Published:Updated:

யூரோ டூர் - 21: விட்டுக்கொடுக்காத சர்ச்சில்; ஜப்பானைத் தாக்கிய அமெரிக்கா... வரலாற்றின் ஆறா வடுக்கள்!

வின்ஸ்டன் சர்ச்சில்
News
வின்ஸ்டன் சர்ச்சில்

Doolittle Raid என்று அழைக்கப்பட்ட இந்த அதிரடி ஆட்டத்தின் நோக்கம் அமெரிக்க கூட்டு வான்படை - ராணுவம் - கடற்படை குண்டுவீச்சு நடத்துவதன் மூலம் ஜப்பானிய தொழில்துறை மையங்களைச் சிதைப்பது!

Published:Updated:

யூரோ டூர் - 21: விட்டுக்கொடுக்காத சர்ச்சில்; ஜப்பானைத் தாக்கிய அமெரிக்கா... வரலாற்றின் ஆறா வடுக்கள்!

Doolittle Raid என்று அழைக்கப்பட்ட இந்த அதிரடி ஆட்டத்தின் நோக்கம் அமெரிக்க கூட்டு வான்படை - ராணுவம் - கடற்படை குண்டுவீச்சு நடத்துவதன் மூலம் ஜப்பானிய தொழில்துறை மையங்களைச் சிதைப்பது!

வின்ஸ்டன் சர்ச்சில்
News
வின்ஸ்டன் சர்ச்சில்
…we shall fight on the beaches, we shall fight on the landing grounds, we shall fight in the fields and in the streets, we shall fight in the hills; we shall never surrender…
Winston Churchill
ஜூன் 4, 1940 அன்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் வின்ஸ்டன் சர்ச்சில் ஆற்றிய மிகவும் பிரபலமான உரைகளில் ஒன்று இது. முதல் உலகப்போரைப் போலவே இரண்டாம் உலகப்போரிலும் கடைசி வரை சரணடையாமல் களத்தில் நின்று போரிட்ட ஒரே நாடு பிரிட்டன் மட்டுமே. இறுதிக்கட்டத்தில் பிரிட்டன் கூட ஜெர்மனிக்கு ஈடு கொடுக்க முடியாமல் நிலை தடுமாற ஆரம்பித்தது. ஆனால், ஜெர்மனி பக்கம் இருந்த வெற்றிக்கனி கை நழுவிப்போனது யாருமே எதிர்பாராத ஒரு வரலாற்று ட்விஸ்ட்.

நீ கொடுத்ததைத் திருப்பி கொடுப்பேன் என மாஸ் காட்டிய ஜெர்மனி

ஜெர்மனியிடம் தோல்வியுற்ற பிரான்ஸ் சரணடைந்து போர்நிறுத்த உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளுக்கு வேண்டுகோள் விடுத்தபோது உடனே ஜெர்மன் ஒப்புக்கொண்டது. ஆனால் பாக்கியிருக்கும் பழைய கணக்கை வட்டியும் முதலுமாகத் தீர்த்துக்கொள்ள விரும்பிய ஹிட்லர், முன்வைத்த நிபந்தனைகள் இரண்டாம் உலகப்போரின் மாஸ் மொமன்ட்.

Compiegne-ல் செய்யப்பட்ட ஒப்பந்தம்
Compiegne-ல் செய்யப்பட்ட ஒப்பந்தம்
Unknown author, Public domain, via Wikimedia Commons

முதல் போரின் இறுதியில் சரணடைந்த ஜெர்மனை பிரெஞ்சு மார்ஷல் ஃபெர்டினாண்ட் ஃபோச்சிற்கு சொந்தமான ஒரு ரயில் பெட்டியில், Compiegne எனப்படும் ஒரு வனப்பகுதியில் வைத்து உடன்படிக்கையில் கையொப்பம் இட நிர்ப்பந்தித்தது பிரான்ஸ். அதன் பின் அந்த ரயில் பெட்டி பிரான்ஸ் மியூசியத்தில் 1920 முதல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் உலகப்போரில் மீண்டும் பிரான்ஸை வீழ்த்திய ஜெர்மன், தான் பெற்ற அவமானத்தை அதே விதத்தில் திருப்பிக் கொடுக்க முடிவு செய்தது. ஜெர்மனியின் இழப்புகளுக்கு பழிவாங்க இதை ஒரு வாய்ப்பாக ஹிட்லர் பயன்படுத்திக் கொண்டார். ஃபெர்டினாண்ட் ஃபோச்சிற்கு சொந்தமான ரயில் பெட்டி ஹிட்லரின் கட்டளையின் படி அதே Compiegne காட்டுக்கு மீண்டும் இழுத்து வரச் செய்யப்பட்டது. எந்த இடத்தில் வைத்து ஜெர்மனை பிரான்ஸ் அவமானப்படுத்தியதோ, அதே இடத்தில், அதே விதத்திலேயே பிரான்ஸை சரணடைய வைத்து, பழிக்கு பழி வாங்கிய ஹிட்லரின் அதிரடியான பதிலடியை மிகப்பெரிய கௌரவமாக, வெற்றியாக ஜெர்மனியர்கள் அன்று கொண்டாடித் தீர்த்தனர்.

ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு முடித்த பின் ஜெர்மன் அதிகாரிகளின் கைகளைக் குலுக்க ஃபோச் மறுத்ததும், அதற்கு பதிலாக, அவர் பிரெஞ்சு மொழியில், “Well, gentlemen, it’s finished. Go.” என்று கூறியதும் இங்கு சுவாரஸ்யமான பெட்டிச் செய்தி.

அசைந்து கொடுக்காத பிரிட்டன்

பிரிட்டன் ராணுவம் பிரெஞ்சு போர்க்களத்தில் படுதோல்வியடைந்து ஜெர்மனி படைகளால் சிறைபிடிக்கப் படுவதிலிருந்து மையிரிழையில் தப்பினாலும், பிரிட்டனின் ராணுவ ஆயுதங்கள் மற்றும் கவச வாகனங்கள் ஜெர்மன் கைவசமானது. தோல்வியை ஒப்புக்கொண்டு அமைதி கோரி பிரிட்டனும் பேச்சுவார்த்தைக்கு இணங்கிவிடும் என்று ஜெர்மன் நினைத்தது. எனவே பிரிட்டன் பற்றி பெரிதாக இனி அலட்டிக்கொள்ளத் தேவை இல்லை என்று நினைத்த ஹிட்லர் சோவியத்தை அதற்குள் கைப்பற்றி விடலாம் என்று போட்ட தப்புக்கணக்கு ஜெர்மனியின் தலைவிதியை திருப்பிப் போட்டது.

பிரிட்டனில் பிரதமர் நெவில் சாம்பர்லேனின் ஆட்சி கவிழ்ந்து வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமரானதால் கதை வேறு விதமாக எழுதப்பட்டது. ஜெர்மனியை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த சர்ச்சில் அரசு சமாதானப் பேச்சுக்கு வரமறுத்தது. எனவே மீண்டும் பிரிட்டன் மீதான படையெடுப்பு பற்றி நாஜி போர்த் தலைமையகம் திட்டமிடத் தொடங்கியது. பிரான்ஸ் சரணடைந்து ஜெர்மனி வசம் வந்ததை அடுத்து பிரிட்டன் மட்டும் தனித்து நின்று ஜெர்மனியை எதிர்கொண்டது. ஜெர்மனி பிரிட்டன் மேல் வான்வழி தாக்குதல்களை மாதக்கணக்கில் நடத்தி பலத்த சேதங்களை ஏற்படுத்தினாலும் பிரிட்டனைக் கைப்பற்ற முடியவில்லை.

Pearl Harbor தாக்குதல்
Pearl Harbor தாக்குதல்
Imperial Japanese Navy, Public domain, via Wikimedia Commons

Pearl Harbor தாக்குதலும் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் என்ட்ரியும்

அமெரிக்க கப்பற்படையின் 23 போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டும், 198 அமெரிக்க போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டும், 2500க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டும், 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் அதுவரை அமைதியாக இருந்த அமெரிக்காவை இரண்டாம் உலகப்போருக்குள் இழுத்துவிட்டது Pearl Harbor தாக்குதல்.

1941 டிசம்பர் 7இல் ஹவாய்த் தீவில் இருந்த ஐக்கிய அமெரிக்க கப்பற்படை தளமான Pearl Harbor மீது ஜப்பானியக் கப்பற்படை நிகழ்த்திய தாக்குதலுக்குப் பிறகே அமெரிக்க ராணுவம் அதிகாரப்பூர்வமாக இரண்டாம் உலகப்போரில் குதித்தது. அமெரிக்கா சற்றும் எதிர்பாராத இத்தாக்குதல் அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் ஒரு வருடமாகவே கடற்படை மற்றும் வான்படைக்கு பயிற்சி கொடுத்து தயார்படுத்திய ஜப்பானின் இந்த pre planned தாக்குதலின் பின்னணி, தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பான் திட்டமிட்ட ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவின் பசிபிக் கடற்படை தலையிடுவதைத் தடுப்பதே நோக்கமாக இருந்தது. ஆனால் 'நாம ஒண்ணு நினைக்க தெய்வம் ஒண்ணு நினைக்கும்' என்பது போல, ஜப்பானின் தலைவிதியை நிரந்தரமாக மாற்றியமைத்தது இத்தாக்குதல்.

தாக்குதலுக்கு அடுத்த நாளே அமெரிக்க ஜனாதிபதி Franklin D. Roosevelt இரண்டாம் உலகப்போரில் உத்தியோகபூர்வமாக பங்குகொள்ள காங்கிரஸிடம் அனுமதி வேண்டி நிகழ்த்திய உலகப்பிரசித்தி பெற்ற உரையைத் தொடர்ந்து அதற்கான அனுமதியை உடனே வழங்கியது காங்கிரஸ். இரண்டாம் உலகப்போரின் போக்கே மாறியது. தூங்கிக்கொண்டிருந்த சிங்கத்தைத் தட்டியெழுப்பிய ஜப்பானின் இந்த தாக்குதல் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட கதையாகிப் போனது.

Doolittle Raid
Doolittle Raid
Photo courtesy National Museum of the U.S. Air Force

ஜப்பானைத் தாக்க ஒரு திட்டத்தை வகுக்க Franklin D. Roosevelt ரகசியமாக இட்ட கட்டளையை அடுத்த நான்கு மாதங்களில் வெற்றிகரமாக செய்து முடித்தது அமெரிக்க ராணுவம். ஜப்பான் எவ்வாறு பசிபிக் கடலைக் கடந்து காதும் காதும் வைத்தாற்போல அமைதியாக வந்து அட்டாக் செய்ததோ அதே போல அமெரிக்காவும் ஜப்பான் சற்றும் எதிர்பாரா ஒரு தருணத்தில், அதிரடியாக நுழைந்து தன் ருத்ரதாண்டவத்தை ஆடி முடித்த போது ஜப்பானின் ஜீவன் பிழியப்பட்டு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது.

Doolittle Raid என்று அழைக்கப்பட்ட இந்த அதிரடி ஆட்டத்தின் நோக்கம் அமெரிக்க கூட்டு வான்படை - ராணுவம் - கடற்படை குண்டுவீச்சு நடத்துவதன் மூலம் ஜப்பானிய தொழில்துறை மையங்களைச் சிதைத்து, அவர்களை பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாகச் சேதப்படுத்துவதாக இருந்தது.

ஆகஸ்ட் 6, 1945, ஹிரோஷிமாவில் காலை 8:15 மணியளவில் பைலட் Brig.Gen. Paul Tibbets என்பவரால் செலுத்தப்பட்ட அமெரிக்க குண்டுவீச்சு விமானமான Enola Gay, ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது Little Boy என்ற செல்லப்பெயரால் அழைக்கப்பட்ட முதல் அணுகுண்டை வீசியது. 15,000 டன் TNT சக்திக்குச் சமமான அந்தக் குண்டு தரையில் இருந்து 2,000 அடி உயரத்தில் வெடித்து, அந்த நிமிடமே 80,000 பேரைக் கொன்றது.

ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதல்
ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதல்
George R. Caron, Public domain, via Wikimedia Commons

ஆகஸ்ட் 9, 1945, பைலட் Maj. Charles Sweeney-யால் இயக்கப்பட்ட B-29 எனும் அமெரிக்க குண்டுவீச்சு விமானம் Fat Man என்று அழைக்கப்பட்ட அடுத்த அணுகுண்டை ஜப்பானின் நாகசாகி மீது வீசியது. தரையிலிருந்து 1,540 அடி உயரத்தில் வெடித்த இதன் அசல் இலக்கு ஜப்பானின் கோகுரா ஆகும். மேக மூட்டம் காரணமாக, மாற்று இடமான நாகசாகி மீது வெடிகுண்டு வெடிக்கப்பட்டது. 75,000 பேர் உடனடியாக அந்த நிமிடத்தில் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து ஜப்பான் நிபந்தனையின்றி சரணடைந்தது. இந்த இரண்டு அணுகுண்டு தாக்குதலும் கொஞ்சம்கூட ஈவு இரக்கமே இல்லாமல் நடத்தப்பட்ட போர் தாக்குதலின் உச்சமாகக் கருதப்படுகிறது. உலக வரலாற்றின் அதிக ரத்தம் தோய்ந்த பக்கங்களாக, என்றுமே ஆறாத வடுவாக அவை மாறிப்போயின. அதன் அதிர்வலைகள் இன்றுமே ஜப்பானில் எதிரொலிக்கின்றன. அமெரிக்கா எடுத்த தவறான முடிவுகளில் ஒன்றாக, காலத்துக்கும் அழியாத கரையாகப் பதிவாகிப் போனது.

ஆபரேஷன் பார்பரோசாவும் (OPERATION BARBAROSSA) ஜெர்மனியின் தோல்வியும்

என்னதான் ஹிட்லர் சோவியத் ரஷ்யாவுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தாலும், ஸ்டாலினுக்குத் தெரியாமல் பல ரகசிய திட்டங்களை முன்னெடுத்துச் சென்றார். ஏனெனில் ஜெர்மனி கிழக்கு நோக்கி விரிவடைந்து செல்ல வேண்டும் என்பது ஹிட்லரின் மிகப்பெரும் கனவாக இருந்தது. அதேபோல முதல் உலகப்போரில் ஜெர்மனின் தோல்விக்கு ரஷ்யாவும் ஒரு முக்கிய காரணம் என்று நம்பிய ஹிட்லர் மனதில் சோவியத் குறித்த வெறுப்பு அடி மனதில் மண்டியிட்டு கிடந்தது.

பிரான்சின் வீழ்ச்சிக்குப் பிறகு, சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுப்பதற்கான திட்டங்களை ஹிட்லர் ரகசியமாக வகுக்க ஆரம்பித்தார். அவர் ஸ்டாலினின் ஆட்சியை ஒரு 'யூத போல்ஷிவிஸ்ட்' (Jewish Bolshevist) ஆட்சியாகப் பார்த்தார். எனவே அதை அழித்து கிழக்கில் நாஜி மேலாதிக்கத்தை நிறுவ எண்ணினார்.

ஆபரேஷன் பார்பரோசா (OPERATION BARBAROSSA)
ஆபரேஷன் பார்பரோசா (OPERATION BARBAROSSA)
Bundesarchiv, Bild 146-1974-099-19 / Kempe, via Wikimedia Commons

டிசம்பர்18, 1940 இல், சோவியத் யூனியன் மீது படையெடுப்பதற்கான Führer Directive-21 உத்தரவை ஹிட்லர் பிறப்பித்தார். சோவியத் மக்கள் தொகையின் பெரும்பகுதியையும், அதன் பொருளாதார ஆற்றலையும் ஜெர்மன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்கத்தோடு வகுக்கப்பட்ட இத்திட்டம், வடக்கு ரஷ்யாவில் உள்ள ஆர்க்காங்கல் துறைமுகத்திலிருந்து காஸ்பியன் கடலில் உள்ள அஸ்ட்ராகான் துறைமுகம் வரை ஜெர்மன் படைகள் முன்னேறிச் செல்வதற்கான பக்கா ப்ளானாக வரையப்பட்டது.

ஜூன் 22, 1941-இல், ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீதான படையெடுப்பைத் தொடங்கியது. உலகப்போரின் போக்கையே மாற்றிய Operation Barbarossa ஆரம்பமானது. அதுவரை கிட்டத்தட்ட ஐரோப்பா முழுவதையும் தன் வசப்படுத்தியிருந்த ஜெர்மனி இந்தப் போரில் வென்றுவிட்டது என்றே எல்லா நாடுகளும் முடிவு செய்திருந்தன. பிரிட்டன் கூட இந்த முறை ஜெர்மனியிடம் தோற்றுவிட்டோம் என்று ஏறக்குறைய தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டிருந்த நேரம் விதி வேறு விதமான தன் கணக்கை எழுதியிருந்தது.

முதல் உலகப்போரில் அமெரிக்கா தலையீட்டால் தன் வெற்றியை இழந்த ஜெர்மனி இந்த முறை தனக்கான குழியை தானே தோண்டியது. ஹிட்லர் செய்த தவறு என்ன? எல்லாவற்றிலும் மாஸ்டர் மைண்ட்டாக திட்டம் தீட்டிய ஜெர்மனி எனும் யானைக்கு அடி எங்கே சறுக்கியது? அடுத்த வாரம் பார்க்கலாமா?!

யூரோ டூர் போலாமா?!