“With Russia smashed, Britain’s last hope would be shattered. Germany will then be master of all the Europe and the Balkans.”Adolf Hitler on the 31st July 1940
இரண்டாம் உலகப்போர் ஏறத்தாழ முடிவு நிலைக்கு வந்திருந்தது. வெற்றி ஜெர்மனி வசம் திரும்பியிருந்தது. பிரிட்டன் தவிர்த்து ஏனைய எல்லா நாடுகளும் ஜெர்மனியிடம் சரணடைந்திருந்தன. இப்போது மிஞ்சி இருந்தது சோவியத் ஒன்றியமும், பிரிட்டனும் மட்டுமே.
"தவறக் கூடியது அனைத்தும் தவறும்" என்ற மர்ஃபியின் விதிப்படி, ஜெர்மனி பக்கம் சாதகமாக முடியவிருந்த இரண்டாம் உலகப்போர், இறுதிக்கட்டத்தை நெருங்கிய தருணத்தில் தவறான திசை நோக்கி பயணப்பட ஆரம்பித்தது. ஜெர்மனியிடம் இருந்த ராணுவ தொழில்நுட்பம் பற்றிச் சொல்லப்போனால் அதையே தனித் தொடராக எழுதலாம். அந்தளவுக்கு தொழில்நுட்பத்தில் புகுந்து விளையாடியது ஜெர்மனி. WWI மற்றும் WWII இரண்டிலுமே ஜெர்மனி அறிவியல் ராட்சசனாக இருந்தது. முதல் உலகப்போரைப் போலவே இரண்டாம் உலகப்போரிலும் ஜெர்மனி பல சூப்பர் ராணுவ டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியது. ஜெர்மனியின் பதுங்குக் குழிகளைக் கடைசிவரை யாராலுமே கண்டுபிடிக்க முடியாமல் போனது. யுத்தம் முடிவடைந்த பிறகு கூட அவற்றைத் தகர்க்க முடியாமல் போனது. வெறும் இருபது ஆண்டுகளில் ஜெர்மனின் தொழில்நுட்ப வீச்சைத் தெரிந்து கொள்ள ஒரு சோற்று பதமே ஸ்வெரர் குஸ்டாவ் (Schwerer Gustav) எனும் இரும்பு அரக்கன்.

இதுவரை உலகில் உருவாக்கப்பட்ட துப்பாக்கிகளில் அதி நீளமானதும், அதி கணமானதும், அதி வலிமை கூடியதுமான ஒரு ராட்சச இரும்பு அரக்கன் நாஜி ராணுவத்தால் தயாரிக்கப்பட்ட Schwerer Gustav. ஆங்கிலத்தில் Heavy or Great Gustav என்று அழைக்கப்பட்ட இந்த அசுர பீரங்கித் துண்டு 1,350 டன் எடையும், 44 மீட்டர் நீளமும் கொண்டது. ஏழு டன் எடையுள்ள ஷெல்லை (குண்டு) 50 கிலோமீட்டர் தூரம் வரை சுடக்கூடிய இந்த பீரங்கி 70 மைல்களுக்கு அப்பால் உள்ள Coucy-Auffrique காட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு ரயிலில் பொருத்தப்பட்டிருந்தது. அவ்வப்போது வெளியே வந்து குண்டு மழை பொழிந்து விட்டு காட்டுக்குள் சென்று பதுங்கிக்கொண்ட இந்த ரயில் எந்த விமானத்தின் கண்களுக்கும் கடைசிவரை சிக்கவில்லை.
நேச நாட்டுப் படைகளைத் தெறிக்க விட்ட இந்த ராட்சச பீரங்கியை நாஜி ராணுவம் தயாரித்தன் முக்கிய காரணம் பிரான்ஸ் - ஜெர்மனி எல்லையில் ஜெர்மனி படையெடுப்பைத் தடுக்க இன்றைய டாலர் மதிப்பில் $9 பில்லியனைத் தாண்டிய செலவில் பிரான்ஸ் கட்டிய பாதுகாப்பு அரணான Maginot Lineஐ தவிடு பொடியாக்குவதே. கடைசியாக அமெரிக்க படைகள் ஜெர்மனியை சுற்றி வளைத்த போது நாஜி ராணுவத்தால் இந்த ராட்சச பீரங்கி அழிக்கப்பட்டது. இதே போல பல வேற லெவல் டெக்னாலஜியில் அசால்டாக விளையாடிய ஜெர்மனி இறுதியில் எப்படித் தோற்றது என்பதே WW2 உலகிற்குச் சொல்லிச் சென்ற பாடம்.
ஜெர்மனியின் திடீர் தாக்குதலை சோவியத் எப்படி வெற்றிகரமாக சமாளித்தது?
சோவியத் மீதான முதல் தாக்குதல் Operation Barbarossa. ஸ்டாலினுக்கும் Red Army க்கும் அது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சற்றும் எதிர்பாராத இந்த திடீர் பிளிட்ஸ்கிரீக் தாக்குதல்களுக்கு அவர்கள் தயாராக இல்லை. ஒரே வாரத்திற்குள், ஜெர்மன் படைகள் சோவியத் எல்லைக்குள் 200 மைல்கள் முன்னேறி, ஏறக்குறைய 4,000 விமானங்களை அழித்து 600,000 Red Army துருப்புகளைக் கொன்றன. வரலாற்றில் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையான பார்பரோசாவின் முடிவில், ஜெர்மனி 775,000 உயிரிழப்புகளைச் சந்தித்தது. ஆனால் 800,000க்கும் மேற்பட்ட சோவியத்துக்கள் கொல்லப்பட்டதோடு 6 மில்லியன் சோவியத் வீரர்கள் காயமடைந்தனர்.

இத்தனை இழப்புக்களைச் சந்தித்தும் சோவியத் எவ்வாறு ஜெர்மனியை சமாளித்தது என்ற கேள்விக்கான விடை அவர்களது துல்லியமான திட்டமிடல். எக்காரணம் கொண்டும் ஜெர்மனியிடம் தோற்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த ஸ்டாலின் உடனடியாக ராணுவத்தைப் பலப்படுத்தக் கட்டளை இட்டார். நாஜி ஜெர்மனியின் தாக்குதலில் சோவியத் நிலைக்குலைந்த அந்த இக்கட்டான தருணத்தில் சோவியத் ராணுவத்தை முழுமையாக மறுசீரமைத்தார். சோவியத்துகள் தங்கள் ஆயுத உற்பத்தியை பெருமளவில் தொழில்மயமாக்கினர். சோவியத் யூனியன் தனது துருப்புக்களை ஜெர்மனிக்கு ஈடாக நவீன ஆயுதங்களுடன் உடனடியாக தயார்படுத்துவதற்கு கடுமையான முயற்சியை மேற்கொண்டது. உலக யுத்தம் ஆரம்பமான போது 3%ஆக இருந்த சோவியத் ராணுவ ஆயுதங்கள் ஜெர்மன் தாக்குதல் தொடங்கியவுடன் 30%ஆக அதிகரிக்கப்பட்டன. டாங்கிகள், விமானங்கள் மற்றும் பீரங்கிகளின் எண்ணிக்கை கூட இதே அளவு கூடியது. இன்றுவரை உலகப் பிரசித்தி பெற்ற ரஷ்ய உளவுத்துறையும் இரண்டாம் உலகப் போரில் சோவியத் ராணுவத்துக்குக் கைகொடுத்தது.
சோவியத் ரஷ்யாவின் மற்றுமொரு பலம் அதன் ஜனத்தொகை. ஜெர்மனை விட அதிக உயிரிழப்பு இருந்தாலும் ராணுவ படைபலம் குறையாமல் வைத்திருக்க முடிந்தது. அதே போல ரஷ்யாவின் மட்டற்ற வளங்கள் அவர்களுக்கு மற்றுமொரு சாதகமான காரணியானது. ஏனெனில் Operation Barbarossa ஆரம்பிப்பதற்கு முன்னர் நட்பாக இருந்த நாஜி ஜெர்மனிக்கு உண்மையில் ரஷ்யர்கள்தான் நிறைய பொருள்களை ஏற்றுமதி செய்தனர். மிக முக்கியமாக அவர்களிடம் எரிபொருள் இருந்தது. ஜெர்மனியில் எரிபொருளில் கடுமையான பற்றாக்குறையாக இருந்ததும் அவர்கள் தோல்விக்கு ஒரு கிளைக்காரணம். ஏன் தற்போது கூட ஐரோப்பாவில் நிகழும் கடுமையான எரிபொருள் பற்றாக்குறைக்கு ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யாதான் பிரதான எரிபொருள் வழங்குநராக உள்ளது.
அதேபோல சோவியத் அதன் strategic திட்டமிடல்களில் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்தது. ஆரம்பத்தில் ஜெர்மனி படையை வீழ்த்துவதற்கு விரைவான எதிர் தாக்குதல்கள் அவசியம் என்ற ஐடியாவை கைவிட்டு நீண்ட கால ராணுவத் திட்டங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். அதில் முக்கியமானது Operation Uranus. நவம்பர் 19, 1942இல் சோவியத் ராணுவம் ஆபரேஷன் யுரேனஸை அதிரடியாகத் தொடங்கியது. இதன் பிரகாரம் ஸ்டாலின்கிராட்டில் முற்றுகையித்திருந்த ஜெர்மனியின் ஆறாவது ராணுவ படையணியை சுற்றி வளைக்கும் நோக்கில் ஒரு மாபெரும் எதிர்த்தாக்குதலைத் தொடங்கியது. வெற்றிகரமாக முடிந்த இந்தத் திட்டம் பலம் வாய்ந்த நாஜி ஆறாவது ராணுவ படையணியை துண்டித்து அடுத்த இரண்டு மாதங்களில் சோவியத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது.

இறுதியாக, சோவியத் ஒன்றியம் அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்டது அவர்கள் பலத்தை இரட்டிப்பாக்கியது. இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய ஆண்டுகளில் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் விரிசலில் இருந்தாலும், WW2 இன் போது யு.எஸ்-சோவியத் கூட்டணி பலம்பெற்றது. சோவியத் கனரகத் தொழிலில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவின் உதவியுடன் கட்டப்பட்டது என்று 1944 இல் ஸ்டாலினே குறிப்பிட்டார். அமெரிக்கா சோவியத் யூனியனுக்கு 400,000 ஜீப்கள் மற்றும் டிரக்குகள், 14,000 ஃபைட்டர் விமானங்கள், 8,000 டிராக்டர்கள் மற்றும் கட்டுமான வாகனங்கள் மற்றும் 13000 யுத்த டாங்கிகளை வழங்கியது. 1943-44 களில் சுமார் 8000,000 அமெரிக்க வீரர்களை சோவியத்துக்கு அனுப்பியது.
ஜெர்மனியின் தப்புக்கணக்கு
ஆணைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். ஜெர்மனி எனும் யானைக்கும் அடி சறுக்கியது. தொடர்ச்சியாக கிடைத்த வெற்றி எனும் போதையில் ஜெர்மன் எனும் யானைக்கும் மதம் பிடித்தது. எவ்வளவுதான் ஒருவன் புத்திசாலியாக இருந்தாலும் நிதானம் இல்லாவிட்டால் அந்த புத்திசாலித்தனம் விழலுக்கு இரைத்த நீராகிவிடும் என்பதை வரலாற்றுப் புத்தகத்தில் ஜெர்மனி மீண்டும் ஒரு தடவை பதிவு செய்தது.
ஜெர்மனியின் கைக்கெட்டிய வெற்றி வாய்க்கெட்டாமல் போக பிரதான காரணம் சோவியத் ரஷ்யா மீது போர் தொடுக்க எடுத்த முடிவு. அதுவரை மிகவும் புத்திசாலித்தனமாக காய் நகர்த்திய ஜெர்மனி போட்ட தப்புக் கணக்கு இது. சோவியத்தை கைப்பற்ற ஹிட்லர் போட்ட முதல் மாஸ்டர் ப்ளானான Operation Barbarossa வெற்றியில் முடிந்தது. மின்னல் வேகத்தில் முன்னேறிய ஜெர்மனி படைகளை எதிர்கொள்ள முடியாது முதலில் கீவ் வீழ்ந்தது. அடுத்து ஜெர்மனியர்கள் கருங்கடல் கரையோரமாக கிரிமியாவிற்குள் நுழைந்து, Sevastopol-ஐ முற்றுகையிட்டனர். கிரிமியாவை கைப்பற்றினால் இரு பக்கமாகவும் ரஷ்யாவைத் தாக்க முடியும் என்பது ஒரு strategic பொசிஷன். அதுவே கிரிமியா மீது ஜெர்மனை அதிக ஆர்வம் காட்ட வைத்தது. இந்த கிரிமியாவை 2014ல் ரஷ்யா மீண்டும் கைப்பற்றியது. இதுவும் தற்போது ரஷ்யா - உக்ரைன் நடுவே போர் பதற்றம் நிலவுவதற்கு ஒரு காரணம். ஆக மொத்தத்தில் அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை கிரிமியா ஒரு சர்ச்சைக்குரிய இடமாகவே இருந்து வருகிறது.

The Battle of Stalingrad – இரண்டாம் உலகப்போரின் திருப்புமுனை (Aug 23, 1942 – Feb 2, 1943)
இரண்டாம் உலகப்போரின் ஒட்டுமொத்த போக்கையே மாற்றியமைத்த போர் Operation Stalingrad. ஜெர்மனி செய்த மிகப்பெரிய தவறு Operation Stalingradஐ முன்னெடுத்தது. அந்த தவற்றை மாத்திரம் பண்ணாமல் விட்டிருந்தால் ஜெர்மனி ஐரோப்பாவின் ஏகாதிபத்திய வல்லரசாகியிருந்திருக்கும். ஹிட்லர் இன்னும் பல வருடங்கள் உயிரோடு இருந்திருப்பார். ஏன் நாம் கூட இப்போது ஜெர்மனியின் ஒரு காலணி நாடக இருந்திருப்போம். வரலாறு வேறுவிதமாக எழுதப்பட்டிருந்திருக்கும்.
சோவியத் ரஷ்யாவை தாக்குவது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று தப்புக்கணக்கு போட்ட ஹிட்லர் அடுத்து ரஷ்யாவின் முக்கிய தொழில்துறை மையமாகவும், வோல்கா நதியூடாக நாட்டின் மேற்குப் பகுதியை அதன் தொலைதூர கிழக்குப் பகுதிகளுடன் இணைக்கும் முக்கியமான கப்பல் பாதையாகவும் இருந்த ஸ்டாலின்கிராட் மீது, ஒரு கொழுத்த ராகு காலத்தில் குறி வைத்தார்.
நாஜி Wehrmacht ராணுவப் படைகளை ஸ்டாலின்கிராட் நோக்கி நகரும் படி ஹிட்லர் கட்டளை இட்ட போதே உயர் அதிகாரிகள் பலரும் அவரை எச்சரித்திருக்கிறார்கள். சோவியத் ரஷ்யாவை குறைத்து மதிப்பிட்ட ஹிட்லர் இந்த அறிவுரை எதற்கும் செவி சாய்க்கவில்லை. முதல் உலகப்போரில் ஜெர்மனி வீழ்த்தியது ரஷ்யா எனும் வெறும் ஒற்றை நாட்டை, ஆனால் இப்போதோ அது பல நாடுகள் ஒன்றிணைந்த பலம் வாய்ந்த சோவியத் ஒன்றியம் என்பதையும், அது இரும்பு மனிதன் ஸ்டாலினின் இரும்புக் கரங்களால் ஆளப்படுகிறது என்பதையும் ஹிட்லர் அவ்வளவு சீரியசாக கவனிக்கத் தவறியது அவர் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு. அதுவே கடைசித் தவறுமானது.

ஆகஸ்ட் 19, 1942, ஒரு அசுபயோக அசுப தினத்தில், ஜெர்மனி ஜெனரல் Paulus மற்றும் அவரது 6வது ராணுவ படைப்பிரிவுக்கு சோவியத் நகரமான ஸ்டாலின்கிராட் மீது தாக்குதல் நடத்த உத்தரவிடப்பட்டது. ஸ்டாலின்கிராட் ஜெர்மனியர்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக தோன்றியதோ அதே போல சோவியத் ரஷ்யாவுக்கும் அது அதி முக்கியமான பகுதியாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக அவர்கள் காப்பான் ஸ்டாலினின் பெயரை இந்த இடத்திற்கு வைத்திருந்தார்கள் எனில் அவ்வளவு சுலபமாக எதிரி கைக்கு விட்டு விடுவார்களா ரஷ்யர்கள்? ஜெர்மனி ரஷ்யா மீது போரை அறிவித்ததும் ரஷ்யா ஆவேசமான ஒரு தற்காப்பு போருக்குத் தயாரானது. ஆபரேஷன் ஸ்டாலின்கிராடுக்கு தலைமை தாங்கிய சோவியத் ஜெனரல் Georgi Djokovic நகரின் இருபுறமும் புதிய படைகளை அணி திரட்டி நாஜி ராணுவத்தை சுற்றி வளைத்து ஒரு மாபெரும் எதிர்த் தாக்குதலைத் தொடங்கினார். வரலாற்றின் மிக முக்கியமானதும், உக்கிரமானதுமான யுத்தம் ஆரம்பமானது.
உலகின் மிகவும் பலம் வாய்ந்ததாக கருதப்பட்ட ஜெர்மன் வான்படை பிரிவான Luftflotte-4 சரமாரியாக குண்டுகளை வீசத் தொடங்கியது. வெறும் 48 மணி நேரத்தில் 1000 டன்களுக்கு மேற்பட்ட குண்டுகள் போடப்பட்டன. முதலில் திணறிய சோவியத் வான்படை, மிகப்பெரும் சேதங்களைச் சந்தித்தது. அந்த நேரத்தில் July 28th, 1942 அன்று ஸ்டாலின் வெளியிட்ட “Order No -227” ஆட்டத்தின் சூட்டை அதிகரித்தது. “Not a Step Back” என்ற அந்தக் கட்டளை சோவியத் பத்திரிகைகளின் முதன்மை முழக்கமாக மாறியது. கிட்டத்தட்ட 3 மாத உக்கிரமான யுத்தத்தின் பின் ஜெர்மன் படைகள் சோவியத்தை நெருங்கிய போது இயற்கை தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கியது.

ரஷ்ய குளிரில் ஜெர்மனி உறைய ஆரம்பித்தது. மரத்திலிருந்து பழுத்த இலைகள் ஒன்றான் பின் ஒன்றாக உதிர்வது போல, ரஷ்யப் பனியில் ஜெர்மன் வீரர்கள் கொத்துக் கொத்தாக செத்து மடியத் தொடங்கினார். ஜெர்மனி எனும் ஆலவிருட்சம் பனி போர்த்திய சோவியத் மண்ணுக்குள் புதையத் தொடங்கியது. அதுவரை மாஸ் காட்டிய ஜெர்மனியின் அஸ்திவாரம் ஆட்டம் காணத் தொடங்கியது.
ஸ்டாலின்கிராட் யுத்தம் உலகப்போரின் போக்கை எதிர்த் திசைக்கு திருப்பியது எப்படி? தோல்வியின் பிம்பத்தைக் கூட தொட விரும்பாத ஹிட்லர் எடுத்த முடிவு வரலாற்றின் முக்கிய பக்கங்களில் பதிக்கப்பட்டது. இறுதிக்கட்டத்தில் நடந்து என்ன? அடுத்த வார யூரோ டூரில்...