உலக நாடுகளிடையே மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு எப்படி வருகிறது? சில நாடுகளைப் பணக்காரர்களாகவும், சில நாடுகளை ஏழைகளாகவும் ஆக்குவது எது? பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ஏன் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளன? ஏன் பெரும்பாலான ஆப்பிரிக்கர்கள் வறுமையிலிருந்து வெளியேற முடியவில்லை? எல்லாமே புவியியல் மூலம் தீர்மானிக்கப்படுகிறதா? அப்படியானால், நல்ல தட்பவெப்பநிலை மற்றும் ஏராளமான இயற்கை வளங்களைக் கொண்ட சில நாடுகள்கூட ஏன் இன்னும் ஏழ்மையில் உள்ளன? சிறந்த எதிர்காலத்தை நோக்கி முன்னேறும் நாடுகளை எது தடுக்கிறது?
இந்தக் கேள்விக்கான சுருக்கமான விளக்கம், அந்த நாடு அமைந்துள்ள புவியியல் நிலை, அதன் ஜனத்தொகையில் உழைக்கும் மக்கள் சதவிகிதம், அதன் உற்பத்திக்கும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கும் இடையேயான வேறுபாடு, வளப்பயன்பாடும் அதில் கலந்துள்ள ஊழலும், அரசியல் உறுதித் தன்மை போன்றவை முக்கிய காரணிகள். இதன் அடிப்படையில் பார்த்தால் எது உலகின் பணக்கார நாடாக முதலிடம் பிடிக்கும்?

உலக வங்கியின் சமீபத்திய பகுப்பாய்வின்படி, உலகின் பணக்கார நாடாக லக்சம்பர்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐரோப்பா என்றாலே பிரிட்டனும் ஜெர்மனியும் பிரான்ஸும்தான் என எல்லாரும் நினைத்துக்கொண்டு இருக்கும் போது சத்தமே இல்லாமல், ஐரோப்பாவின் மிகச்சிறிய நாடான லக்சம்பர்க் எப்படி இந்த இடத்திற்கு வந்தது?
ஐரோப்பாவின் மேலும் சில பணக்கார முகங்கள் பற்றிய தகவல்கள் இவ்வாரமும் தொடர்கின்றன...
லக்சம்பர்க்
அதிக வருமானம் மற்றும் குறைந்த வேலையின்மை விகிதத்திற்குப் பெயர் பெற்ற லக்சம்பர்க், உலகின் முதலாவது பணக்கார நாடாக மகுடம் சூடிக் கொண்டிருக்கிறது. உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான லக்சம்பர்க்கின் குடிமக்கள் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கின்றனர். அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் மிகக் குறைந்த மக்கள்தொகையைக் கொண்டுள்ள லக்சம்பர்க், உலக வங்கியின் அறிக்கையின் படி 2020-ல் 73.26 billion USD GDP-யோடு, ஆண்டுக்கு 4.6% என்ற விகிதத்தில் வளர்ந்து வரும் வளமான நாடாகும். டிரேடிங் எகனாமிக்ஸ்ஸின் உலகளாவிய மேக்ரோ மாதிரிகள் மற்றும் ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகளின்படி, லக்சம்பர்க்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022-ம் ஆண்டின் இறுதியில் 71.50 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

18-ம் நூற்றாண்டின் இறுதிவரை மிகவும் வறுமை நிலையிலிருந்த லக்சம்பர்க்கின் மக்கள் பிழைப்புத் தேடி நாட்டைவிட்டு பெருமளவில் வெளியேறினார். குறிப்பாக அமெரிக்கா நோக்கி பெருமளவு மக்கள் குடிபெயர்ந்தனர். ஆனால் 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கே கண்டுபிடிக்கப்பட்ட இரும்புத் தாது இருப்புக்கள், லக்சம்பர்க்கின் தலையெழுத்தை ஒரே இரவில் மாற்றின. பல சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகள் முளைத்தன, நாட்டின் லாபகரமான எஃகு தொழில் பிறந்தது. 19-ம் நூற்றாண்டின் இறுதியில், லக்சம்பர்க் ஐரோப்பாவின் முன்னணி எஃகு உற்பத்தியாளர்களில் ஒன்றாக மாறியது. இரு உலகப் போர்கள் நடந்த காலகட்டங்களைத் தவிர, 20-ம் நூற்றாண்டு முழுவதும் எஃகுத் தொழில் செழித்து வளர்ந்தது. 20-ம் நூற்றாண்டின் இறுதியில் சுவிட்சர்லாந்திற்குப் போட்டியாக ஒரு வலுவான நிதித் துறையை உருவாக்கத் தொடங்கியது. இந்த அதிரடி மாற்றம் அந்த நாட்டை மேலும் பணக்கார நாடாக்கியது. 1960-களில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய உற்பத்தித் தொழில்களையும் லக்சம்பர்க் உருவாக்கியதைத் தொடர்ந்து ஏறு வரிசையில் ஏறத் தொடங்கிய நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக தற்போதுவரை வளர்ந்து கொண்டே போகிறது.
இன்று லக்சம்பர்க் நிதித் துறைக்கான வரிச் சலுகையின் புகலிடமாகும். ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைந்த வரி விகிதத்தைக் கொண்ட லக்சம்பர்க்கில் பல சர்வதேச நிதி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு முதலீடு செய்கின்றன. நாடு மிகச்சிறியது என்பதால், இந்தப் பெரிய நிறுவனங்கள் மூலம் பெறப்படும் வரி, லக்சம்பர்க்கை செல்வத்தில் மிதக்க வைக்கிறது.
வரி வருமானத்திற்குக் கூடுதலாக, வங்கியாளர்கள் மற்றும் கணக்காளர்களுக்கு அதிக ஊதியம் தரும் வேலைகளை லக்சம்பர்க் வழங்குகிறது. இந்தக் காரணி லக்சம்பர்க்கை ஐரோப்பாவின் ஒரு முக்கியமான வேலை சந்தையாக மாற்றியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக உயர்வான, குறைந்தபட்ச ஊதியத்தைக் கொண்ட லக்சம்பர்க்கில் தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு ஆகக் குறைந்தது €1,923 ஊதியமாக வழங்கப்படுகிறது. இருப்பினும், உலகின் மிக உயர்ந்த வாழ்க்கைச் செலவைக் கொண்ட நகரமும் லக்சம்பர்க்தான்.

லக்சம்பர்க்கில் உள்ள மொத்த தொழிலாளர்களில் பாதிப் பேர் அண்டை நாடான ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் வசிக்கின்றனர். இவர்கள் தினமும் தமது நாடுகளிலிருந்து லக்சம்பர்க்கிற்கு வேலைக்கு வந்து வந்து போகிறார்கள். எனவே அவர்கள் லக்சம்பர்க்கின் நலன்புரி சலுகைகளைப் பயன்படுத்துவதில்லை. இது அரசுக்கு மிகப்பெரிய அளவில் பணத்தை மிச்சப்படுத்திக் கொடுக்கிறது.
இங்கு வாழும் மக்கள் என்ன மொழியைப் பேசுகிறார்கள் என்ற கேள்விக்கான பதில் கொஞ்சம் சிக்கலானது. EU கணக்கெடுப்பின்படி, ஏறக்குறைய 70% லக்சம்பர்கர்களின் தாய்மொழி லக்சம்பர்கிஷ் (Lëtzebuergesch) ஆகும். அதாவது ஜெர்மானியர்கள் ஜெர்மன் பேசுகிறார்கள், பிரெஞ்சுக்காரர்கள் பிரெஞ்சு பேசுகிறார்கள், எனவே, லக்சம்பர்கர்கள் லக்சம்பர்கிஷ் பேசுகிறார்கள் என்று சிம்பிளாக சொல்லிவிட முடியாது. ஏனெனில் லக்சம்பர்கிஷ் மட்டுமே லக்சம்பர்க்கின் மொழியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏனெனில் லக்சம்பர்க் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு ஆட்சிக்கு இடையில் அடிக்கடி மாறி பின் நெதர்லாந்தின் கைகளில் விழுந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. பின்னர் 1890-ல் முழு சுதந்திரத்தை அடைந்தாலும், உலகப் போர்களின் போது ஜெர்மனியால் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டு இணைக்கப்பட்டது. இந்த வரலாற்றின் காரணமாக, லக்சம்பேர்க்கின் அதிகாரப்பூர்வ மொழிகள் ஆரம்பத்தில் நிலையான ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளாக இருந்தன. 1984-ல் தான் லக்சம்பர்கிஷ் தேசிய மொழியாக மாறியது. இதன் விளைவாக, லக்சம்பர்க்கில் இப்போது லக்சம்பர்கிஷ், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு என மூன்று அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன.

ஐ.நா கணக்கெடுப்பின்படி, உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு லக்சம்பர்க்கில் குற்ற விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இங்கே சுமார் 1,300 காவல்துறையினர் மட்டுமே உள்ளனர். மொத்தமாகவே இரண்டு சிறைகள்தான் இருக்கின்றன. ஐரோப்பிய யூனியனில் மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடான இதன் நிலையான அரசியல் மற்றும் பொருளாதாரம் ஐரோப்பாவின் அழகிய முகத்துக்கு மேலும் மெருகு சேர்க்கிறது.
உலகின் முக்கிய நிதி மற்றும் வணிக மையங்களில் ஒன்றான லக்சம்பர்க் ஐரோப்பாவைத் தூக்கி நிறுத்தும் ஆடம்பரமான பொருளாதாரத் தூண்!
சுவிட்சர்லாந்து
ஐரோப்பாவின் மற்றொரு அழகிய பணக்கார முகம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 748 billion USD டாலர்களைக் கொண்டு ஐரோப்பாவை மேலும் செல்வத்தில் செழிப்பாக்குகிறது சுவிட்சர்லாந்து. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுவிட்சர்லாந்து ஒரு ஏழை நாடாகவே இருந்தது. மலைகளால் சூழப்பட்ட நிலப்பரப்பு நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருந்தது. மக்கள் தொகையில் பெரும் பகுதியினர், குறிப்பாகக் கிராமப்புற மக்கள், வறுமை வாழ்க்கையிலிருந்து தப்பிக்க அண்டை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அதிரடியான பொருளாதாரக் கொள்கைகளால் வெற்றிகரமாக வளர்ந்த தொழில் மயமாக்கல் யுகம் சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்தை அப்படியே தலைகீழாக மாற்றத் தொடங்கியது.

வங்கி மற்றும் சுற்றுலாத் தொழில்கள் புதிதாக மலரத் தொடங்கின. ஐரோப்பாவின் பணக்கார நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து வேகமாக மாறத்தொடங்கியது. இந்த வேகம் 20-ம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. முதல் இரண்டு உலகப்போர்கள் வெடித்த போதும் சுவிட்சர்லாந்தின் புத்திசாலித்தனமான நடுநிலைக் கொள்கையானது, போர்களின் அழிவுகளிலிருந்து தப்பிக்க உதவியது. காற்றுள்ள போதே தூற்றிக்கொண்ட சுவிட்சர்லாந்து ஆயுத ஏற்றுமதி மற்றும் வங்கிக் கடன்களிலிருந்து லாபம் ஈட்டி, தனது பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தியது. 1950களில் சுவிஸ் பொருளாதாரம் தொழில்துறையிலிருந்து சேவைப் பொருளாதாரமாக மாறியது. 1970களில் வளர்ச்சி குறைந்தாலும், சுவிட்சர்லாந்து அதன் உயர்மட்ட நிலையைத் தக்க வைத்து, ஏனைய நாடுகள் பார்த்து பொறாமை கொள்ளும் செல்வந்த நாடாகத் தன்னை எப்போதும் நிலை நிறுத்திக் கொண்டது. ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் மற்றும் ரோமன்ஷ் (Romansh) ஆகிய நான்கு அதிகாரப்பூர்வ மொழிகள் இங்குப் பேசப்படுகின்றன. ஆயினும் ஆங்கிலம் பரவலாக எல்லா இடங்களிலும் பொதுவாக உள்ளது.
சுவிட்சர்லாந்தின் மிக முக்கியமான ஏற்றுமதிகளாக ரசாயனங்கள், மருந்துகள், இயந்திரங்கள், சாக்லேட்கள், பால் பொருள்கள், கைக்கடிகாரங்கள் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. அமெரிக்கா, ஓசியானியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உயர்நிலை கடிகாரங்களுக்குப் புகழ் பெற்ற சுவிட்சர்லாந்தில் 2020-இல் ஏற்றுமதி செய்யப்பட்ட கடிகாரங்களின் மதிப்பு $20 பில்லியனுக்கும் அதிகம். சுவிட்சர்லாந்துக்கு முக்கிய வருவாய் ஈட்டித்தரும் தொழில்களாக வங்கி மற்றும் நிதித்துறை இருப்பினும், நாட்டின் பொருளாதாரம் விவசாயம் மற்றும் தொழில்துறையாலேயே இயக்கப்படுகிறது. சுவிஸ் சாக்லேட்டுகள் மற்றும் கடிகாரங்களின் தரத்துக்கு ஈடுசெய்ய ஏனைய நாடுகள் போட்டியிட்டாலும் யாராலும் இன்னும் வெற்றிபெற முடியவில்லை என்பதுதான் உண்மை.

பொதுவாக சினிமாவிலும், நிஜ வாழக்கையிலும் கூட சுவிட்சர்லாந்து கறுப்புப் பணப் பதுக்கலுக்கு மிகவும் பிரபலமானது. தேவைக்கு அதிகமாகப் பணம் வைத்திருப்போர், சட்டவிரோத முறையில் பணம் சம்பாதிப்போர், வரி ஏய்ப்பு செய்யும் பிரபலங்கள் என அனைவரும் தமது பணத்தைக் கொண்டு போய் ஒளிக்கும் இடம் சுவிஸ் வங்கிகள். இன்று வரை சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ள வாடிக்கையாளர்களின் ரகசியத்தன்மையைப் பேணும் வங்கி முறைகள் 1700களில் இருந்து இங்கே உள்ளன. கிரெடிட் சூயிஸ், யுபிஎஸ் மற்றும் ஜூலியஸ் பார் ஆகிய மூன்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள மிகப்பெரிய வங்கிகளாகும். அது தவிர, சுவிட்சர்லாந்தின் 'Zurich Cantonal' வங்கி உலகின் மிகவும் பாதுகாப்பான வங்கிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பூமியின் அழகிய சொர்க்கம் சுவிட்சர்லாந்து!
ஸ்பெயின்
ஐரோப்பிய யூனியனில் இரண்டாவது பெரிய நாடான ஸ்பெயின், படையெடுப்புகள் மூலம் 16-ம் நூற்றாண்டில் உலக வல்லரசாக மாறி 19-ம் நூற்றாண்டு வரை ஒரு பரந்த வெளிநாட்டுச் சாம்ராஜ்யத்தைப் பராமரித்தது. 1975-ல் ஜெனரல் பிராங்கோவின் மரணத்தைத் தொடர்ந்து ஜனநாயகத்திற்கு மாறிய ஸ்பெயினில் நவீன பொருளாதார மாற்றங்கள் உருவாக ஆரம்பித்தன.

ஒரு காலத்தில் ஸ்பெயினும் ஒரு ஏழை விவசாய நாடாகத்தான் இருந்தது. 1930-களில் உள்நாட்டுப் போரால் அழிக்கப்பட்ட ஸ்பெயினில் அதன் பின் பல தசாப்தங்களாகத் தொடர்ந்த அடக்குமுறை சர்வாதிகாரம் பொருளாதாரத்தை முடக்கியது. 1940கள் மற்றும் 1950கள் முழுவதும் ஸ்பெயினின் நிதி நிலைமை மோசமாக இருந்தது. பிரான்சிஸ்கோ ஃபிராங்கோவின் பாசிச அரசாங்கம் ஸ்பெயினை வெளியுலகத்திலிருந்து முற்றாக மூடியது. இறக்குமதி கணிசமாகக் குறைந்ததால் அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு பணமதிப்பு குறைந்தது.
அக்காலத்தில் மேற்கு ஐரோப்பா பொருளாதார பலம் பெற்று பணக்காரர்களாக மாறும்போது ஸ்பெயின் பின்னோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து 1959-ம் ஆண்டில், பிரான்சிஸ்கோ ஃபிராங்கோ தனது அரசாங்கத்திலிருந்த வயதானவர்களைத் தூக்கிவிட்டு இளையவர்களை நியமித்தார். ஸ்பெயினின் பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்கப் பல புதிய வளர்ச்சித் திட்டங்களை இந்த இளைய அமைச்சரவை ஆரம்பித்தது. 1960-களில், ஸ்பெயினின் வெளிநாட்டுக் கொள்கைகள் தளர்த்தப்பட்டு, பெரிய அளவில் தொழில் மயமாக்கப்பட்டது. நாடு முழுவதும் ஏராளமான தொழிற்சாலைகள் கட்டப்பட்டு வேலைவாய்ப்புகள் பெருகியதோடு, சுற்றுலாத் துறையும் வளர்ச்சியடைந்தது. 1960ல் $7,359 ஆக இருந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 1975ல் பாசிச ஆட்சி முடிவடைந்த நேரத்தில் இருமடங்காக அதிகரித்தது. இன்று அது $39,121 ஆக உள்ளது.
1975 முதல், ஸ்பெயின் நவீன ஜனநாயகத்திற்கு மாறியுள்ளது. 1986-ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது முதல் ஸ்பானிஷ் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர ஆரம்பித்து. ஆனால் 2008 முதல் 2013 வரையிலான பெரும் பொருளாதார மந்தநிலையின் போது ஸ்பானிஷ் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தாலும் தற்போது மீட்சிக்கான பாதையில் செல்ல ஆரம்பித்து உள்ளது.
ஆப்பிரிக்க நாட்டுடன் தரை வழி எல்லையைக் கொண்ட ஒரே ஐரோப்பிய நாடு ஸ்பெயின். ஐரோப்பாவிலிருந்தாலும் பலரும் நினைப்பது போல கடும் குளிர் வாட்டும் காலநிலை ஸ்பெயினில் இல்லை என்பது இதன் தனித்துவம். எப்போதும் சூரியன் முத்தமிடும் மிதமான வெப்பமண்டல காலநிலை (Tropical) ஸ்பெயினின் பளிங்குக் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

காளை சண்டை (Bull Fight), தக்காளித் திருவிழா, வைன் திருவிழா எனப் பல வித்தியாசமான விழாக்களுக்குப் புகழ்பெற்ற ஸ்பெயின் ஐரோப்பாவின் தவிர்க்க முடியாத முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது. பல பில்லியன் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் ஸ்பெயின், ஐரோப்பாவின் அட்சய பாத்திரம்!
ஐரோப்பாவின் அதிகார முகங்கள் என்று பார்க்கும் போது தவிர்க்க முடியாத முக்கிய அமைப்பு நார்டிக் நாடுகள். இவை ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகையில் 5%-ஐ பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஆனால் மொத்த GDP-யில் கிட்டத்தட்ட 10% வழங்குகின்றன. ஐரோப்பாவின் 5வது பெரிய பொருளாதாரமாகவும், உலகின் 10வது பெரிய பொருளாதாரமாகவும், உலகின் மகிழ்ச்சியான நாடுகள் வரிசையில் முதல் நான்கு நாடுகளில் ஒன்றாகவும் தரவரிசைப்படுத்தப்படும் ஸ்காண்டிநேவியன் நாடுகளைச் சுற்றிய யூரோ டூர் அடுத்த வாரம்.