Published:Updated:

யூரோ டூர் 28: போரால் வீழ்ந்த பொருளாதாரம்... மீட்டெடுக்க உதவிய ஐரோப்பாவின் ஆட்டோமொபைல் பிராண்டுகள்!

ஐரோப்பாவின் ஆட்டோமொபைல் பிராண்டுகள்
News
ஐரோப்பாவின் ஆட்டோமொபைல் பிராண்டுகள்

நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்ட சில ஐரோப்பிய ஆட்டோமொபைல் பிராண்ட்களின் பின்னணியை இவ்வார யூரோ டூரில் சுற்றிப் பார்க்கலாமா...

Published:Updated:

யூரோ டூர் 28: போரால் வீழ்ந்த பொருளாதாரம்... மீட்டெடுக்க உதவிய ஐரோப்பாவின் ஆட்டோமொபைல் பிராண்டுகள்!

நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்ட சில ஐரோப்பிய ஆட்டோமொபைல் பிராண்ட்களின் பின்னணியை இவ்வார யூரோ டூரில் சுற்றிப் பார்க்கலாமா...

ஐரோப்பாவின் ஆட்டோமொபைல் பிராண்டுகள்
News
ஐரோப்பாவின் ஆட்டோமொபைல் பிராண்டுகள்

ஐரோப்பாவில் ஆட்டோமொபைலின் அசுர வளர்ச்சி

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பா வேறு விதமாக இருந்தது. ஐரோப்பாவின் பெரும்பகுதி உலகப் பொருளாதாரத்தில் பங்கேற்கவில்லை. மாறாக உலகளாவிய உற்பத்தி வர்த்தகத்தில் அமெரிக்கா பெருமளவில் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் 19-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றம் அங்கு பெரியளவிலான சமூக விளைவுகளை உருவாக்கியது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி அதள பாதாளத்துக்குள் விழுந்திருந்த ஐரோப்பியப் பொருளாதாரத்தை கை தூக்கிவிட்டது.
ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியம்

ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி ஐரோப்பிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களுக்கான தனிப்பட்ட சுதந்திரத்தை வழங்கியது. சிறந்த சாலைகள் மற்றும் போக்குவரத்து வளர்ச்சிக்கு வழிவகுத்தது மட்டுமல்லாது ஐரோப்பிய மக்களின் அன்றாட வாழ்வையும் இலகுவாக்கியது. தூர இடங்களுக்கு வேலை, மற்றும் வாழ்வாதாரத் தேவைகளுக்கு விரைவாகவும், இலகுவாகவும் பயணப்பட உதவியது. அதுவரை கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்று இருந்தவர்களுக்கு, ஓய்வு நேர உல்லாச மற்றும் கேளிக்கை பயணங்களுக்கும் வாசல் திறந்துவிட்டது. இதன் விளைவாகப் பல புதிய பயண விடுதிகள், ஹோட்டல்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், amusement தீம் பார்க்குகள், உணவகங்கள், சினிமா தியேட்டர்கள்கள் முளைத்தன. குடி மன்னர்களைத் திருப்திப்படுத்தச் சந்து பொந்தெல்லாம் பல பார்கள் கூட முளைத்தன. குடித்து விட்டு வாகனத்தை ஓட்டி, தெருவோரமாக சிவனே என்று நடந்து செல்பவர்கள் மீது ஏற்றாமல் இருக்க அப்போதே டாக்ஸி சேவைகளும் கூட ஆரம்பமாயின. ஜெர்மன் தொழிலதிபரான ஃபிரெட்ரிக் கிரேனர் உலகின் முதல் மோட்டார் பொருத்தப்பட்ட டாக்ஸி நிறுவனத்தை ஸ்டட்கார்ட்டில் நிறுவி அந்தப் பெருமையையும் ஐரோப்பியருக்கு வழங்கினார்.

1919 - 1940 வரையான காலப்பகுதியில் ஆட்டோமொபைல் ஐரோப்பாவில் தன் ஆட்டத்தை ஆரம்பித்தது. போரினால் சிதைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் ஒரு ஏற்றுமதி பொருளாக முக்கியத்துவம் பெற்று, இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அசுரத்தனமாக வளர ஆரம்பித்தது. இந்தக் காலப்பகுதியில் பிரிட்டன், அதன் வாகன உற்பத்தியில் பாதிக்கும் மேலானதை ஏற்றுமதிக்காக ஒதுக்கியது. மிகவும் பிரபலமான பிரிட்டிஷ் வடிவமைப்புகளான ரோல்ஸ் ராய்ஸ் போன்ற பிரத்யேக சொகுசு வாகனங்கள் மட்டுமல்லாது இலகுரக கார்களின் உற்பத்தியும் கூட பல மடங்கு பெருக ஆரம்பித்தது. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகளாவிய ரீதியில் பொதுவான பயன்பாட்டிற்கு கார்கள் வந்ததை அடுத்து ஐரோப்பாவின் பொருளாதாரம் அவற்றைச் சார்ந்து வளரத் தொடங்கியது.

ஐரோப்பாவின் ஆட்டோமொபைல் பிராண்டுகள்
ஐரோப்பாவின் ஆட்டோமொபைல் பிராண்டுகள்

'தாம் உண்டு தம் ஜோலி உண்டு' என்று இருந்த ஐரோப்பியர் வாழ்க்கையை ஜாலியாக மாற்றிய இந்த ஆட்டோமொபைலின் அசுர வளர்ச்சி, ஐரோப்பாவை உலக சந்தையில் பணக்கார துரையாக மாற்றியது. அன்று ஆரம்பிக்கப்பட்ட பல புதிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இன்று அசைக்க முடியாத ஜாம்பவான்களாக வளர்ந்து நிற்கின்றன.

நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்ட சில ஐரோப்பிய ஆட்டோமொபைல் பிராண்ட்களின் பின்னணியை இவ்வார யூரோ டூரில் சுற்றிப் பார்க்கலாமா...

அமெரிக்காவை பின் தள்ளிய பிரிட்டன்

1952-இல் மோரிஸ் மற்றும் ஆஸ்டின் (Morris and Austin) ஒன்றிணைந்து பிரிட்டிஷ் மோட்டார் கார்ப்பரேஷன் லிமிடெட் (British Motor Corporation, Ltd.) என்ற நிறுவனத்தை உருவாக்கியது. இது பிரிட்டனின் மோட்டார் வாகன உற்பத்தியில் ஐந்தில் இரண்டு பங்கைக் கொண்டிருந்தது. 1950-களில் பிரிட்டனின் மிகப்பெரிய வணிக வாகன உற்பத்தியாளராக வளர்ந்த லேலண்ட் மோட்டார்ஸ் (Leyland Motors) ஸ்டாண்டர்ட்-டிரையம்ப் மற்றும் சன்பீம் (Standard-Triumph and Sunbeam) போன்ற பிராண்ட்களை வாங்கி personal cars உற்பத்தியையும் ஒரு கை பார்க்க ஆரம்பித்தது. 1968-ல் லேலண்ட் மற்றும் பிரிட்டிஷ் மோட்டார் கார்ப்பரேஷன் இரண்டும் இணைந்து பிரிட்டிஷ் லேலண்ட் மோட்டார் கார்ப்பரேஷன் என ஒன்றிணைந்தது (பிற்காலத்தில் British Leyland Ltd. / BL எனப் பெயர் மாற்றம் பெற்றது). இந்த ஐரோப்பியக் கூட்டணி, அதுவரை ஆட்டோமொபைல் துறையில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த அமெரிக்க மேலாதிக்கத்தை உடைத்தது.

Aston Martin
Aston Martin

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் டிமிக்கி காட்டி விட்டு ஓடும் வில்லனை ஹீரோ சிறுத்தை போலச் சீறிப் பாய்ந்து துரத்திப் பிடிக்கப் பயன்படுத்தும் Aston Martin கார் முதல், நம்ம தமிழ்நாட்டு ஹீரோ தனுஷ் வைத்திருக்கும் Bentley வரை பல விலை உயர்ந்த ஆடம்பரக் கார்களுக்கு பிரிட்டன் சொந்தம் கொண்டாடுகிறது. இது தவிர Jaguar, Land Rover, Lotus, McLaren, Mini, Rolls-Royce, Vauxhall போன்ற மிகப்பிரபலமான கார்களும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்ட சில முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆகும்.

பிரான்ஸில் வேகமெடுத்த ஆட்டோமொபைல் தொழில்நுட்பம்

ஜெர்மனிக்கு அடுத்த படியாக ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளராகக் கருதப்படும் பிரான்ஸ், இரண்டாம் உலகப் போரின் முடிவிலிருந்து இன்று வரை, தொடர்ந்து உலகின் நான்காவது பெரிய வாகன உற்பத்தியாளர் என்ற இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. பெரும்பான்மையான நடுத்தர வர்க்க மக்களின் முதல் சாய்ஸாக இருக்கும் பியூஜியோட், ரெனால்ட் மற்றும் சிட்ரோயன் (Peugeot, Renault, and Citroën) ஆகிய மூன்று பெரிய நிறுவனங்களின் பிறப்பிடம் பிரான்ஸ். இந்த மூன்று கார் பிராண்டுகளும் பிரெஞ்சு கார்களை உலகம் முழுவதும் பரவலாக அறியச் செய்தது.

உலகின் மிகவும் பழைமையான காரான Peugeot ஆரம்பத்தில் காபி, உப்பு மற்றும் மிளகு போன்றன அரைக்கும் மில்லாகவே ஆரம்பிக்கப்பட்டது. அதன் உரிமையாளர்களான Jean Pierre மற்றும் Jean-Pierre II சகோதரர்கள் (“அட போங்கய்யா, சும்மா எதுக்கு எக்ஸ்ட்ரா ஒரு பெயரை வீணடிக்கணும்” எனச் சிக்கனமாக ஒரே பெயரையே இருவருக்கும் வைத்து விட்டார்கள் போல!) நம்ம அண்ணாமலை ரஜினி போல ஒரே பிரெஞ்சு பாட்டில் முன்னேறாவிட்டாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து, இன்று ஆண்டுக்குச் சராசரியாக 1.2 மில்லியன் கார்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள்.

Peugeot 601 C Eclipse 1934 Pourtout
Peugeot 601 C Eclipse 1934 Pourtout
Kévin Pourtout, CC, via Wikimedia Commons

பிரான்சிலும் ஐரோப்பாவிலும் நீண்ட வரலாற்றைக் கொண்ட Peugeot, முதலாம் உலகப் போரின் போது ஆயுதங்கள், மிதிவண்டிகள், ராணுவ டாங்கிகள் குண்டுகள் மற்றும் ராணுவ வாகனங்களை உற்பத்தி செய்தது. அதே போல 1940-ல் இரண்டாம் உலகப் போரில் பிரான்சின் வீழ்ச்சிக்குப் பின், ஜெர்மனியின் மேற்பார்வையின் கீழ் நாஜி ராணுவத்துக்குத் தேவையான டாங்கிகள் மற்றும் விமானங்களை உற்பத்தி செய்ய Peugeot தொழிற்சாலை பயன்படுத்தப்பட்டது. 2030-ம் ஆண்டுக்குள் ஐரோப்பாவில் electric-only பிராண்டாக Peugeot வாகனங்கள் மாறப் போகிறது என்பது தற்போதைய ஹைலைட்.

ஆட்டோமொபைலின் ஆதிபிதா - ஜெர்மனி

என்னதான் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், சுவீடன் என ஐரோப்பாவில் பல நாடுகளும் பிரபலமான பல வாகனங்களை உற்பத்தி செய்தாலும், “நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்டா” என இவர்கள் எல்லாரையும் தூக்கிச் சாப்பிடும் மாஸ் ப்ரொடியூசர் எப்போதுமே ஜெர்மனிதான். இன்று ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாடுகள் ஆட்டோமொபைல் துறையில் கொடி கட்டிப் பறந்தாலும் இவர்கள் அனைவருக்கும் God Father, உலகின் மோட்டார் கார் முன்னோடியான ஜெர்மனியே.

ஐரோப்பாவின் ஆட்டோமொபைல் துறையில் அசைக்க முடியாத ராஜாவாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் ஜெர்மனியின் வாகனப் பொறியியல் தொழில்நுட்பம் வேற லெவல். முதல் உலகப்போரிலும் சரி, இரண்டாம் உலகப்போரிலும் சரி, பீஸ் பீஸாக உடைந்து போன ஜெர்மன் பொருளாதாரத்தை, ராக்கெட் வேகத்தில் வளரச் செய்து மாஸ் காட்டிய முக்கிய துறை ஆட்டோமொபைல். “ஜெர்மன் இனி அவ்வளவுதான்” என நிம்மதி பெருமூச்சு விட்ட எதிரிகளுக்கு, “வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என விட்ட இடத்தை பிடித்து கெத்து காட்ட ஜெர்மனிக்கு உதவிய முக்கிய துறைகளுள் ஆட்டோமொபைலும் ஒன்று.

Early postwar export Volkswagen with 1131cc engine marketed as Type 11 at the 1948 Amsterdam International Autoshow AutoRAI)
Early postwar export Volkswagen with 1131cc engine marketed as Type 11 at the 1948 Amsterdam International Autoshow AutoRAI)
Nationaal Archief, CC0, via Wikimedia Commons

பிராண்டுகளில் தரம், செயல்திறன் மற்றும் புதுமை ஆகியவற்றில் எப்போதுமே காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத ஜெர்மனியின் ஆட்டோமொபைல் பாரம்பரியம் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழையது. ஜெர்மன் கையாளும் துல்லியமான பல பொறியியல் உத்திகளின் உதவியினால், பல அட்வான்ஸ்டு ரிஸ்க்குகளை ரஸ்கு சாப்பிடுவது போலத் தைரியமாக முன்னெடுக்கிறது.

அன்று ஜெர்மன் மக்களின் கார் இன்று உலக மக்களின் கார்

1937 மே 28, அடால்ஃப் ஹிட்லரின் நாஜி அரசு ஒரு புதிய ஆட்டோமொபைல் நிறுவனத்தை உருவாக்கியது. ஒரு நன்னாளில் Gesellschaft zur Vorbereitung des Deutschen Volkswagens mbH என அதற்கு நாமமும் சூட்டினார்கள். “என்னப்பா பெயர் ரொம்ப பெருசா இருக்கே” என யாரோ ஒரு தைரியமான பெருசு ஹிட்லர் காதில் போட்டதோ என்னவோ, அதே ஆண்டின் பிற்பகுதியில், Volkswagenwerk அதாவது 'The People's Car' என அதன் பெயரை மாற்றினார். Beetle வண்டு போல சிறிய ஒற்றைக் காரை தயாரிக்க ஆரம்பித்த இந்த ஜெர்மன் கம்பெனி அதன் பிறகு பார்த்தது எல்லாம் வெற்றியின் பக்கங்களை மட்டுமே. இன்று ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் Volkswagen Passenger Cars, Volkswagen Commercial Vehicles, Audi, SEAT, ŠKODA, Bentley, Bugatti, Lamborghini, Scania, Porsche, Ducati, MAN என டாப் மோஸ்ட் சிறந்த கார் பிராண்ட்களை தனக்குச் சொந்தமாக்கி, உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் ராஜாவாக வெற்றி நடை போடுகிறது!

ஜெர்மனியில் ஆட்டோமொபைல் தொழில் துறை 2020-ம் ஆண்டில் மட்டும் யூரோ 379.3 பில்லியன் வருமானம் ஈட்டியது. இது மொத்த ஜெர்மன் தொழில்துறை வருவாயில் சுமார் 23 சதவிகிதம். மிகவும் பிரபலமான சொகுசு ஆடம்பர கார் பிராண்ட்டுகளான Mercedes-Benz, BMW, AUDI, Lamborghini, சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் பிராண்டான Porsche என கார் பிரியர்களின் சொர்க்கபுரியாக ஜெர்மனி ஜொலிக்கிறது. ஐரோப்பாவின் மிகப்பெரிய மற்றும் நிலையான கார் சந்தையான ஜெர்மனி, 2021-ம் ஆண்டிற்கான முழு ஆண்டு விற்பனையாக 2.62 மில்லியன் யூரோக்களை வருமானமாக எட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சி
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சி

இரண்டு உலக யுத்தங்கள், இன்று வரை தொடரும் பனிப்போர்கள், புரட்சி, போராட்டம் என எத்தனை தடைகள் வந்தாலும், அத்தனையையும் அசால்ட்டாகத் தட்டிவிட்டு, விழுந்த வேகத்திலேயே எழுந்து ஓடும் அரேபியக் குதிரை ஐரோப்பா. ஐரோப்பாவை அதன் அட்டகாசமான தொழில்நுட்பம் வெற்றியின் உச்சத்தில் வைத்திருக்கிறது.

வீழ்ந்த ஐரோப்பாவை மீண்டு வரச் செய்ததில் அதி முக்கிய பங்கு வகிக்கும் மற்றுமொரு காரணி அதன் அசரடிக்கும் தொழில்நுட்பங்கள். ஏர் பஸ் விமானங்கள் முதல் விண்வெளி உடை வரை, நீர்மூழ்கிக் கப்பல் முதல் டெலஸ்கோப் வரை, மூக்குக் கண்ணாடிகள் முதல் ஒளிப்பதிவு இயந்திரம் வரை என எல்லாப்பக்கமும் சிக்சர் அடிக்கும் ஐரோப்பாவின் டெக்னாலஜி பற்றி அடுத்த வாரம் பார்க்கலாமா?!

யூரோ டூர் போலாமா?!