“You can take the person out of the Stone Age, not the Stone Age out of the person.” (கற்காலத்திலிருந்து மனிதன் வெளியே வந்திருக்கலாம். ஆனால் அந்த கற்காலத்தை மனிதனுக்குள் இருந்து வெளியே எடுக்க முடியாது.)
உலகம் வேகமாக முன்னேறினாலும் அறிவியலின் புதிய பரிமாணங்கள் திடீரென வெளிவருவதில்லை. நவீன டார்வினிசம் என்று கூறப்படும் உளவியலின் பரிணாம வளர்ச்சி கூட இதில் விதிவிலக்கல்ல. மனிதன் என்னதான் விண்வெளி ஆய்வு வரை சென்று முழுமையான நவீன உலகில் வாழ்ந்தாலும், அவன் கற்கால வேட்டைக்காரனின் வேரூன்றிய மனநிலையுடன்தான் இருக்கிறான். சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்பு சவன்னா சமவெளியில் தோன்றிய ஹோமோ சேபியன்ஸ் பண்புகளையே இன்றும் மனிதன் கொண்டிருக்கிறான். தன் உயிருக்கோ உடமைக்கோ அச்சுறுத்தல் வரும் போது ஆவேசமாக போராட உள்ளுணர்வால் உந்தப்படுகின்றான். முதல் உலகப் போர் உருவானதற்கும் இதுவே அடிப்படைக் காரணம்.
முதலாம் உலகப் போரில் நாடுகள் கைக்கொண்ட வியூகங்கள் (Strategy) என்ன என்பதை நாம் தெளிவாக தெரிந்து கொண்டால், ஐரோப்பிய வரலாற்றை மட்டுமல்ல, இன்றைய ஆப்கானிஸ்தான் பிரச்னையையும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இதை இன்னும் எளிமையாக விளங்கிக் கொள்ள முதலில் Game Theory பற்றி கொஞ்சம் பார்த்துவிட்டு முதலாம் உலகப் போருக்குள் செல்வோம்.

Game theory!
ஆட்டக் கோட்பாடு எனப்படும் Game theory என்பது, பயன்பாடு கணிதத்தின் (applied mathematics) ஒரு கிளை. இது சமூக அறிவியல், அரசியல், சர்வதேச உறவுகள், தத்துவம் ஆகிய பல துறைகளில் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு தனிநபர் தெரிவின்(Choice) வெற்றியானது மற்றவர்களின் தெரிவுகளை சார்ந்ததாக இருக்கும் என்கிறது இந்த கேம் தியரி. அதாவது ஒருவரின் ஆதாயம், எதிரியின் இழப்பைப் பொறுத்து அமைகிறது. ஆட்டக் கோட்பாட்டின் படி, பங்கேற்பாளர்கள் அனைவரின் செயல்களும் தேர்வுகளும், அதை சுற்றியுள்ள ஒவ்வொன்றின் முடிவையும் பாதிக்கின்றன. உதாரணத்துக்கு எப்படி மைய நாடுகளினதும் நேச நாடுகளினதும் செயல்பாடு முழு ஐரோப்பாவையும் பாதித்ததோ அது போல!
ஆட்டக் கோட்பாட்டில் இரண்டு வகையான ஆட்டங்கள் உள்ளன. ஒன்று முடிவை நோக்கிய இறுதி ஆட்டம். மற்றொன்று எல்லையற்ற முடிவிலி ஆட்டம். இறுதி ஆட்டம் இவர் தான் எதிர்த்து விளையாடப் போகும் வீரர் என தெரிந்திருப்பதோடு நிலையான விதிகள் மற்றும் குறிக்கோள்களை கொண்டது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே நடந்த யுத்தம் இதற்கு ஒரு உதாரணம். ஏதாவது ஒரு தரப்பு தோல்வியை தழுவும் போது அது முடிவுக்கு வருகிறது.
முதலாம் உலகப் போர் இதில் இரண்டாவது வகை. இந்த முடிவில்லாத ஆட்டத்தில் யார் ஆடப் போகிறார், யார் விலகப் போகிறார் என்பதெல்லாம் எதுவுமே தெரியாது. இத்தாலி முதலில் ஜெர்மனியுடன் கைகோர்த்து, பின் எதிர்க்கட்சிக்கு தாவி ஜெர்மனி மீதே போர் தொடுத்தது. ஆரம்பத்தில் நேச நாடுகள் நம்பி இருந்த ரஷ்யா கடைசியில் கைவிட்டு காலை வாரியது, சம்பந்தமே இல்லாத அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் கடைசியில் உள்ளே நுழைந்தன… போன்றவை அதற்கான சில உதாரணங்கள்.
இன்றுவரை சூப்பர் பவர் நாடுகளுக்கு இடையே நடக்கும் பனிப்போர் முடிவு என்பது இல்லாத ஒரு தொடர் சோகம். இந்த நிமிடம் வரை அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதில் ஆட்டத்தை விட்டு விலக முடியுமே தவிர யாருமே ஆட்டத்தை நிறுத்த முடியாது. தொடர்ந்து ஆடத் தேவையான வளங்களோ அல்லது ஆடுவதற்கான விருப்பமோ தீர்ந்துவிட்டால் அதை கைவிடுட்டு விலகுவது தான் ஒரே வழி. நாம் சினிமா உச்ச நட்சத்திரங்கள் ஃபீல்டை விட்டு வெளியேறுவதும், ஒரு காலத்தில் கோலாச்சிய பல வணிக நிறுவனங்கள் இன்று காணாமல் போனதையும் இத்தோடு பொறுத்திப்பார்க்கலாம்.

அமெரிக்கா வியட்நாமில் தலையிட்டது, சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தது எல்லாமே இந்த முடிவிலி விளையாட்டில் அடங்கும். முதலில் ஆப்கானிஸ்தான் உள்ளே சோவியத் யூனியன் நுழைந்த போது அமெரிக்க தேசிய பாதுகாப்பு செயலாளரை அமெரிக்க ஜனாதிபதி அழைத்து, இந்த விஷயத்தில் அமெரிக்காவின் கொள்கை என்னவென்று கேட்டாராம். அதற்கு அப்போதைய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzeziński “அமெரிக்காவின் முக்கிய கொள்கை சோவியத்தை வெளியேற்றுவது. அப்படி அவர்களை வெளியேற்ற முடியவில்லை என்றால் ஆப்கானிஸ்தான் அவர்களுக்கு செலவு கூடிய ஒரு முடிவாக ஆகும்படி செய்வோம்” என்றாராம். 10 வருடங்களுக்கு பிறகு போர் செய்யத் தேவையான வளங்களையும் விருப்பத்தையும் இழந்து, சோவியத் யூனியன் தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கியது. அன்று சோவியத்துக்கு நடந்தது இன்று அமெரிக்காவுக்கும் நடந்திருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு பின் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. அதே போல முதலாம் உலகப் போரிலும் சண்டையிட்ட நாடுகள் எல்லாம் இறுதியில் அனைத்து வளங்களையும் இழந்து, சோர்வுற்று வெளியேறின. இது எல்லாமே ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் நிகழ்ந்த நிகழ்வுகளே...
ஜெர்மனியின் உண்மையான நோக்கம் என்ன?
ஒரு துறையிலோ, ஒரு பிராந்தியத்திலோ ஆதிக்கம் செலுத்தும் நபருக்கு, அங்கே புதிதாக உருவாகும் போட்டியாளன் எரிச்சலையும், பொறாமையையும் கோபத்தையும் ஏற்படுத்துவான். அவனுக்கு தன் இருப்பின் மீதான பாதுகாப்பின்மை வளரத் தொடங்கும். அது பல விபரீதமான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். ஜனவரி 18,1871-ல் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக ஒருங்கிணைந்த தேசிய மாநிலமாக, ஜெர்மனி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜெர்மனி ஒன்றிணைக்கப்பட்டதை தொடர்ந்து ஒரு மிகப்பெரும் வல்லரசாக அது வளரத் தொடங்கியது. அதிக மனிதவளம், சிறப்பான தலைமைத்துவம் மற்றும் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவத்துடன் கூடிய நாடாக இருந்த ஜெர்மனியின் வளர்ச்சி எட்டுக்கால் பாய்ச்சலில் இருந்தது. இதைப் பார்த்து ஏனைய நாடுகள் மிரளத் தொடங்கின. அதுவரை ஐரோப்பாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவுக்கு அதிரடியாக ஆட்டத்துக்குள் நுழைந்த ஜெர்மனி சிம்ம சொப்பனமாக மாறியது. புதிய பேரரசாக வளர்ந்து வந்த ஜெர்மனியை ஆட்டத்தை விட்டு காலி செய்ய தக்க தருணம் பார்த்துக் காத்திருக்க ஆரம்பித்தன இந்த நாடுகள்.
முதலாம் உலகப் போருக்கு முன்பு வரையில், ஜெர்மனி உலகில் தனது இடத்தை நிலைநாட்ட போராடும் ஒரு நாடாகவே இருந்தது. ஒன்றிணைந்த ஜெர்மனியின் பொருளாதாரம் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக மாறியது. இராணுவம் சிறப்பான கட்டமைப்போடு பலம் பொருந்தியதாக வளர்ந்தது. தொழில்துறைகள் விரிந்தன. தொழில்நுட்பத்தில் புகுந்து விளையாடியது.
முதலாம் உலகப் போரில் உண்மையிலேயே ஜெர்மனியின் நோக்கம் ஒரு போரை உருவாக்கி, பல மனித உயிர்களை காவு வாங்கி, ஐரோப்பாவை கைப்பற்றுவது அல்ல. மாறாக அதன் உண்மையான நோக்கம் ஐரோப்பாவின் சூப்பர் பவராக உருவாவது மட்டுமே. பிரிட்டன் போலவே பல காலனிகளை வைத்துக்கொள்ள ஆசைப்பட்ட ஜெர்மனி, அதன் மூலம் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கணக்குப் போட்டது. பொருளாதார, அரசியல், இராணுவ ரீதியில் வேறு யாருமே கிட்ட நெருங்க முடியாத அளவுக்கு தன்னை வளர்த்துக் கொள்ள ஆசைப்பட்ட ஜெர்மனியை முடக்கி மூலையில் போட தருணம் பார்த்து காத்திருந்த ஏனைய சக்திகளுக்கு, பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலானது, ஆஸ்திரியா-ஹங்கேரிக்கும், செர்பியாவுக்கும் இடையேயான போரில் ஜெர்மனி தலையிட்டது.
ஒருவனின் தோல்வியை மதிப்பிட முதலில் அவன் எதிரியின் பலத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பார்கள். அந்த வகையில் ஜெர்மனியை பலவீனமாக்கிய நேச நாடுகளின் பலத்தை முதலில் அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே முதல் உலகப் போரில் என்ன நடந்தது, ஜெர்மனி எங்கு, எதில், எப்படி சறுக்கியது என்பது பற்றியெல்லாம் நாம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

எதிரி நம்பர் ஒன் - முதலாம் உலகப் போரில் பிரிட்டன்!
1800-களின் பிற்பகுதியிலும் 1900-களின் முற்பகுதியிலும், ஐரோப்பாவின் ஏனைய நாடுகள் போல அல்லாது, தாம் கைப்பற்றி வைத்திருந்த காலனிகளைக் கொண்டு ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே கட்டியாண்டது பிரிட்டன். 'The Statistics of the Military Effort of the British Empire during the Great War 1914-1920' என்ற புள்ளி விவரத்தின் படி, முதலாம் உலகப் போரில் பிரிட்டனுடன் சேர்ந்து அதன் காலனிகளான, இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, மற்றும் பிற காலனி நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான போர் வீரர்கள் சண்டையிட்டார்கள். இதனாலேயே படை பலத்தில் பிரிட்டன் பலம் வாய்ந்திருந்தது. இந்தக் காலனிகள் மூலம் அதற்கு தேவையான எல்லா வளங்களும் தாராளமாக கிடைத்தன. எனவே இந்தக் காலனி ராஜ்ஜியத்தை பாதுகாப்பதே அதன் பிரதான இலக்காக இருந்தது. இருந்தாலும் ஐரோப்பாவிலும் என்ன நடக்கிறது என்று ஒரு கண் வைத்திருந்தது.
பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகள் ஆப்பிரிக்காவில் பெரிய காலனிகளை வைத்திருந்தன. வட ஆப்பிரிக்காவின் காலனிகளை கைப்பற்றுவதில் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. 1900-களின் முற்பகுதியில், ஜெர்மனியும் வட ஆப்பிரிக்காவில் காலனிகளை கைப்பற்ற அதிக ஆர்வம் காட்டியது. இது பிரிட்டனை உறுத்தத் தொடங்கியது.
அதே போல பிரிட்டனை வதைத்த மற்றொரு கவலை, ரஷ்யா! 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரஷ்யா மத்திய தரைக்கடலுக்குள் கருங்கடல் கலக்கும் இடமான டார்டனெல்லெஸின் (Dardanelles) கட்டுப்பாட்டை கையில் எடுக்க விரும்பியது. ஏனெனில் அந்தப் பாதை ரஷ்ய போர்க் கப்பல்களையும் வர்த்தகக் கப்பல்களையும் ஐரோப்பா முழுவதும் சுலபமாக செல்ல அனுமதிக்கும் படி அமைத்திருந்தது. ரஷ்யாவுக்கு வடக்கில் ஏனைய துறைமுகங்கள் இருந்தாலும் அவை குளிர் காலத்தில் உறைந்து போயின. அதனால் இந்தக் குறிப்பிட்ட துறைமுகம் மீது ரஷ்யா கண் வைத்தது. ஆனால் பிரச்னை என்னவென்றால், டார்டனெல்லஸ் துருக்கிக்கு சொந்தமாக இருந்தது. துருக்கியும் ரஷ்யாவும் நீண்டகாலமாக எதிரிகளாக இருந்தன. எனவே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கொள்கையில் ரஷ்யாவுக்கு எதிராக துருக்கிக்கு ஆதரவளித்தது பிரிட்டன். ஏனெனில் மத்திய தரைக்கடல் இந்தியாவுக்கு செல்வதற்கான பிரிட்டனின் மிக முக்கியமான வர்த்தகப் பாதையாக இருந்ததால் அங்கு ரஷ்யக் கப்பல்கள் செல்வதை பிரிட்டன் விரும்பவில்லை.

1900-களின் முற்பகுதி வரை, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் மீது தான் பிரிட்டன் அதிக கடுப்பில் இருந்தது. பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான உறவு நன்றாகவே இருந்தது. இருப்பினும் காலங்கள் மாற காட்சிகள் மாறும் என்பது போல இதுவும் மாறத் தொடங்கியது. இரண்டாம் கைசர் வில்ஹெம் ஜெர்மனியின் ஆட்சியை தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்தபோது, ஜெர்மனிதான் ஐரோப்பாவிலேயே மிக பலம் வாய்ந்த பெரிய சக்தியாக மாற வேண்டும் என்று விரும்பினார். ஆனால் கிழக்கில் ரஷ்யாவும் மேற்கில் பிரான்சும் ஜெர்மனியைச் சுற்றி வளைப்பதை அவர் அவதானித்தார். அதனால் அவர் தனது ராணுவத்தை பலப்படுத்த தொடங்கினார். இதை அறிந்த பிரான்சும் ரஷ்யாவும் தாங்களும் அதையே செய்தன. 1900-களில், ஐரோப்பாவில் உள்ள பெரும் சக்திகள் அனைத்துமே தங்கள் தரை, வான் மற்றும் கடற்படைகளை பலப்படுத்த ஆரம்பித்தன.
பிரிட்டனின் ஒரே கொள்கை ஐரோப்பாவில் பிரிட்டனைத் தவிர வேறு எந்த நாடும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பது மட்டுமே. நானே ராஜா நானே மந்திரியாக இருப்பதையே அது விரும்பியது. எனவே அதற்கு போட்டியாக வரும் நாடுகளை தலையில் குட்டி குனியவைக்க எண்ணிய பிரிட்டன் அங்கு தான் தனது குள்ளநரி ஆட்டத்தை ஆரம்பித்தது. இந்த நாடுகளுக்கு இடையே குழப்பத்தீயை மூட்டி விட்டால் அதில் தான் குளிர் காயலாம் எனக் கணக்குப் போட்டு ஒரு மாஸ்டர் ப்ளானை தீட்டியது.
அதிக காலனிகளை கைப்பற்ற ஆர்வம் காட்டிய ஜெர்மனிதான் ரஷ்யா மற்றும் பிரான்சை விடவும் தனக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கப்போகிறது என்பது பிரிட்டனுக்கு தெளிவாகத் தெரிந்தது. ஜெர்மனியின் வலுவான பொருளாதாரம், அதிக மக்கள் தொகை, சக்திவாய்ந்த ஆயுதப்படைகள் எல்லாம் ஒன்றிணைந்தால் அது ஐரோப்பாவில் சூப்பர் பவராக ஆதிக்கம் செலுத்தும் வல்லமையைப் பெற்று விடும் என பிரிட்டன் புரிந்து கொண்டது. எனவே அதுவரை சண்டை போட்டுக் கொண்டிருந்த ரஷ்யா மற்றும் பிரான்சோடு கை குலுக்கி ஜெர்மனிக்கு எதிராக Triple Ententeவில் இணைந்தது.
அதன் பின்னர் ஆஸ்திரியா-ஹங்கேரிக்கும் செர்பியாவுக்கும் இடையே சண்டை வந்ததும், அதைத் தொடர்ந்து Schlieffen Plan-ன் படி ஜெர்மனி, பெல்ஜியம் ஊடக பிரான்சை தாக்கியதும், அடுத்து பிரிட்டன் களத்தில் குதித்ததும் நாம் ஏற்கனவே பார்த்த ஒரு தனி வரலாறு. பால்கனில் சிறிய, உள்ளூர் பிரச்னையாகத் தொடங்கிய ஒரு கலகம் கடைசியில் உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய போராக மாறியது.
பிரிட்டன் போலவே முக்கியமாக இன்னும் இரண்டு நேச நாடுகள் போர்க்களத்தில் ஜெர்மனிக்கு கடும் சவாலாக இருந்தன. எப்படி ஜெர்மனிக்கு Schlieffen Plan-னோ அதே போல பிரிட்டிஷ் ஆயுதப்படைகள் போருக்கான இரண்டு தனித்துவமான திட்டங்களைத் தீட்டின. இவற்றையெல்லாம் அடுத்த வாரம் பார்க்கலாம்.
யூரோ டூர் போவோம்!