Published:Updated:

யூரோ டூர் - 26: அமெரிக்கா - சோவியத் பனிப்போரால் உருவான புது வரலாறு; ஐக்கிய நாடுகள் சபை உருவான கதை!

ஜெனிவாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம்
News
ஜெனிவாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் ( Tom Page )

அமெரிக்க மற்றும் சோவியத் ஒன்றிய ஆயுதப் போட்டியின் விளைவாக உருவான இரண்டு முக்கிய அமைப்புகள் நேட்டோ மற்றும் வார்சா ஒப்பந்தம் (NATO and the Warsaw Pact).

Published:Updated:

யூரோ டூர் - 26: அமெரிக்கா - சோவியத் பனிப்போரால் உருவான புது வரலாறு; ஐக்கிய நாடுகள் சபை உருவான கதை!

அமெரிக்க மற்றும் சோவியத் ஒன்றிய ஆயுதப் போட்டியின் விளைவாக உருவான இரண்டு முக்கிய அமைப்புகள் நேட்டோ மற்றும் வார்சா ஒப்பந்தம் (NATO and the Warsaw Pact).

ஜெனிவாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம்
News
ஜெனிவாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் ( Tom Page )
“When two elephants fight, it is the grass that gets trampled.” என்பது ஒரு ஆப்பிரிக்கப் பழமொழி. அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் என்ற இரு வலிமையான சக்திகள் மோதிக்கொண்ட பனிப்போர், ஐரோப்பாவில் மீண்டும் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கியது.

இந்தியா - பாகிஸ்தான், வட கொரியா - தென் கொரியா, அமெரிக்கா - சீனா என இன்றும் பனிப்போர் என்பது முடியாத கதையாகத் தொடர்ந்து கொண்டே சென்றாலும் 'Cold War' என்றதும் உடனே ஞாபகத்துக்கு வருவது அமெரிக்க – சோவியத் மோதலே. இதில் ஆழமாகப் போனால் பல விஷயங்களை விரிவாகப் பார்க்க வேண்டும். எனவே, இந்த கோல்ட் வார் ஐரோப்பாவில் எவ்வித தாக்கங்களை உருவாக்கியது என்பதை மட்டும் இந்தத் தொடரில் மேலோட்டமாகப் பார்க்கலாம்.

வின்ஸ்டன் சர்ச்சில், ரூஸ்வெல்ட் மற்றும் ஸ்டாலின்
வின்ஸ்டன் சர்ச்சில், ரூஸ்வெல்ட் மற்றும் ஸ்டாலின்
US Government Photographer

இரு வல்லரசுகளின் மோதல்

என்னதான் இரண்டாம் உலகப்போரில் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் கைகோத்தாலும், யுத்தம் முடிவடைந்த பின்னும் இந்த இரண்டு வல்லரசுகளுக்கும் இடையேயான முறுகல் நிலை தொடர்ந்தது. எப்போதுமே தன்னை விட இன்னொருவன் அதிகார பலத்துடன் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் உஷாராக இருக்கும் அமெரிக்காவின் வயிற்றில் சோவியத்தின் விரிவாக்கம் புளியைக் கரைத்தது. அமெரிக்காவின் முதலாளித்துவ கொள்கைகளுக்கும், சோவியத் யூனியனின் சோசலிச அமைப்புக்கும் இடையே ஆழமான முரண்பாடுகள் தொடர்ந்து இருந்து கொண்டே வந்தன. இவர்கள் இருவருமே தங்கள் ராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் பலத்தை வலுப்படுத்தி, உலகின் வல்லரசாக மாற விரும்பின. இதனால் ஒன்றுக்கொன்று ராணுவ, ஆயுத, தொழில்நுட்ப மற்றும் அரசியல் ரீதியில் போட்டிப் போட்டு மோதிக்கொண்டன. நீயா நானா பெரியவன் என்ற பலப்பரீட்சை இரு நாடுகளுக்குமிடையே உக்கிரமடைந்த போது பனிப்போர் அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது.

இரும்புத் திரையும், பெர்லின் சுவரும்

நீறு பூத்த நெருப்பாக இருந்த கம்யூனிசத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையான ஒரு கருத்தியலாகக் கருதப்பட்ட இரும்புத்திரை (Iron Curtain) சோவியத் யூனியனை ஐரோப்பாவின் மற்ற பகுதிகளிலிருந்து துண்டித்தது. யார் பலசாலி என்பதை நிரூபிக்க அமெரிக்காவும், சோவியத்தும் டிரில்லியன் கணக்கான டாலர்களை அணு ஆயுதங்கள் தயாரிப்புக்கும், விண்வெளி ஆய்வுக்கும் செலவிட்டன. ராணுவ, அரசியல், அணு ஆயுத, விண்வெளி ஆராய்ச்சி போன்ற பலப்பரீட்சையில் இவை இரண்டும் பலமாக முட்டி மோதிக்கொண்டன.

1948 ஜூன் மாதம் பெர்லின் முற்றுகை, இந்தப் பனிப்போரின் வீரியத்தை ஐரோப்பாவில் அதிகரித்தது. இது நடந்தபோது சோவியத் யூனியன், மேற்கு பெர்லினுக்கு மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களைத் தடுத்து நிறுத்தியது. ஆகஸ்ட் 13, 1961ல் கட்டப்பட்ட பெர்லின் சுவர் (Berliner Mauer) மேற்கு ஜெர்மனிக்கும் (West Germany) கிழக்கு ஜெர்மனிக்கும் (East Germany) இடையிலான பிரிவை வெளிப்படையாக உறுதி செய்தது.

மேற்கு ஜெர்மனி (West Germany) மற்றும் கிழக்கு ஜெர்மனி (East Germany)
மேற்கு ஜெர்மனி (West Germany) மற்றும் கிழக்கு ஜெர்மனி (East Germany)

தீயாய் வேலை செய்த உளவுத்துறை

இன்று வரை ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் ஸ்பைஸ் எனும் ஒற்றை வார்த்தையை வைத்து சக்கை போடு போடுகின்றன. CIA பற்றிய The Bourne Identity போன்ற அதிரடித் திரைப்படங்களும், ஹோம்லேண்ட் போன்ற டிவி நிகழ்ச்சிகளும் உலகெங்கும் பிளாக்பஸ்டர் ஆயின. இவை அனைத்துக்கும் முன்னோடி, பனிப்போரின் போது உச்சம் பெற்ற உளவுத்துறை. பனிப்போரின் போது, உளவுத்துறையானது எதிரிகளின் ரகசியங்களைப் பெறுவதில் பல சாமர்த்தியமான ஐடியாக்களையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தியது. குறிப்பாக அணு ஆயுதம் தொடர்பான அனைத்து ரகசியங்களும் இவர்களால் புட்டு புட்டு வைக்கப்பட்டது கண்டு வல்லரசுகள் ஆடிப்போயின.

ஒரு நாட்டின் உளவுத்துறை என்பது அந்நாட்டின் முதுகெலும்பு. கோல்ட் வார் காலத்தில் ரஷ்ய மற்றும் அமெரிக்க உளவுத்துறையினர் தீயாக வேலை செய்தார்கள். அமெரிக்கா, கிரேட் பிரிட்டன், இஸ்ரேல், சோவியத் யூனியன் மற்றும் பல நாடுகள் இக்காலகட்டத்தில் உளவு பார்க்கும் பல கில்லாடிகளை வைத்திருந்தார்கள். இதில் அமெரிக்கா மூச்சு விடும் முன்னரே அதை மோப்பம் பிடித்த சோவியத் உளவாளிகள் அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக இருந்தனர். சோவியத் மற்றும் அமெரிக்க உளவுத்துறைக்குள்ளேயே பல கறுப்பு ஆடுகள் பதுங்கி இருந்தன.

உளவாளிகளின் முக்கியத்துவம் கோல்ட் வார் காலப்பகுதியில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தது. இதனாலேயே 1947ஆம் ஆண்டு சிவில் புலனாய்வு நிறுவனமாக CIA-யை (Central Intelligence Agency) அமெரிக்கா நிறுவியது. இதற்குப் பதிலடியாக 1954ல் சோவியத் ஒன்றியம் KGB எனும் அதிரடியான ஒரு உளவுத்துறைப் பிரிவை உருவாக்கியது. தற்போதைய ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புதின் கூட 1975 முதல் 1991 வரையான காலப்பகுதியில் KGB-யில் வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றினார் என்பது இங்குப் பெட்டிச் செய்தி.

சர்வதேச அமைப்புகளின் உருவாக்கம்

இரண்டு சூப்பர் பவர்களுமே தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டன. எதிர்கால ஆக்கிரமிப்புகளைத் தடுக்க அமெரிக்கா, யுனைடெட் நேஷன்ஸ் (UN) எனும் ஒரு கூட்டுப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியது. அத்தோடு நிலையான சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிட, உலகப் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சியையும், உறுதித் தன்மையையும் அவசியமான திறவுகோல்களாக அமெரிக்கா பார்த்தது. இதனால் உலக வங்கியும் (World Bank) சர்வதேச நாணய நிதியமும் (International Monetary Fund) நிறுவப்பட்டன. அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் இந்த மூன்று அமைப்புகளிலும் அங்கத்துவம் வகிக்க ஸ்டாலினை அழைத்தார். ஆனால் சோவியத் தலைவரோ ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டு ஏனைய இரண்டையும் புறக்கணித்தார். அவை முதலாளித்துவத்தைப் பாதுகாக்கவும், ஊக்குவிப்பதற்குமான ஒரு தந்திரமான முயற்சியாக அவர் பார்த்தார்.

NATO-வில் கையெழுத்திடும் அமெரிக்க அதிபர் ட்ருமென் (1949)
NATO-வில் கையெழுத்திடும் அமெரிக்க அதிபர் ட்ருமென் (1949)
Abbie Rowe, 1905-1967, Photographer (NARA record: 8451352), Public domain, via Wikimedia Commons

ஐக்கிய நாடுகள் சபை - The United Nations

இரண்டாம் உலகப் போர் முடிவடையவிருந்த நிலையில், ஏறத்தாழ எல்லா உலக நாடுகளுமே துவண்டு போயிருந்தன. உலகம் அமைதியை விரும்பியது. இனிமேல் இது போல ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதிலும் உஷாராக இருந்தது. எனவே மற்றுமொரு உலகப்போர் நடக்காமல் தடுக்க பலமான சர்வதேச கூட்டு அமைப்பு ஒன்று தேவைப்பட்டது. விளைவு, அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் அக்டோபர் 24, 1945 ஐக்கிய நாடுகள் சபை பிறந்தது.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கும், நாடுகளிடையே நட்புறவை வளர்ப்பதற்கும், சமூக முன்னேற்றம், சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும் உறுதி பூண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, தற்போது 193 உறுப்பு நாடுகளைக் கொண்டு, இன்று வரை வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

அமெரிக்க மற்றும் சோவியத் ஒன்றிய ஆயுதப் போட்டியின் விளைவாக உருவான இரண்டு முக்கிய அமைப்புகள் நேட்டோ மற்றும் வார்சா ஒப்பந்தம் (NATO and the Warsaw Pact).

North Atlantic Treaty Organization (NATO)

NATO (வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பு) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த முக்கியமான அமைப்பு ஏப்ரல் 4, 1949-இல் வாஷிங்டனில் உருவாக்கப்பட்டது. சோவியத் விரிவாக்கத்தைத் தடுப்பது, ஐரோப்பாவில் பலம்வாய்ந்த அமெரிக்கா எனும் ஸ்ட்ரிக்ட் ஆபிசரை அனுமதிப்பதன் மூலம் தேசியவாத குழுக்களின் மறுமலர்ச்சியைத் தடுப்பது, ஐரோப்பிய அரசியல் ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பது என்ற மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டிருந்தாலும், அதன் பிரதான நோக்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் சோவியத் விரிவாக்கத்தின் அச்சுறுத்தலைத் தடுப்பதாகவே இருந்தது.

NATO
NATO

வடக்கு அரைக்கோளத்தில் இருந்த முதலாளித்துவ நாடுகளின் ராணுவக் கூட்டணியான இது, நாடுகளுக்கு இடையேயான கூட்டுப் பாதுகாப்புக் கோட்பாட்டை நம்பியிருந்தது. அதாவது ஒரு நேட்டோ உறுப்பு நாடு தாக்கப்பட்டால், மற்ற உறுப்பு நாடுகள் அதைப் பாதுகாக்க உதவும் என்ற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஆரம்பத்தில் இதன் உறுப்பு நாடுகளாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், ஹாலந்து, லக்சம்பர்க், நார்வே, ஐஸ்லாந்து, டென்மார்க், இத்தாலி மற்றும் போர்ச்சுகல் ஆகியவையே இருந்தாலும் பின்னர் கிரீஸ், துருக்கி, மேற்கு ஜெர்மனி, ஸ்பெயின் ஆகியவை வந்து இணைந்து கொண்டன. தற்போது 30 சுதந்திர உறுப்பு நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் NATO உலகின் மிகச் சக்திவாய்ந்த ராணுவ கூட்டணியாக உள்ளது.

ஐரோப்பாவில் ஆக்கிரமிப்பு தேசியவாதத்தின் மீள் எழுச்சியைத் தடுக்கவும், அரசியல் ஒன்றியத்தை வளர்க்கவும் தான் முயல்வதாகக் கூறிக்கொண்ட அமெரிக்கா, தற்போது உக்ரைன் NATO-வில் இணைவதற்கான முழு ஆதரவையும் வழங்கி வருகிறது. பழைய சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக, ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது சக்தி வாய்ந்த சோவியத் குடியரசாக இருக்கும் உக்ரைன் மூலோபாய, பொருளாதார மற்றும் கலாசார ரீதியாக ரஷ்யாவிற்கு முக்கியமானது. எனவே NATO படைகளை உள்ளே விட்டால் அது தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆக மொத்தத்தில் ரஷ்யா - அமெரிக்கா இடையேயான பனிப்போர் இன்று வரை தீராத ஒரு பலப்பரீட்சை.

The Warsaw Pact

நேட்டோவுக்குப் பதிலடியாக 1955இல் சோவியத் யூனியன் மற்றும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஏழு சோவியத் அங்கத்துவ நாடுகளால் நிறுவப்பட்ட ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தமே வார்சா ஒப்பந்தம். நேரடியாக மாஸ்கோவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இந்த அமைப்பில் அல்பேனியா, பல்கேரியா, செக்கோஸ்லோவாக்கியா, கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, போலந்து மற்றும் ருமேனியா போன்ற நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன. இதுவும் நேட்டோ ஒப்பந்தம் போலவே, ஓர் உறுப்பு நாடு தாக்கப்பட்டால், மற்ற உறுப்பு நாடுகள் அதைப் பாதுகாக்க உதவும் என்ற கூட்டுப் பாதுகாப்புக் கோட்பாட்டைக் கொண்டிருந்தது. நேட்டோ மற்றும் வார்சா ஒப்பந்த நாடுகளுக்கு இடையே உண்மையான சண்டை எதுவும் இல்லை என்றாலும், பனிப்போர் காலகட்டத்தில் இவை இரண்டுக்கும் இடையே ஒரு நிலையான பதற்ற நிலை தொடர்ச்சியாக இருந்தது.

The Warsaw Pact
The Warsaw Pact
Fenn-O-maniC, CC BY-SA 3.0 via Wikimedia Commons
ஐரோப்பாவில் பனிப்போர் முடிவுக்கு வந்தபோது இந்த ஒப்பந்தம் இனிமேல் அவசியமில்லை என்று முடிவு செய்யப்பட்டு, ஜூலை 1, 1991 ரத்து செய்யப்பட்டதோடு பல உறுப்பு நாடுகள் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தைத் கைவிட்டு நேட்டோவில் இணைந்தன.

சோவியத் எனும் சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியும் பனிப்போரின் முடிவும்

1991 டிசம்பர் மாத கிறிஸ்துமஸ் தினத்தில், உலக அரசியல் அதிகார அரங்கில் பல அதிரடி மாற்றங்கள் பிறந்தன. 26 டிசம்பர் 1991, இரவு 7.32 மணிக்குச் சோவியத்தின் உச்ச அதிகாரத்தின் உத்தியோக பூர்வ இல்லமான கிரெம்ளின் கூரையின் மேல் அதுவரை கம்பீரமாக உயர்ந்து பரந்த சோவியத்தின் சிவப்புக் கொடி இறக்கப்பட்டு, ரஷ்யக் கொடி ஏற்றப்பட்டதோடு சோவியத் எனும் பரந்து விரிந்த பலம்வாய்ந்த சமராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது.

சோவியத் ஒன்றியத்தின் சரிவு பனிப்போரின் முடிவையும், சோவியத் ஸ்டைல் கம்யூனிசத்தின் முடிவையும் மட்டுமல்ல, ஒரு புதிய உலக ஒழுங்கின் தொடக்கத்தையும் குறித்தது. இது ஐரோப்பாவில் ஒரு டஜன் புதிய ஜனநாயகங்களை உருவாக்கி மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து அமெரிக்கச் செல்வாக்கு மண்டலத்திற்குள் உள்ள ஜனநாயக தொழில் மயமாக்கப்பட்ட மேற்கு நாடுகளின் கூட்டம் 'முதல் உலகம்' என்றும் கம்யூனிஸ்ட் - சோசலிச அரசுகளின் கிழக்கு கூட்டமானது, இரண்டாம் உலகம் என்றும் இரு கூட்டமைப்பிலும் சேராத உலக மக்கள்தொகையில் மீதமுள்ள முக்கால்வாசிப் பகுதியினர், மூன்றாம் உலகம் என்றும் உலக நாடுகள் First World, Second World, Third World என மூன்றாகப் பிரிந்தன.

Map of NATO historic enlargement in Europe | ஐரோப்பாவில் நேட்டோ பரவிய விதம்
Map of NATO historic enlargement in Europe | ஐரோப்பாவில் நேட்டோ பரவிய விதம்
Patrickneil, based off of Image:EU1976-1995.svg by glentamara, via Wikimedia Commons
சோவியத்தின் சாம்பலில் பல புதிய தேசங்கள் முளைத்தன. இன்று உலகச் சந்தையில் கொடிகட்டிப் பறக்கும் பல புதிய நிறுவனங்கள் உருவாகின. ஐரோப்பாவின் புதிய பரிணாமம், அடுத்த வார யூரோ டூரில்...

யூரோ டூர் போலாமா?!