டே முன்னேறும் தந்திரமான ஒரு தாக்குதல் முறையாகும். வீரர்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களின் இழப்பைக் கட்டுப்படுத்தும் இத்தாக்குதல் முறை ஜெர்மனியின் விரைவான வெற்றிக்கு வழிவகுத்தது. பிளிட்ஸ்கிரீக்கின் பிரதான பாயின்ட்டே எதிரியின் பலவீனத்தைச் சரியாகக் கணித்து, அந்த இடத்தில் அடித்து அவனை நிலைக்குலையச் செய்துவிட்டு, சிறிதும் தாமதிக்காமல் விரைவாக முன்னோக்கி அடுத்த கட்டத்துக்கு நகர்வது. இந்த யுக்தியை திறம்பட கையாண்ட ஜெர்மனி ஒரு சில நாள்களிலேயே மேற்கு ஐரோப்பாவை மண்டியிட வைத்தது.

Blitzkrieg தாக்குதல்
Blitzkrieg தாக்குதல்
Bundesarchiv, Bild 101I-218-0504-36 / Dieck / CC-BY-SA 3.0

போலந்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து உஷாரான நேச நாடுகள் தம் ராணுவத்தை உடனடியாகப் பலப்படுத்த ஆரம்பித்தன. நான்கரை மில்லியன் படை வீரர்கள், 15,000 பீரங்கிகள், 3600 கவச வாகனங்கள் என வலிமைமிக்க தற்காப்புப் படையுடன் அதிரடியாகக் களத்தில் இறங்கியது பிரிட்டன் மற்றும் பிரான்ஸ். இரண்டரை மில்லியன் வீரர்கள், 7500 பீரங்கிகள், 2500 கவச வாகனங்கள் மட்டுமே வைத்திருந்த ஜெர்மனை ஜஸ்ட் லைக் தட் காலி பண்ணி விடலாம் எனத் தப்புக் கணக்குப் போட்ட நேச நாடுகளுக்கு, “சும்மா அதிருதுல்ல” என மரண பயத்தைக் காட்டியது ஜெர்மனி. தம்மை அவமானப்படுத்தியவர்களை அதே இடத்தில் வைத்து திருப்பி அடித்த ஜெர்மனியின் பதிலடி வரலாற்றில் தடம் பதித்தது.

அதுவரை அடக்கி வாசித்த அமெரிக்காவை கோபப்படுத்தி ஜப்பான் மீது அணுகுண்டு போட வைத்த அந்த சம்பவம் என்ன? நேச நாடுகளைச் சிதறடித்த ஜெர்மனி தவறிய புள்ளி எது? முதல் உலகப் போரைப் போலவே இரண்டாம் போரிலும் கடைசி வரை அசராமல் அடித்து ஆடிய ஜெர்மனி, வெற்றிக் கோட்டை நெருங்கும் நேரத்தில் வீழ்ந்தது எப்படி? அடுத்த வார யூரோ டூரில் பார்க்கலாம்...

யூரோ டூர் போலாமா?!