அத்திப்பட்டி போன்ற இடங்கள் உலக வரைபடத்திலிருந்தே முற்றாகக் காணாமல் போய்விடும் அதிசயம் எல்லாம் 'சிட்டிசன்' போன்ற திரைப்படங்களில் மட்டும்தான் சாத்தியமா? உலகத்தில் காணாமல் போன தேசங்களின் கதைகளின் பின்னால் பிரிந்து போன மக்களின் காதலும், பிரிக்கப்பட்டவர்களின் கதறலும், சிதறிய ரத்தத்துளிகளும், உடைந்த நம்பிக்கைகளும், உடைக்கப்பட்ட எதிர்பார்ப்புக்களும், நிகழ்த்தப்பட்ட துரோகங்களும் மட்டுமே எஞ்சி இருக்கும்.
ஒரு தேசம் முற்றாக அழிந்து போவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். சில நாடுகள் ஒன்றிணைந்து கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி போல ஒரே நாடக உருவாகலாம். சோவியத் சோசியலிச குடியரசுகளின் ஒன்றியம் (யூ.எஸ்.எஸ்.ஆர்.) போல சில நாடுகள் பிரியலாம். 1845-ம் ஆண்டில் டெக்ஸாஸ் குடியரசை அமெரிக்கா தன்னோடு இணைத்துக்கொண்டது போல சில நாடுகள் இணைக்கப்படலாம். வியட்நாம் சம்பா இராஜ்ஜியத்தை உள்வாங்கிய போது நடந்தது போல் சில நாடுகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டு ஒருங்கிணைக்கப்படலாம். சிறிது சிறிதாகக் கடலுக்குள் மூழ்கிக்கொண்டு இருக்கும் மாலதீவுகள் போல சில நாடுகள் கடலால் உள்வாங்கப்படலாம். இல்லை இலங்கையில் நடந்தது போல மக்களை எல்லாம் முட்டாளாக்கி ஆட்சிக்கு வரும் பேராசை பிடித்த ஒரு மோசமான தலைவனால் சில நாடுகள் நாசமாகக் கூடப் போகலாம்.

ஐரோப்பாவிலும் இது போல ஒரு பெரிய பரந்த தேசமே சிதைந்து போனது. காரணம் இனக்குழுக்களுக்கும் மொழிகளுக்கும் இடையே சிதைந்த ஒற்றுமை. கிழக்கு ஐரோப்பிய ஏடுகளில் குருதியால் எழுதப்பட்ட ரத்த சரித்திரம் யூகோஸ்லாவியப் பிளவு. துண்டு துண்டாக உடைக்கப்பட்ட ஒரு தேசத்தின் துகள்களிலிருந்து பிறந்த புதிய ஆறு நாடுகளின் இன்றைய நிலை என்ன?
உலகப்போர்களும், உலகப் பிரிவுகளும்!
முதலாம் உலகப் போரும் இரண்டாம் உலகப் போரும் கடந்த நூற்றாண்டில் பல நாடுகளின் வீழ்ச்சியையும் எழுச்சியையும் தீர்மானித்தன. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை ஒட்டிய அல்சேஸ்-லோரெய்ன் பகுதி, 1918-இல் முதலாம் உலகப் போரின் முடிவில் இல்லாமல் போனது. வெய்மர் குடியரசு நாஜி ஜெர்மனியாக மாறியது. ஆனால் இவை இரண்டுமே இப்போது நவீன ஜெர்மனியின் பகுதிகளாக இணைந்து விட்டன. அதே போலத்தான் 1988-1992 இல் சோவியத் ஒன்றியத்தின் சரிவு, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் 15 தனித்தனி நாடுகளை உருவாக்கியது.
முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போர்களிலிருந்து உருவான செக்கோஸ்லோவாக்கியா மற்றும் யூகோஸ்லாவியா ஆகிய இரண்டு கிழக்கு ஐரோப்பியத் தேசங்கள், சோவியத் ஒன்றியத்துடன் மிகவும் வலுவான பிணைப்பைக் கொண்டிருந்தன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்த இரு தேசங்களும் வீழ்ந்தன. செக்கோஸ்லோவாக்கியா செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா ஆனது! யூகோஸ்லாவியா பிரிந்து போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, மாண்டினீக்ரோ, மாசிடோனியா, ஸ்லோவேனியா, செர்பியா மற்றும் கொசோவோ என்னும் ஆறு தேசங்களாகப் பிரிந்தன.
யூகோஸ்லாவியாவின் பிறப்பு
Land of South Slaves – அதாவது தெற்கு ஸ்லாவிய மொழியைப் பேசக்கூடிய மக்களின் நிலம் என்ற அர்த்தத்தைக் கொண்ட யூகோஸ்லாவியா, முதலாம் உலகப் போருக்குப் பிறகு உருவான புதிய மாநிலங்களில் முக்கியமானது. வெவ்வேறு பேரரசுகளின் கீழ் வாழ்ந்த, வேறுபட்ட கலாசாரங்களையும், பண்பாட்டையும் கொண்ட மக்களால் உருவானது இந்தத் தேசம். அதனால் இந்த நாட்டின் மக்களிடையே, தாம் அண்டை மாநிலங்களில் வசித்தவர்கள் என்பதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இருக்கவில்லை. செர்பிய, க்ரோஷிய, ஸ்லாவிக், மாண்டினீக்கிரிய, போஸ்னிய மற்றும் மசிடோனிய மொழிகள் பேசும் ஆறு இனத்தவர் யூகோஸ்லாவியாவில் வாழ்ந்தனர். ஆரம்பத்திலிருந்தே இவர்களுக்குள் கொஞ்சமும் ஒற்றுமை இருக்கவில்லை. எனவே யூகோஸ்லாவியா என்னும் ஒரு நாடு உருவாக, அங்கே வாழ்ந்த மக்கள் விரும்பினார்கள் என்பதை விட, அப்படி ஒரு நாடு உருவாக வேண்டும் என்று கொடுக்கப்பட்ட அழுத்தமே பிரதானமாக அமைந்தது.

1800-களின் பிற்பகுதியில் ஒட்டோமான் பேரரசு மற்றும் ஆஸ்திரியா - ஹங்கேரி ஆகியவை பால்கன் பிராந்தியத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்தன. ஆனாலும் அந்த இரண்டு பேரரசுகளும் முதலாம் உலகப் போரில் (1914-18) தோற்கடிக்கப்பட்டன. போருக்குப் பிறகு பல பால்கன் நிலங்கள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய நாட்டை உருவாக்கின. இது செர்பியர்கள், குரோஷியர்கள் மற்றும் ஸ்லோவேனியர்களின் இராஜ்ஜியம் என்று முதலில் அழைக்கப்பட்டது (Kingdom of Serbs, Croats, and Slovenes). 1929-இல் இந்த இராஜ்ஜியம் அதன் பெயரை யூகோஸ்லாவியா என மாற்றியது.
ஜெர்மனி, இத்தாலி மற்றும் அவர்களது நட்பு நாடுகள் இரண்டாம் உலகப் போரின் போது 1941-ல் யூகோஸ்லாவியா மீது படையெடுத்தன. நட்பு நாடுகளிடையே சிக்கிக் கொண்ட யூகோஸ்லாவியா என்னும் தேசத்தைக் காக்க வந்த ஹீரோதான் ஜோசிப் ப்ரோஸ் டிட்டோ (Josip Broz Tito). யூகோஸ்லாவியாவின் வரலாற்றைப் படிக்கும் போது டிட்டோவைத் தவிர்த்து நிச்சயம் போக முடியாது. ஏனெனில் யூகோஸ்லாவியா என்னும் ஒரு தேசம் தோன்றவும், துலங்கவும் அச்சாணியாக இருந்த ஒரு அற்புத தலைவர் ஜோசப் டிட்டோ.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, யூகோஸ்லாவியாவை நட்பு நாடுகளின் படையெடுப்பாளர்களிடமிருந்து விடுவிக்க, துருப்புக்களை வழிநடத்திய ஜோசிப் ப்ரோஸ் டிட்டோவை ஏப்ரல் 7, 1963-ல், புதிய யூகோஸ்லாவியா அரசியலமைப்பு, புதிதாகப் பெயரிடப்பட்ட சோசலிஸ்ட் ஃபெடரல் குடியரசு யூகோஸ்லாவியாவின் வாழ்நாள் ஜனாதிபதியாக அறிவித்தது. பல இனக்குழுக்கள், பல மொழிக்குழுக்களை இணைத்து Federal Republic of Yugoslavia-வின் தலைவரான டிட்டோ, ஒரு புதிய கம்யூனிச அரசாங்கத்தை அமைத்து, வலுவான ஆட்சியை ஆரம்பித்தார்.
ஜோசிப் ப்ரோஸ் டிட்டோ (Josip Broz Tito) – தி ஹீரோ!
ஜோசிப் ப்ரோஸ் என்று அழைக்கப்பட்ட டிட்டோ 1892-ல் குரோஷியாவில் ஒரு பெரிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அந்த நேரத்தில், குரோஷியா ஆஸ்ட்ரோ- ஹங்கேரியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. 1913-ல் ஆஸ்ட்ரோ - ஹங்கேரிய ராணுவத்தில் சேர்ந்த டிட்டோ, முதலாம் உலகப் போர் வெடித்தபோது செர்பியாவுக்கு எதிராகப் போராடினார். 1915-ல் ரஷ்ய முன்னணிக்கு அனுப்பப்பட்டு அங்குக் கைதான டிட்டோ போர்க் கைதிகள் முகாமிலிருந்தபோது போல்ஷிவிசத்திற்கு மாறி 1917-ல் ரஷ்யப் புரட்சியில் பங்கேற்றார். 1928-ல் யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கட்சியில் (Communist Party of Yugoslavia) இணைந்த டிட்டோ ஒரு சிறந்த அமைப்பாளராகவும், தலைவராகவும் அறியப்பட்டார். சோவியத் தலைமையிலான சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பான Comintern உடன் இணைந்து பணியாற்றச் சோவியத் ஒன்றியத்திற்குச் சென்ற இவர் 1939-ல், CPY-இன் பொதுச் செயலாளர் ஆனார்.

1941-ல், Axis படைகள் யூகோஸ்லாவியா மீது படையெடுத்து ஆக்கிரமித்தன. ஆனால் 1944-இலேயே சோவியத் படைகள் யூகோஸ்லாவியாவை விடுவித்து, மார்ச் 1945-இல் மார்ஷல் டிட்டோவை ஒரு புதிய கூட்டாட்சி யூகோஸ்லாவிய அரசாங்கத்தின் தலைவராக (Head of a New Federal Yugoslav Government) நியமித்தது.
நவம்பர் 1945-ல் டிட்டோ கம்யூனிஸ்ட் ஆதிக்கம் செலுத்தும் தேசிய விடுதலை முன்னணியின் வேட்பாளர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட தேர்தலில் யூகோஸ்லாவிய பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே மாதம், மக்கள் குடியரசு புதிய அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ், செர்பியா, குரோஷியா, போஸ்னியா-ஹெர்ஸகோவினா, மாண்டினீக்ரோ, ஸ்லோவேனியா மற்றும் மாசிடோனியா ஆகிய பால்கன் குடியரசுகளை உள்ளடக்கிய பிரமாண்டமான யூகோஸ்லாவியா கூட்டாட்சி (the Federal People’s Republic of Yugoslavia) தனி நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
யூகோஸ்லாவிய குடியரசுகளுக்கு அவற்றின் ஒரு சில அரசியல் விவகாரங்களில் சுயாட்சி வழங்கப்பட்டாலும், இறுதி அதிகாரத்தை டிட்டோ தன் கையிலேயே வைத்திருந்தார். அவரது ஆட்சிக்கு எதிராக முளைத்த எதிர்ப்பை எல்லாம் ஆரம்பத்திலேயே அடக்கி, ஒரு விதமான சர்வாதிகார ஆட்சியைச் செய்தார். ஆனாலும் மக்கள் அபிமானம் பெற்ற தலைவராகவே தொடர்ந்தும் இருந்து வந்தார். சில வரலாற்றாசிரியர்கள் டிட்டோவின் ஜனாதிபதி பதவியைச் சர்வாதிகாரம் என்று விமர்சித்தாலும், பலர் அவரை ஒரு நல்ல சர்வாதிகாரியாகப் பார்த்தார்கள். யூகோஸ்லாவியாவில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் பிரபலமான ஓர் அரசியல்வாதியாக அவர் இருந்தார். ஒருங்கிணைக்கும் அடையாளமாகக் கருதப்பட்ட அவரது அரசியல் கொள்கைகள் யூகோஸ்லாவிய கூட்டமைப்பு நாடுகளின் அமைதியான சுகவாழ்வைக் குலையாமல் பராமரித்தன.
ஐரோப்பாவின் சூப்பர் பவராக எழுச்சியடைந்த யூகோஸ்லாவியா!
1945 முதல் 1980-ல் இறக்கும் வரை ஆட்சி செய்த ஜோசிப் ப்ரோஸ் டிட்டோவின் தலைமையின் கீழ், பல இனக்குழுக்களின் தாயகமாக இருந்த யூகோஸ்லாவியாவின் ஆறு குடியரசுகளுக்குள் முளைத்த தேசியவாத இயக்கங்களை மிகத்திறமையாக அடக்கி, ஒடுக்கி, உள்நாட்டு ஒற்றுமையைச் சிறப்பாகப் பேணி வந்தார். ஐரோப்பியக் கண்டத்தில் ஒரு பிராந்திய தொழில்துறை சக்தியாகவும், பொருளாதார வெற்றியாகவும் இருந்தது யூகோஸ்லாவியா. 1960 முதல் 1980 வரை, ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி சராசரியாக 6.1 சதவிகிதமும், கல்வியறிவு 91 சதவிகிதமும், ஆயுட்காலம் 72 ஆண்டுகளாகவும் இருந்தன. இலவச மருத்துவம், இலவச கல்வி, முன்னேற்றம் அடைந்த உட்கட்டமைப்பு வசதிகள் என மற்ற கம்யூனிச நாடுகளைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் சிறந்த வளர்ச்சியடைந்த நாடாகக் கருதப்பட்ட யூகோஸ்லாவியா, ஐரோப்பாவின் பலம் பொருந்திய வல்லரசாக வலம் வந்தது.

150,000 துருப்புக்கள் மற்றும் மில்லியன் கணக்கான ராணுவ இருப்புக்களுடன், ஒரு காலத்தில் ஐரோப்பாவின் அசைக்க முடியாத ராணுவமாகக் கருதப்பட்ட யூகோஸ்லாவிய மக்கள் ராணுவம் (JNA) அமெரிக்க, சோவியத் மற்றும் பிரிட்டிஷ் படைகளுக்கு அடுத்து, உலகின் நான்காவது வலிமையான ராணுவமாக மதிப்பிடப்பட்டது.
வீழ்ச்சி!
உறுதியான தலைவன், வளர்ந்த பொருளாதாரம், உயர்ந்த கல்வியறிவு, குறைந்த வேலைவைப்பின்மை, செழிப்பான இயற்கை, பலம் பொருந்திய ராணுவம், ஆட்டம் காணாத அரசு, நிலையான நாணயம் என எல்லாமே இருந்தும் இந்தத் தேசம் வீழ்ந்தது. ஒன்றாக, இரண்டாக, மூன்றாக இல்லை, ஆறாக உடைந்தது.
ஐரோப்பியப் பூமியில் கோலோச்சிய யூகோஸ்லாவியா என்னும் பிரமாண்டமான தேசம் இருந்த இடமே தெரியாமல் மறைந்து போனது எப்படி? அடுத்த வார யூரோ டூரில்...