Published:Updated:

யூரோ டூர் - 25: பூஜ்ஜியம் டு ராஜ்ஜியமான ஐரோப்பிய நாடுகள்; பிக் பாஸாக அமெரிக்கா போட்ட மாஸ்டர் பிளான்!

யூரோ டூர் - 25 | அமெரிக்கா - ஐரோப்பியா
News
யூரோ டூர் - 25 | அமெரிக்கா - ஐரோப்பியா

ஒரு வேளை மார்ஷல் திட்டத்தைச் சோவியத் யூனியன் அப்போதே ஏற்றுக்கொண்டிருந்தால், முதலாளித்துவமும் ஜனநாயகமும் அதற்குக் கீழ் உள்ள நாடுகளுக்கும் பரவி அநேகமாக அப்போதே சோவியத் யூனியன் அழிந்திருக்கும்.

Published:Updated:

யூரோ டூர் - 25: பூஜ்ஜியம் டு ராஜ்ஜியமான ஐரோப்பிய நாடுகள்; பிக் பாஸாக அமெரிக்கா போட்ட மாஸ்டர் பிளான்!

ஒரு வேளை மார்ஷல் திட்டத்தைச் சோவியத் யூனியன் அப்போதே ஏற்றுக்கொண்டிருந்தால், முதலாளித்துவமும் ஜனநாயகமும் அதற்குக் கீழ் உள்ள நாடுகளுக்கும் பரவி அநேகமாக அப்போதே சோவியத் யூனியன் அழிந்திருக்கும்.

யூரோ டூர் - 25 | அமெரிக்கா - ஐரோப்பியா
News
யூரோ டூர் - 25 | அமெரிக்கா - ஐரோப்பியா
“The Marshall Plan will go down in the history as one of America’s greatest contributions to the peace of the world!”
Harry. S. Truman
இரண்டாம் உலகப்போரில் சாம்பலான ஐரோப்பா, அவ்வளவு பெரிய யுத்தத்தின் சுவடே இல்லாமல் மீண்டும் உயிர்த்தெழுந்து. ஏப்ரல் 1, 1948 முதல் ஜூன் 30, 1952 வரையான கிட்டத்தட்ட 4 வருட காலப்பகுதிக்குள் பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் ராஜ்ஜியத்தைப் பிடித்த ஐரோப்பாவை கை தூக்கி விட்ட மார்ஷல் திட்டத்தின் நோக்கம் உண்மையிலேயே ஐரோப்பா மீது கொண்ட அக்கறையா?
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் மார்ஷல்
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் மார்ஷல்
U.S. Department of State from United States, Public domain, via Wikimedia Commons

போரின் தீயில் கருகிய மரமாகி ஏறத்தாழ திவாலான நிலையில் நின்றிருந்த ஐரோப்பா எனும் ஆல விருட்சத்துக்கு மீண்டும் நீரூற்றி, உரமேற்றி, உயிர் கொடுத்த Marshall Plan வரலாற்றின் மிகப்பெரும் ஒரு பொருளாதார வெற்றியாக இன்றுவரை கொண்டாடப்படுகிறது. இதில் பயன்பெற்ற 16 ஐரோப்பிய நாடுகளும் இன்று வளர்ச்சியின் உச்சம் தொட்ட உலகின் மிகுந்த பணக்கார நாடுகளாகவும், தொழில்நுட்ப ஜாம்பவான்களாகவும் ஜொலிக்கின்றன. இத்திட்டத்தை அமுல் படுத்திய அமெரிக்க மாநிலச் செயலாளர் ஜார்ஜ் மார்ஷல், 1943 மற்றும் 1947-இல் ஆண்டின் Time's man of the year-ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமல்ல, 1953 இல் அமைதிக்கான நோபல் பரிசும் பெற்றார். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஐரோப்பிய மீட்பு திட்டம் (European Recovery Program) எப்படி ஐரோப்பாவின் தலையெழுத்தை மாற்றியது?

European Recovery Program (a) The Marshall Plan

இன்றைய பண மதிப்பின் படி 140 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்கிய மார்ஷல் திட்டம், போரில் சேதமடைந்த பிரதேசங்களின் வளர்ச்சியின் அத்தியாவசியப் பகுதிகளுக்கு நிவாரணமாளித்தது. பணம் இலவசமாகக் கிடைக்கும் போது அங்கே ஊழல் தலைதூக்கும் என்பது எழுதப்படாத விதி. எனவே இந்த நிவாரண நிதியில் ஒரு பைசா ஊழல் நடந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த அமெரிக்கா, அதன் பொருட்டு கடுமையான நிபந்தனைகளை விதித்து, பின்பற்றாத நாடுகளின் நிதியுதவியை உடனடியாக நிறுத்துவதற்கான உரிமையைக் கைவசம் வைத்துக் கொண்டது. அதே போல அமெரிக்கக் காங்கிரஸ், அதன் நிதி விநியோகத்தை மேற்பார்வையிட Economic Cooperation Administration (ECA) எனும் பொருளாதார ஒத்துழைப்பு நிர்வாக அமைப்பை நிறுவியது. ECA பிரதிநிதிகள் ஐரோப்பிய நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டு, மார்ஷல் திட்டப் பணத்தை அனுமதிப்பதிலும், இயக்குவதிலும், கண்காணிப்பதிலும் முக்கிய பங்கு வகித்தனர்.

'மார்ஷல் திட்டம்' தொடர்பான போஸ்டர்
'மார்ஷல் திட்டம்' தொடர்பான போஸ்டர்
E. Spreckmeester (also credited as "I. Spreekmeester"), published Economic Cooperation Administration, Public domain, via Wikimedia Commons

மார்ஷல் திட்டத்தின் முடிவின் போது ஐரோப்பியப் பொருளாதாரம் அசுர பாய்ச்சலில் முன்னேறி இருந்தது. ஐரோப்பிய விவசாய மற்றும் தொழில்துறை உற்பத்தியின் விரிவாக்கம், ஐரோப்பிய நாடுகளுக்கும் உலகின் பிற பகுதிகளுக்கு இடையே சர்வதேச வர்த்தகத்தின் தூண்டுதல், மேற்கு ஐரோப்பிய ரசாயன, பொறியியல் மற்றும் எஃகுத் தொழில்களின் விரைவான புதுப்பித்தல், போக்குவரத்து சாலைகள் புனரமைப்பு, புதிய தொழில் உருவாக்கம் போன்றவை வளர்ந்தன. அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் பங்களித்த மார்ஷல் திட்டம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், வர்த்தகத்தை மீட்டெடுப்பதன் மூலமும், உற்பத்தியை பெருக்குவதன் மூலமும் மேற்கு ஐரோப்பியப் பொருளாதாரங்களை மீட்டெடுக்கப் பங்களித்தது என்பதை வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஐக்கிய ராஜ்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், ஆஸ்திரியா, டென்மார்க் போன்ற நாடுகள் இந்த மார்ஷல் திட்டத்தின் மூலம் உச்ச பயனைப் பெற்றுக்கொண்டன என்றாலும் பிரிட்டனும் ஜெர்மனியும் இந்தத் திட்டத்தின் மூலம் அசுர வளர்ச்சியை எட்டின. சரி, எதையுமே ஆதாயம் இல்லாமல் செய்யும் அமெரிக்காவுக்கு இந்த மார்ஷல் திட்டத்தின் மூலம் என்ன லாபம் கிடைத்தது?

சமூக பரிவர்த்தனை கோட்பாடும் அமெரிக்காவின் லாபக் கணக்கும்

இரண்டு நபர்களுக்கு இடையேயான தொடர்புகளின் பின்னணியில் இருக்கும் வரவு செலவுகளின் நன்மை தீமைகளை ஆய்வு செய்யும் சமூகப் பரிமாற்றக் கோட்பாட்டை (Social Exchange Theory) புரிந்து கொண்டால் அமெரிக்காவின் ஸ்ட்ராடஜியை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

பெருமதிப்புள்ள ஒன்றை இழப்பதற்கு அல்லது செலவு செய்வதற்கு ஈடாக அதே அளவு அல்லது அதை விட மேலதிக மதிப்புள்ள மற்றுமொன்றை பெறுவதன் மூலமாக, தன்னிடம் உள்ள முக்கியமான ஒன்றை இன்னொரு சமூகத்துக்குக் கொடுத்து உதவ ஊக்குவிக்கப்படும் சமூக நடத்தையைச் சொல்கிறது Social Exchange Theory. அதாவது சமூகப் பரிமாற்றங்கள் மற்றும் பொருளாதாரப் பரிமாற்றங்கள் போன்றவற்றில், மக்கள் சமபங்கு லாபத்தை மட்டுமே தேடுவார்கள் என்கிறது இந்த தியரி. அப்படியாயின் அமெரிக்காவின் இந்த உதவிக்குப் பின்னால் இருப்பது Win-Win சிட்சுவேஷனா?

அமெரிக்காவின் பண உதவி
அமெரிக்காவின் பண உதவி

தனக்கு சுய ஆதாயம் இல்லாமல் ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாத அமெரிக்காவின் இந்த மார்ஷல் திட்டம் நிச்சயம் போரில் உடைந்து போன ஐரோப்பாவுக்குப் புத்துணர்ச்சி அளித்த வரப்பிரசாதம்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அதனால் அமெரிக்காவும் பல நன்மைகளை அடைந்தது. சொல்லப் போனால் இந்த மார்ஷல் திட்டத்தின் மூலம் அமெரிக்கா உலகின் பிக் பாஸாக மாறியது. பொருளாதார பலம் பொருந்திய வல்லரசாக மேலும் தன்னை வளர்த்துக் கொள்ள இந்த மார்ஷல் திட்டம் அவர்களுக்கு மறைமுகமாக உதவியது.

ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்ட உணவு மற்றும் அனைத்து விதமான பொருள்களும் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யப்பட்டன. மூலப்பொருள்கள் மற்றும் முடிவுப் பொருள்களை அமெரிக்க சப்ளையர்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும் போன்ற நிபந்தனைகளால் அமெரிக்காவின் தொழில்துறை வேகமாக வளர்ந்தது. திறந்த சந்தைகள் மற்றும் தடையற்ற வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் பொருளாதாரத்துடன் ஒரு 'புதிய ஐரோப்பாவை' இத்திட்டம் உருவாக்கியதால் அமெரிக்க ஏற்றுமதியாளர்கள் இரண்டாம் உலகப் போருக்கு முன் இருந்ததை விட மிக எளிதாக ஐரோப்பியச் சந்தைகளுக்குள் நுழையச் சந்தர்ப்பம் வாய்த்தது.

அதே போல அமெரிக்காவின் நிரந்தர எதிரியான சோவியத் யூனியனின் பலத்தைக் குறைப்பது மட்டுமல்ல, மேற்கு ஐரோப்பாவில் சோவியத் விரிவாக்கத்தைத் தடுப்பதற்கும், கம்யூனிசம் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் அமெரிக்காவால் முடிந்தது.

சோவியத்தின் COMECON திட்டமும் ஈஸ்டர்ன் பிளாக் நாடுகளும்

மேற்கத்திய நாடுகளுடனான பொருளாதார ஒருங்கிணைப்பானது, ஈஸ்டர்ன் பிளாக் நாடுகளைச் சோவியத் கட்டுப்பாட்டிலிருந்து விலகிச் செல்ல வழிவகுத்து விடும் என ஸ்டாலின் நம்பினார். எனவே மார்ஷல் திட்ட உதவியை ஈஸ்டர்ன் பிளாக் நாடுகள் பெறுவதை அவர் தடுத்தார். மார்ஷல் திட்டத்திற்குப் போட்டியாகச் சோவியத் யூனியன் Molotov Plan எனும் மாற்றுத் திட்டத்தைக் கொண்டு வந்தது. சோவியத் யூனியனுடன் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இணைந்திருந்த கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக 1947இல் சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்ட அமைப்பான மொலோடோவ் திட்டமே பிற்காலத்தில் COMECONஆக உருமாறியது.

COMECON திட்டத்தால் பயன்பெற்ற நாடுகள்
COMECON திட்டத்தால் பயன்பெற்ற நாடுகள்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் யூனியன் உண்மையில் அமெரிக்க உதவியைப் பெற விரும்பிய போதிலும் அமெரிக்கர்கள் கம்யூனிஸ்ட்டுகள் உள்ள நாடுகளுக்கு தங்கள் அரசாங்கம் மூலம் உதவி வழங்கப்படமாட்டாது என்று அறிவித்தபோது, அமெரிக்க உதவியை உதறி விட்டு கம்யூனிசத்தைத் தேர்ந்தெடுத்தது சோவியத் அரசு.

இதனால் ஐரோப்பாவில் பொருளாதார செழிப்பு அதன் நாடுகளுக்கு இடையே கணிசமாக வேறுபட ஆரம்பித்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் மளமளவென்று அபிவிருத்தியில் மேல் எழத் தொடங்கின. அதே வேளை ஈஸ்டர்ன் பிளாக் பக்கம் கரையொதுங்கிய நாடுகள் ஆட்டம் காணத் தொடங்கின. சோவியத் யூனியனின் வீழ்ச்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகள் இன்று வரை ஐரோப்பாவின் ஏழை முகங்களாகத் தத்தளித்துக்கொண்டு உள்ளன.

பனிப்போரின் ஆரம்பமும், ஐரோப்பாவைப் பிரித்த இரும்புத் திரையும்

சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பிய நகரமான மாஸ்கோவில் அதன் தலைநகரத்தை அமைத்து Eastern Bloc என்று அழைக்கப்பட்ட கிழக்கு தொகுதியை வழிநடத்தியது. சுதந்திர சந்தை பொருளாதாரத்துடனான அமெரிக்காவுக்கும், கம்யூனிஸ்ட் பொருளாதாரத்துடனான சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போர் அப்போதுதான் ஆரம்பமானது.

இந்தப் பனிப்போரின் போது ஐரோப்பாவின் அரசியல் மற்றும் பொருளாதாரம் மிகப்பெருமளவில் சரிவைக் கண்டது. 1945ல் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சோவியத் யூனியன் தன் நேச நாடுகளை இரும்புத் திரை கொண்டு மூடியது. இது 1991ல் பனிப்போர் முடியும் வரை தொடர்ந்தது. அதாவது மார்ச் 5, 1946இல், வின்ஸ்டன் சர்ச்சில், சோவியத் யூனியனையும் அதன் நேச நாடுகளையும் மேற்கு நாடுகளுடன் பகிரங்க தொடர்பிலிருந்து தடுக்கும் விதமாக ஐரோப்பா முழுவதும் 'இரும்புத் திரை' இறங்கியது என்று அறிவித்தார்.

Iron Curtain | இரும்புத்திரை
Iron Curtain | இரும்புத்திரை
BigSteve, CC BY 1.0, via Wikimedia Commons

'Iron Curtain' என்று அழைக்கப்பட்ட இரும்புத்திரை என்றால் ஐரோப்பாவைச் சோவியத் ஆதிக்கத்திற்கும் மேற்கத்திய ஆதிக்கத்திற்கும் இடையில் பிரிக்கும் ஒரு கற்பனைக் கோடாகும். அதாவது ஐரோப்பாவை இரண்டு தொகுதிகளாகப் பிரித்த ஒரு கருத்தியல் எல்லையாக இருந்தது.

மேற்கத்திய நாடுகள் அமெரிக்காவாலும், கிழக்கு நாடுகள் சோவியத் யூனியனாலும் ஈர்க்கப்பட்டன. சர்வதேச பொருளாதார மற்றும் ராணுவ அமைப்புகள் இரும்புத்திரையின் இருபுறமும் வளர்ந்தன. ஜெர்மனி இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இரும்புத்திரையின் மிகவும் பிரபலமான சின்னமான பெர்லின் சுவர் கிழக்கு மேற்கு ஜெர்மனை இரண்டாகப் பிரித்தது.

பனிப்போரின் போது, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து, பல்வேறு கம்யூனிச நாடுகளுக்கு இடையே பொருளாதார பரஸ்பர உதவிக்கான அமைப்பான COMECON (Council for Mutual Economic Assistance) எனும் கவுன்சிலை அமைத்தது. இந்த அமைப்பின் நோக்கம் கம்யூனிஸ்ட் நாடுகளின் தேசியத் தொழில்களுக்கும், நிபுணத்துவத்துக்கும் சிறந்த திட்டமிடலைத் தருவதேயாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 'சோசலிஸ்ட்' என்று அழைக்கப்படும் நாடுகள் bilateral clearing எனப்படும் இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு பரஸ்பர வர்த்தக இருதரப்பு ஒப்பந்தத்திற்குள் நுழைந்தன. எனினும் Marshall Planற்கு எதிர் வினையாக உருவாக்கப்பட்ட இந்த COMECON, நிறுவப்பட்டதிலிருந்து 1967 வரை ஒருமித்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் மட்டுமே செயல்பட்டதன் விளைவாக எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை.

COMECON திட்டம்
COMECON திட்டம்

மறுபக்கம் சுதந்திர சந்தை மாநிலங்களாக (free-market states) இருந்தவர்களுக்கு அமெரிக்காவினால் பெரிய அளவில் உதவி வழங்கப்பட்டது. COMECON நாடுகள் இன்னும் போராடிக்கொண்டிருக்கையில், மேற்கு ஐரோப்பிய நாடுகள் தங்கள் பொருளாதாரங்களை ஒன்றாக இணைத்து, ஐரோப்பிய யூனியனின் தொடக்கத்தை உருவாக்கி, எல்லை வர்த்தகத்தை அதிகரித்து, பொருளாதாரத்தை விரைவாக மேம்படுத்த ஆரம்பித்தது.

ஒரு வேளை மார்ஷல் திட்டத்தைச் சோவியத் யூனியன் அப்போதே ஏற்றுக்கொண்டிருந்தால், முதலாளித்துவமும் ஜனநாயகமும் அதற்குக் கீழ் உள்ள நாடுகளுக்கும் பரவி அநேகமாக அப்போதே சோவியத் யூனியன் அழிந்திருக்கும். அதேபோல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மேற்கு ஐரோப்பாவுக்கு ஈடாக முன்னேறி இருந்திருக்கலாம்.

பனிப்போரின் முடிவில் சோவியத் வீழ்ந்தது எப்படி? மேற்கு ஐரோப்பா செல்வத்தில் செழிக்க, கிழக்கு ஐரோப்பா வறுமையில் வாட ஆரம்பித்ததன் பின்னணி என்ன? அடுத்த வார யூரோ டூரில்...

யூரோ டூர் போலாமா?!