Published:Updated:

யூரோ டூர் 35: `பலமான ராணுவசக்தி' பிரான்ஸ், `அசுர விவசாயி' நெதர்லாந்து, `வரலாற்றுச் சின்னம்' இத்தாலி!

யூரோ டூர் 35
News
யூரோ டூர் 35

ஐரோப்பாவின் அதிகார முகங்கள் அதன் மேற்கு ஐரோப்பிய நாடுகள். இந்த வார யூரோ தொடரிலும் ஐரோப்பாவின் சில செழிப்பான முகங்கள் தொடர்கின்றன...

Published:Updated:

யூரோ டூர் 35: `பலமான ராணுவசக்தி' பிரான்ஸ், `அசுர விவசாயி' நெதர்லாந்து, `வரலாற்றுச் சின்னம்' இத்தாலி!

ஐரோப்பாவின் அதிகார முகங்கள் அதன் மேற்கு ஐரோப்பிய நாடுகள். இந்த வார யூரோ தொடரிலும் ஐரோப்பாவின் சில செழிப்பான முகங்கள் தொடர்கின்றன...

யூரோ டூர் 35
News
யூரோ டூர் 35

ஐரோப்பா உலகின் இரண்டாவது சிறிய கண்டம். இருப்பினும், புவியியலில் அதன் மூலோபாய நிலை, அதன் ஆறுகள், வளமான மண், இயற்கை மற்றும் மனித வளங்கள் ஐரோப்பாவை ஒரு மேலாதிக்க பொருளாதார, சமூக மற்றும் கலாசார சக்தியாக மாற்றின. ஆனால் உலகின் ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் ஐரோப்பா எப்படி செல்வம் கொழிக்கும் தேசமானது என்ற கேள்விக்கான முக்கியமான பதில்களுள் ஒன்று காலனித்துவம். ஐரோப்பியர்களால் மூன்றாம் உலக நாடுகள் என்ற கவர்ச்சியான பெயரால் அழைக்கப்படும் உலகின் ஏழை நாடுகளிலிருந்து கொள்ளையடித்த பெரும் பணம் ஐரோப்பாவை மேலும் செழிப்பாக்கியது. கிட்டத்தட்ட 400 வருடங்களாக இந்த நாடுகளிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்வம் ஐரோப்பியர்களின் கைகளுள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டதால் அந்தக் கண்டத்துக்குள்ளேயே அது பெருகிக்கொண்டு போனது.

ஐரோப்பா
ஐரோப்பா
ஐரோப்பாவின் பொருளாதாரம் சமீபத்திய தசாப்தங்களில் நம்பமுடியாத எழுச்சியையும் வளர்ச்சியையும் கண்டுள்ளது. இன்று, அது உலகின் பல நிதி, வர்த்தக, ராணுவ மற்றும் அரசியல் சக்திவாய்ந்த நாடுகளின் தாயகமாக உள்ளது. ஐரோப்பாவின் செழிப்புக்கும், பொருளாதார உறுதித்தன்மைக்கும், உலக அரசியலில் அதன் ஆதிக்கத்துக்கும் பின்புலமாக இருக்கும் ஐரோப்பாவின் அதிகார முகங்கள் அதன் மேற்கு ஐரோப்பிய நாடுகள். இந்த வார யூரோ தொடரிலும் ஐரோப்பாவின் சில செழிப்பான முகங்கள் தொடர்கின்றன...

பிரான்ஸ்

ஐரோப்பாவின் மற்றுமொரு சூப்பர் பவர். அட்லாண்டிக் பெருங்கடல், மத்திய தரைக்கடல் கடல், ஆல்ப்ஸ் மற்றும் பைரினீஸ் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட பிரான்ஸ், வடக்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவை இணைக்கும் புவியியல், பொருளாதார மற்றும் மொழியியல் பாலத்தைக் கொண்டுள்ளது. பொருளாதார, அரசியல், ராணுவ ரீதியாக மிகவும் பலம் கொண்டதாகக் காணப்படும் பிரான்ஸ் ஐரோப்பாவின் மிக முக்கியமான விவசாய உற்பத்தியாளரும், உலகின் முன்னணி தொழில்துறை சக்திகளில் ஒன்றுமாகும். உலகின் ஆறாவது பெரிய பாதுகாப்பு பட்ஜெட்டைக் கொண்டுள்ள பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்தில் முதலாவது பெரிய ராணுவ பட்ஜெட்டை கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரிய ஆயுதப் படைகளைக் கொண்டுள்ள பிரெஞ்சு ஆயுதப்படைகள் உலகின் ஆறாவது சக்திவாய்ந்த ராணுவமாகத் தரப்படுத்தப்பட்டுள்ளன.

பிரான்ஸ்
பிரான்ஸ்

ஐரோப்பாவின் மிகப் பலம் வாய்ந்த திறமையான ராணுவத்தைக் கொண்ட பிரெஞ்சு ராணுவம் எந்தவொரு மோதலையும் கையாளும் திறமையைக் கொண்டுள்ளது. உக்ரைன் ரஷ்ய மோதல்களால் ஐரோப்பா தன் ராணுவ பலத்தை மீண்டும் சீர்படுத்தத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இரண்டாவது தடவையாகப் பதவிக்கு வந்துள்ள பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் "நாங்கள் ரஷ்யாவுடன் போரில் ஈடுபடவில்லை, அதே நேரத்தில் ஐரோப்பிய பாதுகாப்பு குறித்து சர்வதேச ஒத்துழைப்பில் உறுதியாகக் கவனம் செலுத்துவோம்" எனக் கூறி உள்ளார். 2020-ல் மட்டுமே பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சகம் நேரடியாக 269,000-க்கும் மேற்பட்டவர்களை ராணுவத்தில் வேலைக்கு அமர்த்தியது. ஜூலை 2021 நிலவரப்படி, பிரெஞ்சு ராணுவத்தில் 222 லெக்லெர்க் டாங்கிகள், 267 போர் ஹெலிகாப்டர்கள், 739 ட்ரோன்கள் இருந்தன. விமானம் தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கண்ணிவெடிகள் நீங்கலாகப் பிரெஞ்சு கடற்படையிடம் 38 கப்பல்கள் இருந்தன. பிரெஞ்ச் விமானப்படை 211 போர் விமானங்களை வைத்திருக்கிறது. இது ஐரோப்பாவில் அதிகளவிலான ராணுவத் தளவாடங்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாகப் பதிவாகிறது.

இம்மானுவேல் மக்ரோன்
இம்மானுவேல் மக்ரோன்
LUDOVIC MARIN

countryeconomy.com-இன் ஆய்வறிக்கையின் படி, பிரான்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2021-இல் 7% அதிகரித்துள்ளது. நாடுகளின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி வரிசைப்படுத்தினால், பிரான்ஸ் அதன் மக்கள்தொகையின் வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் மிகச் சிறந்த நிலையில் உள்ளது. நாட்டின் தேசிய Motto-வான "Liberty, Equality and Fraternity" ("சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்") இன்று வரை பிரெஞ்சு மக்களால் பின்பற்றப்படுகின்றது.

உலகின் அதிக நோபல் பரிசுகளை வென்ற ஒரே நாடு பிரான்ஸ். பிரெஞ்சு எழுத்தாளர் சுல்லி ப்ருதோம் 1903இல் இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசை வென்றதிலிருந்து, பதினான்கு முறை பிரான்ஸ் இந்த விருதைப் பெற்றுள்ளது. ஆண்டு தோறும் சுமார் 89 மில்லியன் சுற்றுலாப் பயணிகளுடன் உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம் என்ற பெருமையையும் பிரான்ஸ் தட்டிச் செல்கிறது. வாயில் எச்சில் ஊறவைக்கும் உணவுகளுக்கு உலகப் பிரசித்தி பெற்ற பிரான்சில் ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு புதிய சமையல் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. 'Les Escargots' என்று அழைக்கப்படும் பிரெஞ்சின் பிரபல உணவான நத்தைகள் ஒவ்வொரு ஆண்டும் 25,000 டன் உண்ணப்படுகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மிகச் சிறந்த ஒயின் உற்பத்தி செய்யும் நாடான பிரான்ஸ் உலக தரவரிசையில் இத்தாலிக்கு அடுத்த இடத்தை பிடிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய ஒயின் ஏற்றுமதியில் 29.5%-ஐ பிரான்ஸ் பிடிக்கிறது.

Les Escargots
Les Escargots
Marianne Casamance, via Wikimedia Commons

பிரெய்லி சிஸ்டம், ஹாட் ஏர் பலூன், மெட்ரிக் சிஸ்டம், குளிர்சாதனப் பெட்டி, தையல் இயந்திரம், ஸ்டெதஸ்கோப், உணவுப் புரட்சியை ஏற்படுத்திய செயல்முறையான உணவு பதப்படுத்தல் முறை, கதிரியக்கத்தின் கண்டுபிடிப்பு, முதல் காற்றில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல், டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள், மிதி சக்தியுடன் கூடிய முதல் சைக்கிள், ஈய அமிலத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் ரிச்சார்ஜபிள் பேட்டரி, நியான் பல்புகள் முதல் ஹேர் ட்ரையர், பிரஷர் குக்கர், மார்ஜரின், ஆஸ்பிரின் மருந்து, பென்சில் ஷார்ப்னர் வரை மனித சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய பிரெஞ்சு கண்டுபிடிப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

உலக அரசியலில் ஐரோப்பாவின் குரல் ஓங்கி ஒலிக்க ஒரு முக்கிய காரணமான பிரான்ஸ், ஐரோப்பாவின் சக்தி வாய்ந்த அரண்!

நெதர்லாந்து

ஆரம்பத்திலிருந்தே ஐரோப்பிய ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் நெதர்லாந்து, ஐரோப்பிய விவசாயக் கொள்கை, பொருளாதார மற்றும் நாணய சங்கத்தை (EMU) வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1952இல் நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, லக்சம்பர்க் மற்றும் மேற்கு ஜெர்மனி ஆகியவற்றுடன் இணைந்து European Coal and Steel Community-யை (ECSC) நிறுவியது. ECSC பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்து ஐரோப்பாவில் அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, பொருளாதார செழிப்பை உறுதி செய்தது. 2020-ம் ஆண்டில், நெதர்லாந்து சுமார் 8.9 பில்லியன் யூரோவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மாற்றியது. நெதர்லாந்து ஒரு பணக்கார நாடாக மட்டுமல்ல, டச்சு மக்களும் உலகின் பணக்காரர்களில் வரிசையில் இடம் பிடிக்கின்றனர்.

நெதர்லாந்து
நெதர்லாந்து

சிறந்த சிந்தனையாளர்களையும் பொறியாளர்களையும் கொண்ட நெதர்லாந்து, கல்வித் துறையில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்கிறது. மாணவர்களுக்குப் படிப்பதற்குப் பல ஊக்கத் தொகைகளையும் மானியங்களையும் வழங்கி ஊக்கப்படுத்தும் நெதர்லாந்து அரசு, ஆராய்ச்சி மாணவர்களுக்கு அதிக சலுகைகளை வழங்குகிறது. அதிகாரப்பூர்வ டச்சு மொழிக்குக் கூடுதலாக, நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் பேசுகிறார்கள். சிறந்த உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் பெறுவதற்கு மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதற்குச் சான்றாக உலகின் சில சிறந்த பல்கலைக்கழகங்கள் இங்கே உள்ளன.

குறைந்த ஊதிய அளவு நிர்ணயம் உள்ள நெதர்லாந்தில் மக்கள் அனைவரும் தரமான வாழ்க்கைத்தரத்தை அனுபவிக்கின்றனர். இங்கே ஏழைகள் என்று யாருமே இல்லை எனலாம். அந்தளவுக்கு அரசு, மக்கள் நலனில் கவனம் செலுத்துகிறது. நெதர்லாந்தின் பொருளாதாரத்தின் முக்கிய பங்காளியான ரோட்டர்டாம் துறைமுகம் உலகின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான ஒன்றாகும். நெதர்லாந்தில் மட்டுமின்றி ஐரோப்பா முழுவதும் பொருள்கள் மற்றும் மூலப்பொருள்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் இது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மிகவும் வளர்ந்த ஜெர்மன் தொழில்துறைக்குத் தேவையான பெரும்பாலான மூலப்பொருள்கள் ரோட்டர்டாம் துறைமுகம் வழியாகவே வந்தடைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இது டச்சு பொருளாதாரத்திற்கு நூற்றுக்கணக்கான மில்லியன் யூரோக்களை நேரடி வருவாயாகக் கொண்டுவருகிறது.

டூலிப்ஸ்
டூலிப்ஸ்

நிலப்பரப்பு சிறியதாக இருந்தபோதிலும், நெதர்லாந்து விவசாயத்தில் அடைந்துள்ள வளர்ச்சியும் வெற்றியும் மலைக்க வைப்பன. விவசாயப் பொருள்களின் ஏற்றுமதியிலிருந்து கிடைக்கும் வருவாயில், நெதர்லாந்து ஐரோப்பாவில் முதல் இடத்தையும், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது இடத்தையும் பெறுகிறது. வளமான மண், மிதமான ஈரப்பதமான காலநிலை மற்றும் அதிக அளவிலான இயந்திரமயமாக்கல் ஆகியவற்றின் கலவையானது இத்துறையின் வளர்ச்சிக்குச் சிறப்பாக உதவி செய்கிறது. காய்கறிகள் (தக்காளி, வெள்ளரிகள் முதலியன), பழங்கள் (ஆப்பிள்கள், பேரிக்காய் போன்றவை) பால் பொருள்கள் மற்றும் பூக்கள் (பெரும்பாலும் டூலிப்ஸ்) ஆகியவற்றின் உலகளாவிய உற்பத்தியாளராகக் கோலோச்சி வருகிறது நெதர்லாந்து. அதே போல பீர் பிரியர்களின் ஃபேவரைட்டான ஹெய்னெகன் பீர் நெதர்லாந்துக்கே சொந்தமானது.

ஜப்பான் மற்றும் தென் கொரியாவைப் போலவே, வளங்களின் பற்றாக்குறை காரணமாக அனைத்து மூலப்பொருள்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திலிருந்தாலும், நெதர்லாந்து மிகவும் வளர்ந்த தொழில்துறையைக் கொண்டுள்ளது. நெதர்லாந்து தன் மக்களுக்குத் தேவையான அனைத்தையும் சுயமாக உற்பத்தி செய்வதோடு அதி உயர் தரத்திலான பொருள்களை உலக சந்தைக்கு ஏற்றுமதியும் செய்கிறது. தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் உலக முன்னோடிகளில் ஒன்றான நெதர்லாந்தில் பிலிப்ஸ், Shell, Unilever, KLM, ING, Tom Tom மற்றும் BAAN ஆகிய உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்கள் நிறுவப்பட்டது மட்டுமல்லாமல், தலைமையகத்தையும் கொண்டுள்ளன.

The Hague - Dutch Parliament
The Hague - Dutch Parliament

மக்கள் பணக்காரர்களாக இருக்கும்போது அந்த நாடும் பணக்கார நாடாக இருக்கும். இந்த இலக்கை அடைவதற்கான சிறந்த வழி, மக்கள் மத்தியில் தொழில்முனைவை ஊக்குவிப்பதாகும். அந்த விஷயத்தை நெதர்லாந்து மிகச்சிறப்பாகச் செய்கிறது. தனிநபர் தொழில்முனைவோர்களில் அதிக சதவிகிதத்தைக் கொண்ட நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்று. இந்தச் சிந்தனை முறையின் அடித்தளம் குழந்தைப் பருவத்திலேயே விதைக்கப்படுகிறது. வீட்டிலும் பள்ளியிலும் டச்சு மக்கள் தங்கள் குழந்தைகளுக்குப் படைப்பாற்றல் மற்றும் புதிய மற்றும் கிரியேட்டிவ்வான யோசனைகளைத் தழுவிக் கற்பிக்கிறார்கள்.

பெல்ஜியம், ஜெர்மனி, லக்சம்பர்க், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் டென்மார்க் போன்ற அதி சக்திவாய்ந்த பணக்கார நாடுகளால் சூழப்பட்டுள்ளதும் டச்சு பொருளாதாரத்தின் வளர்ச்சியின் மற்றுமொரு முக்கிய காரணியாகச் சொல்லலாம்.

“நெதர்லாந்துக்கு வாருங்கள், இன்னும் சில தசாப்தங்களில் உலகம் எப்படி இருக்கும் என்று பாருங்கள்” என்று பொதுவாகக் கூறுவார்கள். இந்தக் கூற்று நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை. உலகின் மிகவும் மகிழ்ச்சியான மட்டுமல்ல, ஆரோக்கியமான மக்கள் வாழும் நெதர்லாந்து ஐரோப்பாவின் அழகான செழிப்பான நாடு!

இத்தாலி

ஐரோப்பியக் கண்டத்தின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இத்தாலி, உலகின் 12வது பெரிய பொருளாதாரமாகும். ஜெர்மனி மற்றும் பிரான்சுடனான வலுவான வர்த்தக இணைப்புகள் இத்தாலியை மேலும் பலப்படுத்துகின்றன. ஐரோப்பாவின் மிகவும் கவர்ச்சிகரமான நாடுகளில் ஒன்றான இத்தாலி இயற்கை அழகால் ஆசீர்வதிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களைக் கொண்ட ஒரே நாடான இத்தாலியின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைய வரலாறும், தனித்துவமான கலாசாரமும் ஐரோப்பாவின் முக்கிய அடையாளமாக இத்தாலியை மாற்றின.

வெனிஸ், இத்தாலி
வெனிஸ், இத்தாலி

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இயந்திரங்கள், வாகனங்கள், மருந்துகள், தளவாடங்கள், உணவு, ஆடை, மற்றும் ரோபோக்கள் உட்பட பல்வேறு வகையான தயாரிப்புகளில் இத்தாலி ஒரு பெரிய உற்பத்தியாளராக கோலோச்சுகிறது. கலை, கட்டடக்கலை, ஃபேஷன், ஓபரா, இலக்கியம், வடிவமைப்பு, திரைப்படம் தொடங்கி பிட்சா, பாஸ்தா, ஜெலடோ ஐஸ்கிரீம் வரை பல தனித்துவமான விஷயங்களுக்கு பிரபலமான இத்தாலி பல அற்புதமான கலைஞர்களை உலகுக்கு அளித்துள்ளது. நீரோ, லியோனார்டோ டா வின்சி, கிறிஸ்டோபர் கொலம்பஸ், கலிலியோ கலிலி, மார்கோ போலோ, அமெரிகோ வெஸ்பூசி, மைக்கேல் காலின்ஸ், என்னியோ மோரிகோன், Guccio Gucci என உலகுக்கு இத்தாலி கொடுத்துள்ள பிரபலங்கள் ஏராளம். ஃபெராரி, ஆல்ஃபா ரோமியோ, ஃபியட் என ஆட்டோமொபைல் துறையிலும் புகுந்து விளையாடுகிறது இத்தாலி.

உலகின் மிகச்சிறந்த வைன் உற்பத்தி நாடுகளில் முதலிடத்தைப் பிடிக்கும் இத்தாலியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான திராட்சைத் தோட்டங்கள் உள்ளன. 2020-ம் ஆண்டில், இத்தாலி 49.1 மில்லியன் ஹெக்டோலிட்டர் ஒயினை உற்பத்தி செய்தது. வெரைட்டியான வைன்களை உற்பத்தி செய்வதில் இத்தாலியை விஞ்ச யாருமே இல்லை. ஒவ்வொரு வைன் தயாரிப்பாளரும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர். பல நூற்றாண்டுகளாகத் தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் இந்த வைன் தயாரிக்கும் நிறுவனங்கள் மிகச்சிறந்த, சுவையான, அதி உயர் தரத்திலான வைன்களை உலகுக்குத் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

ஒயின்
ஒயின்

22 நூற்றாண்டுகளாக, இத்தாலியர்களும் அவர்களது மூதாதையர்களும் வயல்களைச் சுத்தம் செய்து, கால்நடைகளை மேய்த்து, காட்டு விலங்குகளை வேட்டையாடினர். ஒரு காலத்தில் பெரிய பகுதிகளை உள்ளடக்கிய காடுகள் அழிந்துவிட்டன. ஆனால் நாட்டின் தொலைதூர இடங்கள் மற்றும் பல தேசிய பூங்காக்கள் இன்னும் மனிதர்களால் தீண்டப்படாத வனப்பகுதிகளை அப்படியே கொண்டுள்ளன. அளவில்லாத இயற்கை அழகை தனக்குள்ளே அள்ளி வைத்துள்ள இத்தாலியில் மூன்று முக்கிய ஆக்டிவ் எரிமலைகள் அடிக்கடி வெடித்துச் சிதறி பல சேதங்களை ஏற்படுத்தினாலும் இத்தாலியர்கள் அதற்கெல்லாம் அசருவதாக இல்லை.

ஒரு காலத்தில் ஐரோப்பாவின் அடையாளமாக இருந்த இத்தாலி தவறான அரசியல் தலைகளின் கைகளில் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ந்து கொண்டிருக்கிறது. கடன், உற்பத்தி பற்றாக்குறை, பரவலான ஊழல் போன்ற பிரதான பிரச்னைகள் இத்தாலி எனும் ஒரு பலம் வாய்ந்த சாம்ராஜ்ஜியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக்கொண்டு வருகின்றன. இத்தாலியின் கடன் விகிதம் யூரோ மண்டலத்தில் கிரீஸுக்கு அடுத்த படியாக, இரண்டாவது மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. நாட்டின் தேசியக் கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுமார் 120%, அதாவது சுமார் $2.6 டிரில்லியன் உயர்ந்து இத்தாலியின் பொருளாதாரம் மெல்ல மெல்ல மூழ்கி வருகிறது.

மிலன் கதீட்ரல் இத்தாலி
மிலன் கதீட்ரல் இத்தாலி

அனைத்து அரச உயர் பதவிகளிலும், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் பெரும்பாலான உயர் நியமனங்களிலும் அரசியல் மிகப்பெரிய செல்வாக்கு செலுத்துகிறது. இதனால் லஞ்சமும் ஊழலும் தலை விரித்து ஆடுகின்றன. இதனாலேயே வேலையின்மை விகிதம் அதிகரித்துப் பல இத்தாலியர்கள் நாட்டை விட்டு ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குக் குடிபெயர ஆரம்பித்துள்ளனர். முசோலினி போன்றவர்கள் வேறு உருவத்தில் இன்று இத்தாலியை ஆண்டு கொண்டு இருக்கின்றனர். இவர்களிடம் இருந்து தப்பித்து மிகச்சிறந்த ஒரு தலைவனின் கைகளில் சென்று சேரும் போது, மீண்டும் இத்தாலி மறுமலர்ச்சியடையும். ஆனால் அது எப்போது என்பது காலத்தில் கைகளில்தான் உள்ளது.

எது எப்படி இருந்தாலும் ஐரோப்பாவின் பெருமை வாய்ந்த புராதன வரலாற்றுச் சின்னம் இத்தாலி!

ஐரோப்பாவை ஒற்றைக் கையால் தாங்கி நிற்கும் உலகின் கொழுத்த பணக்கார நாடுகளான லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து, நார்வே, டென்மார்க் போன்ற நாடுகளைச் சுற்றி அடுத்த யூரோ டூரில் ஒரு விசிட் அடிக்கலாமா...

யூரோ டூர் போலாமா?!