Published:Updated:

யூரோ டூர் 43: கம்யூனிசம் டு முதலாளித்துவம் - குழப்பத்தில் லாட்வியா; குற்றங்கள் பெருகும் ருமேனியா!

லாட்வியா (Latvia) மற்றும் ருமேனியா (Romania) கொடிகள்
News
லாட்வியா (Latvia) மற்றும் ருமேனியா (Romania) கொடிகள்

பல ஆண்டுகளாக லாட்வியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் குறைந்து வரும் மக்கள் தொகை. பிறப்பு விகிதத்தில் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து வரும் லாட்வியாவில் மக்கள் தொகை, குறைந்து கொண்டே செல்கிறது.

Published:Updated:

யூரோ டூர் 43: கம்யூனிசம் டு முதலாளித்துவம் - குழப்பத்தில் லாட்வியா; குற்றங்கள் பெருகும் ருமேனியா!

பல ஆண்டுகளாக லாட்வியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் குறைந்து வரும் மக்கள் தொகை. பிறப்பு விகிதத்தில் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து வரும் லாட்வியாவில் மக்கள் தொகை, குறைந்து கொண்டே செல்கிறது.

லாட்வியா (Latvia) மற்றும் ருமேனியா (Romania) கொடிகள்
News
லாட்வியா (Latvia) மற்றும் ருமேனியா (Romania) கொடிகள்
ஐரோப்பாவின் அழகு முகத்தின் மறுபக்கத்தைக் கடந்த சில வாரங்களாக யூரோ டூரில் பார்த்துக்கொண்டு வருகிறோம். இவ்வாரம் லாட்வியா மற்றும் ருமேனியாவைச் சுற்றி ஒரு குயிக் ரவுண்டப்!

லாட்வியா (Latvia)

நிலப்பரப்பில் பாதிக்கும் மேலானது காடுகளால் சூழப்பட்ட, நாட்டின் ஐந்தில் ஒரு பகுதி மனிதர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட்ட இயற்கையைக் கொண்ட, 500 கிமீ-க்கும் மேலான வெள்ளை மணல் கடற்கரைகளைக் கொண்ட, 12,000-க்கும் மேற்பட்ட ஆறுகளையும் ஏரிகளையும் கொண்ட பூமியின் தனித்துவமான சொர்க்கம் லாட்வியா. வரலாற்று முக்கியத்துவம் மிக்க மிகப் பழைய நகரமான தலைநகரம் ரிகாவில், 1201-இல் நிறுவப்பட்ட புராதன தேவாலயங்கள் சிலுவைகளுக்குப் பதிலாக, தங்கச் சேவல்களைத் தாங்கி நிற்கின்றன. மற்றுமொரு அழகிய சிறிய நகரமான குல்டிகாவில், பறக்கும் மீன்களைக் கொண்ட ஐரோப்பாவின் பரந்த நீர்வீழ்ச்சியான வென்டா ரேபிட் வருடம் முழுதும் வற்றாத நீரை வாரி வழங்குகிறது.

1214-ல் கட்டப்பட்ட துரைடா கோட்டை, லாட்வியா (Turaida Castle in Latvia)
1214-ல் கட்டப்பட்ட துரைடா கோட்டை, லாட்வியா (Turaida Castle in Latvia)

ஆகஸ்ட் 23, 1989 அன்று எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு மில்லியன் மக்கள் சட்டவிரோத சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராக தங்கள் கைகளை இணைத்துக் கொண்டனர். ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்கள், மூன்று நாடுகளின் தலைநகரங்கள் வழியாக 600 கிலோமீட்டர் தொலைவில் ஒரு பெரிய மனிதச் சங்கிலியை உருவாக்கினர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு ஒரு விதத்தில் காரணமான இந்தத் தனித்துவமான அமைதிப் போராட்ட நிகழ்வு இப்போது யுனெஸ்கோவின் உலகப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வளவு சிறப்புகளையும் கொண்ட லாட்வியாவும் பிரச்னைகளுக்கு மத்தியில் அல்லாடிக்கொண்டு இருக்கும் ஒரு அழகிய ஐரோப்பிய நிலம்.

கம்யூனிசத்திலிருந்து நிலையான முதலாளித்துவத்திற்கு மாறும் நோக்கத்துடன் மே 1, 2004-இல் லாட்வியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது. ஆயினும் 2008-இன் உலகளாவிய நிதி நெருக்கடி லாட்வியன் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தது. 18 சதவிகிதமாகக் குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி இன்றுவரை ஏறுவரிசையில் செல்ல மறுக்கிறது.

பல ஆண்டுகளாக லாட்வியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் குறைந்து வரும் மக்கள் தொகை. பிறப்பு விகிதத்தில் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து வரும் லாட்வியாவில் மக்கள் தொகை, குறைந்து கொண்டே செல்கிறது. இது தற்போதைய 1.9 மில்லியனில் இருந்து 2030க்குள் 1.3 மில்லியனாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
லாட்வியாவில் நடைபெறும் நடன விழா
லாட்வியாவில் நடைபெறும் நடன விழா

ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப் போல லாட்வியாவிலும் வறுமைதான் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிய சவாலாக உள்ளது. இங்கும் வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகம்! அதனால் அதிகமான இளைஞர்களும், திறமையான தொழிலாளர்களும் லாட்வியாவை விட்டு வெளியேறுகின்றனர். இதுவும் கூட நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அரசியல் வன்முறை, அடக்குமுறை போன்ற காரணங்களால் மக்களின் அடிப்படை பேச்சு சுதந்திரம் கூட இங்குப் பறிக்கப்படுகின்றது. சோவியத் வீழ்ச்சியின் பின்னர் கம்யூனிசத்திலிருந்து முதலாளித்துவத்திற்கு மாறுவதிலிருந்த உறுதியற்ற தன்மை, அரசியல் உறுதிப்பாட்டையும் சீர்குலைத்தது.

இங்குப் பல குழந்தைகள் பெற்றோரால் கைவிடப்படப்படுகின்றனர். இதனால் குழந்தை பாலியல் குற்றங்களும் பெருகி வருகின்றன. குறைந்த வயதில் பாடசாலைகளை விட்டு வெளியேறி குழந்தைத் தொழிலாளர் ஆக்கப்படும் சிறுவர்கள் லாட்வியாவின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியிருக்கின்றனர். மதுபானம், போதை மற்றும் ஆபத்தான நடத்தைகளில் ஈடுபடும் இளைய சமுதாயம் மோசமான முறையில் சீரழிந்து கொண்டு செல்கிறது. விரக்தியின் விளைவாகத் தற்கொலைக்குத் தள்ளப்படும் ஆண்கள் சமூகமும் லாட்வியா எதிர்கொள்ளும் இன்னுமொரு விசித்திரமான சவால்.

Historic Centre of Riga (Latvia)
Historic Centre of Riga (Latvia)

சர்வாதிகார அரசாங்கத்திலிருந்து பொருளாதார சுதந்திரத்திற்குள் மாறிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில், மக்களை வறுமைக்கோட்டிற்குள் தள்ளும் காரணிகளையும், படித்த, திறமை வாய்ந்த இளைய சமூகம் கூட்டம் கூட்டமாக நாட்டை விட்டு வெளியேறும் பிரச்னைகளையும், தொடர்ச்சியாகக் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தையும், அதிகரித்து வரும் இறப்பு விகிதத்தையும் புரிந்துகொண்டு, அதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதுதான் லாட்விய அரசு தற்போது செய்யவேண்டிய முக்கியமான காரியம். ஆனால், 'அது எப்போதுமே நடக்கப்போவதும் இல்லை, எங்கள் வாழ்வு மாறப்போவதும் இல்லை' என்பது லாட்வியர்களின் விரக்தியான புலம்பல்.

ருமேனியா (Romania)

சர்வதேச ஜிடிபி அளவுகோலின் படி உலகின் வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருந்தபோதிலும், ஐரோப்பாவின் மிகவும் வறுமையால் பாதிக்கப்பட்ட நாடாக ருமேனியா உள்ளது. ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளை விட ருமேனியாவில் உற்பத்திக் கட்டமைப்புகள் மற்றும் கல்வி முறைகள் சிறப்பாக நிறுவப்பட்டிருந்தாலும், ருமேனியாவின் சமூக அமைப்புகள் மற்றும் சமமற்ற ஊதிய பகிர்வு அதன் குடிமக்களுக்கு பெரும் நிதி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

ஏழ்மையான நாடுகளின் வறுமையின் பின்னணியிலுள்ள பொதுவான காரணங்களே ருமேனியாவிலும் காணப்படுகின்றன. சமமற்ற வளப்பங்கீடுகள், மோசமான மருத்துவ சுகாதார வசதி, சுத்தமற்ற குடிநீர், வளங்களின் பற்றாக்குறை, வேலையில்லா திண்டாட்டம், பாடசாலைக் கல்வியை மிக இளம் வயதிலேயே கைவிடும் குழந்தைகள், கொலை, கொள்ளை போன்ற பாதகங்கள் நிறைந்த பாதுகாப்பற்ற சமூகம் என இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஊழல் நிறைந்த அரசாங்கம் என ருமேனியா கடும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. 2007-ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைந்தாலும் இன்றுவரை மேற்கு ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்து வாழும் ஒரு நாடாகவே ருமேனியா காணப்படுகிறது.

Brașov City, Romania
Brașov City, Romania

இனவெறி என்ற வார்த்தை ஒன்றும் நமக்குப் புதிதல்ல. கிழக்காசிய, ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே இனவெறி என்னும் நோய் பரவியுள்ளது என நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. வாய் கிழிய மனித நேயத்தையும் சமத்துவத்தையும் பற்றிப் பேசும் ஐரோப்பாவிலும் இனவெறி என்னும் புற்று ஆழமாக ஊடுருவி உள்ளது. இதற்கு ருமேனியாவும் விதிவிலக்கல்ல.

வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளிலிருந்து தோன்றியதாக நம்பப்படும் ரோமா என்ற ஜிப்ஸி இன மக்களுக்கு எதிரான மிகக் கொடூரமான இனவெறித்தாக்குதல் உலக அரங்கில் மனித உரிமைகளுக்குப் பெயர் போன ஐரோப்பாவில் இன்றுவரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சுமார் கி.பி 1000-ம் ஆண்டு காலப்பகுதியிலேயே இந்தியாவில் உள்ள சாதி அமைப்பால் விரட்டப்பட்ட ரோமாக்கள், ஐரோப்பாவிற்கும் வட ஆப்பிரிக்காவிற்கும் குடியேறத் தொடங்கினர். ருமேனியாவின் மிகப்பெரிய சிறுபான்மையினராகக் கருதப்படும் ரோமா மக்கள் இன்றுவரை ருமேனியர்களால் சாதிய அடக்குமுறைக்கும், இனவெறித்தாக்குதலுக்கும் ஆளாகிக்கொண்டு உள்ளனர்.

ரோமா குடும்பங்கள் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதிலிருந்து, கல்வி சுகாதாரம் என அனைத்திலும் புறக்கணிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் குகைகள் போன்ற ஆபத்தான பகுதிகளில் வாழும் இவர்கள் ருமேனிய பொதுமக்களால் ருமேனிய குடிமக்களாக மட்டுமல்ல சக மனிதர்களாகவே மதிக்கப்படாமல் ஒதுக்கப்படுவதுதான் மிகப்பெரிய கொடுமை.
ருமேனிய வீடுகள்
ருமேனிய வீடுகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் மிகப்பெரிய தொகையை உதவியாகப் பெரும் ருமேனியா கடும் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் என சந்திக்கும் சவால்கள் ஏராளம். மேற்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கிப் படையெடுக்கும் ருமேனியர்களினால் அந்த நாடுகளில் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஐக்கிய ராஜ்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், சுவீடன் போன்ற நாடுகளுக்குப் படையெடுக்கும் ருமேனியர்கள் திருட்டு, வழிப்பறி, போதைப்பொருள் பாவனை போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, இந்த நாடுகளில் இவர்களுக்குக் கிடைக்கும் பல சலுகைகளை ஏனைய கிழக்கு ஐரோப்பியக் குடியேற்றவாசிகள் போல இவர்களும் தவறாகப் பயன்படுத்துகின்றனர். உதாரணத்துக்கு, வேலை இல்லை என்றால் அரசால் கிடைக்கும் வேலையற்றோருக்கான உதவித்தொகையை எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே ஹாயாக இருந்தபடி பெறுவது, வீடு இல்லை எனக்கூறி கவுன்சில் மூலம் இலவச வீடுகளைப் பெற்று அதை உள் வாடகைக்கு விடுவது போன்ற சமூக நலன் சார்ந்த திட்டங்கள் பலவற்றை முறைகேடாகப் பயன்படுத்தியும் வருகின்றனர்.

பாதாள உலக மாஃபியாக்களுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பஞ்சமில்லை. குறிப்பாக ருமேனியா.வரலாற்றில் பெரிய திருட்டுகள், மிகப்பெரிய மோசடிகள் உட்பட, ருமேனிய மாஃபியா ஏடிஎம்-ஸ்கிம்மிங், விபச்சாரம், மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கும் பெயர் பெற்றது. இவர்கள் கொலை, கொள்ளை மற்றும் ஆட்கடத்தல் போன்றவற்றையும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் காண்ட்ராக்ட் முறையில் செய்து வருகின்றனர். உலகில் கடுமையான துப்பாக்கிச் சட்டங்கள் சில ருமேனியாவில் இருப்பதால் துப்பாக்கி வன்முறைகள் மிகவும் அரிதானவை. அதற்குப் பதிலாக பெரும்பாலான கொலைகள் கோடாரிகள் அல்லது கத்திகள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் செய்யப்படுகின்றன.

ருமேனியா (Romania)
ருமேனியா (Romania)
அழகிய மலைகள், அகன்ற சமவெளிகள், மனித தலையீடு இல்லாத அற்புத வனங்கள், தெளிந்த நீரோடைகள், புராதன ஆலயங்கள், அட்டகாசமான ஐரோப்பிய கட்டடக்கலைகள், அரிய விலங்குகள், அகன்ற கடற்கரைகள் என இயற்கை கொஞ்சம்கூட வஞ்சனை இல்லாமல் அள்ளி அள்ளி வழங்கிய அழகு நிறைந்த அற்புத பூமி ருமேனியா. முறையான தலைவர்கள் இல்லாமல், சரியான சட்டதிட்டம் பின்பற்றப்படாமல், அதிகமான ஊழல், குறைந்த வேலைவாய்ப்பு, கொடிகட்டிப் பறக்கும் வறுமை, மத, இனக் கலவரங்களால் சூறையாடப்படும் அமைதி என மனிதன் ஏற்படுத்திக்கொண்ட பாதகங்களால் பாதிக்கப்பட்டு பரிதாப நிலையில் தத்தளிக்கும் ஐரோப்பிய நாடுகள் பட்டியலில் ருமேனியாவும் இணைகின்றது.

யூரோ டூர் போலாமா?!