“A common danger unites even the bitterest enemies...”Aristotle
முதல் உலகப்போரில் கடும் எதிரிகளாக இருந்த பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளுடன் பிரிட்டன் கைகோத்ததற்கு ஒரே காரணம் ஜெர்மனி. இறுதிக் கட்டத்தில் கிட்டத்தட்ட எல்லா நாடுகளும் பலமிழந்து, படையிழந்து, வறுமை முற்றி, வளங்களும், உயிர்களும் வற்றிய நிலையில் பின்வாங்கின. கடைசிவரை தாக்குப்பிடித்த முக்கிய மூன்று சக்திகளுக்கும் கூட அடி பலமாகவே விழுந்தது.
போரின்போது எப்படி ஜெர்மனி ஒரு பக்காவான திட்டத்தை தீட்டியதோ அதேபோல பிரிட்டனும் இரண்டு முக்கிய திட்டங்களை தீட்டியது. முதலாவது பிரெஞ்சுக்காரர்களுடன் சேர்ந்து போராடுவதற்கு பிரிட்டிஷ் ராணுவம் தன் படைகளை ஏனைய நாடுகளுக்கு அனுப்ப முடிவு செய்தது. BEF என சுருக்கமாக அழைக்கப்பட்ட British Expeditionary Force தயாராக இருந்தாலும் அது பிரிட்டனின் காலனிப் போருக்கு மட்டுமே போதுமான படைபலத்தை கொண்டிருந்தது. ஐரோப்பாவில் அதை விட பெரிய போர் மூண்டால் அதை பிரிட்டன் கடற்படை பார்த்துக்கொள்ளும் என்பது பிரிட்டனின் ராணுவ திட்டமாக இருந்தது.

இரண்டாவது ஜெர்மன் கப்பல்கள் நேரடியாக மோதாமல் நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் தாக்கத் தொடங்கினால் அதற்கு பதிலடியாக ஜெர்மனின் கடல்வழிப் பாதையை முற்றுகையிட்டு அதன் மூலம் ஜெர்மன் பொருளாதாரத்தை முடக்க திட்டம் தீட்டி வைத்திருந்தது பிரிட்டன். ஆயினும் அதுவரை உலகில் பலம் வாய்ந்த கடற்படையாக இருந்த பிரிட்டனுக்கே மரணபயத்தைக் காட்டின ஜெர்மன் நீர்மூழ்கி கப்பல்கள். ஜெர்மன் தயாரித்த U-போட்கள் பல பிரிட்டிஷ் போர்க் கப்பல்களை நிர்மூலாமாக்கின.
முதல் உலகப்போரில் பிரிட்டன் பல விலங்குகளையும் கூட பயன்படுத்தியது. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் குதிரைகள் போரில் ஈடுபட்டன. குதிரைப்படை தவிர்த்து பிரமாண்ட துப்பாக்கிகள், ஆம்புலன்ஸ் மற்றும் சப்ளை வேகன்களை இழுக்கவும் இவை பயன்படுத்தப்பட்டன. அதேபோல பல பிரிட்டிஷ் குடும்பங்கள் தங்கள் வளர்ப்பு நாய்களை ராணுவத்துக்குக் கொடுத்தன. போர்க்களத்தில் முன்னணியில் சண்டையிட்ட வீரர்களுக்கு நாய்களின் காலர்களில் செய்திகளை எடுத்துச் செல்ல மட்டுமல்ல பதுங்குக்குழிகளில் பெருகிய எலிகளையும் பூச்சிகளையும் பிடிக்க கூட இவை பெருமளவில் இராணுவத்துக்கு உதவின.
அரச காலத்தில் புறாக்கள் தூதக அனுப்பட்ட புராணக் கதைகளை படித்திருப்போம். ஆனால் அதே யுத்தியை பிரிட்டிஷ் ராணுவம் முதல் உலகப் போரிலும் கையாண்டது. நீண்ட தூரத்திற்கு செய்திகளை எடுத்துச் செல்ல புறாக்கள் பழக்கப்படுத்தப்பட்டன. இந்தப் புறாக்களை கொல்ல ஜெர்மன் ராணுவம் பருந்துகளுக்கு பயிற்சி அளித்தது தனிக் கதை. குதிரை, நாய், புறா, பருந்து மட்டுமல்ல கோல்ட்ஃபிஷ் கூட முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டன. ஜெர்மனியின் விஷவாயு தாக்குதலுக்குப் பிறகு, வீரர்கள் பயன்படுத்திய முகமூடிகளில் இன்னும் விஷம் உள்ளதா இல்லையா என்பதனை டெஸ்ட் செய்ய அவற்றை கழுவிய நீரில் கோல்ட்ஃபிஷ்களை போட்டார்கள். மீன்கள் இறந்து போனால் முகக்கவசங்களில் இன்னும் விஷம் கலந்திருக்கிறது என்று கண்டுபிடித்தனர்.
இது மாத்திரமல்ல, பள்ளி சாரணர்களை கூட பிரிட்டிஷ் அரசு யுத்தத்தில் பங்கு கொள்ளச் செய்தது. பள்ளி சாரணர்கள் போரில் காயமடைந்த வீரர்களுக்கான அடிப்படை மருத்துவ உபகரணங்கள், கட்டு, துடைப்பம் மற்றும் ஸ்லிங் போன்றவற்றை தயாரிக்கவும், ராணுவத்தின் உணவுக்கு தேவையான காய்கறிகளை வளர்க்கவும் வேலை செய்தனர். சிறுவர் சாரணர்கள் காயமடைந்த படையினருக்கு செய்திகளை பரிமாறவும், உணவுப் பொருள்களை கொண்டு சென்று வழங்கவும் உதவி செய்தார்கள்.

சில சிறுவர்கள் தங்கள் வயதை மறைத்து பொய் சொல்லி யுத்ததுக்குச் சென்றனர். இவ்வாறாக இணைந்தவர்களில் வயதில் மிக இளையவராக கருதப்படும் சிட்னி லூயிஸ் என்ற சிறுவன் ராணுவத்தில் சேர்ந்தபோது அவனுக்கு வெறும் 12 வயது மட்டுமே என்பது அதிர்ச்சியான தகவல். முதல் உலகப்போரின் மிகக் கொடூரமான போர்களில் ஒன்றாகக் கருதப்படும் சோம் போரில் ஒரு வருடம் சண்டையிட்ட பிறகு அவன் 13 வயதில் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டான்.
ஆகஸ்ட் 1914-ல் கிரேட் பிரிட்டன் ஜெர்மனி மீது போரை அறிவித்த ஒரு வருடத்துக்குள், தன்னார்வ ஆட்சேர்ப்புகளை நம்பி சண்டையைத் தொடர முடியாது என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டது. அப்போது மூத்த ஆர்மி அதிகாரியான லார்ட் கிச்சனரின் "உங்கள் நாடு உங்களுக்கு தேவை" என்ற புகழ்பெற்ற பிரசாரம் பெருமளவில் இங்கிலாந்தில் விளம்பரப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜனவரி 1915-க்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆண்கள் ராணுவத்தில் தம்மைப் பதிவு செய்தனர். ஆனாலும் அப்போதிருந்த உயிரிழப்புகளுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை என்ற நிலையில் கட்டாய ராணுவ சேவை அறிமுகப்படுத்தப்படுத்துவதை தவிர வேறு வழி இல்லாமல் போனது. ஜனவரி 1916-ல் இராணுவ சேவை சட்டம் நிறைவேற்றப்பட்டு, 18 முதல் 41 வயதுக்குட்பட்ட அனைத்து திருமணமாகாத ஆண்களுக்கும் இராணுவ சேவை கட்டாயப்படுத்தப்பட்டது.
ஆனால் உடல், மருத்துவ ரீதியில் தகுதியற்றவர்கள், மதகுருமார்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களின் சில வகுப்புகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. மே 1916-ல் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது சட்டத்தில் மூலம் திருமணமான ஆண்களுக்கும் ராணுவ சேவை கட்டாயப்படுத்தப்பட்டது.
நான்காண்டு போரின் முடிவில் பிரிட்டன் 8 லட்சம் ராணுவ வீரர்கள், 6 லட்சம் பொதுமக்கள் எனக் கிட்டத்தட்ட 15 லட்சம் உயிரிழப்புகளைச் சந்தித்தது.
சிறுவர்களின் கார்ட்டூன் உலக ஹீரோ Winnie The Pooh-வின் ஆரம்ப வேர்கள் முதலாம் உலகப் போருடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பது இங்கு பெட்டிச் செய்தி. முதல் உலகப்போர் சமயத்தில் லண்டன் உயிரியல் பூங்காவில் வாழ்ந்த, கனேடிய ராணுவத்துக்கு சொந்தமான வின்னி என்ற இளம் கரடி குட்டி மிகவும் பிரபலமாக இருந்தது. அப்போது Winnie The Pooh எனும் கதையின் கதாசிரியர் A. A. மில்னேயின் மகன், கிறிஸ்டோபர் ராபின் அதைப் பார்த்து தனது வீட்டில் இருந்த கரடி பொம்மைக்கு வைத்த Winnie The Pooh என்ற பெயர், அவனது தந்தை பிற்காலத்தில் எழுதி, இன்று வரை குழந்தைகள் மத்தியில் உயிருடன் உலவும் Winnie The Pooh bear கதைக்கான கருவானது என்பது ரணகளமான முதல் உலகப்போரில் நடந்த கவித்துவமான நிகழ்வுகளில் ஒன்று.

எதிரி நம்பர் டூ - முதலாம் உலகப்போரில் பிரான்ஸ்
14 லட்சம் ராணுவம் மற்றும் 6 லட்சம் பொது மக்களுடன் கிட்டத்தட்ட 20 லட்சம் உயிர்களை இழந்தும் முதல் உலகப்போரின் இறுதி வரை தாக்குப்பிடித்த மற்றுமொரு ஐரோப்பாவின் மாபெரும் சக்தி பிரான்ஸ். மேற்கு முன்னணியின் அகழிகளில் நடந்த சண்டையின் பெரும்பகுதி வடக்கு பிரான்சில் நடந்ததால் முதல் உலகப் போர் பிரெஞ்சு ராணுவத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிரெஞ்சு சமூகத்தையே பாதித்து பிரான்சின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வானது. முதலாம் உலகப் போரின் முக்கியமான பல போர்களில் பிரெஞ்சுப் படைகள் பங்கேற்றன. Battle of the Frontiers, First Battle of the Marne, Race to the Sea, First Battle of Ypres, Battle of Verdun, Battle of the Somme போன்றன அவற்றுள் சில.
முதலாம் உலகப் போரில் பிரான்ஸ் நுழைவதற்கு ஒரு முக்கிய காரணியாக ஜெர்மனியுடனான அதன் கசப்பான வரலாறே அடிப்படைக் காரணமாக இருந்தது. இரு நாடுகளும் ஏற்கெனவே பல போர்களில் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொண்டனர். முதல் உலகப்போர் தொடங்குவதற்கு முன்னரே ஜெர்மனியுடனான ஆயுதப் போட்டியில் இறங்கிய பிரான்ஸ் ஏற்கனவே தனது ராணுவத்தை மிகவும் பலப்படுத்தி வைத்திருந்தது. 1913-ம் ஆண்டில் ஐரோப்பாவில் மிகப்பெரும் இளைஞர் தொகையை கொண்டிருந்த ஒரே சக்தியான பிரான்ஸில் கட்டாய ராணுவ சேவை நடைமுறையில் இருந்ததால் முதல் உலகப்போர் ஆரம்பித்த போது 2.9 மில்லியன் ஆண்கள் பிரெஞ்சு ராணுவத்தில் அணி திரட்டப்பட்டனர். 24 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் குறைந்தது மூன்று வருட கட்டாய சேவையை மேற்கொள்ள வேண்டும் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஜெர்மனி, பிரிட்டனை போல பிரான்சும் தனக்கென ஒரு திட்டம் வைத்திருந்தது. Plan XVII என அழைக்கப்படும் அந்த திட்டமானது Ferdinand Foch அவர்களால் உருவாக்கப்பட்டு பிரெஞ்சு ராணுவ தலைமைக் கமாண்டர் Joseph Joffre அவர்களால் முதல் உலகப்போரில் முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் அடிப்படை ஆரம்ப நோக்கம் ஜெர்மனியிடம் இழந்த லோரெய்ன் பிரதேசத்தை மீண்டும் கைப்பற்றுவதேயாகும். எனவே இந்தப் பிரெஞ்சு போர் திட்டம் (Plan XVII) உண்மையிலேயே முதல் உலகப் போர் தொடங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டது.

எப்போது வேண்டுமானாலும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி இடையே போர் மூளலாம் என்றும், அப்போது பிரெஞ்சுப் படைகளை உடனடியாக ஜெர்மனிக்குள் படையெடுக்கும் அதே வேளையில் பிரெஞ்சு எல்லைகளை பாதுகாக்கவும் எவ்வாறு செயற்படவேண்டும் என்பதையும் இந்த திட்டம் மிக விரிவாக விளக்கியது.
ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜெர்மன், பெல்ஜியமை தாக்காது என பிரான்ஸ் உறுதியாக நம்பியது. ஆனால் ஜெர்மனியின் Schlieffen Plan பெல்ஜியம் ஊடக பிரான்சை சுற்றி வளைத்தது எதிர்பாராத ட்விஸ்ட். ஜெர்மனியின் ராணுவத்தை பிரான்ஸ் குறைத்து எடை போட்டது தான் Plan XVII-ல் விழுந்த பெரும் ஓட்டை. இதுவே அதன் தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது.
நேச நாடுகளின் மூன்றாவது அதிரடி ஆட்டக்காரன் ரஷ்யாவின் ஆட்டத்தையும், இவர்களுக்கு எல்லாம் அசராமல் முகம் கொடுத்து ஒற்றை ஆளாக தாக்குப்பிடித்த ஜெர்மனி வீழ்ந்த உலகப்போரின் முடிவுப் புள்ளியையும் அடுத்த வாரம் பார்க்கலாம்!