Published:Updated:

யூரோ டூர் - 7 | முதலாம் உலகப்போரில் ஜெர்மனியை வீழ்த்திய வியூகங்களும், துரோகங்களும்!

ஜெர்மனி ஆட்சியாளர்கள்
News
ஜெர்மனி ஆட்சியாளர்கள்

யூதர்களின் போராட்டத்துக்கு உதவி செய்வதாகவும், பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கென ஒரு தனி நாட்டை உருவாக்க துணை நிற்பதாகவும் பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் ஆர்தர் பால்ஃபோர் எழுதிய 'The Balfour Declaration’ கடிதம் ஜெர்மனியின் தலையெழுத்தை மட்டுமல்ல, யூதர்களின் தலையெழுத்தையும் மாற்றியது.

Published:Updated:

யூரோ டூர் - 7 | முதலாம் உலகப்போரில் ஜெர்மனியை வீழ்த்திய வியூகங்களும், துரோகங்களும்!

யூதர்களின் போராட்டத்துக்கு உதவி செய்வதாகவும், பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கென ஒரு தனி நாட்டை உருவாக்க துணை நிற்பதாகவும் பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் ஆர்தர் பால்ஃபோர் எழுதிய 'The Balfour Declaration’ கடிதம் ஜெர்மனியின் தலையெழுத்தை மட்டுமல்ல, யூதர்களின் தலையெழுத்தையும் மாற்றியது.

ஜெர்மனி ஆட்சியாளர்கள்
News
ஜெர்மனி ஆட்சியாளர்கள்

குருஷேத்திரப் போரில் சக்கரவியூகத்துக்குள் துணிச்சலாக நுழைக்கிறான் மாவீரன் அபிமன்யு. ஏழு அடுக்குகளை கொண்டு அமைக்கப்பட்டிருந்த அந்த வியூகத்துக்குள் செல்லும் யாராக இருந்தாலுமே ஒரு கட்டத்துக்கு மேல் எதிரியின் தாக்குதலை சமாளிக்க முடியாது. சோர்வடைந்து இறந்து போகும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது அந்த வியூகம். ஆனாலும் எதற்கும் அசராமல் அசாத்திய தைரியத்துடன் முதல் வில்லிலேயே சக்கர வியூகத்தின் வாயிலை உடைத்து தூளாக்கி மிகத் துணிச்சலாக உள்ளே நுழைந்தான் அபிமன்யு. ஒரு கட்டத்துக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்ட அபிமன்யுவை வியூகத்தின் நடுவில் கர்ணன், துரோணர் உட்பட மாபெரும் வீரர்கள் பலர் ஒன்றாக சுற்றி வளைத்தும் கூட அவன் பயப்படவில்லை. பின்வாங்கவில்லை. கடைசி வரை தனி ஆளாக போராடினான்.

இங்கு ஜெர்மனி தான் அபிமன்யு. ஜெர்மனியைப் பிடிக்க அமைக்கப்பட்ட சக்கர வியூகம் நேச நாடுகள் போட்ட மாஸ்டர் ப்ளான். நான்கு வருடங்கள் நடந்த இந்தப் போரில் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்த ஜெர்மனியை இறுதியில் சறுக்க வைத்த தருணங்கள் தான் ஜெர்மனிக்கு எதிராக தீட்டப்பட்ட சாணக்கிய தந்திரங்கள்.

ராணுவ வீரர்கள்
ராணுவ வீரர்கள்

ஜெர்மனிக்கு எதிராக போடப்பட்ட ஸ்கெட்ச்!

முழு ஐரோப்பாவையும் சுற்றி வளைத்துப் பிடித்து தவிர்க்க முடியாத சூப்பர் பவராக வளர்ந்த ஜெர்மனியை கவிழ்க்க பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜப்பானோடு ஏனைய பல நாடுகளும் கூட்டணி சேர்ந்தன. எதிர்ப்படும் எல்லா பாலையும் சிக்சராக மாற்றி நாலு பக்கமும் விளாசித் தள்ளிய ஜெர்மனியை ஆட்டத்தை விட்டு அவுட்டாக்க போடப்பட்ட ஸ்கெட்ச்சுகள் தான் முதல் உலகப் போரின் கடைசிக் கட்ட ட்விஸ்ட். அரசியல் சதுரங்கத்தில் அசைக்க முடியாத ராஜாவாக முன்னேறிக்கொண்டிருந்த ஜெர்மனியை துல்லியமான திட்டமிடல் மூலம் சுற்றி வளைத்து செக் வைத்தன நேச நாடுகள்.

முதலாவது செக்!

அதுவரை மத்திய நாடுகளின் கூட்டணியில் ஜெர்மனோடு கை கோர்த்திருந்த இத்தாலியின் துரோகம் ஜெர்மனிக்கு எதிரான வைக்கப்பட்ட முதல் செக். எட்டப்பனைக் காட்டிக் கொடுத்த கட்டப்பன் கதை நாம் ஊரில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் உண்டு. கூட இருந்து குழி பறித்த கதையாக Tripple Alliance-ன் ஒரு முக்கிய கூட்டணியாக இருந்த இத்தாலிக்கும் ஆஸ்திரியா-ஹங்கேரிக்கும் ஏற்கனவே வரலாற்று ரீதியான நிலத்தகராறு இருந்தது. எதிர்பார்த்தது போலவே இந்த மைய நாடுகளின் கூட்டணியோடு இருந்து கொண்டே பிரான்சோடும் ரஷ்யாவோடும் ரகசிய பேரம் பேசிய இத்தாலி கடைசி நேரத்தில் ஜெர்மனியை கைவிட்டுக் காட்டிக் கொடுத்தது. Triple Alliance-ல் இருந்து Triple Entente-க்கு நம் ஊர் அரசியல்வாதி போல கட்சி மாறி திடீர் பல்டி அடித்த இத்தாலி, போன வேகத்தில் ஆஸ்திரியா-ஹங்கேரி மீது போர் தொடுத்தது. இதில் இத்தாலி தோற்றாலும் முதலாம் உலகப் போரின் போக்கை மாற்றி அமைத்த முதல் சம்பவம் இது.

இரண்டாவது செக்!

பிரிட்டன் கடற்படையை முடக்கிய ஜெர்மனிக்கு பதிலடியாக பிரிட்டன் அதன் கடல் வழிகளை மொத்தமாக மூடி ஜெர்மனியின் பொருளாதாரத்தை சீல் வைத்தது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட எதுவும் ஜெர்மனிக்கு கடல் வழியாக செல்வதை தடை செய்த பிரிட்டனின் நோக்கம் ஜெர்மனியின் பொருளாதாரத்தை முழங்காலில் மண்டியிட வைப்பதே. கடும் வறுமையும், உணவுப் பற்றாக்குறையும், பசி பட்டினியும் ஜெர்மனியில் தலைவிரித்தாடத் தொடங்கியது. ஜெர்மனிக்கு இருந்த ஒரே வழி வான் மார்க்கம் மட்டுமே. ஆனால் அதுவும் கூட நேச நாடுகளின் சுமார் 3000-க்கும் அதிகமான போர் விமானங்கள் மூலம் சுற்றி வளைக்கப்பட்டது.

மூன்றாவது செக்!

ஜப்பான், நேச நாடுகளுடன் இணைந்து ஜெர்மன் மீது போர் தொடுத்தது. ஜெர்மனின் பல காலனிகளை ஜப்பான் கைப்பற்றியதோடு மத்திய கிழக்கில் ஓட்டமான் பேரரசு வசம் இருந்த பல எண்ணெய் வள நாடுகளை பிரிட்டிஷ் படைகள் கைப்பற்றியது. ரஷ்யா மெல்ல மெல்ல ஓட்டமான் பேரரசை வீழ்த்த ஆரம்பித்ததை தொடர்ந்து, ரோமானியாவும் இந்தக் கூட்டணியில் இணைந்து ஜெர்மனியை தாக்கத் தொடங்கியது.

நான்காவது செக்!

இத்தாலியோடு கடைசிச் சொட்டு ரத்தமும் தீர்ந்து போகும் அளவுக்கு போரிட்டு சோர்ந்து போனது ஆஸ்திரியா- ஹங்கேரி. அதைத்தொடர்ந்து 12 மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகளுடன், பசி பட்டினி, பொருளாதார சரிவு போன்ற காரணிகளால் அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரியா-ஹங்கேரியை சரணடைய வைத்தது, ஜெர்மனியின் கூட்டணி பலத்தை உடைக்க வைக்கப்பட்ட முழுமையான செக்.

The Balfour Declaration
The Balfour Declaration

ஐந்தாவது செக்!

1917-ல் நேச நாடுகளின் கூட்டணி எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஜெர்மனியின் U போட் தாக்குதலால் ஏற்கனவே கடுப்பான பிரேசில், லைபீரியா, சீனா போன்ற நாடுகள் புதிதாக வந்து நேச நாடுகளுடன் இணைந்து ஜெர்மனிக்கு எதிராக போரை அறிவித்தன. Theory of Majority rule-ன் படி கூட்டணி பலம் வாய்ந்த நேச நாடுகளின் நிழலில் ஒதுங்கிக் கொண்டால் தமக்கு பாதுகாப்பு என இவை எண்ணியதும் இதற்கு ஒரு காரணம்.

ஆறாவது செக்!

நேச நாடுகளுக்கு அதன் புதிய கூட்டணி நாடுகள் தம் விசுவாசத்தைக் காட்டத் தொடங்கின! சீனா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் கூட்டணிக்கு தேவையான ஆயுதங்களை தயாரிக்க தேவையான தொழிலாளர்களை பெருமளவில் வழங்கியது ஜெர்மனிக்கு எதிராக வைக்கப்பட்ட மறைமுக செக்.

ஏழாவது செக்!

1917-ல் மத்திய கிழக்கை தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த ஓட்டமான் பேரரசை பிரிட்டன் தாக்கத் தொடங்கியது. அப்போது ஜெர்மனிக்கு எஞ்சியிருந்த ஒரே ஆதரவு அது ஒன்று மட்டுமே. எனவே சரியாக அதைக் குறிவைத்து ரஷ்யாவும் பிரிட்டனும் அடிக்கத் தொடங்கியது. முதலில் பாக்தாத், அடுத்து எகிப்து என முன்னேறிய பிரிட்டன் படைகளை காசாவில் வைத்து திருப்பி அடித்து துரத்தியது ஓட்டமான் பேரரசு. ஆயினும் மறுபடி அராபிய ராணுவ துணையுடன் வந்த பிரிட்டிஷ் ராணுவம் ஓட்டமான் பேரரசின் முக்கிய துறைமுகமாக விளங்கிய Port Of Aqaba-வை கைப்பற்றியது. அக்டோபர் 31-ல் பிரிட்டிஷ் படைகள் காசாவை வென்று பாலஸ்தீனத்துக்குள் முன்னேறியது. ஆறு வாரங்களுக்கு பின் ஜெனரல் Allenby தலைமையில் பிரிட்டிஷ் படைகள் ஜெருசலேம் நகருக்குள் அணிவகுத்துச் சென்ற போது, 400 வருட ஒட்டமான் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது.

எட்டாவது செக்!

அதுவரை தமக்கென ஒரு தனி நாடு இல்லாமல் போராடி வந்த யூதர்களை தங்கள் கூட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டது பிரிட்டன். யூதர்களின் Zionism என்ற அமைப்பின் போராட்டத்துக்கு உதவி செய்வதாகவும், பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கென ஒரு தனி நாட்டை உருவாக்க தாம் துணை நிற்பதாகவும் பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் ஆர்தர் பால்ஃபோர் எழுதிய ‘The Balfour Declaration’ என்ற கடிதம் ஜெர்மனியின் தலையெழுத்தை மட்டுமல்ல பிற்காலத்தில் யூதர்களின் தலையெழுத்தையும் மாற்றி அமைத்தது. இந்தக் கடிதத்தின் நோக்கம் ஜெர்மனிக்கும் அதன் கூட்டணியான ஓட்டமான் பேரரசுக்கும் எதிராக யூதர்களை தூண்டிவிட்டு, அவர்களை பயன்படுத்திக் கொள்வதே என்றாலும் இந்த அறிவிப்பு ஏற்கனவே அரபு தலைவர்களுக்கு பிரிட்டன் வழங்கிய உறுதிமொழிகளுக்கு முற்றிலும் முரணாக இருந்தது.

ராணுவ வீரர்கள்
ராணுவ வீரர்கள்

க்ளைமேக்ஸ்!

இந்த நேரத்தில் தான் ரஷ்யாவில் இரண்டாவது புரட்சி வெடித்தது. அது லெனினின் Bolshevik கட்சியை ஆட்சியில் ஏற்றியது. ஒரு புறம் முதலாம் உலகப் போரில் ரஷ்யாவின் பங்களிப்பை முற்றிலும் நிறுத்துவேன் என உறுதி வழங்கி விளாடிமிர் லெனின் ஆட்சிக்கு வந்த அதே வேளை, மறுபுறம் Tiger என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்ட பிரெஞ்சு பிரதம மந்திரி Georges Clemenceau “வெல்லும் வரை போரிடுவோம்” என்ற உறுதி மொழியுடன் பிரான்சில் பதவி ஏற்றார். ஆனால் 1917-ன் இறுதியில் இந்தப் போரில் ஜெர்மனியை வெல்வது சத்தியம் இல்லை என்பது Triple Entente-க்கு புரிய ஆரம்பித்தது.

முதலில் ரஷ்யா போரிலிருந்து நழுவிக் கொண்டது. மிகப்பெரிய இழப்பிலிருந்து பிரான்ஸ் மீள முடியாது தடுமாறிக் கொண்டிருந்தது. இத்தாலி வீழ்ந்தது. அமெரிக்காவின் ஆதரவு கண்ணுக்கெட்டிய தூரம் வரை காண முடியாமல் இருந்தது. கடைசியாக பிரிட்டிஷ் ராணுவமும் அவர்களது காலனி நாடுகளான கனடா, ஆஸ்திரேலியா போன்றவர்களும் மட்டுமே இறுதிக்கட்டப் போரில் களத்தில் எஞ்சி நின்றார்கள். பிரிட்டனுக்கு மட்டும் அவர்களின் காலனி நாடுகள் அப்போது இருந்திருக்காவிடில் அது போரின் முடிவையே வேறு திசையில் மாற்றி இருந்திருக்கும். அதிக காலனிகள் வைத்திருந்ததன் பலனை பிரிட்டன் அப்போது அனுபவித்தது.

“Only the dead have seen the end of war” என்ற அமெரிக்காவை சேர்ந்த தத்துவவாதி ஜார்ஜ் அகஸ்டன் சந்தாயனாவின் மிகப் பிரமலாமான கூற்று மீண்டும் ஒரு தடவை மெய்ப்பிக்கப்பட்டது. முதல் உலகப் போரின் முடிவு அதில் இறந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகிப் போனது. களைப்படைந்த நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக பின்வாங்கத் தொடங்கின.

டிசம்பர் 6, 1917-ல் ரஷ்யாவிடம் இருந்து தம்மை விடுவித்துக்கொண்டது ஃபின்லேண்ட். ரஷ்யாவின் வீழ்ச்சியால் தனிமைப்படுத்தப்பட்டுப் போன ருமேனியா, வேறு வழி இல்லாமல் யாரை எதிர்த்து போர் புரிந்ததோ அதே ஜெர்மனியோடு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆறு நாட்கள் கழித்து ரஷ்யாவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு வெளியேறியது. அதுவரை கூட்டணிகளின் முக்கிய சக்தியாக நம்பிக்கை ஊட்டிய ரஷ்யா ஆட்டத்தை விட்டு தூக்கியெறியப்பட்டது. Eastern front என்று அழைக்கப்பட்ட கிழக்கு முன்னணியின் கூட்டணி, ஜெர்மனி எனும் மாபெரும் சூரியன் முன் பனித்துளி போல கரைந்து காணாமல் போனது.

கூட இருந்த இத்தாலி துரோகம் இழைத்தாலும், கை கொடுத்த ஓட்டமான் பேரரசு சரிந்து வீழ்ந்தாலும், துணை நின்ற ஆஸ்திரியா-ஹங்கேரி பின்வாங்கினாலும் கூட ஜெர்மனி அசரவில்லை. சக்கர வியூகத்தின் நடுவே சிங்கம் போல தனித்து நின்று கர்ஜித்த அபிமன்யு போல அப்போதும் விடாது போரிட்டது ஜெர்மனி.

உலகப்போர்
உலகப்போர்

சுற்றி வளைத்து அடித்த ஒவ்வொரு நாட்டையும் ஒன்றின் பின் ஒன்றாக ஆட்டத்தை விட்டு அப்புறப்படுத்திக் கொண்டே வந்தது ஜெர்மன். நான்கு வருட போரில் ஒற்றை ஆளாக தனித்து ஆடிய ஜெர்மனியை அசைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அனைத்து நாடுகளும் சோர்வடைந்தன. ஈடுசெய்ய முடியா உயிர், உடமை, பொருளாதார இழப்புகளுடன் ஜெர்மனி முன் சரணடைந்து, யுத்த களத்தை விட்டு வெளியேறின. அவர்கள் வைத்த செக்கை எல்லாம் இறுதிக்கட்டத்தில் தனி ஆளாக முகம் கொண்டு, ஐரோப்பிய அரசியல் செக் போர்ட்டில் கிங்காக முன்னேறியது ஜெர்மனி.

அப்போது தான் அந்த ட்விஸ்ட் நடந்தது. ஜெர்மனியே எதிர்பாராத ஒரு திருப்பம். உதாரணத்துக்கு ஒரு கிரிக்கெட் ஃபைனல் மேட்ச் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இறுதி ஆட்டத்தில் கடைசி இரண்டு பந்துகள் இருக்கும். ஐந்து ரன்கள் எடுக்க வேண்டும். முதலாவது பந்தில் பேட்ஸ்மேன் அவுட். கடைசி பந்தை எதிர்கொள்ள கடைசி பேட்ஸ்மேன். இறுதிப் பந்தில் ஒரு சிக்சர். மேட்ச் ஓவர். ஆட்டத்தின் போக்கை மாற்றி அமைத்த அவன் கதாநாயகன் ஆகிறான். அதே போல அதுவரை மொத்த உலகத்தையும் ஆட்டம் காட்டி அலறவிட்ட ஜெர்மனியை கடைசி பந்தில் வீழ்த்தி, The Great War-ன் போக்கையே மாற்றி அமைத்து, ஆட்டத்தை நிறைவு செய்தது அந்த நாடு.

ஜெர்மனியை வீழ்த்திய இறுதி அம்பை அடுத்த வாரம் பார்க்கலாம்!

யூரோ டூர் போவோம்!