Published:Updated:

யூரோ டூர் 23: 2ம் உலகப்போரின் இறுதி அத்தியாயம் - சரணடைந்த ஜெர்மனும், முடிவுக்கு வந்த சர்வாதிகாரமும்!

Adolf Hitler, Field Marshal Hermann Göring
News
Adolf Hitler, Field Marshal Hermann Göring ( Hoffmann, Heinrich | The German Federal Archive (Deutsches Bundesarchiv) )

கடைசி நம்பிக்கைக்கான கதவும் அடைபட்டு விட்ட நிலையில் எதிரியின் கையில் சிக்குவதை விடத் தற்கொலை மேல் என்ற முடிவுக்கு ஹிட்லர் வந்திருந்தார். அதற்கு முன் தன் காதல் துணைவியை மனைவியாக்கிக் கொள்ள முடிவு செய்தார்.

Published:Updated:

யூரோ டூர் 23: 2ம் உலகப்போரின் இறுதி அத்தியாயம் - சரணடைந்த ஜெர்மனும், முடிவுக்கு வந்த சர்வாதிகாரமும்!

கடைசி நம்பிக்கைக்கான கதவும் அடைபட்டு விட்ட நிலையில் எதிரியின் கையில் சிக்குவதை விடத் தற்கொலை மேல் என்ற முடிவுக்கு ஹிட்லர் வந்திருந்தார். அதற்கு முன் தன் காதல் துணைவியை மனைவியாக்கிக் கொள்ள முடிவு செய்தார்.

Adolf Hitler, Field Marshal Hermann Göring
News
Adolf Hitler, Field Marshal Hermann Göring ( Hoffmann, Heinrich | The German Federal Archive (Deutsches Bundesarchiv) )
“From my close observation of Adolf Hitler for many years I believe the Führer to be the border case between genius and insanity. I predict he will be the craziest criminal the world will ever know..!”
Dr. Ferdinand Sauer, the personal physician of Hitler
அதீத புத்திசாலியாகப் போற்றப்பட்டவர், அடி மட்ட முட்டாளாகப் பார்க்கப்பட்டதற்குக் காரணம் இறுதிக்கட்டத்தில் அவர் எடுத்த தவறான பல முடிவுகள். வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் சட்டியை உடைத்த கதையாக, கைவரை வந்த வெற்றியை நழுவவிட்டார் ஹிட்லர். இன்றைய பல அரசியல் தலைவர்களுக்கும் இல்லாத ஒன்று அவரிடம் இருந்தது. அதுதான் மக்களைக் கவரும் கரிஷ்மா. தான் விரும்புவதை, பார்வையாளர்களும் நினைக்கும் வகையில் தனது செய்தியைத் தெரிவிக்கும் கலையைப் பெற்றிருந்தார். தவறாகவே இருந்தாலும், தனது நோக்கத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. இவை எல்லாம் இருந்தும் ஜெர்மனின் வீழ்ச்சிக்கு அவரே எப்படிக் காரணமாகிப் போனார்?
Hitler with Blondi
Hitler with Blondi

இத்தாலியின் கடைசி நேர பல்டி

ஹிட்லரும் முசோலினியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். சொல்லப்போனால் ஹிட்லரின் பல கொள்கைகளில் பாசிசத்தின் மிகப்பெரும் தாக்கம் இருந்தன. 1936ல் நாஜி ஜெர்மனியுடன் கூட்டணி அமைத்திருந்த பெனிட்டோ முசோலினியால் இத்தாலி இரண்டாம் உலக யுத்தத்துக்குள் நுழைந்தது. மற்றுமொரு போரையும் அது தரப்போகும் அழிவுகளையும் விரும்பாத இத்தாலி மக்களின் வெறுப்புக்கு இதனால் ஆளானார். 1943ல் சிசிலியியை நேச நாட்டுப் படைகள் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து ஜூலை 25 முசோலினி பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். அவருக்குப் பதிலாகப் பதவியேற்ற ஜெனரல் பீட்ரோ படோக்லியோ, நேச நாடுகளுடன் சமாதானம் செய்து, செப்டம்பர் 3 அன்று ஒரு போர் நிறுத்தத்தை எட்டினார். அதுவரை ஜெர்மனிக்கு ஆதரவாக இருந்த இத்தாலி அப்படியே கட்சித் தாவி நேச நாடுகளுடன் கைகோத்து ஜெர்மனிக்கு எதிராகவே போரை அறிவித்தது.

ரஷ்யன் வின்டரும் ஜெர்மனின் வீழ்ச்சியும்

செப்டம்பர் 6, 1942-ல் முக்கிய கருங்கடல் துறைமுக நகரமான Novorossiysk-ம், அக்டோபர் 6, 1942-ல் Malgobek-ம் ஜெர்மன் பிடியில் சிக்கியது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 9, 1942-ல் சோவியத் அரசாங்கம் அனைத்து ராணுவ அதிகாரங்களையும் சோவியத் ராணுவத்திடம் ஒப்படைத்தது.

விரைவிலே சோவியத் தம் வசம் வந்துவிடும் என்று எண்ணினார் ஹிட்லர். ஆனால் ஜெர்மன் ராணுவம் குறைத்து மதிப்பிட்டது சோவியத் ரஷ்யாவையும் ஸ்டாலினையும் மட்டுமல்ல, ரஷ்யாவின் மைனஸ் டிகிரி பனிக்கால குளிரையும்தான் என்பது டிசம்பர் மாதம் இயற்கை தன் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்த போதுதான் மெல்ல மெல்ல உறைக்கத் தொடங்கியது. வின்டர் பனிப்பொழிவுக்கு ஜெர்மன் ராணுவம் தயாராக இருக்கவில்லை.

இலையுதிர் காலம் முடிவதற்குள் போர் முடிந்துவிடும் என்று தவறாகக் கணித்தார் ஹிட்லர். அதனால் குளிர்காலத்துக்கு ஜெர்மன் ராணுவம் தயாராக இருக்கவில்லை. ஆனால் சோவியத்தின் எதிர்பாராத அதிரடி எதிர்த் தாக்குதலாலும், நேச நாடுகளின் சுற்றிவளைப்பாலும் நீண்டு கொண்டே சென்றது யுத்தம்.

சுற்றி வளைக்கப்பட்ட ஜெர்மனி (வெள்ளை பகுதிகள்)
சுற்றி வளைக்கப்பட்ட ஜெர்மனி (வெள்ளை பகுதிகள்)
Public Domain: Work of US army

நாளுக்கு நாள் அதிகரித்த பனிப் பொழிவு ரஷ்யன் வீதிகளை மூடியது. ஜெர்மன் ராணுவம் மெல்ல மெல்லச் சரியத் தொடங்கியது. வீரர்கள் விறைக்கும் குளிரில் செத்து மடியத் தொடங்கினார். கொட்டும் பனி, ஜெர்மன் ராணுவ உயிர்களை தனக்குள் இழுத்து மூடிக்கொள்ள ஆரம்பித்தது. ஆழ்ந்த பனியில் ஜெர்மன் செயலற்று உறைந்து போகத் தொடங்கியது. ஆபரேஷன் ஸ்டாலின்கிராட்டில் நாள் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 19,000 வீரர்கள் வீதம் இழந்து ஜெர்மனின் அஸ்திவாரம் ஆட்டம் காண ஆரம்பித்தது.

டிசம்பர் 5, சோவியத் ரஷ்யா யாரும் எதிர்பாராத ஒரு அதிரடியான எதிர்த் தாக்குதலைத் தொடங்கியது. கைப்பற்றிய ஒவ்வொரு அடி நிலத்தையும் பாதுகாக்கும் படி ஹிட்லர் விடுத்த ஆணையையும் மீறி ஜெர்மனி பின்வாங்க வேண்டிய கட்டாயம் இதனால் ஏற்பட்டது. மாஸ்கோவிலிருந்து 150 மைல்கள் வரை பின்வாங்கிய ஜெர்மன் தளபதிகள், அப்போது கூட இந்த முயற்சியைக் கைவிட்டு விடலாம் என்று எச்சரித்தும் ஹிட்லர் அவர்கள் ஆலோசனையைக் கேட்கவில்லை. ஜெர்மன் ராணுவத்தின் தலைமைத் தளபதியான Field Marshal Walther von Brauchitsch-ஐ பதவி நீக்கம் செய்து, அவருக்குப் பதிலாகத் தன்னை அப்பதவிக்கு நியமித்துக் கொண்டார். ரஷ்யாவைக் கைப்பற்றாமல் ஜெர்மன் படைகள் திரும்பக் கூடாது என்று கட்டளையிட்டார். இருந்தாலும் நிலைமை கை மீறிப் போனது.

ஜனவரி 25, 1943 ஜெர்மன் படைகள் Voronezh-இலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பின்வாங்கத் தொடங்கியது. ஜனவரி 31, 1943-ல் ஜெனரல் பவுலஸ் தெற்கிலிருந்த தனது படையணியை சோவியத்துகளிடம் ஒப்படைத்தார். பிப்ரவரி 2, 1943-ல் ஸ்டாலின்கிராட்டில் இருந்த ஜெர்மன் ராணுவத்தின் வடக்குப் பிரிவு சோவியத் ராணுவத்திடம் முறையாகச் சரணடைந்தது. பிப்ரவரி 2, 1943 ஸ்டாலின்கிராட் ஜெர்மனியிடம் இருந்து பூரணமாக விடுதலையானது. கடைசியில் ஏறத்தாழ ஒரு மில்லியன் ராணுவ உயிர்களை பலிகொண்டு முடிவுக்கு வந்தது WW2-இன் மிகக் கொடூரமான யுத்தம் - Operation Stalingrad!

பெர்லினைக் கைப்பற்றுவதில் போட்டி

சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்த பிரிட்டனும் அமெரிக்காவும் மீண்டும் உள்ளே புகுந்து சுற்றி வளைத்து ஜெர்மனியைத் தாக்கத் தொடங்கியது. ஜெர்மன் வான் பரப்பும், கடற்பரப்பும் பிரிட்டிஷ் விமான மற்றும் கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. ஜெர்மனுக்கான சகல வழிகளும் அடைக்கப்பட்டன. வானத்திலிருந்து அமெரிக்க, பிரிட்டிஷ் போர் விமானங்கள் குண்டு மழையாகப் பொழிந்தன. ஜெர்மன் போர்க் கப்பல்கள் தகர்க்கப்பட்டன. மறுபுறம் தன் மில்லியன் கணக்கான ராணுவத்தைச் சோவியத் பனிக்குள் புதைத்துவிட்டுப் பின்வாங்கத் தொடங்கியது நாஜி ராணுவம்.
ஹிட்லர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பதுங்கியிருந்த பங்கர்
ஹிட்லர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பதுங்கியிருந்த பங்கர்
The German Federal Archive (Deutsches Bundesarchiv)

பெர்லினுக்குள்ளே முதலில் யார் செல்வது என்பதில் ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு இடையே கடும் போட்டியே நிலவியது. இந்தப் போட்டியில் வென்ற சோவியத், 1945 ஜனவரியில் போலந்து ஊடாக கிழக்கு ஜெர்மனியை நோக்கி முன்னேறியபோது ஹிட்லர் பதுங்கு குழிக்குப் பின்வாங்கினார். ஏப்ரல் 1945-ல் 2.5 மில்லியன் ரஷ்ய வீரர்களை ஜெர்மன் தலைநகரில் இறக்கியது சோவியத். ஐரோப்பாவை தன் கைக்குள் அடக்கி வைத்திருந்த ஜெர்மனியின் அச்சாணி பிடுங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் முடிவு நெருங்கியது. நாஜிகளின் இறுதி நாள்கள் தொடங்கின. ஏப்ரல் 16, 1945 அதிகாலை 3 மணிக்கு, சோவியத் ரஷ்யா 40,000 மோட்டார் பீரங்கிகள், பீல்ட் துப்பாக்கிகளுடன் பெர்லினுக்கு எதிரான இறுதித் தாக்குதலைத் தொடங்கியது. இப்போது ஹிட்லர் தாம் தோற்றுவிட்டோம் என்பதை உணர ஆரம்பித்தார்.

பெர்லின் வானம் புகை மண்டலத்தால் கருத்திருந்தது. சோவியத் விமானப்படைகள் மேகத்திலிருந்து சிதறும் மழைத்துளிகள் போல பெர்லின் மீது குண்டுகளைப் பொழிய பெர்லின் குருதியால் நனைந்தது. சரியாக இரண்டு வாரங்களில் சோவியத் ராணுவம், நகர மையத்தை அடைந்து ஹிட்லரின் பங்கரிலிருந்து சில நூறு அடித் தூரத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.

இறுதிப் பிறந்தநாளும், இறப்பில் ஒன்று சேர்ந்த காதலும்

“I am married to Germany!” என்று எப்போதும் கூறி வந்த ஹிட்லருக்கும் ஒரு காதல் இருந்தது. முதல் காதலி Geli இறந்த பின் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஹிட்லர் வாழ்வில் வந்தவர் ஏவா (Eva). சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஏவா, ஹிட்லர் மீது அதீத காதல் கொண்டிருந்தாலும் கடைசி வரை ஹிட்லர் அவரை திரை மறைவிலேயே வைத்திருந்தார். சோவியத்துகள் சுற்றிவளைத்து விட்டனர் என்று அறிந்த ஹிட்லர், கடைசி நேரத்தில் ஏவா தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதுவரை ஹிட்லரின் பிரத்தியேக பங்களாவிலிருந்த ஏவா ஹிட்லர் சொன்னதும், அதற்காகவே காத்திருந்தது போல பெர்லின் பங்கருங்கு விரைந்து சென்றவர், ஏப்ரல் 15, 1945ல் ஹிட்லரோடு இணைந்தார்.

ஏப்ரல் 20, 1945 ஹிட்லரின் 56வது பிறந்த நாள். அவர் கொண்டாடிய இறுதிப் பிறந்த நாளும் கூட. New Reich Chancellery-யின் பெரிய ஓர் அறையில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சோவியத் ரெட் ஆர்மி ஒரு சில மைல் தூரத்தில்தான் இருந்தது. தப்பிப்பதற்கான வழிகள் நொடிக்கு நொடி சுருங்கிக்கொண்டே வந்தன. இருந்தாலும் ஹிட்லர் முகத்தில் சிறிதும் பதற்றம் இருக்கவில்லை. போர் வீரர்களையும், ஜெர்மன் இளைஞர்களையும் ஊக்குவிக்கவும், நம்பிக்கையளிக்கவும் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தார். அன்று பகல் வேளையில், வெளிப்படையாகவே அவர்களைச் சந்தித்து, எப்போதும் போல உற்சாகம் ஊட்டும் வார்த்தைகளில் தனது உரையை நிகழ்த்தினார். “Heil euch!” எனத் தனது பேச்சை முடித்துக் கொண்ட போது அவ்விடத்தில் ஒரு மயான அமைதி நிலவியது. அனைவரது நெஞ்சமும் இனம்புரியாத பாரத்தில் கனத்திருந்தது.

Adolf Hitler und Eva Braun | ஹிட்லரும், ஏவாவும்
Adolf Hitler und Eva Braun | ஹிட்லரும், ஏவாவும்
The German Federal Archive (Deutsches Bundesarchiv)

ஏப்ரல் 22, 1945 காலை, ஹிட்லர் எப்போதுமே கேட்க விரும்பாத ஒரு செய்தி அவரைத் தேடி வந்தது. “ரஷ்யப் படைகள் நகருக்குள் நெருங்கி வந்துவிட்டன. நாம் தோற்று விட்டோம். இன்னும் ஓரிரு நாட்களில் பெர்லின் வீழ்ந்துவிடும்” என்ற வார்த்தைகள் அவரின் காதுகளை அடைத்தன. வாழ்க்கையில் முதல் தடவையாக ஹிட்லர் நிலை குலைந்து போனார். அப்போதும் கூட நம்பிக்கையை அவர் விடுவதாயில்லை. படைத்தளபதிகளை அழைத்து சில புதிய வியூகங்கள் அமைக்குமாறு உத்தரவிட்டார்.

ஏப்ரல் 26, ஹிட்லருக்கும் அவரது நெருங்கிய படைத்தளபதிக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியது. Field Marshal Hermann Göring இந்த யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை நன்கு உணர்ந்திருந்தார். எனவே ஸ்வீடிஷ் ராஜதந்திரிகளுடன் ஒரு சமாதான பேச்சுவார்த்தைக்குத் தயாராகி இருந்தார். ஆனால் ஹிட்லரின் ஈகோ அதற்குத் தயாராக இல்லை. எனவே Hermann Göring தனக்குத் துரோகமிழைத்தார் என அவரை கைது செய்யும் படி உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவு உதாசீனம் செய்யப்பட்டது. ஒருவனுக்கு அதிகாரம் கையில் இருக்கும் வரைதான் மாலையும் மரியாதையும். அது இல்லை என்று தெரிந்த மறு நிமிடமே இறந்த மாட்டின் உடலிலிருந்து கழறும் உன்னிகள் போல் மனிதர்கள் கழன்று விடுவார்கள். ஹிட்லரும் பல துரோகங்களை இந்தக் கட்டத்தில் சந்தித்தார்.

இறுதிக்கட்ட திக் திக் நிமிடங்கள்

கடைசி நம்பிக்கைக்கான கதவும் அடைபட்டு விட்ட நிலையில் எதிரியின் கையில் சிக்குவதை விடத் தற்கொலை மேல் என்ற முடிவுக்கு ஹிட்லர் வந்திருந்தார். அதற்கு முன் தன் காதல் துணைவியை மனைவியாக்கிக் கொள்ள முடிவு செய்தார்.

ஏப்ரல் 28, 1945, ஹிட்லர் தனது அரசியல் மற்றும் தனிப்பட்ட நண்பர்களின் சாட்சியுடன் ஏவாவை மணம் முடித்தார். திருமணப் பதிவுப் புத்தகத்தில் Eva.B என்று கையொப்பமிட்ட ஏவா, அந்த B-யை வெட்டிவிட்டு Eva Hitler என்று எழுதினார். தனது விரலிலிருந்த திருமண மோதிரத்தைக் காட்டி வாழ்த்துகளைப் பெற்ற ஏவா, தான் உயிருக்குயிராக காதலித்தவனின் மனைவியாக ஒரு நிறைவான வாழ்வை அந்தக் கடைசி 36 மணிநேரங்களில் வாழ்ந்து முடித்தார்.

ஹிட்லர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பதுங்கியிருந்த பங்கர்
ஹிட்லர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பதுங்கியிருந்த பங்கர்
Dennis Nilsson

திருமண விழாவைக் கொண்டாட ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் ஹிட்லர் தமது கடந்த காலத்தைப் பற்றியும், மகிழ்ச்சியான தருணங்களைப் பற்றியும் மட்டுமே பேசினார். இருப்பினும், போரில் தோற்றுப் போனது தனக்குத் தெரியும் என்றும் அவர்கள் முன் ஒப்புக்கொண்டார். ரஷ்யர்கள் தன்னைக் கைதியாக அழைத்துச் செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும் அதனால் தனது உயிரைத் தானே முடிக்கப் போகிறேன் என்றும் கூறினார். அந்தத் திருமணமானது உணர்ச்சிக் குவியல்களின் சங்கமமானது.

முசோலினி மற்றும் அவரது மனைவி கிளாரெட்ட்டா பெடாச்சி ஆகியோருக்கு இத்தாலியில் மரணதண்டனை வழங்கப்பட்ட செய்தி ஏப்ரல் 29, 1945 காலையில் பங்கரிலிருந்தவர்களுக்கு வந்து சேர்ந்தது. தனக்கும் ஏவா பிரவுனுக்கும் இந்தக் கதி வரக்கூடாது என்ற பதற்றம் ஹிட்லரிடம் அதிகரித்தது. ஹிட்லர் தனது அதிகாரிகளை அழைத்து சில கட்டளைகளை இட்டார். அதில் முதன்மையானது, நாஜிக்களுக்குச் சொந்தமான அனைத்து ஆவணங்களும் உடனடியாக அழிக்கப்பட வேண்டும் என்பது. அது போலவே எந்த அடையாளமும் மிச்சம் இல்லாமல் அனைத்து கோப்புக்களும் அழிக்கப்பட்டன.

இறுதியாக, ஹிட்லர் தன் மரணத்தை அணைத்துக் கொள்ளத் தயாரானார். எப்படி தனது வாழ்வையும் வளர்ச்சியையும் தானே முடிவு செய்தாரோ அதே போலத் தனது சாவையும் அவரே தீர்மானித்தார்.

தனக்கு மிகவும் நெருங்கிய வைத்தியரிடம் மிக விரைவாக இறப்பதற்கான வழிவகைகளை ஆலோசித்தார். சைனைடு கேப்சியூல் மூலம் விஷம் உண்டு, உடனடியாகத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொள்ளும் படி ஆலோசனை வழங்கப்பட்டது. அதன் படி சைனைடு கேப்சியூல் வரவழைக்கப்பட்டது. கடைசி நேரத் துரோகங்களைப் பார்த்த ஹிட்லரால் அவை உண்மையான சைனைடுதானா இல்லை தன்னை தூங்கச் செய்து சோவியத் ராணுவத்திடம் உயிருடன் பிடித்துக் கொடுக்க பின்னப்பட்ட சதியா என்ற சந்தேகம் எழுந்தது. எனவே அதை உறுதிப்படுத்திக் கொள்ள முதலில் தன் நாய் Blondi-க்கு அதைக் கொடுத்துப் பரிசோதித்தார். உட்கொண்ட உடனேயே சுருண்டு விழுந்து இறந்தது Blondi.

ஹிட்லரின் இறப்பு செய்தி
ஹிட்லரின் இறப்பு செய்தி
Bundesarchiv, Bild 183-S62600 / CC-BY-SA, Public domain, via Wikimedia Commons

ஏப்ரல் 30, 1945. ஒரு சர்வதிகாரியின் சரித்திரத்தின் முடிவு நாள். அன்று காலை ரஷ்யப் படைகள் ஹிட்லர் பதுங்கியிருந்த பங்கரின் அருகிலுள்ள போட்ஸ்டேமர் பிளாட்ஸை அடைந்தன. இடைவிடாது ஒலித்த துப்பாக்கி சத்தம் பெர்லின் எங்கும் எதிரொலித்தது. ஹிட்லரின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட ஏவா "I would rather die here. I do not want to escape" எனச் சத்தமாகக் கத்தினார். "It is finished, goodbye" என்ற கடைசி வார்த்தைகளோடு ஹிட்லரின் கைகோத்து, அறைக்குள் சென்றார். ஹிட்லரும் அங்கிருந்தவர்களிடம் அமைதியாகக் கைகுலுக்கி விடைபெற்றார்.

ஒரு சில நிமிடங்களில் உள்ளிருந்து ஒரு வெடிச்சத்தம் கேட்டது.

உலகம் அமைதியானது!

“Your Birth may be common, but death must be history!”
Adolf Hitler

யூரோ டூர் போலாமா?!