Published:Updated:

யூரோ டூர் - 42: கால்பந்து மட்டும்தான் போர்ச்சுகல்லின் அடையாளமா? அதன் இன்னொரு முகம் தெரியுமா?

போர்ச்சுகல்
News
போர்ச்சுகல்

போர்ச்சுகலில் வறுமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று வேலையின்மை. 2008-ல் ஐரோப்பாவில் உண்டான கடும் பொருளாதார நெருக்கடி போர்ச்சுகல் பொருளாதாரத்தை முடக்கிப் போட்டது.

Published:Updated:

யூரோ டூர் - 42: கால்பந்து மட்டும்தான் போர்ச்சுகல்லின் அடையாளமா? அதன் இன்னொரு முகம் தெரியுமா?

போர்ச்சுகலில் வறுமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று வேலையின்மை. 2008-ல் ஐரோப்பாவில் உண்டான கடும் பொருளாதார நெருக்கடி போர்ச்சுகல் பொருளாதாரத்தை முடக்கிப் போட்டது.

போர்ச்சுகல்
News
போர்ச்சுகல்
இந்த வார யூரோ டூரில் அடுத்து நாம் காணவிருக்கும் நாடுகள் போர்ச்சுகல், செக் குடியரசு மற்றும் லிதுவேனியா. இவை குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களும், நாம் அறிந்திடாத அதன் சோக முகங்களும் இதோ...

போர்ச்சுகல் (Portugal)

போர்ச்சுகல் என்றால் இப்போதைய தலைமுறைக்கு நினைவுக்கு வரும் முதல் விஷயம் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்தாட்ட உலகின் மன்னன், கோடிகளில் புரளும் விளையாட்டு வீரன் என கிறிஸ்டியனோ ரொனால்டோ மூலம் போர்ச்சுகலுக்குக் கிடைத்துள்ள பிம்பம் மிகப்பெரியது. சுவையான கடல் உணவுகள், ரம்மியமான கடற்கரைகள், புராதன கட்டடக்கலைகள், பிரசித்திபெற்ற ஆலயங்கள், ஃபேடோ இசை, வரலாற்று முக்கியத்துவமுள்ள நகரங்கள், லிஸ்பன் துறைமுகம், மற்றும் சுவையான ஒயின் போன்றவற்றிற்கு உலகப்பிரசித்தி பெற்ற போர்ச்சுகல் ஐரோப்பிய ஒன்றியத்தின் வறிய நாடுகளில் ஒன்று என்றால் நம்ப முடிகிறதா?

முதன்முதலில் வணிகத்திற்காக உலகைச் சுற்றி வந்தவர்கள் போர்த்துகேயர்கள். வாஸ்கோடகாமா ஆரம்பித்து வைத்த பயணம் அதன் பின் பல நூற்றாண்டுகளுக்கு போர்த்துகேயர்களால் தொடரப்பட்டது. இன்றும் கோவாவில் போர்த்துகேய தடங்கள் மீதமிருக்கின்றன. ஒரு காலத்தில் மூன்றாம் உலகைக் கட்டி ஆண்ட போர்ச்சுகல் இன்று அதே மூன்றாம் உலக நாடுகளின் தரத்துக்குப் பின்னடைந்து தள்ளாடிக்கொண்டு இருக்கிறது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ
BERNADETT SZABO

ஐரோப்பாவை நோக்கிப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கான ஹாட்ஸ்பாட் என்று அறியப்படும் போர்ச்சுகல் பணக்காரர்கள் விடுமுறைக்குத் தேர்ந்தெடுக்கும் ஒரு ஆடம்பரமான இடமாகத் தோன்றினாலும், போர்ச்சுகல் உண்மையில் பெரிய பொருளாதாரம் மற்றும் நிதி சிக்கல்கள் நிறைந்த ஒரு நாடு. பிரமாண்டமான அரண்மனைகள், கதீட்ரல்கள் மற்றும் கோபுர வரிசைகளுக்குப் பின்னால் வேலையின்மை, பசியால் அவதியுறும் குழந்தைகள், தெருவில் உபசகம் ஏந்தும் வீடற்ற அகதிகள் என ஐரோப்பாவின் இன்னுமொரு அவலமுகம் போர்ச்சுகல். போர்ச்சுகலில் வறுமை ஏன் இவ்வளவு பெரிய பிரச்னையாக உள்ளது?

கிட்டத்தட்ட 2.6 மில்லியன் மக்கள் போர்ச்சுகலில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர் என்று தேசிய புள்ளியியல் நிறுவனம் தெரிவிக்கிறது. நாட்டில் வறுமையில் வாடும் குடிமக்களில் 487,000 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்ற அதிர்ச்சியான கூடுதல் தகவலையும் அது கூறுகிறது. ஐரோப்பாவின் மிகவும் வருமான சமத்துவமற்ற நாடுகளில் போர்ச்சுகலும் ஒன்று! அதாவது பணக்காரர்கள், வறுமையில் வாடும் மற்ற மக்களை விட ஐந்து மடங்கு அதிக வருமானம் பெறுகிறார்கள். ஐரோப்பாவில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது தொழிலாளர்களுக்கான மணிநேர ஊதியம் மிகவும் குறைவாக இருந்தாலும், அதிகமாக வேலை செய்யும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது போர்ச்சுகல்.

உயர்ந்த வாழ்க்கைச் செலவு காரணமாக தமது குழந்தைகளை வளர்க்கப் பெற்றோர்கள் பல வேலைகளைச் செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுக்குக் குழந்தைகளுடன் செலவழிக்க மிகக் குறைந்த நேரமே கிடைக்கிறது. இதனால், குழந்தைகள் சிறு வயது முதலே சரியான கவனிப்பின்றி வளர்கின்றனர்.
போர்ச்சுகல் மக்கள்
போர்ச்சுகல் மக்கள்

போர்ச்சுகலில் வறுமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று வேலையின்மை. 2008-ல் ஐரோப்பாவில் உண்டான கடும் பொருளாதார நெருக்கடி போர்ச்சுகல் பொருளாதாரத்தை முடக்கிப் போட்டது. அப்போது விழுந்த பொருளாதார வளர்ச்சி மேலும் மந்தமடைந்து செல்கிறதே தவிர, இன்றுவரை முன்னேறவில்லை. வறுமையின் காரணமாக நிறைய குடும்பங்கள் குடிசைகளில், இடிந்த வீடுகளில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நாட்டில், குறிப்பாக நகர்ப்புறங்களில் பொருத்தமான வீட்டுவசதிக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதேபோல வீடு இல்லாதவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

COVID-19 தொற்று போர்த்துக்கீச மக்களின், குறிப்பாக வறுமையில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையைப் பெரிதும் பாதித்துள்ளது, Agencia EFE போர்ச்சுகல் வெளியிட்ட அறிக்கையின்படி, 21.6% போர்ச்சுகல் குடிமக்கள் COVID-19 வெடிப்பதற்கு முன்பே வறுமையின் பிடியிலிருந்தனர். துரதிர்ஷ்டவசமாக, COVID-19 இன் சமூக பொருளாதார விளைவுகள் லட்சக்கணக்கான மக்களை மேலும் வறுமைக்குள் தள்ளியுள்ளது என்கிறது அந்த அறிக்கை.

ஐரோப்பா முழுவதிலும் பார்க்கப்போனால், போர்ச்சுகலில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் விகிதம் அதிகமாக உள்ளது. போதிய கல்வியறிவு இன்மை, நலிந்த சுகாதார வசதிகள் போன்றவை காரணமாகத் தொற்று நோய்கள் அதிகமாகப் பரவும் ஐரோப்பிய நாடுகள் வரிசையில் போர்ச்சுகல் முக்கிய இடம் வகிக்கிறது. போர்ச்சுகலின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்கள் என்பதும் பொதுவான விஷயமாகிப் போயுள்ளது. 16 வயதிற்குட்பட்ட பல குழந்தைகள் தெருக்களில் பிச்சையெடுக்க வைக்கப்படுகிறார்கள், வேலை தேடி பள்ளியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வயதானவர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை ஐரோப்பாவின் வேறு எந்த நாட்டை விடவும் போர்ச்சுகலில் அதிகமாக உள்ளது.

போர்ச்சுகல் மக்கள்
போர்ச்சுகல் மக்கள்

போர்ச்சுகலுக்கும் ஐரோப்பிய ஆணையத்திற்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் ஐரோப்பிய ஆணையம் போர்ச்சுகலுக்கு 25 பில்லியன் யூரோக்களை ஒதுக்க ஒப்புக்கொண்டது. இந்த நிதியானது வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது எந்தளவு நடைமுறையில் சாத்தியமாகிறது என்பது கேள்விக்குறியே. ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகளவு உதவித்தொகையைப் பெரும் ஐரோப்பிய நாடுகளில் போர்ச்சுகலும் ஒன்று என்றாலும் வறுமையின் பிடியிலிருந்து மீள முடியாமல் இன்னமும் திண்டாடிக்கொண்டு இருக்கிறது.

செக் குடியரசு (Czech Republic)

ஐரோப்பாவின் மிக அழகிய இயற்கை வளங்களை மட்டுமல்ல, ஐரோப்பாவின் மிக அழகிய பெண்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றான செக் குடியரசு, வறுமையில் திண்டாடும் இன்னுமொரு கிழக்கு ஐரோப்பிய நாடு.

2000க்கும் மேற்பட்ட அரண்மனைகள், 'Country of Architecture' (கட்டடக் கலையின் நாடு) என்று புகழப்படும் அளவுக்கு அட்டகாசமான கட்டடங்கள் என ஐரோப்பாவின் வரலாற்று புகழ்பெற்ற செக் குடியரசு ஒப்பீட்டளவில் ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளைவிடப் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றாலும் ஐரோப்பிய ஒன்றியத்தில், மக்கள் தொகை வறுமைக் கோட்டிற்குக் கீழே விழும் அபாயத்தில் உள்ள நாடுகளின் வரிசையில் செக் குடியரசு இரண்டாவது இடத்தில் உள்ளது.

செக் குடியரசு (Czech Republic)
செக் குடியரசு (Czech Republic)

யூரோஸ்டாட் தரவுகளின்படி, செக் குடியரசின் மக்கள்தொகையில் 3.4% பேர் வறுமையின் ஆபத்தில் உள்ளனர். குறிப்பாகப் பெண்கள். ஏனெனில் செக் குடியரசு ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே அதிக ஊதிய இடைவெளிகளைக் கொண்டுள்ளது. சராசரியாக, ஒரு செக் பெண்ணின் சம்பளம் அவரது ஆண் சகாக்களை விட 22% குறைவாக உள்ளது. இளைஞர்களிடையே வறுமை நிலையைத் தீர்மானிப்பதில் கல்வி பெரும் பங்கு வகிக்கிறது. ஒப்பீட்டளவில் குறைந்த திறன் மற்றும் குறைந்த கல்வியறிவு பெற்ற பெற்றோர்களின் குழந்தைகளும் வறுமைக்கோட்டுக்குள் தள்ளப்படுகின்றனர். பெற்றோரின் வறுமையின் அபாயம் காரணமாக, சில குழந்தைகள் தங்கள் கல்வியைத் தக்க வைத்துக் கொள்ள போதுமான வசதியின்றி சிரமப்படுகிறார்கள். பல குழந்தைகள் சிறு வயதிலேயே குழந்தைத் தொழிலாளர் ஆக்கப்படுகின்ற அவலமும் இங்கும் தொடர்கிறது.

லிதுவேனியா (Lithuania)

பரந்து விரிந்த பச்சைப் பசேல், தட்டையான நிலப்பரப்புகள், ஏராளமான காடுகள், ஏரிகள், மலைகள், வெள்ளை மணல் கடற்கரைகள் என அழகு கொஞ்சும் ஐரோப்பியச் சொர்க்க பூமி லிதுவேனியா வறுமை, வேலையின்மை என நிலையில்லா பொருளாதாரத்தில் தள்ளாடும் மற்றுமொரு ஐரோப்பிய நாடு.

2000-களின் முற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்ததிலிருந்து லிதுவேனியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டிருந்தாலும் இன்னும் பல சவால்களைச் சந்தித்துக்கொண்டுதான் உள்ளது. 2008 ஐரோப்பிய நிதி நெருக்கடிக்குப் பின், பல ஐரோப்பிய நாடுகள் வறுமையின் உச்சத்தைத் தொட்டன. அதில் லிதுவேனியாவின் வறுமை அதிகரிப்பும் குறிப்பிடத்தக்கது.

லிதுவேனியா (Lithuania)
லிதுவேனியா (Lithuania)

லிதுவேனியன் சமூகத்தில் இருக்கும் வருமான சமத்துவமின்மை, போதுமான சமூக திட்டங்கள் மற்றும் நியாயமான வருமானம் இல்லாமை, குறைந்த கல்வியறிவு, அதிகரித்த வேலைவாய்ப்பு இன்மை, மோசமான உள்கட்டமைப்பு வசதிகள், குறைந்த வாழ்க்கைத்தரம், ஊழல் நிறைந்த அரசாங்கம் என லிதுவனியாவும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சந்திக்கும் பிரச்சனையை எதிர்கொள்கின்றன.

தேசிய தரத்தின்படி, லிதுவேனியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் பேர் வறுமை மற்றும் சமூக ரீதியான ஒடுக்குதலை எதிர்கொள்கின்றனர். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளிடையே மிக உயர்ந்த விகிதங்களில் ஒன்றாகும். அரசாங்க உதவியின் பற்றாக்குறை, திறமைக்கு முக்கியத்துவம் இன்மை, லஞ்சம் ஊழல் மற்றும் அரசியல் தலையீடுகள், குறைந்த ஊதியம் போன்ற காரணங்களுக்காகச் சிறந்த வேலைவாய்ப்பைத் தேடி லிதுவேனியர்கள் தினம் தினம் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுகின்றனர். இதனால் லிதுவேனியாவும் மூளைச் செயலிழப்பைச் சந்திக்க ஆரம்பித்துள்ளது. விளைவு பெரிய சமூக சீர்குலைவு மற்றும் பொருளாதாரச் சரிவு போன்றவை லிதுவேனியாவில் தொடர்ந்து ஆழமாக வேரூன்றிக்கொண்டே செல்கிறது.

லிதுவேனியாவின் சமீபத்தைய பிரச்னை ரஷ்யாவின் கடும் எதிர்ப்பை சமாளிப்பது எப்படி என்பதுதான். 'தனக்கே தள்ளாட்டமாம் இதில் தம்பிக்குத் தேரோட்டமாம்' கதையாக, தனது நாட்டுக்குள் ஆயிரத்தெட்டு பிரச்னைகளை வைத்துக்கொண்டு, உக்ரைனுக்கு உதவுகிறேன் பேர்வழி என்ற பெயரில் சமீபத்தில் ரஷ்யப் பிரதேசமான கலினின்கிராட் பகுதிக்குச் சரக்குகளைக் கொண்டு செல்லும் ரயில் பாதையை மூடி போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளது. இதனால் ரஷ்யாவின் கடும் பகையைச் சம்பாதித்துள்ள லிதுவேனியாவுக்கு "கடுமையான" விளைவுகள் ஏற்படும் என்று ரஷ்யா காட்டமாக எச்சரித்துள்ளது.

லிதுவேனியா (Lithuania)
லிதுவேனியா (Lithuania)

"இதுபோன்ற விரோத நடவடிக்கைகளுக்கு ரஷ்யா நிச்சயமாகப் பதிலடி கொடுக்கும்" என்று அதன் மூத்த பாதுகாப்பு அதிகாரி நிகோலாய் பட்ருஷேவ் கூறியுள்ளார். ஆனால் உக்ரைன் மீதான மாஸ்கோவின் படையெடுப்பின் மீது விதிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய தடைகளை மட்டுமே தாம் பின்பற்றுவதாக லிதுவேனியா கூறுகிறது. இதன் விளைவுகள் என்னவாகப்போகின்றன என்பதுதான் இப்போதைய ஹாட் டாபிக்!

யூரோ டூர் போலாமா?!