ஜனவரி 1, 1999 - பதினொரு ஐரோப்பிய நாடுகள் ஒரு புதிய மாற்றத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதுவரை வெவ்வேறு நாணய அலகுகளைப் பயன்படுத்தி வந்த அந்த நாடுகள், அவற்றைக் கைவிட்டு பொதுவான ஒரு நாணய அலகை ஏற்றுக்கொண்டன. அமெரிக்க டாலருக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரிய இருப்பு நாணயமான யூரோ நோட்டுகள் புழக்கத்திற்கு வந்து இந்த வருடம் 20 ஆண்டுகள் பூர்த்தியாகி உள்ளன.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen, “ஐரோப்பிய மக்களாகிய நாம் ஐரோப்பாவை நம் பைகளில் சுமக்க ஆரம்பித்து இருபது வருடங்கள் ஆகின்றன. யூரோ உலகின் மிகச் சக்திவாய்ந்த நாணயங்களில் ஒன்று மட்டுமல்ல முதன்மையானதும் கூட. இது ஐரோப்பிய ஒற்றுமையின் அடையாளம். யூரோ ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கத்தில் பாலங்களும் மறுபுறம் ஒரு கதவும் உள்ளன. ஏனென்றால் யூரோ என்பது எதிர்காலத்தின் நாணயமாகவும் உள்ளது என்பதன் குறியீடு அது. வரும் ஆண்டுகளில் அது டிஜிட்டல் நாணயமாகவும் மாறும். யூரோ நாம் வாழ விரும்பும் உலகத்தின் நமது மதிப்பீட்டைப் பிரதிபலிக்கின்றது. இது நிலையான முதலீடுகளுக்கான உலகளாவிய நாணயம். அதற்காக நாம் அனைவரும் பெருமைப்படலாம்” என்றார்.

“இதெல்லாம் சாத்தியமில்லை” என நக்கலாகக் கூறியவர்கள் எல்லாம் இன்று உலகின் மிகவும் உறுதியான மூன்று நாணய அலகில் ஒன்றாக இதை ஏற்றுக்கொண்டுள்ளனர். உறுப்பு நாடுகளுக்குப் பல நன்மைகளை வழங்கும் என்று நம்பிக்கையோடு அறிமுகப்படுத்தப்பட்ட யூரோ எனும் ஒற்றை நாணயம் அந்த எதிர்பார்ப்பை இந்த இருபது வருடங்களில் பூர்த்தி செய்துள்ளதா? இரண்டு தசாப்தங்களாக ஐரோப்பியப் பொருளாதாரங்களில் இந்த ஒற்றை நாணயத்தின் செல்வாக்கு என்ன?
யூரோ – ஒரு முன்கதைச் சுருக்கம்
“இந்த யூரோ பற்றிய ஒரே சலிப்பான விஷயம் என்னவென்றால், எந்தப் பிரச்னையும் இல்லாமல் அது கரெக்ட்டா வொர்க் அவுட் ஆகுதுப்பா” என ஜெர்மன் விற்பனையாளர் ஒருவர் ஜனவரி 2002-இன் பிற்பகுதியில் தி நியூயார்க் டைம்ஸிடம் கூறிய வார்த்தைகள் சோசியல் மீடியா இல்லாத அக்காலத்திலேயே வைரல் ஆகின.
ஐரோப்பாவின் ஒற்றை நாணயத்தின் வரலாறு இரண்டாம் உலகப்போரில் சரமாரியாக அடிவாங்கிய ஒரு நலிந்த பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. இந்த வெற்றிக் கதையின் தொடக்கப்புள்ளி பாரிஸ் உடன்படிக்கையில் தொடங்குகிறது. இரண்டாம் உலகப்போர் ஐரோப்பாவைச் சாம்பலாக்கிப் போட்ட நிலையில், முதலாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி அனுபவித்ததைப் போன்ற உயர் பணவீக்கமும் பொருளாதார உறுதியற்ற தன்மையும் ஐரோப்பா முழுவதும் ஏற்படக்கூடிய அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. அப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துவிடக் கூடாது என்று, 1951-ஆம் ஆண்டு ஐரோப்பியத் தலைவர்கள் மத்தியில் ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தச் சந்திப்பின் முடிவில் ஐரோப்பிய நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதற்காக ஒன்றிணைய முடிவு செய்தன. அப்போது சூல் கொண்ட யூரோ எனும் நாணயம் அடுத்த அரை நூற்றாண்டில் மெல்ல மெல்லக் கருவாக வளர்ந்தது.

1957-ல், ரோம் உடன்படிக்கையில் (Treaty of Rome) உருவான ஐரோப்பியப் பொருளாதார சமூகம் (European Economic Community - EEC) Belgium, Germany, France, Italy, Luxembourg and the Netherlands எனும் ஆறு நாடுகளுக்கு இடையிலான சுங்கம் மற்றும் பிற வர்த்தக தடைகளை படிப்படியாக நீக்கியது. 1960-களின் முற்பகுதியில் மீண்டும் ஸ்திரத்தன்மைக்கு வந்த ஐரோப்பியப் பொருளாதாரம், 1960களின் பிற்பகுதியில் சர்வதேச நாணய மதிப்பில் ஏற்பட்ட பாரிய ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து மீண்டும் நலிவடைய ஆரம்பித்தது. மொத்த ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார ரீதியாகவும் பண ரீதியாகவும் ஒன்றிணைவது சாத்தியமானதா என்பதைக் கண்டறிய EEC ஒரு பணிக்குழுவை நியமித்தது. இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட லக்சம்பேர்க்கின் பிரதம மந்திரி பியர் வெர்னர் (Pierre Werner) அடுத்த ஒரு தசாப்தத்திற்குள் ஐரோப்பா முழுதும் ஒற்றை நாணயம் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்று முதன் முதலில் தெரிவித்தார். ஆயினும் அப்போதைய காலகட்டத்தில் உலகப் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து ஒவ்வொரு நாடும் பண ஸ்திரத்தன்மைக்காகப் போராடியதால் அந்த யோசனை அப்போது கைவிடப்பட்டது.
யூரோ பிறந்தது
பியர் வெர்னர் பரிந்துரைத்த படி ஐரோப்பா முழுதும் ஒரு ஒற்றை நாணயப் புழக்கத்தைப் பல ஐரோப்பிய நாடுகள் ஆதரித்தன, ஆனால் அது பற்றிய ஒரு தீர்க்கமான திட்டம் உருவாக 1989 ஆனது. ஐரோப்பிய ஆணையத்தின் 8-வது தலைவராகப் பதவி வகித்த ஜாக் டெலோர்ஸ் (Jacques Delors) தலைமையிலான ஒரு குழு ஐரோப்பா முழுதும் பண ஒருங்கிணைப்புக்கான திட்டத்தைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை ஒற்றை நாணயத்திற்கான தெளிவான பாதையை முன்மொழிந்தது.
சரி, இப்போது ஐரோப்பாவில் பொதுவான ஒரு நாணயத்திற்கான சட்ட ரீதியான கட்டமைப்புகள் உருவாகிவிட்டன. ஆனால் அந்தப் பொதுவான நாணயம் எப்படி இருக்க வேண்டும், என்ன பெயரால் அழைக்கப்பட வேண்டும் போன்ற கேள்விகள் அடுத்து எழ ஆரம்பித்தன. “அந்த ஒற்றை நாணயத்தின் பெயர் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து அதிகாரபூர்வ மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்! அது எளிமையாகவும், ஐரோப்பாவின் பொது அடையாளமாகவும் இருக்க வேண்டும்" என்று 1995-ல் ஐரோப்பிய கவுன்சில் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிபந்தனைகள் எல்லாம் பொருந்திப் போவது போல அப்படி என்ன பெயர் வைக்கலாம் என ஐரோப்பியர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டு யோசிக்கத் தொடங்கினார். அவ்வேளை பெல்ஜியப் பேராசிரியரான ஜெர்மைன் பிர்லாட் (Germain Pirlot) என்பவர் முதன் முதலாக 1995-ல் ஐரோப்பிய கமிஷனின் தலைவருக்கு 'யூரோ' என்ற பெயரைப் பரிந்துரைத்தார். அடடே இது சூப்பராக இருக்கிறதே என நினைத்த ஐரோப்பிய கமிஷன், அதே ஆண்டு ஐரோப்பா முழுவதுமான பொது நாணயத்தின் அதிகாரபூர்வ பெயராக 'யூரோ'-வை அறிவித்தது. பண்டைய ஐரோப்பிய நாகரிகத்தின் பிறப்பிடமான கிரேக்கத்தின் எழுத்துக்களின் ஒன்றான எப்சிலான் (epsilon) (Є) இந்த நாணயத்தின் குறியீடாக மாறியது.
யூரோவின் முதல் அறிமுகம்
பெயர், ராசி, நட்சத்திரம் எல்லாம் பார்த்தாயிற்று, இனி குழந்தை பிறப்பது மட்டுமே பாக்கி என ஐரோப்பியர் பதற்றத்தோடு காத்திருக்க ஆரம்பித்தனர். அந்த சுபயோக திருநாளும் வந்தது. ஜனவரி 1, 1999 நள்ளிரவு சரியாக பன்னிரண்டு மணிக்கு யூரோ எனும் குழந்தை ஐரோப்பாவில் பிறந்தது.
யூரோவை முதலில் ஏற்றுக்கொண்ட நாடுகள் அதை மின்னணு வடிவத்தில் (electronic form) பயன்படுத்தத் தொடங்கின. அதாவது வங்கி கொடுக்கல் வாங்கல், ஸ்டாக் மார்க்கெட் போன்ற பரிமாற்றங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. UK, டென்மார்க் மற்றும் சுவீடன் ஆகிய மூன்று நாடுகளும் ஆரம்பத்திலேயே தாம் இதில் இணைய விரும்பவில்லை என்று கூறி விலகிவிட்டன. இன்று வரை அவை தமது சொந்த நாணயத்தையே பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

யூரோ நாணயம் ஐரோப்பாவில் மக்கள் புழக்கத்துக்கு வர 3 வருடங்கள் எடுத்துக்கொண்டன. மிகவும் கிரியேடிவிட்டியோடு கூடிய கலையம்சம் வாய்ந்த யூரோ நாணய வடிவமைப்பு உருவானது எப்படி என்பது இங்கே சுவையான பெட்டிச் செய்தி. யூரோ நாணய வடிவமைப்புக்கு டென்மார்க் தவிர்த்து அனைத்து ஏனைய ஐரோப்பிய நாடுகளிடையே ஐரோப்பிய கமிஷன் ஒரு போட்டி வைத்தது. நாணய வடிவமைப்புக்குக் கட்டக்கலை, நுண்கலை மற்றும் ஐரோப்பிய ஆளுமைகள் (Architectural, Abstract and European Personalities) எனும் மூன்று கருப்பொருள்களை வழங்கி இருந்தது. ஐரோப்பாவின் பல நாடுகளிலிருந்தும் பல திறமையான நிபுணர்களும் கலைஞர்களும், சிற்பிகளும், நாணய வடிவமைப்பாளர்களும் தங்கள் ஒட்டு மொத்த திறமையையும் கசக்கிப் பிழிந்து புதிய டிசைன்களை உருவாக்கி அனுப்பி இருந்தனர். ஆனால் அதிர்ஷ்டக் காற்று பெல்ஜியம் பக்கம் பலமாக அடித்தது. Luc Luycx என்ற பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த 43 வயதான கணினி பொறியாளர் உருவாக்கிய டிசைன் இறுதிச் சுற்றில் ஐரோப்பியச் சுயாதீன நிபுணர்கள் அடங்கிய நடுவர் குழு மற்றும் மக்களின் அதிகபட்ச வாக்குகளால் தேர்வானது.
ஜனவரி 2, 2002-ல் யூரோ ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் பொது மக்கள் மத்தியில் புழக்கத்தில் விடப்பட்டன. முதன்முதலில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் எனும் 12 ஐரோப்பிய நாடுகளில் அவர்களின் தேசிய நாணயங்கள் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக யூரோ பிரதியீடு செய்யப்பட்டது. பிப்ரவரி 28, 2002-க்குப் பிறகு, அந்நாடுகளின் அசல் நாணயங்கள் பொதுப் பரிவர்த்தனைகளிலிருந்து முற்றாக அகற்றப்பட்டன. அதன் பின் ஏனைய ஐரோப்பிய நாடுகள் மெல்ல மெல்ல இந்த வெற்றிச் சங்கிலியில் வந்து பிணைந்து கொண்டன.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று ஐரோப்பாவின் 19 நாடுகளில் உள்ள 340 மில்லியனுக்கும் அதிகமான ஐரோப்பியர்கள் யூரோவைப் பயன்படுத்துகின்றனர். யூரோ நாணயத்தைப் பயன்படுத்தும் நாடுகள் 'Euro Zone Countries' என்று அழைக்கப்படுகின்றன. பல்கேரியா, குரோஷியா, செக் குடியரசு, டென்மார்க், ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் இன்றுவரை தமது சொந்த நாணயங்களையே பயன்படுத்தி வருகின்றன என்றாலும் பல்கேரியா, குரோஷியா மற்றும் ருமேனியா இந்த யூரோ ஜோனில் விரைவில் இணைந்து கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யூரோவினால் ஐரோப்பாவில் ஏற்பட்ட மாற்றங்கள்
இது வெற்றி அடையாது, நடைமுறைக்குச் சாத்தியமில்லை, மிகவும் குழப்பமாக அமையும், பண ஸ்திரத்தன்மை குழையும், ஐரோப்பியப் பொருளாதாரம் கெடும் எனப் பல எதிர்மறையான வாதங்கள் யூரோ நாணயத்திற்கு முன்னால் அடுக்கப்பட்டன. எந்தவொரு புதிய மாற்றத்திற்கும் எதிர்ப்பு தெரிவிப்பது மக்களின் இயல்பே. எல்லா புதிய மாற்றத்திற்கும் ஆரம்பத்தில் ஏதோ ஒரு தடங்கல் இருக்கும். அதை எப்படிக் கையாள்வது என்பதில்தான் அதன் வெற்றியும் தோல்வியும் தங்கியுள்ளது. ஆங்கிலத்தில் இதை 'Change Management' என்பார்கள். இந்த மாற்றத்திற்கான மேலாண்மையை முறையாக நெறிப்படுத்தியது ஐரோப்பா. தன் முன் வைக்கப்பட்ட அத்தனை விமர்சனங்களையும் உடைத்து, சுக்கு நூறாக்கி ஜெயித்துக் காட்டியது யூரோ.
அமெரிக்க டாலருக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிக முக்கியமான நாணயமாக உருவான யூரோவை 19 யூரோ ஜோன் நாடுகளில் உள்ள 340 மில்லியன் ஐரோப்பியர்கள் மட்டுமல்ல, யூரோ பகுதிக்கு வெளியே உள்ள 60 நாடுகளில் உள்ள சுமார் 175 மில்லியன் மக்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்படுத்துகின்றனர் என்பதே அதன் முதல் வெற்றி.
யூரோ ஜோன் நாடுகளிடையே வேலைவாய்ப்பு, வணிகம், வளர்ச்சி, ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக யூரோ உருவாக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பை அந்நியச் செலாவணி மாற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், ஐரோப்பிய ஒன்றிய வணிகங்களுக்கான குறைந்த செலவை உறுதி செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டிருந்தது. அந்த நோக்கங்கள் அனைத்தையும் தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது யூரோ!

ஐரோப்பாவின் வர்த்தக மற்றும் பொருளாதாரம், யூரோ நாணய வருகையால் பல மடங்கு பெருகின. யூரோ ஜோன் நாடுகளுக்கு இடையே பணப் பரிவர்த்தனையின் தேவை நீங்கி, பயணம் எளிதாக்கப்பட்டது. யூரோ பகுதிக்குள் எல்லைத் தாண்டிய முதலீடுகளின் அதிகரிப்பு, நாடுகளுக்கிடையே விலைகளின் ஒப்பீடு மூலம் மக்கள் தரமான அதே நேரத்தில் மலிவான பொருள்களை வாங்க முடிதல், வணிகங்களுக்கு இடையே அதிகரித்த போட்டி, அதன் காரணமாக நுகர்வோருக்கு நன்மை பயக்கும் விளைவுகள், விலை வெளிப்படைத்தன்மை, குறைவான பரிவர்த்தனை செலவுகள், எல்லை தாண்டிய வர்த்தகம், அதிகரித்த எல்லை தாண்டிய வேலைவாய்ப்பு, நிதி ஸ்திரத்தன்மை, விலை நிலைத்தன்மை, மேம்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி, ஒருங்கிணைந்த திறமையான நிதிச் சந்தைகள், உலகப் பொருளாதாரத்தில் அதிக செல்வாக்கு என யூரோ மூலம் ஐரோப்பா அடைந்த நன்மைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. ஐரோப்பிய செழிப்பின் உறுதியான அடையாளமாக யூரோ மாறியது!
ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றுமொரு அதிரடியான சாதனைகளில் ஒன்றான ஐரோப்பிய ஒற்றைச் சந்தைக்குள் அடுத்த வார யூரோ டூரில் ஒரு விசிட் அடிக்கலாமா?!