“The bodies were burnt in the courtyard, and Hitler’s funeral pyre, with the din of the Russian guns growing ever louder, made a lurid end of the Third Reich.”வின்ஸ்டன் சர்ச்சில்
30 மில்லியன் ராணுவ வீரர்கள் மற்றும் 40 மில்லியன் பொதுமக்கள் உட்பட சுமார் 70 - 80 மில்லியன் இறப்புகளோடு (இது அப்போதைய உலக மக்கள் தொகையில் சுமார் 3%) 6 ஆண்டுகள் தொடர்ந்த ஒரு கொடிய யுத்தம் முடிவுக்கு வந்தது. சோவியத் யூனியன் 27 மில்லியன் மக்களை இழந்தது. ஜெர்மனி 6 மில்லியன் ராணுவ உயிர்களைப் பறிகொடுத்தது. இரண்டாம் உலகப் போரில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில், தோராயமாக 85% நேச நாடுகளின் தரப்பிலும் 15% Axis பக்கத்திலும் இருந்தன. அதில் நாஜி ஜெர்மனி 6 மில்லியன் யூதர்களைத் திட்டமிட்டுக் கொன்றது. நாஜி வதை முகாம்களுக்குக் கூடுதலாக, சோவியத் குலாக்ஸ் (தொழிலாளர் முகாம்கள்) 3.6 மில்லியன் பொதுமக்களின் மரணத்திற்கு வழிவகுத்தன. கிட்டத்தட்ட முழு ஐரோப்பாவும் முற்றாகவே சிதைத்து, 40 மில்லியனுக்கும் அதிகமான ஐரோப்பிய அகதிகளை விட்டுச் சென்ற இரண்டாம் உலகப் போரின் முடிவில், மேற்கு ஐரோப்பாவின் ஆதிக்கம் குறைந்து அமெரிக்காவின் கை ஓங்கியது.

ஏப்ரல் 30, 1945 ஹிட்லரின் தற்கொலையோடு நாஜிக்கள் முடிவுக்கு வரவுமில்லை, ஜெர்மனி சரணடையவும் இல்லை, துப்பாக்கிகள் அமைதியாகவும் இல்லை... அப்படியானால் ஹிட்லருக்குப் பின் ஐரோப்பாவில் என்ன நடந்தது?
நாஜிக்களின் முடிவு
ஹிட்லர் இறப்பதற்கு முன்னர் எழுதிய தனது உயிலில், தனக்கு விசுவாசமானவர்களுக்கு நன்றியைத் திருப்பிச் செலுத்தத் தவறவில்லை. ஜெர்மன் கடற்படையின் தலைவரான அட்மிரல் கார்ல் டோனிட்ஸை தனது வாரிசாகவும் ஜெர்மனியின் அடுத்த ஜனாதிபதியாகவும் நியமித்தார். ஹிட்லரின் மரணத்தைத் தொடர்ந்து பல நாஜி உயர் அதிகாரிகள் ஒன்று தப்பியோடினர் அல்லது தற்கொலை செய்து கொண்டனர். ஹிட்லருக்கு அடுத்தபடியாக கட்சியிலிருந்த ஹென்ரிச் ஹிம்லர் மற்றும் ஹெர்மன் கோரிங் போன்றவர்கள் கடைசிக் கட்டத்தில் தனக்குத் துரோகிகளாக மாறுவார்கள் என்று ஹிட்லர் சரியாகக் கணித்ததால், விசுவாசமாக இருந்த அட்மிரல் டோனிட்ஸ்க்கு அந்தப் பதவி சென்றது.
ஹிட்லர் இறந்த அடுத்த நான்கு நாள்களுக்குள் டோனிட்ஸ் ஓர் அரசாங்கத்தை அமைக்க முயன்றார். மே மாத தொடக்கத்திலிருந்து, புதிய நாஜி அமைச்சரவை ஒவ்வொரு நாளும் கூடியது. நோர்வே மற்றும் டென்மார்க் போன்ற சில நாடுகள் இன்னும் நாஜி ஆக்கிரமிப்பின் கீழ்தான் இருந்தன. எனவே நாஜி ஆட்சியைக் காப்பாற்ற நேச நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளில் அவற்றைப் பயன்படுத்தலாம் என்று அவர் நினைத்தார். ஆனால் தலைவன் இல்லா கப்பல் போலப் போகும் திசை தெரியாமல் திணறி நின்ற நாஜிக்களுக்கு எல்லாமே கைமீறிப் போன நிலையில், இறுதியில் மே 8, 1945-ல் மேற்கத்திய நேச நாடுகளிடமும், மே 9, 1945-ல் சோவியத் யூனியனிடமும் பேரம் பேசும் எந்தச் சக்தியும் இல்லாமல் ஜெர்மனி சரணடைந்தது. மே 23, 1945-ல், நேச நாடுகள் எஞ்சி இருந்த நாஜி அதிகாரிகளைக் கைது செய்ததோடு, நாஜி ஆட்சி முற்றாக முடிவுக்கு வந்தது.

ஆனாலும் நாஜிக்களின் வீழ்ச்சிக்குப் பின்னரும் ஜெர்மன் மக்கள் தொகையில் 90%க்கும் மேற்பட்டோர் நாஜிக்களாகவே இருந்தனர். எனவே சோவியத் மற்றும் நேச நாடுகளுக்கு மொத்த நாஜிக்களுக்கும் தண்டனை வழங்க முடியாத சூழல் உருவானது. தலை இருந்தால்தானே வால் ஆடும் என்று நாஜி ராணுவத்திலிருந்த உயர்மட்ட அதிகாரிகளை மட்டும் தூக்கிவிட்டு, மக்களிடமே நாட்டை ஒப்படைத்தது அமெரிக்காவும் பிரிட்டனும்.
குழம்பிய குட்டையில் மீன் பிடித்த மேற்கு நாடுகளும் சோவியத் ஒன்றியமும்
போரில் தோற்கடிக்கப்பட்டு, உடைந்து போயுள்ள ஜெர்மனியை தமக்குள் எப்படிப் பங்கு போட்டுக்கொள்வது என்பதில் பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் சோவியத் யூனியன் நாடுகளுக்கு இடையே மறைமுக போட்டி நிலவியது. ஸ்டாலின், வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் ஆகியோருக்கு இடையே இது தொடர்பாகப் பல சந்திப்புகள் நடந்தன. கடைசியாக மூன்று தலைவர்களும் ஜெர்மனியை நான்கு வெவ்வேறு ஆக்கிரமிப்பு மண்டலங்களாகப் பிரிக்க ஒப்புக்கொண்டனர். கிழக்கு ஜெர்மனி சோவியத் யூனியன் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அமெரிக்கா, பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் மேற்கை மூன்றாகப் பங்கு பிரித்து தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் சோவியத் மண்டலத்தின் நடுவில் அமைந்திருந்தாலும், மூன்று மேற்கத்திய நட்பு நாடுகளுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் இது கிழக்கு, மேற்கு எனப் பாதியாகப் பிரிக்கப்பட்டது.
மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பித்த ஐரோப்பா
என்னதான் வின்ஸ்டன் சர்ச்சில் இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனைச் சிறப்பாக வழிநடத்தினாலும் மக்கள் எப்போதுமே போரை விரும்பவில்லை. 1945ல் வந்த பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களித்து, வின்ஸ்டன் சர்ச்சிலின் கீழான கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியை பிரிட்டிஷ் மக்கள் கவிழ்த்தனர்.

பிரிட்டனில் ஆட்சிக்கு வந்த தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பல அதிரடி மாற்றங்களை அறிவித்தது. பேங்க் ஆஃப் இங்கிலாந்து, எரிபொருள், மின்சாரம், இரும்பு மற்றும் எஃகு உற்பத்திகள் மற்றும் உள்நாட்டு நீர்வழிகளை தேசியமயமாக்கும் திட்டத்தை அதன் ஒரு பகுதியாக முன்மொழிந்தது. பிரிட்டிஷ் கல்விச் சட்டத்தை புதுப்பித்து, தேசிய சுகாதார சேவை, சமூகப் பாதுகாப்பு அமைப்புகளையும் மக்களுக்கு இலவசமாக வழங்கியது. அதே போல மூலப்பொருள்களை ஒதுக்கீடு செய்வதற்கும், உணவு விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், புதிய வீடுகளை வழங்குவதற்கும், தொழில்துறையின் இருப்பிடத்தை வழிநடத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுத்தது.
பிரிட்டன் போலவே மேற்கு ஐரோப்பா முழுவதும் இதே போன்ற பல சீர்திருத்தங்கள் உடனடியாக திட்டமிடப்பட்டன. அவை நமது நாட்டைப் போல அல்லாமல் உடனடியாக அமுல்படுத்தவும்பட்டன. மக்களுக்கு இடையே அதிக சமத்துவம், நியாயமான வளப் பங்கீடுகள், சிறந்த சமூக நிலைமைகளை எல்லா மேற்கு ஐரோப்பிய அரசும் உறுதிப்படுத்தியது. முழு வேலைவாய்ப்பு, அதிக ஊதியங்கள், நியாயமான வரிகள், அதிக தொழிற்சங்க உரிமைகள், அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு மற்றும் நிலச் சீர்திருத்தம் போன்ற அதிரடி நடவடிக்கைகள் மேற்கு ஐரோப்பியப் பொருளாதாரத்தை மறுபடி நான்காவது கியரில் வேகமெடுக்கச் செய்தது.
ஐரோப்பிய வீழ்ச்சியில் எழுச்சி அடைந்த அமெரிக்கா
என்னதான் ஐரோப்பிய நாடுகள் பல திட்டங்களை முன்னெடுத்தாலும் பொருளாதார அடி பலமாக இருந்ததால் மீண்டு எழுவது ஒன்றும் அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. அந்தச் சமயத்தில் ஸ்ட்ராங்க்காக இருந்த ஒரே நாடு அமெரிக்கா. போரின் போது ஐரோப்பியப் பொருளாதாரம் அடி பாதாளத்துக்குள் விழ, அமெரிக்கப் பொருளாதாரம் ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தது.

அமெரிக்கா ஓர் அசைக்க முடியாத பொருளாதார சக்தியாக மாறவும், உலக வல்லரசாக எழுச்சி பெறவும் இரண்டாம் உலகப்போர் முக்கிய காரணியானது. ஐரோப்பாவில் போர்த் தீ பற்றி எரிந்த போது, அமெரிக்கா மட்டுமே அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக உதவக்கூடிய ஒரே நாடக இருந்தது. அப்போது ஐரோப்பாவுக்குத் தேவையான அனைத்து பொருள்களும் பெருமளவு அமெரிக்காவிலிருந்தே உற்பத்தி செய்யப்பட்டது.
அதேபோல உலகளாவிய சக்தியாக அமெரிக்கா எழுச்சி பெற மற்றொரு காரணி ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தோர். சுமார் 25 மில்லியன் ஐரோப்பிய மற்றும் ஆசிய மக்கள் அமெரிக்காவில் குடியேறியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் எனச் சகல துறைகளிலும் முன்னணியில் வந்தது அமெரிக்கா. அதே போல ராணுவ ரீதியிலும் உலகின் சக்தி வாய்ந்த ராணுவமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு உலக வல்லரசாக மாறியது.

எனவே அமெரிக்காவின் பொருளாதார ரீதியான ஆதரவு இல்லாமல் ஐரோப்பாவால் எழுந்திருக்க முடியாமல் போன நிலையில் கை கொடுத்ததுதான் 'மார்ஷல் ப்ளான்'.
மேற்கு ஐரோப்பாவைக் கைதூக்கிவிட்ட 'மார்ஷல் திட்டம்'
1948இல் இயற்றப்பட்ட ஐரோப்பிய மீட்பு திட்டம் என்று அழைக்கப்படும் 'மார்ஷல் திட்டம்', இரண்டாம் உலகப் போரின் அழிவைத் தொடர்ந்து மேற்கு ஐரோப்பாவிற்கு உதவி வழங்கும் ஒரு அமெரிக்கத் திட்டமாகும். அமெரிக்க வெளிநாட்டு உதவித் திட்டங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது இத்திட்டம். உலகப்போருக்குப் பின்னர் நிலைகுலைந்து போயிருந்த ஐரோப்பாவைப் புனரமைப்பு செய்யும் முயற்சிகளுக்கு இத்திட்டத்தின் கீழ்தான், 15 பில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி வழங்கப்பட்டது.

அப்போதிருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் மார்ஷல் ஆற்றிய உரையின் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் உலகப் போருக்குப் பிந்தைய ஐரோப்பாவின் பொருளாதார சரிவைச் சீர்படுத்தி, ஐரோப்பிய உற்பத்தியைத் தூண்டவும், நிலையான பொருளாதாரங்களுக்கு வழிவகுக்கும் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கவும், ஏனைய உலக நாடுகளுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயான வர்த்தகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவும் உதவி செய்தது. போரின் போது பெரிதும் சேதமடைந்த நகரங்கள், தொழில்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைப் புனரமைக்கவும், ஐரோப்பிய அண்டை நாடுகளுக்கிடையேயான வர்த்தகத் தடைகளை அகற்றுவதற்குமான நான்கு ஆண்டுக் காலத் திட்டமாகவும் இது வடிவமைக்கப்பட்டது.
ஐரோப்பியப் பொருளாதார மறு வடிவமைப்புக்கு மேலாக மார்ஷல் திட்டத்தின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று ஐரோப்பியக் கண்டத்தில் பரவிய கம்யூனிசத்தை நிறுத்துவது. அதுதான் பலம் பொருந்தி இருந்த சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்கா வைத்த முதல் செக். மேற்கு ஐரோப்பாவின் விதியை மட்டுமல்ல, கிழக்கு ஐரோப்பாவின் விதியையும் இது மாற்றி எழுதியது எப்படி? அடுத்த வார யூரோ டூரில்...